நிர்மலா ராகவன்

இனி இல்லை தோல்வி

நலம்

வெகு சிலரே வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் அறிவோ, திறமையோ இருக்கிறதென்று அர்த்தமில்லை. எல்லாம் இருந்தும், வெற்றி பெறுவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாதபடி ஒருவித பயம் பலருக்கும்.

யார் யாருக்கு இந்தப் பயம்?

1 தந்தை, `எதையும் ஒழுங்காச் செய்யத் தெரியாது! நீ உருப்பட மாட்டே!’ என்று மகனைப் பழிப்பதைக் கேட்டிருப்பீர்கள். இப்படி மட்டம்தட்டிப் பேசுவதுதான் ஊக்குவிப்பது என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தார்கள், கடந்த தலைமுறையில். இன்றும் சில பழமைவாதிகள் இதே முறையைத்தான் கையாள்கிறார்கள்.

சிறுவயதில் பழிக்கப்பட்டவர்கள் முன்னுக்கு வரமுடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள். தாழ்வு மனப்பான்மையும் அதனால் விளையும் அச்சமும் மட்டும் நிரந்தரமாக அவர்களுடன் தங்கிவிடுகிறது என்பதுதான் பரிதாபம். அப்புறம் முன்னுக்கு வருவது ஏது!

2 இயற்கையாகவே கூச்ச சுபாவம் உடைய குழந்தைகள்.

கதை

சிறுவயதில் கிராமத்தில் பாட்டி, தாத்தாவுடன் மிகவும் அருமையாக வளர்ந்தவன் சோமு. பள்ளிப்படிப்புக்கு பெரிய நகரத்தில் பெற்றோர் வீட்டுக்கே வந்துவிட, தந்தையின் முரட்டுத்தனமான கண்டிப்பு அவனை மிரளச் செய்தது. தமிழ்ப்படங்களில் வருவதுபோல், தாய் மகனுக்குப் பரிய, தந்தை இன்னும் மூர்க்கமாக வாயாலேயே அவனை வதைத்தார். பரீட்சையில் தோல்வி அடைந்தால் அடி.

ஆண் பிள்ளைக்கோ தந்தைதான் முன்னோடி. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று சோமு தன் தந்தை பழித்ததுபோலவே நடக்கத் தொடங்கினான்.

வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டதால் உண்டான கூச்ச சுபாவம், தோல்வி அடைந்தால் இன்னும் பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டுமே என்ற பயம் எல்லாம் சேர்ந்து கொண்டன. பிறருடன் கலகலப்பாகப் பேசக்கூடப் பயந்து, புதிதாக எக்காரியத்தைச் செய்யவும் தைரியமின்றி, எதிலும் தோல்வி காண்பவனாக ஆகிப்போனான் சோமு.

சில பெற்றோர்கள் தம் பெண் குழந்தைகளுக்கு நல்லது செய்கிறோம் என்றெண்ணி, `நீ கடுமையாக உழைத்து, சிறந்த தேர்ச்சி பெற வேண்டும் என்கிற அவசியமில்லை. எப்படியும் கல்யாணம் செய்துகொள்ளத்தானே போகிறாய்! இளமைக்காலம் ஒருமுறைதான் வரும். இப்போதே நன்றாக அனுபவித்துவிடு!’ என்று சொல்வார்கள்.

இதை அப்படியே ஏற்று நடக்கும் பெண்களில் சிலர் `அப்பா மிக நல்ல அறிவுரை கூறினார்! அதற்குப்பின் அப்படி மகிழ்ச்சியாகவே இல்லை!’ என்பார்கள்.

வேறு சிலர், `நான் நிறையப் படித்து, நாலுபேர் மெச்ச வாழவேண்டும்!’ என்றெல்லாம் ஆசைப்பட்டாலும், அப்பாவுக்கு எதிராக நடப்பது சரிதானா என்ற குழப்பம் உண்டாக, வெற்றியைக்கண்டு அஞ்சுபவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

அளவுக்கு மீறிய பொறுமை

பிடிக்காத உத்தியோகத்திலிருந்து மாறப் பயந்து, அதைப்பற்றிப் புலம்பிக்கொண்டு, அதிலேயே நிலைத்திருப்பவர்கள் பொறுமைசாலிகள்தானா? வேறு வேலை கிடைக்கும் என்றாலும், புதிய ஒன்று எப்படி இருக்குமோ என்ற பயமே அவர்களை அப்படி இருக்கச் செய்கிறது.

அதேபோல்தான் கணவன் என்ன வதைத்தாலும் அதைத் தாங்கிப்போகும் பெண்களும். `பிறர் என்ன சொல்வார்களோ?’ என்ற அச்சம் எழ, பொறுக்க முடியாத வாழ்க்கையையும் எப்படியோ சமாளித்து வாழ்ந்தார்கள் இவர்கள், அண்மைக்காலம்வரை.

பெண்களுக்கு கல்வியும், சொந்தக்காலில் நிற்கும் திறனும் இருப்பதால், இப்போது நிலைமை சற்றே மாறியிருக்கிறது.

வெற்றியே பாரம்

ஏன் வெற்றி பெறுவதை ஒரு பாரமாக நினைக்கிறார்கள்?

கதை

`இவளைப்போன்ற அறிவாளியை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. வகுப்பில் முதலாவதாக ஏன் வருவதில்லை?’ என்று பூர்ணிமாவின் ஆசிரியை குழப்பத்துடன் அவள் தாயைக் கேட்டாள்.

தாய்க்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. வீட்டுக்குப் போனதும், மகளைக் கோபிக்காது, `நான் பாடம் சொல்லிக் கொடுத்தபோது, எல்லாவற்றிற்கும் சரியாகப் பதில் சொன்னாயே! வேண்டும் என்றே தப்பும் தவறுமாக எழுதியிருக்கிறாய். இல்லையா?’ என்று கேட்டாள் புன்சிரிப்புடன்.

அந்தப் பத்துவயதுச் சிறுமி ஒப்புக்கொண்டாள். முதலாவதாக வரும் பெண்ணைப்போல் கர்வியாக, தான் எது சொன்னாலும், செய்தாலும் சரிதான் என்று அடம்பிடிப்பவளாக ஆகப் பிடிக்கவில்லை என்று. அதனாலேயே அப்பெண்ணுக்கு நெருங்கிய தோழிகளே கிடையாது, தானும் அப்படித் தனித்து இருக்க விரும்பவில்லை என்றாள்!

`எனக்கு எவருடனும் ஒத்துப்போக முடியும்,’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்பவர் தன் முழுத்திறமையை வெளிப்படையாகக் காட்டமாட்டார். வெற்றி, அதனால் கிடைக்கும் பதவி என்றால் பொறுப்புகளும் அதிகரித்துவிடும் என்பது ஒருபுறமிருக்க, பலருக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று, ஒரே நிலையில் இருப்பார்கள்.

ஆனால், இவர்களைப் போன்றவர்கள் நிம்மதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. வெற்றியை நினைத்துப்பார்க்கவும் அஞ்சுபவர்களுக்கு இலக்கே கிடையாது. மாற்றமில்லாத வாழ்க்கையே பாரமாகி விடுகிறது.

தம்மையும் தம் குறைகளையும் மறக்க சிலர் தம்மைத் தாமே குலைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். மது, மாது, போதைப்பழக்கம் என்று ஏற்படுத்திக்கொள்வார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தம் திறமைக்கு மீறிய காரியங்களில் ஈடுபட்டு (உதாரணம்: வியாபாரம்) தோல்வி அடைவார்கள்.

எப்படி இந்த நிலையை மாற்றுவது?

தன் குறை என்ன என்று புரிந்து, அதை நிவர்த்தி செய்துகொள்ள முயலுவது.

பூர்ணிமாவுக்குச் சற்று விவரம் புரிந்ததும், அவள் தாய் கூறியது: `கடவுள் உனக்கு நல்ல அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை முழுமையாகப் பயன்படுத்தாது விடலாமா?’

அதன்பின் அப்பெண் தன் புத்திசாலித்தனத்தை மறைத்துக்கொள்ள முயலவில்லை. அவளைப்போலவே இருந்த சிலருடன் நட்புடன் பழக, வாழ்க்கையில் பிடிப்பும், மகிழ்ச்சியும் உண்டாயின.

சிறு பிராயத்தில் கேட்ட வசவுகளால் தான் குறைபாடு உள்ளவனாக ஆகிவிடமாட்டோம் என்ற உறுதியுடன் செயல்படுவது.

தன்னைத் தாழ்த்த முயல்கிறவர்களின் தொடர்பைக் குறைத்துக்கொண்டு, அவர்கள் முயற்சியைத் தோற்கடிப்பது. வெற்றி பெற்றால், பலருடைய வாய்க்கு அவலாக ஆகிவிடுவோம், அதனால் பாதிப்படையக்கூடாது என்று தெளிவடைவது.

பிறர் நம்மைத் தாழ்த்தவோ, காயப்படுத்தவோ முயன்றால், அதனால் நாம் இழிந்தவர்களாக ஆகிவிடப்போவதில்லை. அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று நினைத்துக் குழம்புவது அநாவசியம். அவர்கள் எப்படியோ போகட்டும், விடுங்கள்!

உடலாலோ, மனதாலோ, உணர்ச்சிகளாலோ நாம் அவர்களை எதிர்க்காது இருப்பதே சிறந்தது.

இதைப் புரிந்துகொண்டால், தோல்வியைப் புறந்தள்ளலாம். வெற்றிக்கு அஞ்ச வேண்டியதில்லை.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *