(காதலின் புதியதொரு பரிமாணம்)

          மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்

ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

 முன்னுரை:

          இந்தச் சொற்களாலான நாடகம் தாகூரால் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

         ஒரு பிராயச்சித்தத்தின் காரணமாக அலைந்து திரிந்த அர்ஜுனன், மணிப்பூரை வந்தடைகிறான். அந்நாட்டு அரசனான சித்ரவாஹனனின் அழகான மகள் சித்ராங்கதாவைக் காண்கிறான். அவள் அழகால் கவரப்பட்டு அவளைத் தனக்கு மணமுடித்துத் தருமாறு அரசனிடம் கேட்கிறான். அர்ஜுனனை யாரெனக் கேட்கும் சித்ரவாஹனன் அவன் பாண்டவர்களில் ஒருவன் என அறிந்ததும் அவனிடம் தன் கதையைக் கூறுகிறான்.

            பிரபஞ்சனன் எனும் அவனுடைய மணிப்பூர் அரச வம்சத்து  மூதாதையானவன், குழந்தைகளின்றி வருந்தினான். அதற்காகக் கடுந்தவம் புரிந்தான். அதற்கு மகிழ்ந்து சிவபெருமான், அவனும் அவன் வம்சாவழியினரும் ஒவ்வொரு குழந்தையைப் பெறுவார்கள் என அருளினார். எல்லாருக்குமே ஆண்குழந்தைதான் பிறந்து வந்தது. சித்ரவாஹனனுக்கு மட்டும் அவன் வம்சத்தை விளங்கவைக்க ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் அவளை ஒரு மகனாகவே பாவித்து, தனது வாரிசாகக் கொண்டான். அரசன் கூறுவான்:

         ‘இவளுக்குப் பிறக்கும் ஒரு மகன் என் வம்சத்தை விளங்கவைப்பவனாக இருப்பான். அந்த மகனே நான் இந்தத் திருமணத்திற்காகக் கேட்கும் விலை! அர்ஜுனா! நீ இதனை ஒப்புக்கொண்டால் இவளை மணந்து கொள்ளலாம்.’

    அர்ஜுனன் இதற்கு ஒத்துக்கொண்டு சித்ராங்கதாவை மணந்து கொள்கிறான். மணிப்பூரில் மூன்று ஆண்டுகள் அவளுடன் வாழ்கிறான். அவளுக்கு ஒரு மகன் பிறந்ததும், அவளை அன்போடு அணைத்துக்கொண்டு, அவள், அவள் தந்தை இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, தனது பிரயாணங்களைத் தொடர்கிறான்.

      இவர்களுடைய மகனே வீரனாகிய பப்ருவாஹனன்.

                                  ————————-

 

காட்சி 1:

         சித்ரா: ஐந்து கணைகளைக் கொண்ட கடவுள் தாங்கள் தானே? காதல் கடவுள்?

          மதனன்: படைத்தவனின் உள்ளத்தில் முதலில் பிறந்தவன் எவனோ அவனே நான். ஆண், பெண் இருவரின் வாழ்க்கையிலும் காதலால் விளையும் வேதனையையும் பேரானந்தத்தையும் நிரப்புபவனும் நானே!
சித்ரா: அந்த வேதனையையும் ஆனந்தத்தையும் நான் நன்றாகவே உணர்ந்தவளாவேன். தாங்கள் யாரோ, கடவுளே?

    வசந்தன்: நான் இவரது நண்பன் வசந்தன், பருவங்களின் அரசன் நானாவேன். சாவும் முதுமையின் தளர்ச்சியும் உலகினை நசிப்பித்துவிடும். ஆகவே நான் அவற்றை விடாது தொடர்ந்து தாக்குபவன், என்றும் இளமை குன்றாதவன்.

   சித்ரா: வசந்தக் கடவுளே! உம்மை நான் வணங்குகிறேன்.

          மதனன்: மென்மையான புதியபெண்ணே! உனது கடினமான சபதம் என்னவோ? உனது புத்தம்புது இளமையை ஏன் நீ தவத்தாலும் உடலை வருத்துவதாலும் வீணடித்துக் கொள்கிறாய்? காதலின் வழிபாட்டிற்கு இந்தத் தியாகம் ஏற்றதல்ல. நீ யார்? உனது வேண்டுதல்தான் என்ன?

         சித்ரா: நான்தான் சித்ரா, மணிபுரியின் அரசகுடும்பத்து மகள். கடவுள்களுக்கே உரிய தயாள குணத்துடன் சிவபெருமான் எனது தந்தையின் வம்சத்திற்குத் தலைமுறை தலைமுறையாகத் தவறாமல் ஆண்வாரிசைத் தருவதாக வாக்குறுதியளித்தார். இருப்பினும், அந்த தெய்வவாக்கு என் விஷயத்தில் உயிர்ப்பின் பொறியை மாற்றும் சக்தியற்றுப் போனது. என்தாயின் கர்ப்பத்தில் நான் பெண்ணாகப் பிறந்தேன்.

               மதனன்: அதனால்தான் உன் தந்தை உன்னைத் தன் மகன் போலவே கருதி வளர்த்துவருவதனை நானறிவேன். அவர் உனக்கு விற்பயிற்சியும் கொடுத்து, ஓர் அரசனின் கடமைகளையும் போதித்து வருகிறார் அல்லவா?
சித்ரா: ஆம்; அதனால்தான் நானும் ஓர் ஆணைப்போல் உடைகளணிந்தும் அந்தப்புரத்தின் தனிமையில் வாழாமலும் உள்ளேன். ஆண்களின் உள்ளங்களைக் கவரும் பெண்மையின் நளினமான செயல்கள் எனக்குத் தெரியாது. எனது கரங்கள் வில்லை வளைக்க உறுதியானவை; ஆனால் கண்களின் அசைவுகளால் நிகழ்த்தும் காதல்போரில் எனக்குப் பரிச்சயமில்லை.

             மதனன்: அவற்றைக் கற்கப் பாடம் தேவையில்லை மகளே! கண் தனது பணியை கற்பிக்கப்படாமலே சரியாகச் செய்தால், அந்தக் கண் எய்த அம்பு யாருடைய இதயத்தைத் தைக்கின்றதோ, அவன் அதனை நன்கு உணர்ந்து அறிவான்.

          சித்ரா: ஒருநாள் நான் வேட்டை மிருகங்களைத் தேடியலைந்து காட்டில் தன்னந்தனியாக  பூமா ஆற்றங்கரையில் உலவிக்கொண்டிருந்தேன். மாலைப்போதில், பின்னிப்பிணைந்த மரக்கிளைகளினூடாக வளைந்து செல்லும் ஒரு குறுகலான பாதையைக் கண்டேன். இலைகளினூடே சில்வண்டுகள் சப்தமெழுப்பிக் கொண்டிருந்தன. அப்போது திடீரென, என் பாதையின் குறுக்காக ஒரு மனிதன் காய்ந்த இலைச்சருகுகளின் மீது படுத்திருந்ததைக் கண்டேன். நானொரு இளவரசன் (இளவரசி) எனும் கர்வத்துடன் அவனை வழியைவிட்டு நகருமாறுகூற, அவன் அதனைக்  காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை. ஆகவே எனது வில்லின் கூர்மையான முனையால் அவனை எரிச்சலுடன் குத்தித் துன்புறுத்தினேன். அவனும் உடனே சாம்பற்குவியலிலிருந்து திடீரென ஒரு நெருப்பின் நாக்கு பெரிய ஜ்வாலையாக வெளிப்பட்டதுபோலத் தனது நீண்ட உறுதியான கைகால்களுடன் துள்ளியெழுந்தான். எனது சிறுவன்போன்ற உருவத்தைக் கண்ணுற்றோ என்னவோ, அவனுடைய இதழ்க்கோடியில் ஓர் இகழ்ச்சியான புன்முறுவல் மின்னிற்று. அத்தருணத்தில்தான் நான் என்னை ஒரு பெண்ணாக உணர்ந்தேன்; ஓர் ஆண்மகன் என்முன் நிற்பதையும் அறிந்தேன்.

          மதனன்: அப்படிப்பட்ட நல்லதொரு சரியான தருணத்தில்தான் நான் ஆணுக்கும் பெண்ணுக்கும் தாங்கள் ஒருவரையொருவர் உணரும் பாடத்தைக் கற்பிப்பேன். பின் என்ன ஆயிற்று?

         சித்ரா: உடலில் நடுக்கத்துடனும் ஆச்சரியத்துடனும், “தாங்கள் யார்?” எனக்கேட்டேன். “நான் அர்ஜுனன், பெருமைவாய்ந்த குரு வம்சத்தவன்,” என்றான். நான் அவருக்கு மரியாதை செய்யவும் மறந்துபோய் பயத்தில் சிலையாக உறைந்து நின்றேன்; இவர்தான் அர்ஜுனரா? எனது கனவுகளின் மகோன்னதமான லட்சிய புருஷரா? அவர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிரம்மசரியம் கடைப்பிடிப்பேனெனச் சபதம் செய்திருந்ததை நீண்ட நாட்களுக்கு முன்பே நான் அறிந்திருந்தேன். அவரை என்னுடன் ஒருவரோடொருவரான வாட்போருக்கழைத்து ஆயுதப்பயிற்சியில் எனக்குள்ள திறமையை அவருக்குக் காட்ட வேண்டும் என எத்தனையோ நாட்களாகவே நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆ! முட்டாள் உள்ளமே! உனது அகந்தை நிறைந்த எண்ணம் இப்போது என்னவாயிற்று? எனது இளமையையும் அதன் கனவுகளையும் அவருடைய கால்தூசிக்கு சமர்ப்பணம் செய்யவா? மிகவும் உன்னதமான  கௌரவமாக அதனை நான் கருதுவேனே.

       என்னவிதமான எண்ணச்சுழல்களில் ஆழ்ந்திருந்தேனோ நான், திடீரென அவர் மரங்களினூடே சென்று மறைவதனைக் கண்டேன். ஓ முட்டாள் பெண்ணே! நீ அவருக்கு வந்தனம் செலுத்தவில்லை, ஒரு சொல் கூறவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை, அவர் உன்னிடமிருந்து அலட்சியமாக நடந்து சென்றபோது ஒரு பண்பற்ற பட்டிக்காட்டான் போல நின்றாயே!

          அடுத்தநாள் காலையில் நான் எனது ஆண்மகனின் உடைகளை ஒதுக்கி வைத்தேன். கரங்களில் வளையல்களையும், கால்களில் பாதசரங்களையும், இடையில் ஒட்டியாணமும் அணிந்தவள், ஒருகருஞ்சிவப்பு வண்ணப் பட்டாடையையும் உடுத்தேன். அந்தப் பழக்கமில்லாத ஆடை என் மறைக்கவியலாத அவமானத்தை எடுத்துக்காட்டி என்மீது பொருத்தமின்றித் தொங்கியது! ஆனால் நானோ எனது தேடலை நோக்கி விரைந்தேன். அர்ஜுனனைக் காட்டினுள்ளே சிவன்கோவிலில் கண்டேன்.

          மதனன்:  கதையின் முடிவுவரை எனக்கு விவரமாகக் கூறுவாய். நான் இதயங்களில் வசிக்கும் தெய்வம் ஆதலால் எனக்கு இந்த உணர்ச்சிவேகத்தின் சூட்சுமங்கள் நன்றாகவே புரியும்.

          சித்ரா: நான் என்ன சொன்னேன் என்றும், அதற்குக் கிடைத்த விடையும் எனக்கு நன்கு நினைவிலில்லை. எல்லாவற்றையும் கூறச் சொல்லிக் கேட்காதீர்கள். இடிவிழுந்தது போல என்மீது அவமானம் இறங்கியது; இருப்பினும் நான் சுக்குநூறாகச் சிதறவில்லை; ஆண்மகனைப்போல உறுதியாக அதனைச் சகித்துக் கொண்டேன். அவர் கூறிய கடைசி வார்த்தைகள், நான் வீடு திரும்பும்போது பழுக்கக் காய்ச்சிய கூரிய ஊசிகளைப்போல் எனது செவிகளைத் துளைத்தனவே! ‘நான் பிரம்மசரிய விரதம் பூண்டுள்ளேன். உனக்குக் கணவனாக இருக்க எனக்குத் தகுதி இல்லை.’ ஓ! ஆண்கள் செய்யும் சபதங்கள்! காதல்கடவுளே, எத்தனை ஞானிகளும் துறவிகளும் தங்களது ஆயுட்காலத் தவத்தின் பயனை ஒரு பெண்ணின் காலடியில் சமர்ப்பித்துள்ளனர் என்று உமக்குத் தெரியாதா?

          நான் எனது வில்லை இரண்டாக முறித்து, அம்புகளைத் தீயில் எரிய விட்டேன். வில்லின் நாணைத் திரும்பத் திரும்ப ஏற்றியதால் தழும்பேறிய எனது பலம் வாய்ந்த புஜங்களை வெறுத்தேன். ஓ காதலே, காதல்கடவுளே! எனது ஆண்மைநிரம்பிய பலம், அதனால் உண்டான செருக்கு இவை அனைத்தையும் நீர் புழுதிபடிய வைத்துவிட்டீர். எனது ஆண்மைத்தனமான பயிற்சிகள் அனைத்தும் உம் காலடியில் நசுக்கப்பட்டுக் கிடக்கின்றன. இப்போது எனக்கு உமது பாடங்களைக் கற்பிப்பீராக! வலிமையற்றவர்களின் சக்தியையும், ஆயுதங்களற்ற கரத்தின் ஆயுதத்தையும் எனக்கு அளிப்பீராக!

          மதனன்: நான் உனது நண்பனாக இருப்பேன். உலகையே வெல்லும் சக்திபடைத்த அந்த அர்ஜுனனை உன்முன்பு கொண்டுவந்து நிறுத்தி, அவனுடைய எதிர்ப்பின் தண்டனையை உன்கரத்தால் அவனைப் பெறவைப்பேன்.

          சித்ரா: எனக்கு மட்டும் நிறைய அவகாசம் இருந்திருந்தால் கடவுள்கள் யாரையும் உதவி கேட்காமல்  சிறிது சிறிதாக அவருடைய இதயத்தை வெற்றி கொள்ள முயற்சித்திருப்பேன். அவருக்கு உதவியாக அவர் பக்கத்தில் ஒரு தோழமையாக நிற்பேன்; அவருடைய தேரின் சாரதியாக அந்தக்  குதிரைகளைச் செலுத்துவேன்; அவர் வேட்டைக்குச் செல்லும்போது உடன் செல்வேன்; அவருடைய கூடாரத்தின் வாயிலில் இரவில் காவல் காப்பேன். எளியோரைக் காப்பதும், தேவையானபோதில் தர்மத்தை நிலைநாட்டுவதுமான ஒரு க்ஷத்திரியனின் கடமைகளில் துணை நிற்பேன்; இறுதியில், கட்டாயமாக ஒருநாள் அவர் ஆச்சரியத்துடன் என்னை நோக்கி, “யாரிந்த இளைஞன்? எனது முன்பிறப்பில் இருந்த எனதடிமைகளில் ஒருவன் நான்செய்த புண்ணியத்தால் என்னைத் தொடர்ந்து வந்தானோ?” என எண்ணுவார். நான் ஒன்றும் அவநம்பிக்கையால் நாள்முழுதும் துயரத்திலாழ்ந்தும், இரவில் ஒரு விதவையைப்போல் கண்ணீர் வடித்தும், பகலில் பொறுமையாகப் புன்னகை முகத்துடனும் இருப்பவளல்லள். எனது ஆசையெனும் மலர் கனிந்து பழமாகும்வரை உதிர்ந்து மண்ணில் விழுந்துவிடாது. வாழ்நாளின் இடைவிடாத முயற்சியால் எனது உண்மைவடிவை உணர்ந்து அதனை மதிப்பிற்குரியதாக்குவேன். உலகையே வெற்றிகொள்ளும் காதல்கடவுளே! அதற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன். வசந்தனே! பருவங்களைக்காக்கும் இளமைவாய்ந்த தலைவனே! எனது இளமையான உடலிலிருந்து இந்தப் புராதனமான அநீதியான கவர்ச்சியற்ற கட்டமைப்பை நீக்குவீராக! ஒரே ஒரு நாள் மட்டுமே என் உள்ளத்தில் மலர்ந்துள்ள காதலின் அழகுக்கு இணையான அழகுவாய்ந்தவளாக என்னை மாற்றுவீர்; ஒரேயொரு நாள் மட்டும் எனக்குப் பரிபூரணமான அழகினைத் தருவீர்; அதனைக்கொண்டு நான் தொடரும் நாட்களுக்கெல்லாம் மறுமொழி அளிப்பேன்.

          மதனன்: பெண்ணே! நான் உனக்கு இவ்வரத்தை அளிக்கிறேன்.

          வசந்தன்: ஒரேயொரு நாளுக்கு மட்டுமல்ல, ஒரு முழு ஆண்டிற்கு உனக்கு நான் வசந்த மலர்களின் வசீகரத்தை உனது உடலில் தவழச் செய்கிறேன்.

[தொடரும்]

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *