செல்வன்

வீர வாஞ்சி

ஜூன் 17 வீர வாஞ்சி என அழைக்கப்பட்ட வாஞ்சிநாதனின் 106வது நினைவுதினம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ம் தேதி.2

1886ஆம் ஆண்டில் ரகுபதி அய்யருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். செங்கோட்டையில் பள்ளிப் பருவத்தினை முடித்தவர். திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெறுகிறார். படிக்கும்போதே சீதாராமய்யரின் மகள் பொன்னம்மாளை மணந்தார். பின்னர் திருவனந்தபுரம் புனலூர் காட்டுப்பகுதியில் வனக் காவலராகவும் பணியாற்றினார். இவருக்கு பிரிட்டிஷ் அரசின்மீது கோபமும் வெறுப்பும் இருந்தது. அதனால் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்டு தன்னையும் சுதந்திரப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, தன் அரசு வேலையை விட்டதாக வரலாறு கூறுகிறது. புதுவையில் வ.வே.சு.ஐயர் வீட்டில் சென்று தங்குவது, மகாகவி பாரதியுடன் உரையாடல், மேலும் பாரதமாதா இயக்கத்துடன் தன்னை இணைத்து போராட்டம் எல்லாம் அவரை ஆங்கிலேயருக்கு எதிராக போராடத் தூண்டுகிறது.

இந்தச் சூழலில் சுதேசி கப்பல் நிறுவனம் நடத்திய சிதம்பரனாரை கலோனிய ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்து செக்கிழுக்க வைத்து கொடுமைப்படுத்தியது. இதைக் கேள்விப்பட்ட வாஞ்சிநாதன் மற்றும் அவரது பாரதமாதா சங்கத்தினரின் இரத்தம் கொதித்தது. சிதம்பரனாருக்கு ஏற்பட்ட இந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான ஆங்கிலேய அரசுக்கு புத்தி புகட்டும் நோக்கில் இதற்கெல்லாம் காரணமாக இருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் என்பவரை கொல்வது என்று வாஞ்சி சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, வாஞ்சிநாதனே இந்தப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானம் ஆனது.

1911, ஜூன் 17. அன்று காலை 10.45 மணி. திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மணியாச்சி ரயில்நிலைய சந்திப்பில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தார். அதுவே சரியான தருணம் என்று எண்ணிய வாஞ்சி, ஆஷ்துரையை தன் துப்பாக்கியால் சுட்டார். கலெக்டரை காப்பாற்ற ரயிலை திருநெல்வேலிக்கு திருப்பியும் பயனின்றி தன் மனைவியின் மடியில் படுத்தபடி உயிரை விட்டார் ஆஷ்.

ஆஷை சுட்டுக்கொன்றுவிட்டு, காவலர்களிடம் பிடிபட்டால் தான் சார்ந்திருக்கும் பாரதமாதா சங்கம் பற்றிய ரகசியம் தெரிந்துவிடும் என்பதால், அருகே இருந்த கழிப்பிடம் நோக்கி ஓடினார் வாஞ்சி. அதனுள் சென்றவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் இருந்த துண்டுக் கடிதத்தில், ஆஷ்துரையை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.1

திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும். பிற போராட்டங்கள் போலன்றி இது ஆங்கில அரசின் அனைத்து மட்டங்களிலும் மரணபீதியை உருவாக்கியது. மிகக் கொடூரமான ஒடுக்கு முறைகளை கடைபிடித்தே பாரதமாதா சங்கத்தையும், வாஞ்சிநாதனின் நண்பர்களையும் ஆங்கிலேயே அரசால் ஒடுக்க முடிந்தது. வீர வாஞ்சிநாதனின் நினைவு மக்கள் மனதில் நிற்கும் வண்ணம், குமரி அனந்தன் அவர்கள் முன் முயற்சியால் வாஞ்சி வீரமரணம் எய்திய மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி – மணியாச்சி சந்திப்பு என்ற பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. அவரது நினைவு நாளில் வாஞ்சியின் செயலுக்கும் வீரத்துக்கும் மரியாதை செலுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக வந்து, வாஞ்சியின் சிலைக்கு மாலை அணிவித்து சபதம் எடுக்கிறார்கள்.

வாஞ்சிநாதனின் வரலாற்றை ரகமி 1980களில் தினமணியில் தொடராக எழுதியது வாஞ்சிநாதனின் வரலாற்றை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க உதவியது.

வீரத்துக்கும், விவேகத்துக்கும், தேசபக்திக்கும், போராட்ட குணத்திற்கும் உதாரணமான வாஞ்சிநாதன் விடுதலை வேட்கை கொண்ட அனைவருக்கும் முன்னுதாரணம் ஆவார். அவரது 106வது நினைவுதினத்தில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது

இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]​

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர் (227)

  1. திரு.பாலமுருகன் அவர்களுக்கும், செல்வனுக்கும் என் பாராட்டுகள்.
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *