எனக்கொருத்தி வாச்சிருக்கா

3

மனிதனன்@சரவணன்

நான் ஒண்ணும் விரும்பலையாம்

அவதான், தவமிருந்து பெத்தாளாம்.

அதிர்ஷ்டம் எனக்கென்று புரியாம,

அவ ஊரெல்லாம் மார்தட்டி புகழ்பாட,

அப்பெல்லாம் எனக்குள்ள சிரிச்சுக்குவேன்

‘கிறுக்கி’ ,

எனக்கொருத்தி வாச்சிருக்கா !!

 

தொடர்ச்சியா முதல் ரேங்க்கு வாங்கையிலே,

என் டீச்செரெல்லாம் என்னக் கேட்டதுண்டு,

‘அம்மா ரொம்ப படிச்சிருக்காளோ?’

அப்பெல்லாம் திமிரா நான் சொன்னேன்,

‘அவள படிக்க வெக்கையிலே படிக்காம,

எனக்காக, இப்ப தினம் படிக்கும்

‘பையன் பைத்தியம்’

எனக்கொருத்தி வாச்சிருக்கா !!

 

ஒருவேள நெற்சோறு கிடைக்காத பலபேரு,

அந்நாளில் இதுதான்யா என்னோட திருநாடு.

இருந்தாலும் வெக்கங் கெட்டு, சோறு தின்னச் சலித்ததையா என் நாக்கு

பள்ளிக்கு கொடுத்தனுப்பிச்ச ஒரு பருக்க கொறையாம

அப்படியே அள்ளிப் போட்டு அடச்சு வந்தேன் அத்தனையும்.

இத்தோடு முடியலப்பு என் சேட்ட…

வீட்டுக்கு வந்ததுமே ‘ பசிக்குதுன்னு’ , தாயப் பார்த்தேன்

‘பட்டினி போட்டாதான் புத்தி வரும்’,.. பெத்தவனும் சொன்னார்யா.

கண்டிப்பானு சொல்லிப்புட்டு , திருட்டு தோச ஊட்டிடுவா.

அப்பெல்லாம் எனக்குள்ள சிரிச்சுக்குவேன்,

‘வெகுளி’ ,

எனக்கொருத்தி வாச்சிருக்கா !!

 

வகுப்பு பத்தாயும், முந்திடுவா பள்ளிக்கு

மூணடுக்கு கேரியரில் முப்படையல் மூச்சு முட்ட பிதுக்கிக்கிட்டு.

கூச்சமா இருக்குதுன்னு கோடிமொற சொல்லிருப்பேன்,

மூணடுக்கு நாலாக ஆனது தான்மிச்சம்.

அப்பெல்லாம் எனக்குள்ள திட்டிக்குவேன் ,

‘ஆயா’ ,

எனக்கொருத்தி வாச்சிருக்கா !!

 

கல்லூரி விடுதியிலே விட்டுப்புட்டு போகையில,

கண்ணுக்குள்ள கடகடனு கார்மேகம் கூடிடுச்சு.

மறைவாக நீ அழுதும், நான் அழுதேன்

வெளிப்படையா நான் சிரிச்சும், நீ அழுத.

பிரிவொண்ணும் பண்ணாதுன்னு பாசாங்கு பண்ணிப்போன ,

பாதி வழி போகையில பதறிப்போய் திரும்பிவந்த.

பாசத்த பழக்கிப்புட்டு , பிரிவொண்ணப் பழக்கலையே…

அப்பெல்லாம் எனக்குள்ள அழுதுக்குவேன் ,

‘ படுகாலி ‘

எனக்கொருத்தி வாச்சிருக்கா !!

 

நண்பர்கள் நூறு பேரு நரம்பாக பிணஞ்சிருந்தும்

நாளொன்னும் போகலையே உன்னோடு பேசாம.

ஒரு வாரம் தள்ளியிருந்து உன் நெனப்ப வளர்த்துக்குவேன்

மறுவாரம் ஓடிவந்து உன் மடியில் சாஞ்சுக்குவேன்.

வருஷம் நாலு, ஓடிடுச்சு, கல்லூரி கலஞ்சிடுச்சு

உள்நாடு வெளிநாடு , பணியிடமும் பரவிடுச்சு.

பக்குவமும் பொறுப்புகளும் பழகாம பழகிடுச்சு

சிறு பாராட்டும் பணமுடிச்சும் படிப்படியா தொத்திக்கிச்சு

பக்கத்துல இருந்திருந்தா எனக்குமேல இரசிச்சிருப்ப

பாக்காம போனாலும் உன் பாசமேதும் கொறையலையே.

அப்பெல்லாம் எனக்குள்ள பீத்திக்குவேன்,

‘இரசிகை’

எனக்கொருத்தி வாச்சிருக்கா !!

 

புத்தகமும் அனுபவமும், எனக்குள்ள பகுத்தறிவப் புகுத்திடுச்சு

புதுசாக நான்பொறந்தப் புத்துணர்ச்சிப் பிடிச்சிருச்சு.

நம் கருத்துக்களும் எண்ணங்களும், அறிவொட்டி மாறிடிச்சு

நம் உணர்வுகளும் உணர்ச்சிகளும், உயிரொட்டி மாறலையே.

என் செயலெல்லாம் எப்போதும் என் தனித்துவத்தக் காட்டிடுமே

என் உயிர்மட்டும் எப்போதும் உன்பேர உரச்சிடுமே.

பார்வைகள் மாறுச்சுன்னா, பாசங்களும் மாறிடுமா?

என்ன பெத்த தாயுனக்கு இந்த விதி புரியலையா ?

சத்தியமாப் புரிஞ்சிருந்தும், உன் கைக்குழந்தைதானென்று,

பாசத்துல தூக்கிக்கிட்டுப், புரியாம நடிக்கிறியா?

அப்பெல்லாம் எனக்குள்ள நெனச்சுக்குவேன்

‘கள்ளி’

எனக்கொருத்தி வாச்சிருக்கா !!

 

மாற்றம் தான் மாறாது, மனிதவிதி வெளங்கிடுச்சு

மாறாத ஒரு விஷயம் எனக்குள்ளத் தெரிஞ்சிருச்சு.

இன்னொருத்தி வந்தாலும்,மாறாது முதல் காதல்

அது எப்போதும் என் தாய்தான்னு தலக்கனமாத் திரிஞ்சுக்குவேன்.

எப்போதும்,

அம்மா‘,

எனக்கொருத்தி வாச்சிருக்கா !!

 

மனிதனன்@சரவணன்

http://mindvoice.wordpress.com

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “எனக்கொருத்தி வாச்சிருக்கா

  1. வாச்சிருக்கறவளை புரிஞ்சுக்கிட்டு
    மனசுல சுமக்கறதுஇனிமையான சுகம்.அதைத்தான் எத்தனை பேர்
    பண்ணிடறாங்க? அருமை.பகிர்விற்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *