க. பாலசுப்பிரமணியன்

பொன்னான நெஞ்சம் வேண்டுமே !

திருமூலர்-1

சிறிய வயதில் பள்ளியில் படித்த ஒரு கதை. மிடாஸ் என்ற ஒரு அரசன். அவனுக்கு உலகமே வியக்கும் வண்ணம் சொத்து இருந்தது. அவன் வீட்டு அறைகளெல்லாம் பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவன் கருவூலத்தில் அளவிட முடியாத பொன் நகைகளும் முத்துக்களும் வைரங்களும் நவரத்தினங்களும்  தங்க நாணயங்களும் இருந்தன. ஆனாலும் அவனுக்கு திருப்தி இல்லை. இன்னும் கொஞ்சம் பொன் நம்மிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற பேராசைக்கடலில் மூழ்கிவிட்டான்.

அந்த நேரத்தில் ஒரு தேவதை அங்கே வந்தது. “மிடாஸ், உலகிலேயே நீதான் அதிகமான பொன்னுக்குச் சொந்தக்காரனாக இருக்கிறாய். சந்தோஷம்தானே?” என்றது.  அவன் முகத்தில் இருந்த அதிருப்தியைக் கண்ட தேவதை “மிடாஸ் உனக்கு ஒரு வரம் தரலாம் என்று எண்ணுகிறேன். என்ன வேண்டும் என்று கேள்” என்றது.

உடனே மிடாஸ் “நான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும்.” எனக் கேட்டான். “அப்படியா? உன் விருப்பபடி நாளைக் காலை முதல் நீ தொட்டதெல்லாம் பொன்னாகும்: என்று வரமளித்து அந்த தேவதை மறைந்தது.

மறுநாள் காலை எழுந்த மிடாஸ் தன் கட்டிலைத் தொட்டான். அது தங்கமானது. ஒவ்வொரு பொருளாக தொட்டுக்கொண்டே வந்தான். அனைத்தும் தங்கமாக மாறின. அளவில்லாத ஆனந்தத்தில்  குடிப்பதற்காக நீரை எடுத்தான் . அந்தத் தண்ணீரும் தங்கமாக மாறியது. அவனால் குடிக்க முடியவில்லை. சிற்றுண்டிக்காக அமர்ந்த மிடாஸ் ஒவ்வொரு உணவையும் தொட அது தங்கமாக மாறியது.

பயந்து போன மிடாஸ் ஓடி வந்த தன் மகளைக் கட்டி அணைத்தான். மகளும் பொற்சிலையாக மாறினாள். துயரத்தில் மிதந்த  மிடாஸ் தேவதையிடம் தன்  தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டான். “எனக்குப் பொன்னே வேண்டாம். நல்ல   வாழ்க்கை மட்டும் போதும்”  என்று வேண்டினான்.

இந்தக் கதை ஒரு மனிதனின் பொன்னாசைக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்று உணர்த்துகின்றது.  புன்னகையைத்  தொலைத்து விட்டு  பொன்னகையைத் தேடும் உலகம் இதைப் புரிந்து கொள்ளவேண்டும் !!

திருமூலர் கூறுகின்றார்

கற்குழி தூரக் கனகுமுன்னத் தேடுவர்

அக்குழி தூர்க்கை யாவருக்கும் அரியது

அக்குழித் தூர்க்கும் அறிவை அறிந்தபின்

அக்குழி தூறும் அழுக்கற்றவாறே.  

“பிறப்பு என்ற குழியை பொன்னால் நிரப்ப முடியாது. உண்மை அறிவை நாடுங்கள். அதனால் தான் பிறப்பு என்னும் குழியை நிரப்ப முடியும்.”

நல்ல சிந்தனைக்கு ஈடு இணை ஏதுமில்லை என்று வலியுறுத்திய கலீல் கிப்ரான் என்ற ஒரு தத்துவ அறிஞர் கூறிகின்றார் :” ஓர் டன் தங்கத்திற்கு ஈடாக ஒரு நல்ல சிந்தனையை யார் எனக்கு கொடுப்பார்?: என்று. “Who would sell me one beautiful thought for a ton of gold?”

ஆகவே பொன்னில் நாம் வைத்திருக்கின்ற மாயையை நீக்கி பொன்னார்  மேனியனான இறைவனிடம் உள்ளத்தைச் செலுத்துதலே நமக்கு முக்திக்கு வழி காட்டும்  என்பதை நாம் உணர வேண்டும்.

இப்படிப்பட்ட பேராசை நமக்கும் பிற்காலத்தில் சிறிதும் உதவாது என்ற கருத்தை முன்னிறுத்தி பட்டினத்தாரோ கீழ்கண்டவாறு அங்கலாய்க்கிறார்.

மாணிக்க முத்து வயிரப் பணிபூண்டு

ஆணிப்பொன் சிங்கா தனத்தி லிருந்தாலும்

காணித்  திடலைநமன் கட்டியே  கைப்பிடித்தால்

காணிப்பொன் கூடவராக காண்கிலமே நெஞ்சமே

இதே கருத்தை வலியுறுத்தும் பத்ரகிரியாரும் இவ்வாறு உரைக்கின்றார்.

மனதை ஒரு  வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி

எனதறிவை அம்பாக்கி எய்வதினியெக்காலம்?

ஆகவே ஆசைகளை அடக்கி நெஞ்சத்தில் இறைவனை நிறுத்தி அவனோடு ஒன்றிட முயன்றால் அவன் அருள் நிச்சயம் கிட்டிடும். ஆசைகள் உந்திவிடும் துயரங்களிலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ளலாம் .

ஆனால் நமக்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகம் “இப்படியெல்லாம் நடக்குமா? இறைவன் அருள் நமக்கு கிட்டுமா?” என்பதே. இந்த சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்  வகையில் மாணிக்க வாசகர் திருவாசகத்தில் அந்த விந்தையைச் சுட்டிக்காட்டுகின்றார்

மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்

மங்கையும் தம்மோடுங்

கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு

குலாவியே திரிவேனை

வீடுதந் தென்றன் வெந்தொழில் வீட்டிட

பொன்மலர் கழல் காட்டி

ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர்

அற்புதம் அறியேனே.

அந்த அருள் நமக்கு கிடைத்துவிட்டால் இந்தத் துயரமும் துன்பமும்தான் தொடருமோ? உறுதியாக அது தொடராது என்ற உண்மையை நமக்கு வள்ளுவர் பெருமான் எடுத்துரைக்கின்றார் :

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

தொடரும் ..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *