கவிஞர் ஜவஹர்லால்

 
எதுஅழகு ? எப்படி? இப்படிப் பார்க்கலாமா?
எதிலழ கில்லை? ஏனழ கங்கில்லை ?

அழகு நிலவுவது எதிலே ? சேர்க்கையில்
அழகெனப் படுவது பொருளிலா ? பார்வையிலா ?

காக்கை கருப்புத்தான்; காக்கைக் கதுவெறுப்பா?
சேர்க்கையில் அவைசிரித்துச் சிலிர்ப்பதில் அழகிலையா?

மண்ணை இருட்டாக்கும் வான்மேகக் கருங்கூட்டம்
எண்ணத்தை மயக்கும் இனிய அழகிலையா ?

வண்ணத்தி லாஅழகு ? இல்லை; பார்க்கும்நம்
எண்ணத்தில் எதுவினிக்கும் அதிலே அழகிருக்கும்.

பூத்துச் சிரிக்கின்ற புதுமலர் தானழகா ?
காற்றில் உதிர்கின்ற மலரிதழில் அழகிலையா ?

நெடிதோங்கி நிமிர்ந்தாடும் நெடுமரம் தானழகா ?
ஒடிந்தே அசைகின்ற சிறுகொம்பில் அழகிலையா ?

மான்களின் கண்மருட்சி அழகுதான்; ஆனாலும்
கான்திரியும் கொடும்புலியின் முறைப்பும் அழகுதானே !

எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

நிமிர்ந்தவையா? வளைந்தவையா? எதற்குமே அடங்காமல்
திமிர்ந்தவையா? திரிபவையா? திருடி வாழ்பவையா?

எதுவாக இருந்தாலும் அதுவாக அதுவிருந்தால்
எதுபோழ்தும் அதுவழகு; இதயங்கள் கொளலழகு.

கண்ணழகு; மூக்கழகு; காணும் முகவழகு;
முன்னழகு; பின்னழகு; இவைக்கெது அளவுகோல் ?

இடையழகு எதிலிருக்கும் ? இல்லாம லிருப்பதிலா ?
நடையசைவில் ஒடிந்துவிடும் கொடியிடையின் அசைவினிலா ?

ஒருவனுக்கு வானவில் வண்ணம் பேரழகு;
ஒருவனுக் கவ்வில்லின் வளைவு பேரழகு;

வண்ணமா ? வளைவா? எதிலே அழகிருக்கும் ?
எண்ணத்தி லெதுபதியும்? அதிலே அழகிருக்கும்.

கொடியிடையின் அசைவுநடம் அழகுதான்; ஆனாலும் துடிப்படங்கித் தடுமாறும் தளர்நடையில் அழகிலையா ?

இளஞ்சேயின் சிறுமழலை அழகுதான்; ஆனாலும்
நலஞ்சிதைந்த முதியோர்தம் நடுக்கம் அழகிலையா?

பனிமொழியின் இதழ்சுரக்கும் நீர்நலந்தான்; ஆனாலும்
கனிந்தகிழத் திதழொழுகும் கடைவாய்நீர் அழகிலையா ?

எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
அங்கங்கே காண்பதிலே அகம்தழுவின் அழகுவரும்.

காலைக் கதிரொளியின் களிநடனம் தானழகா ?
மாலைக் கருக்கிருட்டின் மைநடனம் அழகிலையா ?

இருளோட்டும் கதிரோனின் எழிற்பயணம் தானழகா ?
மருளூட்டும் இருள்வானச் சுடர்மீன்கள் அழகிலையா?

இருட்டில் அழகிலையா ? இளஞ்சோடி சொல்லட்டும்.
இருட்டறையில் குருட்டாட்ட இயக்கம் அழகிலையா ?

சிங்கத்தின் கம்பீரம் அழகுதான்; ஆனாலும்
அங்கிருக்கும் குள்ளநரித் தந்திரமும் அழகுதானே !

கொல்லேற்றின் திமிலசைவு அழகுதான்; ஆனாலும்
நல்லதொரு தாய்ப்பசுவின் மடியசைவும் அழகுதானே ?

எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

நங்கநல்லூர்—20-02-2000

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *