மீனாட்சி பாலகணேஷ்

பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குழந்தைகளைப் போற்றுவன. பெரும்பாலும் தெய்வங்களே குழந்தைகளாகப் போற்றப்படுவதனால் அத்தெய்வங்களின் சிறப்பையும் புகழையும் குழந்தைக்குமாக்கிப் பாடுவது பிள்ளைத்தமிழின் மரபாகின்றது.

ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் பெரும்பாலும் முருகப்பெருமான் மீதானவையே. அவனுடைய வேல், மயில், அரக்கர்களையழித்த வீரச்செயல்கள், தேவர்களைக் காத்த வரலாறெனப் பற்பல கருத்துக்களைக் கொண்டமைந்த பாடல்கள் பலவாகும். அருணகிரிநாதரின் திருப்புகழ், கச்சியப்பச் சிவாச்சாரியாரின் கந்தபுராணம் ஆகியவற்றில் காணும் நிகழ்ச்சிகள், மக்களிடையே வழக்கிலிருந்து வரும் சிறுபுனைகதைகள் ஆகியன பிள்ளைத்தமிழ் நூல்களின் புலவர்களால் பொருத்தமான பருவங்களில் அழகுற எடுத்தாளப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்றாக இன்று நாம் காணப்போவது முருகப்பிரானின் கைகளின் செயல்களைத்தான்!

Pannirukaiyan
‘வாங்கும் எனக்கு இருகை- அருளை
வழங்கும் உனக்கு பன்னிருகை,’

என ஒரு பாடகர் முருகனைப் போற்றியுள்ளார். கணக்கு கைகளுக்கானதல்ல! அத்திருக்கைகள் வாரிவாரி வழங்கும் அருட்செயல்களுக்காகத்தான் பலவாக உள்ளன எனக்கொள்ள வேண்டும்!

திருமுருகாற்றுப்படையில் புலவர் நக்கீரர் முருகனின் கைகளின் திறத்தைச் சிறப்பிப்பதனைக் காண்போம்! முதலில் முருகனின் ஆறுமுகங்களின் சிறப்பைக்கூறிப்பின் அதற்கியையக் கைகளின் செயல்களைக் கூறுகிறார்.

இறையருளால் முத்திப்பேற்றினைப் பெற்று வானுலகு நோக்கிச் செல்லும் முனிவர்களுக்குப் பாதுகாவலாக விளங்குகிறது முருகனின் ஒரு திருக்கரம். அதற்கிணையான மற்றொரு திருக்கரத்தினை அவன் இடுப்பில் வைத்தபடி இருப்பதுவும் ஒரு அழகாக விளங்குகிறது.

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை

மற்றொரு திருக்கை நல்ல அழகிய சிவந்த ஆடையை உடுத்துள்ள தொடையின்மேல் கிடக்கிறது. இன்னொரு கரம் யானையை அடக்குவதற்குரிய அங்குசத்தை ஏந்தி அந்த யானையைச் செலுத்துகிறது.

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;
அங்குசங் கடாவ ஒருகை,

மற்றவிரு கைகளில் ஒன்றில் வட்டவடிவமான கேடயமும் ஏந்தி, இன்னொரு கரம் வேலினை வலப்பக்கமாகச் சுழற்றியவண்ணமும் உள்ளது.

இருகை ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப ஒருகை
அடுத்த கை முனிவர்களுக்குத் தத்துவங்களைக் கூறி, சொல்கடந்த பொருளை உணர்த்தும் விதமாக ‘மோனமுத்திரை’ தாங்கி மார்போடு விளங்குகிறது. அதற்கு இணையான மற்றொரு கை மார்பில் தவழும் மலர்மாலைமீது படிந்துள்ளது.

மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை

ஐந்தாம் இணைக்கரங்கள் செய்வதென்ன? ‘களவேள்வி துவங்குக,’ என முத்திரை கொடுக்க ஒருகை உயரும்போது அதிலணியப்பட்ட வளையல்கள் (தொடி) தவழ்ந்து கீழே நழுவுகின்றன. நுட்பமான கருத்துப்பதிவு! அதன் இணைக்கை மணியை அசைத்து ஒலிப்பிக்கின்றதாம்.

gajavahana_350
கீழ்வீழ் தொடியடு மீமிசைக்கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட ஒருகை

ஆறாம் இணைக்கரங்களில் ஒருகை நீலநிறத்தையுடைய முகில்கூட்டங்களால் மழையைப் பொழிவிக்கின்றது; அதன் இணைக்கை தெய்வமங்கையர்க்கு மணமாலை சூட்டுகிறது.

நீல் நிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட,
ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்றி…..

இவ்வாறு பன்னிரு கரங்களின் செயல்களையும் நக்கீரனார் விளக்குகின்றார்.

இதேவிதமாக இன்னும் சுவைமிகுந்த கருத்துக்களைப் புலவர் நடேச கவுண்டரும் தாமியற்றிய எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் முருகனின் கைவண்ணமாகக் கூறிச் சிறப்பிக்கிறார். அதனைக் காணலாமா?

இவர் போற்றுவது பன்னிரு கரங்களையுடைய குழந்தை முருகன். எல்லாமறிந்த எல்லாம்வல்ல இறைவனே சிறுகுழந்தையான முருகப்பெருமான் எனத்தெளிந்த அடியார் சிறுபறை முழக்கும் அவனுடைய சிறு கரங்களைப் பலவிதமாகப் போற்றுகிறார்.

arunagiri_murugansri_brahmasasta

மிகுந்த துயரளிக்கும் பிறவிப்பெருங்கடலிலிருந்து எடுத்து எம்மைத் தாங்கி ஆசுவாசம் அளிப்பதொருகை;
இருவினைகளையும் செய்து இந்த உலகில் உழலும்போது ‘அஞ்சாதே!’ என அபயம் அளிப்பது மற்றொரு கை.

அருணகிரிநாதருக்கு அருள் செய்யும் விதத்தில் செபமாலையை அவருக்கு அளித்ததொரு சிவந்த கொடைக்கை.

மிகுந்த செருக்குடன் திரிந்த தாமரையோனாகிய பிரமனுடைய தலை குலுங்குமாறு குட்டுவது ஒரு கை!

தேவர்களின் அரசனான இந்திரனுக்கு, அவனுடைய பறிபோன அரசபதவியைத் திரும்பப் பெற்றளித்து அவன் தலையில் மகுடம் சூட்டும் வரதக்கை இன்னொன்று!
இனிய தெளிந்த அமுதம் போன்றவளான வள்ளியம்மைக்கு மணமாலையைச் சூட்டும்கை மற்றொன்று!

இவ்வுலகத்திலுள்ளோர், வானுலகிலுள்ளோர் அனைவரும் வேண்டுகின்றன அனைத்தினையும் கொடுத்தருளுவது ஒருகை!

அருணகிரிநாதர் கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்தபோது அவர்தமைத் தாங்கியெடுத்து ஏந்திக்கொண்டது மற்றொருகை!

சித்தர் பெருமக்களுக்கு ஞானநெறியைத் தெரிவிக்கும்வகையில் சின்முத்திரை காட்டும்கை ஒன்றாகும்.

சீர்காழி எனும் திருத்தலத்தில் ஞானசம்பந்தராக அவதரித்து அந்தணராகிய தமது தகப்பனாருக்கு சிவபெருமானை, ‘தோடுடைய செவியன்’ எனச் சுட்டிக்காட்டிய திருக்கை மற்றொன்றாகும். (குழந்தையான சம்பந்தர் குளக்கரையில் தனியே இருந்து அழுதபோது, உமையம்மையும், சிவபிரானும் விடையேறி வந்து அவருக்கு ஞானப்பாலைப் புகட்டிச் சென்றனர். பின் கரையேறி வந்த அந்தணராகிய தந்தை ‘யார் வந்தனர்’ எனக்கேட்க, “தோடுடைய செவியன் விடையேறித் தூவெண்மதி சூடி வந்தனன்,” எனச் சுட்டியது குழந்தை. அதனையே இங்கு குறிப்பிடுகிறார்.)

மாலையணிந்த பாண்டியமன்னனின் (வேம்பன்) சுரத்தை நீக்கி, அவன் உடல் குளிருமாறு திருநீறு பூசிய கையொன்று! (சமணோரோடான மதவாதத்தில், திருநீற்றைப்பூசி, நின்றசீர் நெடுமாறப் பாண்டியனின் சுரநோயைத் தீர்த்தருளினார் திருஞானசம்பந்தர். அதனை இங்கு நயம்படக் கூறினார் புலவர்.)

கோலக்கா எனும் ஊரில் பொற்றாளம் கிடைக்கப்பெற்றது ஒருகை. (சிவபிரான் குழந்தை ஞானசம்பந்தருக்கு பொற்றாளங்களை அளித்தது திருக்கோலக்கா எனும் ஊரிலாகும்; அதுவே கூறப்பட்டுள்ளது)

இக்கைகளால் எல்லாம் எட்டிக்குடிவாழ் முருகா நீ சிறுபறை முழக்கியருளுக! எனப்புலவர் கற்பனை வளம் பெருக வேண்டிப்பாடும் பாடல்கள் மிக்க அழகானவையாம்.

‘வருந்தும் பிறவிக் கடனின்று வாங்கி யெம்மைத் தாங்குங்கை
மண்மேல் வினையி லுழலுங்கால் மயங்கா தஞ்ச லருளுங்கை
……………………………………………………………………………………………………
முருந்து நகையெட் டிக்குடியாய் முழக்கி யருள்க சிறுபறையே
முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே.’

‘இத்தா ரணியார் வானோர்வேண் டியவெல்லாமு மீயுங்கை
எம்மானருண கிரிசிகரி யிருந்து விழுங்கா லேந்துங்கை
……………………………………………………………………………………………………
கொத்தார் வேம்பன் சுரநீங்கிக் குளிர நீறு பூசுங்கை
கோலக்காவிற் பொற்றாளங் கொண்ட கையா லுமையளித்த
…………………………………………………………………………………………………….
முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே’
என அழகிய இரு பாடல்களில் ஈராறு கரங்களின் பெருமையை எல்லாம் அழகுறப் பேசுகிறார்.

(எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- சிறுபறைப்பருவம்- நடேச கவுண்டர்)
அடுத்து இச்சிறுகைகள் செய்யும் குறும்புகளைக் காணலாம்!

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

***********

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *