க. பாலசுப்பிரமணியன் 

வகுப்பறைகளில் கற்றலின் வேறுபட்ட முறைகளின் பாதிப்புக்கள்

education-1-1-1-1

பார்வைகளின் உந்துதல்களால்(visual inputs)ஏற்படும் கற்றல் மற்றும் செவி, செயல் சார்ந்த  (auditory and kinesthetic ) உணர்வுகளின் உந்துதல்களால் ஏற்படும் கற்றல் திறன்கள் அநேகமாக அனைவருக்குமே உண்டு. ஆயின், சிலருக்கு ஒரு குறிப்பிட்ட முறையின் அதிகபட்ச தாக்கம் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. இத்தகைய அதிக பட்சத் தாக்குதல்களால் மற்ற வகையான கற்றல் முறைகள் ஒதுக்கப்பட்டு அவற்றின் பலன்கள் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்படலாம். ஆகவே, இந்த மூன்று விதமான தாக்கங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் உறவுகள், பயிற்சிகள் அமைதல் அவசியம். ஆசிரியர்கள் ஏதாவது ஒரு முறையில் ஏற்படும் கற்றலுக்கோ பயிற்சிக்கோ அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் வகுப்பறைகளில் பாதிக்கும் மேலான மாணவர்கள் அந்த பயிற்சிகளில்  ஈடுபாடு இன்றியோ அல்லது அந்த  நேரங்களில் தங்கள்  கவனத்தை மற்ற பொருள்களிலும் மற்ற ஆர்வத்தை ஈர்க்கும் காட்சிகள் ஏற்படுத்தும்  கற்றலின் உந்துதல்களில் ஈடுபடுத்தியோ இருப்பார்கள். இதனால் அந்த வகுப்பறைகளில் கற்றலின் தாக்கங்கள் மிகக் குறைவாக இருப்பதால் நேரத்தின் பயன்பாடுகள் மிகக் குறைவாக இருக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு.

உதாரணமாக, ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் ஒரு பாடத்தை பற்றி பேசும்பொழுதோ பொழுது, பார்வைசார் கற்றலில் சிறந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் “அய்யா, தங்கள் சொல்லுவதை சற்றே கரும்பலகையில்  எழுதுங்கள்” என்று கேட்பார்கள். அல்லது, அவர்கள் தங்கள்  கவனத்தை  ஆசிரியர்களிடமிருந்து விலக்கி அருகிலிருக்கும் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்த வகுப்பறைக்கு வெளிப்பக்கமாக எத்தனை பேர் வந்தார்கள், போனார்கள் என்ற துல்லியமான கணக்கு அவர்களிடம் இருக்கும். மாறாக, ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் செவிசார் கல்வியில் சிறந்த மாணவர்கள், கரும்பலகையிலிருந்து தங்கள் கவனத்தை விலக்கி அருகிலுள்ள மாணவர்களிடம்  பேசிக்கொண்டிருப்பார்கள். செயல் சார் கல்வியில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் இருக்கும் இடத்தை விலக்கி வேறு எங்காவது செல்ல முயற்சித்துக் கொண்டும் அல்லது ஏதாவது ஒரு பொருளால் மற்றவர்களுடைய கவனத்தை தங்களிடம் ஈர்த்துக்கொண்டும் இருப்பார்கள்

அதே போல், ஆசிரியர்கள் மாணவர்களை ஏதாவது ஒரு பாடத்தை உரக்கப் படிக்கச் சொல்லும் பொழுது, பார்வைசார் கற்றலில் (visual) சிறப்பான மாணவர்கள் வேறு எங்காவது தங்கள் கவனத்தைச் சிதறவிட்டோ அல்லது ஆசிரியர்கள் சொல்வதைக் காதில் வாங்கி கொள்ளாமல் அவருடைய முகத்தை மற்றும் பார்த்துக் கொண்டோ இருப்பார்கள். அதே நேரத்தில் செவிசார் கற்றலில் (auditory) மாணவர்கள் “எந்தப் பாடம் படிக்கச் சொன்னீர்கள் ? எந்தப் பக்கத்தில்? எந்த வரிகள் ” என்று பல விதமான கேள்விகளைக் கேட்டு ஆசிரியர்களோடு தொடர் உரையாடலில் ஈடுபடுவார்கள். செயல்சார் ( kinesthetic) மாணவர்களோ புத்தகங்களில் பக்கங்களை ஒன்றொன்றாகத் திருப்பிக்கொண்டும் புத்தகங்களால் மேசைகளைத் தட்டிக்கொண்டும் இருப்பார்கள். பொதுவாக அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும்

இது போன்று கற்றல் முறைகளின் மாறுபாடுகளாலும், மற்றும் ஏதாவது ஒரு முறையின் சிறப்பான தாக்கத்தாலும் வகுப்பறைகளில் கற்றலில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. இந்த மாதிரியான மாணவர்களின் கற்றல் திறன்களை ஆராய்ச்சி செய்துள்ள கல்வியல்  மற்றும் மூளை- நரம்பியல் வல்லுநர்கள் கண்டுபிடிப்புக்கள் சில ஆச்சரியமாக உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக பார்வைசார் கற்றலில் சிறப்பான மாணவர்கள்  மொழிகள் கற்பதிலும், ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கற்பனையைத் தூண்டும் கலைகளிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மொழிகளில் எழுதும்போது அவர்களுடைய சொற்தொடர்களில் மொழி வல்லமை, வண்ணங்களைச் வார்த்தைகளின் ஆதிக்கம், சரியான உச்சரிப்புக்கள் ஆகியவை மேலோங்கியிருக்கும். சிறந்த கட்டுரை ஆசிரியர்கள், எழுத்தாளர்களும்  இந்தத் திறன்சார்ந்தவர்களாக இருப்பார்கள்

மேலும் ஆராய்ச்சிகளின் மூலமாக நமக்கு வெளிப்படுவது யாதெனில் – செவிசார் கற்றலில் அதிக ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கணிதம் போன்ற பாடங்களில் குறைவான அக்கறை இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், கணிதம் போன்ற பாடங்களில் அதிகமான உரையாடல்களும் பேச்சுகளுக்கு வாய்ப்புக்கள் இல்லை. இவர்கள் மேடைப்பேச்சாளர்களாகவும், பாடகர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களைத் தேடுவதிலும், நண்பர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அலைபேசிகளின் ஆருயிர்  நண்பர்கள்.! இவர்களுடய பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம்.

செயல்சார் மாணவர்கள் நாடகம், விளையாட்டுகள், பரிசோதனைகள், பொறியியல்சார் வேலைகளில்  ஆர்வம்  உடையவர்கள்; பள்ளிகளில் அலங்கரித்தல், கண்காணித்தல், தலைமைப் பொறுப்புகள் ஏற்றல் போன்ற செயல்களில் ஈடுபாடு அதிகம் உண்டு. வகுப்பறைகளில் பாடங்கள் சொல்லிக்கொடுக்கும்பொழுது மேசைகளைத் தட்டிக்கொண்டோ அல்லது தங்களுடைய செயல்களால் மற்றவர்கள் கவனத்தை சிதறடித்து ஆனந்தப்படுவதிலோ இவர்களுக்கு இன்பம் அதிகம். வகுப்பறைகளில் ஏதாவது சில்மிஷங்கள் நடத்தி அதிகம் பிடிபடக்கூடிய  வகையைச்  சார்ந்தவர்கள்.

இந்தச்  சூழ்நிலையில் அத்தனை வகையைச் சார்ந்த மாணவர்களின் கவனத்தையும் ஒருங்கிணைத்து அவர்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பி கற்றலில் அவர்கள் ஆர்வத்தை தக்கவைத்தும் மேம்படுத்தியும் சிறப்படையச் செய்தும் மற்றும் அவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவைகளுக்கு ஈடுகொடுத்தும் செயல்படும் ஆசிரியர்கள் உண்மையிலேயே மிகப் பொறுப்பான தொழிலில் ஈடுபடுபவர்கள். போற்றத் தக்கவர்கள்!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *