நடைப்பயணம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியினர் கைது – செய்திகள்

0

06 செப் 2011.  வேலூர்.

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வேலூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன் மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அந்த மூன்று பேரின் குடும்பத்தினரின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை சீமான் தலைமையில் பரப்புரை நடைப்பயணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை வேலூர் கோட்டை பூங்காவிலிருந்து சீமானின் நடைப் பயணம் தொடங்கியது. அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த பேரணிக்கு திரண்டு வந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகிக்க, இயக்குநர் ஆர்கே செல்வமணி, ஷாகுல் அமீது உள்ளிட்ட நிர்வாகிகள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

வேலூர் நகர எல்லையில் சீமானின் நடைப் பயணம் நெருங்கியபோது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். நடைப் பயணத்துக்கு அனுமதி கிடையாது என்றும், மீறி பயணத்தைத் தொடர்ந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசாரும் சீமான் தரப்பும் பேச்சுவார்த்தையில் இறங்கினர். முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிற பேரணி இது என்பதை விளக்கிச் சொல்லியும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.  சில நிமிடங்கள் பேச்சு நடந்தது.  ஆனாலும் போலீசார் பிடிவாதமாக இருந்தனர்.

எனவே தடையை மீறி, நடைப் பயணத்தைத் தொடர்ந்தார் சீமான். இதனால் அவரை உடனடியாக கைது செய்து வேனில் ஏற்றினர் போலீசார்.  அவருடன் வந்த 1000-க்கும் மேற்பட்டவர்களையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சி நடத்திய பரப்புரை நிகழ்வுக்காக சீமான் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *