அங்கம் -2 பாகம் -14

unnamed

“காதல் சம்பந்தப்பட்ட வரையில் பாலுணர்ச்சிகளைப் பொய்யாக எண்ணுவதைப் நானொரு மனிதப் பாபமாகக் கருதுகிறேன். அதே சமயத்தில் காதல் முழுதாயின்றிப் பின்னமாக உள்ள போது ஏற்படும் உணர்ச்சிகளை போலித்தனமானத் தவறென்று நான் மதிப்பீடு செய்கிறேன். நான் நம்புவதையே சொல்கிறேன்: காதலுற்ற போது ஒருவரை ஒருவர் முடிந்தவரை முழுமையாக நேசிக்க வேண்டும். அல்லாவிட்டால் என்ன நேர்ந்தாலும் சரி, ஒருவர் முழுக் கற்புடன் தனிமையாக வாழ வேண்டும்.”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

“இறைவா! எப்போதும் நான் சாதிக்கக் கூடுவதை விட மிகையாக வேட்கை கொள்வதையே எனக்கு அளித்திடு.”

மைக்கேலாஞ்சலோ [1474-1564]

“ஒரு நாளைப் பொழுதில் கடிது உழைத்துக் காலத்தைச் செலவழித்த பிறகு அன்றிரவில் ஆழ்ந்த சுகமான தூக்கம் வருவதைப் போல், நன்னெறியுடன் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியான மரணத்தை அளிக்கிறது!”

லியானார்டோ டவின்ஸி [1452-1519]

“என் எகிப்து நாடே! நன்கு அறிவாய் நீ!
நின் திசைதிருப்பிப் பின்தட்டுடன் கயிற்றால்
பிணைக்கப் பட்டு துள்ள தென் இதயம் !
பிறகு நீதான் இழுத்துச் செல்ல வேண்டும்!”

[கிளியோபாத்ரா]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

காட்சி அமைப்பு:

கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிகிறது!

தியோடோடஸ்: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] உலகப் புகழ் பெற்ற எங்கள் பெரு நூலகம் தீப்பற்றிக் கரியாகக் காரணமானீர்! உலக வரலாற்றை உருவாக்கும் மாவீரர் நீங்கள் பூர்வீக வரலாற்றை அழிப்பதில் பூரண விருப்பமா? எரிந்து போன நூல்களைப் புதிதாகப் பெற்றுத் தர வேண்டும். அல்லது நீங்கள் நட்ட ஈடு தர வேண்டும் எங்களுக்கு!

ஜூலியஸ் சீஸர்: [சற்று சீற்றமுடன்] ரோமானியக் கப்பலில் தீவைத்தது யார்? எகிப்தியப் படைகள்! கலகம் உண்டாக்கி நூலகத் தீயை அணைக்க முயலும் ரோமானியப் படைகளைத் தடுப்பது யார்? உங்கள் பரம்பரை! தொட்டில் பிள்ளையைக் கிள்ளி விட்டு, தாலாட்ட தாயைத் தேடுகிறீரா? உன்னத நூலகத்தின் மதிப்பை அறியாதவர் உங்கள் மூட மக்கள்! அறிவு கெட்டதனமாய் ரோமானியர் மீது பழி சுமத்த வேண்டாம்! உமது அறிவும் பழுதாகி விட்டது. ஏனிப்படிச் சும்மா நின்று கொண்டு என்னுடன் வாதாடிக் கொண்டிருக்கிறீர்? மெய்யாகவே நூலகத்தைக் காக்க விரும்பினால், வெளியே போய் தீயை அணைப்பீர்!

[தியோடோடஸ் பக்கத்தில் நிற்கும் போதினஸைப் பார்த்தவண்ணம் விரைந்து வெளியேறுகிறார்]

போதினஸ்: தியோடோடஸ், நான் போக முடியாது உன்னுடன்! நானொரு வீட்டுக் கைதி இங்கே! வெளியே எங்கும் உன்னைப் போல் நடமாட முடியாது நான்!

தியோடோடஸ்: [நடந்து கொண்டே] என்ன நீ ஒரு கைதியா? நூலகத்தை என்னால் முடிந்தவரைக் காக்க வேண்டும்! [போகிறார்]

ஜூலியஸ் சீஸர்: போதினஸ் நீதான் சொல்ல வேண்டும், உலக வரலாறுகள் எரிந்தழியும் இந்த நேரத்தில்! தியோடோடஸ் மூலம் செய்தி அனுப்பு, இனிமேலும் ரோமானியரைக் கொல்ல வேண்டா மென்று! என் நெஞ்சம் கொதிக்கிறது! போரிடாமல் வாளா நிற்கும் ரோமானியரைக் கொல்லத் துணியாதீர்! உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது, எமது படையினரைக் காப்பாற்றுவீரா?

unnamed (1)

போதினஸ்: [கோபமாக] உமது படையினர் உயிர் உமது கையில் உள்ளது! அவரைக் கப்பலில் ஏற்றி வந்தவன் நானில்லை! ஆனால் எமது உயிரைப் போக்கத் துணிந்தால், அதற்குப் பதிலாக நீவீர் பெருமிழப்பை ஏற்க வேண்டிய திருக்கும்!

ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] டாலமியும், நீயும் அக்கிலஸ் மூலமாக ஆயுதமற்ற என் மருமகன், ரோமானிய மாவீரன், பாம்ப்பியின் தலையை வெட்டிய பயங்கர வாதிகள்! உங்கள் குற்றத்துக்குத் தக்க தண்டனை கிடைக்கும்! அதில் ஐயமில்லை! நீவீர் நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரையில் முதல்தரக் கொலையாளியாகத்தான் எண்ணப்படுவீர்!

ரூஃபியோ: [அவசரமாய்க் குறுக்கிட்டு] ஜெனரல் சீஸர்! உங்கள் வருகை தேவைப் படுகிறது! உங்கள் முடிவு வேண்டப் படுகிறது! [துறைமுகம் வழியே எட்டிப் பார்த்து, படை வீரனிடம்] கிழக்கில் நிற்கும் சிறிய படகுகளை வெளியேற்று! நீண்ட படகுகளை என்ன செய்ய வேண்டுமென்று ஆணையிடச் சீஸர் வருவதாகச் சொல்! [சீஸரைப் பார்த்து] எங்கே அந்த எகிப்திய பயங்கர வாதிகளை? கொலைகாரர் அவர்கள்! அவர் மீது உங்களுக்குப் பரிவு மிகுந்து விட்டதா? அவருக்கு விடுதலை அளித்து விட்டீர்களா? பாம்ப்பியைக் கொன்ற அந்த பாதகரைச் சும்மா விடலாமா?

ஜூலியஸ் சீஸர்: ரூஃபியோ! நூலகத் தீயை அணைக்க தியோடோடஸை அனுப்பி யுள்ளேன்! உலக வரலாறுகளை, காவியங்களைப் பாதுகாக்க வேண்டும். போதினஸ் சிறைக் கைதியாக வைக்கப் பட்டிருக்கிறான்! நினைவில் வைத்துக் கொள் ரூ·பியோ! எத்தனை எகிப்தியனை நாம் சிறைப் படுத்தி வைத்திருக்கிறோம்! அதே சமயத்தில் ஒவ்வோர் எகிப்தியனுக்கும், இரட்டை ரோமானியக் காவலரைச் சிறைப்படுத்தி வைத்துள்ளோம், பாதுகாக்க.

ரூஃபியோ: சீஸர்! உங்கள் கசப்பான சுவைப் பேச்சில் ஏதோ ஒரு குள்ள நரித்தனம் தெரிகிறது எனக்கு! எகிப்தியர் மீது ஏன் உங்களுக்கு அத்தனை பரிவு? [பலகணி நோக்கிச் சென்று வெளியே எட்டிப் பார்த்து] சொல், என்ன நடக்கிறது துறைமுகத்தில்?

ஜூலியஸ் சீஸர்: [அங்குமிங்கும் பார்த்து] என்ன? பிரிட்டானஸ் தூங்கி விட்டானா? எனது கவசத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தேன். .. பிரிட்டானஸ்! எங்கே போய் விட்டாய்? கவசத்தைக் கொண்டுவா! காத்துக் கொண்டிருக்கிறேன். … யாரங்கே வருவது?

[அப்போது கிளியோபாத்ரா வெளியிலிருந்து சீஸரின் வாள், தலை கெல்மெட்டை பிரிட்டானஸிட மிருந்து பறித்துக் கொண்டு, ஆங்காரமாக உள்ளே நுழைகிறாள். அவளைப் பின்பற்றி பிரிட்டானஸ் தொடர்கிறான். சீஸருக்கு இடப்புறம் கிளியோபாத்ராவும், வலப்புறம் பிரிட்டானஸ¤ம் நிற்கிறார்கள்.]

கிளியோபாத்ரா: [ஆர்வமுடன்] ரோமன் கெல்மெட்டைப் பார்க்கவே வெகு அழகு! அதில் ஆண்மை தெரிகிறது! ஆண்மையின் வல்லமை தெரிகிறது. ஆண்மையின் அதிகாரம் தெரிகிறது. அதைத் தலையில் வைத்தால் ஆடவரின் உயரம் கூடுகிறது! முக லட்சணம் பராக்கிரமத்தைக் காட்டுகிறது! உங்களின் ஆண்மைத் தோன்றத்தைப் பன்மடங்கு அதிகரிக்கிறது! எடுப்பான உங்கள் முகத்தைப் பார்த்தால், பகைவரின் தொடைகள் நடுங்கும்! வயிற்றுக் குடல் வெளியே வந்திடும்! ஆடவருக்கு அப்படி ஓர் அதிகாரக் கெல்மெட் உள்ளது போல, பெண்டிருக்கு ஏன் செய்யப் படவில்லை? எனக்கொன்று அதுபோல் வேண்டும்!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] எங்கள் ரோமானியப் படையில் பெண் வாசமே அடிப்பதில்லை! மருத்துவக் குழுவில் கூட பெண்டிர் எவரும் கிடையாது! போர்ப்படையில் பெண்டிருக்கு யாம் வேலை தர மாட்டோம்! வீட்டுப் போரில் பங்கெடுப்பவர் எமது பெண்டிர்! வெளிப் போரில் பங்கெடுப்பவர் ஆடவர்! வீட்டுப் போரில் பெண்ணை ஆடவர் வெல்ல முடியாது! வெளிப் போரில் பெண்டிர் எம்மை மிஞ்ச முடியாது! வீராங்கனை உனக்கு ஓர் கெல்மெட் தேவைதான்! தயார் செய்து அனுப்பச் சொல்கிறேன். உன்னைப் போல் ஒரு வீரப் பெண்ணை ரோமில் எங்கும் காண முடியாது!

கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] ஆடவர் நீங்கள் வீட்டில் பெண்டிரை ஆராதித்துக் கொண்டு, அரவணைத்துக் கொண்டு, அலங்காரப் பொம்மைகளாய் நடத்திக் கொண்டு வருகிறீர்! என்னைப் போல் பெண்டிர் ரோமிலில்லை என்று கூறி மூடி மறைக்காதீர்! கையில் வாளைக் கொடுத்து, கவசத்தை மார்பில் கட்டி, குதிரையில் ஏற வாய்ப்பைக் கொடுத்தால் என்னைப் போன்ற பெண் ஏன் உருவாக மாட்டாள்?

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! அது உண்மைதான்! ரோமானியப் பெண்டிர் உன் வீரக் கண்களைப் பார்த்தவுடனே பக்கத்தில் வாள் உள்ளதா வென்று அவரது கைகள் தேட ஆரம்பித்து விடும்! நான் ரோமுக்குப் போகும் போது நீ அவசியம் என்னுடன் வா! உன்னை ரோமாபுரியின் பிரதான வீதிகளில் அழைத்துச் செல்கிறேன்! யாவரும் வாழ்த்தி வரவேற்பார்!

கிளியோபாத்ரா: [பூரிப்புடன் அருகி சீஸர் தோளைப் பற்றிக் கொண்டு] என் வயிற்றில் வளரும் உங்கள் ஆண்மகவு பிறந்து நடக்க ஆரம்பித்ததும் ரோமாபுரிக்கு வருகிறேன்! நிச்சயம் வருகிறேன்! ரோமாபுரியின் வருங்கால வாரிசு மன்னனான உங்கள் புதல்வனை, என் கரத்தில் பற்றிக் கொண்டு வருகிறேன்.

ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன் கிளியோபாட்ராவைத் தழுவி] ஆனந்தம் அடைகிறேன், கிளியோபாத்ரா! நீ தாயா? என் மகவுக்கு அன்னையா? மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்….. ஆனால் அது எப்படி ஆண்மகவு என்று அப்படி உறுதியாகச் சொல்கிறாய்?

unnamed (2)

கிளியோபாத்ரா: [சீஸரின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டு] எங்கள் அரண்மனை ஜோதிட நிபுணர் மூவரும் கூறினார், எனக்குப் பிறக்கப் போவது ஆண் மகவென்று! அதை நான் நம்புகிறேன்! அவர் வான சாஸ்திரம் அறிந்தவர். அலெக்ஸாண்டர் இந்தியாவைப் படை யெடுத்து மீண்ட சமயத்தில், அங்கிருந்த வான சாஸ்திர வல்லுநர் மூலம் கிரேக்க ஞானிகள் அறிந்த கலை. வாழையடி வாழையாக அந்த வான சாஸ்திரக் கலை எகிப்திலும் பரவி வளர்ச்சி பெற்றது. [கனிவுடன்] சீஸர்! சீஸர்! சீஸர்! நான் பிறந்ததின் உன்னத பலனைப் பெறுகிறேன். நிச்சயம், நமது முதல் குழந்தை ஆண்மகவு! அந்த எதிர்பார்ப்பில் சிறிதேனும் ஐயமில்லை எனக்கு! அந்த ஆண்மகவு உங்கள் வாரிசு! ரோமாபுரியின் எதிர்கால வேந்தர் வேந்தன்! எகிப்த் நாட்டின் வருங்கால மாமன்னன்!

ஜூலியஸ் சீஸர்: [ஆனந்தக் கண்ணீர் சொரிய] கிளியோபாத்ரா! என் கனவை நிஜமாக்கியவள் நீ! எனது மனைவி கல்பூர்ணியா பெற முடியாத ஆண்மகவை எனக்கு ஈடிணை யில்லாத அற்புதப் பரிசாக அளிக்கப் போகிறாய்! அரசனாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும், பிரதான பிள்ளைச் செல்வமாய், ரோமாபுரியும் என் குமரனை வரவேற்கும்! நிச்சயம் வரவேற்கும்! எனக்குக் கிடைக்கும் மதிப்பு என் எகிப்திய மகனுக்கும் கிடைக்கும்!

[கிளியோபாத்ரா சீஸர் மார்பில் சாய்ந்து கொள்கிறாள்]

++++++++++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எழிலரசி கிளியோபாத்ரா -14

Leave a Reply to சி. ஜெயபாரதன்

Your email address will not be published. Required fields are marked *