தாமகோட்சி முதல் நீலத் திமிங்கலங்கள் வரை… (From Tamagotchi to Blue whales – the journey of an emotional disaster).

0

க. பாலசுப்பிரமணியன்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் சப்பானில் தயாரித்து குழந்தைகளிடம் பழக்கத்திற்கு விடப்பட்ட “தாமகோட்சி” என்ற ஒரு மின்னணுவால் இயக்கப்பட்ட ஒரு விளையாட்டுப் பொருளின் தாக்கத்தை பற்றி எழுதியிருந்தேன். ஒரு குழந்தையின் வடிவில் இயக்கப்பட்ட இந்த மின்னணு பொம்மை பள்ளிச் சிறுவர்களிடம் பாசத்தையும் ஒழுங்கையும் குழந்தைகளைப் பேணுவதற்க்கான திறன்களை வளர்ப்பதற்காக தயாரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த உயிரற்ற மின்னணுக் குழந்தைகளை சிறுவர்கள் உயிருள்ள குழந்தைகள் போல் பேணத் தொடங்குவர். இந்தக் குழந்தைக்குப் பசியெடுக்கும் பொழுது அது ஒரு குரல் (Beep sound)  எழுப்பும்.    உடனே அதன் உரிமையாளர் அதற்கு உணவு கொடுக்கும்வண்ணம் ஒரு இயக்கத்தைச் செய்ய வேண்டும். அதே போல் அந்தக் குழந்தைக்குத் தூக்கம் வரும்பொழுது விளையாடும் எண்ணம் இருக்கும் பொழுதோ அல்லது உடல் நலக்குறைவு ஏற்படும் பொழுதோ அது அதற்கான மாறுபட்ட ஒரு ஒலியை ஏற்படுத்தும். இவ்வாறு ஒவ்வொருமுறை ஒலி வரும்பொழுதும் அதன் உரிமையாளர் அதற்குத் தகுந்த தேவையான ஒரு இயக்கத்தைச் செய்தல் வேண்டும். அவ்வாறு  தவறினால் ஒரு சில முறைகளுக்குப் பின் அந்த உயிரற்ற மெய்நிகர் பொம்மை உயிரிழந்துவிடும்

இதன் காரணமாக பல பள்ளிச் சிறுவர்கள் இந்த மெய்நிகர் (virtual) பொம்மைகளை தங்கள் பைகளில் வைத்துப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தனர். வகுப்பறைகளில் அந்த “பீப்” ஒலிகள் தொடர்ந்து வந்ததால் ஆசிரியர்களுக்கு பாடங்களை படுத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டதால் இந்த விவகாரம் பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டது. அது மட்டுமல்ல ..இந்த பொம்மைகள் உயிரிழந்த காரணத்தால் அதன் சொந்தக்காரக் குழந்தைகள் துயரத்தால் மனஅழுத்தம் ஏற்பட்டு மனநல மருத்துவர்களை அணுகியதாகச் செய்திகள் வந்தன. அது மட்டுமல்ல, தொடர்கதையாக இந்த இறந்த குழந்தைகளை அடக்கம் செய்வதற்கான ஒரு தனி வலைத்தளம் ஏற்படுத்தப்பட்டது.

இது ஒரு விளையாட்டுப்  பொருளாக இருந்தாலும் குழந்தைகளின் மனநலத்திலும் வாழ்க்கைப் போக்கிலும் இவை ஏற்படுத்திய பெரிய அளவிலான தாக்கங்கள் பற்றி உலக அளவில்  விவாதிக்கப்பட்டது  .தொழில்நுட்பங்களில் வரும் மாற்றங்களால் புதிதாக அறிமுகமாகும் மின்னணு சார்ந்த பல விளையாட்டுப் பொருள்களின் தாக்கங்கள் உலக அளவில் வளரும் குழந்தைகளின் சிந்தனைப் போக்கு, உணர்வு நிலைகள், உறவு முறைகள் மற்றும் சமுதாயாப் பார்வைகள் பற்றி விவாதங்கள் தொடங்கின. ஆனால் வியாபார நோக்கில் இந்த மின்னணுப் பொம்மைகள் ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சியும் லாபப்  போக்குகளும் இதன் தாக்கங்களை ஓரங்கட்டி வியாபாரத்தை மட்டும் பெருக்கிக் கொண்டிருந்தன.

தாமகோட்சியைத் தொடர்ந்து பல மின்னணு விளையாட்டுப் பொருட்கள் குழந்தை உலகில் தங்கள் தோரணங்களைக் கட்டிக்கொண்டிருந்தன. அதன் கருத்துப் பரிமாணங்கள் செயல் பரிமாணங்கள் மாற்றம் கண்டு புதிய உணர்வுநிலைகளையும் சிந்திக்கும் திறன்களையும் அதன் பாதைகளையும் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தன. ஆனால் அதை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பெற்றோர்களை பொறுத்த வரையில் குழந்தைகள் தனிமைப் படுத்தப்பட்டதாலும் அவர்கள் நேரங்கள் விளையாட்டுப் பொருட்களோடு ஒதுக்கப் பட்டதாலும் தங்களுக்கு கிடைத்த “விடுதலை” உணர்வால் மகிழ்வுற்றுக் கண்மூடி நின்றனர். .

இதன் விளைவுகள் :

  1. குழந்தைகளின் தனிமை விரும்பும் போக்கு
  2. போதையானதுபோல் விளையாட்டுக்களுக்கு அடிமையான நிலை.
  3. ஆக்கிரமிப்பு நடத்தை.
  4. பொறுமையின்மை
  5. தோல்விகளை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு மன நிலை.
  6. வெற்றியை நோக்கிய ஒரு வெறித்தனம்

இது போன்ற பல உணர்வுகளின் தாக்கங்கள் வீட்டிலும் பள்ளியிலும் எளிதாக வெளிப்பட்டன. விளையாடும்பொழுது பேசப்பட்ட, உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள் – “Attack, Shoot, kill, Fire, Destroy – போன்ற பல வார்த்தைகள் மற்றவர்களோடு உறவாடும்பொழுது சாதாரணமாக வெளிப்பட்டு உறவு முறைகளை பாதித்து வந்தன. ஆனால் வீடுகளில் சமுதாயப் போட்டிகளின் பங்காளிகளாக இதை ஏற்றுக்கொண்டும், ;இந்தக் காலத்திற்கு இது சரி ” என்ற ஒரு வறட்டு வாதத்தில் தங்கள் கௌரவங்களைக் களைந்து வந்தனர்.

இன்று.

நீலத் திமிங்கலங்கள் விடும் சவால்  என்ற விளையாட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது.

இதன் நோக்கமும் விளையாட்டு முறையும் தான் என்ன?

இந்த மின்னணு விளையாட்டுக்கு இரையாகும் சிறுவர்கள் இந்த விளையாட்டை மேற்பார்க்கும் சிலரின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் இடும் கட்டளைகள் சிரம் மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும். அந்த மேற்பார்வையாளர்கள் விடும் சவாலை ஏற்றுக்கொண்டு அதை சமாளித்து தங்கள் திறனை வெளிப்படுத்தி அதற்கான சான்றுகளோடு அவர்களை அணுகி தங்கள் வெற்றிக்கு முகாந்திரமிட்டுக்கொள்ள வேண்டும். பொதுவாக விளையாடுபவர்களுக்கு இடும் ஆணைகள் சமுதாய அளவில் ஏற்றுக்கொள்ளப் படுபவைகளாக இருக்காது. ” உங்கள் கைகளை பிளேடால் அறுத்துக் கொள்ளுங்கள் .. குறிப்பிட்ட மனிதரைத் தாக்கி வாருங்கள்… இந்த இடத்திலுள்ள பொருளை நொறுக்குங்கள்… உங்களைத் தற்கொலைக்குத் தயார் செய்து கொள்ளுங்கள் ..” என்ற வினோதமான விவாதத்திற்குரிய அழிவுக்கு வழிகாட்டக்கூடிய விளையாட்டுக்கள்..

விளைவு ?

இது வரை உலக அளவில் பல பள்ளி செல்லும் சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இந்தியாவிலும் நடந்துள்ளது.

நடப்பினைக் கண்டறிந்த அரசாங்கம் விழித்துக்கொண்டு இதற்கான விளையாட்டுத் தொடர்புகளை துண்டிக்க ஆணையிட்டுள்ளது..

இப்படிப்பட்ட விளையாட்டுக்கள் தேவையா…? யார் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்?

பெற்றோர்கள் எப்பொழுது விழித்துக் கொள்வார்கள்? தங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதில் எவ்வளவு தூரம் அவர்கள் செல்லலாம்? தங்கள் சமுதாய அந்தஸ்தையும் பணவீக்கத்தையும் வெளிப்படுத்தக் குழந்தைகளின் வாழ்வுகளோடும் அவர்கள் சிந்தனைகளை நசுக்கும் சூழ்நிலைகளையும் உருவாக்கலாமா ?

சிந்திக்க வேண்டிய தருணம்…

நீலத் திமிங்கலங்களின் சவால்கள் சந்திக்கப்பட்டு அவைகள் மீண்டும் கடலுக்கு அனுப்பப்பட்டாலும், நாளை அவர்கள் வேறு சுறாக்களாக அவதாரம் எடுத்தது வராதா?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய பொன்னான பரிசு… தங்கள் நேரம்…!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *