இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (246 )

0

அன்பினியவர்களே!

அன்பான இனிமை பூத்த வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன் காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. மாரி, வசந்தம், கோடை , இல்லையுதிர் காலம் என இயற்கை யார் எதில் தவறினாலும் தான் தனது கடமையில் தவறாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இலைகள் உதிர்ந்து மீண்டும் மரத்தில் துளிர்க்கிறது மாரி மாறி வசந்தமாகிறது ஆனால் நாம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வயது முதிர்ந்தவர்களாகிறோம். நாம் மீண்டும் துளிர்ப்பதில்லை; நாம் எப்போது சருகாகி விழுகிறோம் என்பதும் எமது கைகளில்லை. ஆதவன் கிழக்கில் உதிப்பதும் பின் மேற்கு எனும் பள்ளத்துள் விழுந்து மறைவதும் எதுவித இடையூறுமின்றி நடந்துகொண்டு இருக்கிறது. மனித வாழ்வில் மட்டும் உறவு எப்போது வருகிறது பின் பிரிவு எப்போது வருகிறது என்று மட்டும் தெரிவதில்லை.

இந்த மனித வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். வாழ்வில் தாங்க முடியாத துயரத்திலோ அன்றி மீளமுடியாத கஷ்டத்திலோ வாழ்பவர்கள் இதனை ஏற்க முடியாதிருக்கலாம் ஆனால் வாழ்வில் அனைவரும் அனுபவிக்கும் அப்போதைய நிலைகள் தற்காலிகமானவைகளே ! காலம் மாறும் அவரவர் நிலைகளும் மாறும். இன்றிருப்போர் நாளை இருப்பது நிச்சயமில்லை எனும் ஒரு நிலையிலே நாம் எம்மோடு தக்க வைத்திருக்கும் இப்போதைய நிலைகள் மட்டும் எப்படி நிரந்தரமானவையாக இருக்கலாம்? இத்தகைய ஒரு நிலையற்ற வாழ்விலே நாம் எம்மை அடையாளப்படுத்திக் கொள்ள எம்மீது பல கலாசார அணிகலன்களைப் பூட்டிக் கொள்கிறோம். இவற்றிற்கு மதச்சாயத்தைப் பூசிக் கொள்கிறோம். நாம் எந்த மதத்தில் எந்த குலத்தில் பிறக்கிறோம் என்பது எமது கைகளில்லை. ஆனால் எங்குப் பிறக்கிறோமோ அங்கு எமக்கு மதச்சாயம் பூசப்பட்டு விடுகிறது.

மத நம்பிக்கை அல்லது இறை நம்பிக்கை என்பதற்கு நான் எப்போதும் எதிரானவனில்லை. மதமும், இறை நம்பிக்கையும் மனிதர்களது ஆன்மீக பலத்தை அதிகப்படுத்தி ஒவ்வொருவருடைய மனதிலும் மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்காகவே அமைந்துள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. ஆனால் ஒவ்வொருவருடைய மனத்திலும் தாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கிறது.அந்த எல்லைக்கோட்டைத்தாண்டும்போது எது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஜீரணிக்கப்படக்கூடிய நியாயமான நம்பிக்கையாக இருந்ததோ அது கொஞ்சம் கொஞ்சமாக நியாயமற்ற வெறியாக மாறத் தலைப்படுகிறது. இங்கேதான் மத நம்பிக்கை மனிதாபிமானத்தை விட்டு அகலத் தொடங்குகிறது இதுவே மக்கள் மனங்களில் இத்தகைய நம்பிக்கைகளை நோக்கி விசனப் பார்வைகளைத் தூண்டுகிறது. உலகில் இன்று பேணப்படும் அத்தனை மதங்களின் அடிப்படியும் மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்துக்கு மதிப்பளிப்பவைகளாகவே இருக்கின்றன. ஆனால் அம்மத நம்பிக்கைகளையும், அதனை மூர்க்கத்தனமாக எவ்வித கேள்விகளுமின்றிப் பின் தொடர்பவைகளையும் தமது இலட்சியம் எனும் போர்வையிலடங்கிய வெறிக்கு உபயோகப்படுத்திக் கொள்வதற்காக இம்மதங்களின் காவலர்கள் என்று தமக்குத் தாமே முடிசூட்டிக் கொண்டவர்கள் இம்மதக் கோட்பாடுகளை மனிதம் எனும் இலட்சியத்திலிருந்து வேறுபடுத்தி விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதற்காக இந்த முன்னெடுப்பு என்று பார்க்கும்போது சமீபத்தில் இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்றில் நடத்தப்பட்ட வழக்கும் அதையடுத்த தீர்ப்பும் என்பதுமே காரணமாகிறது. ஒரு கிறீஸ்தவ மதப் பின்னணியைக் கொண்ட குழந்தை அதனுடைய தாயிடமிருந்து கடந்த மார்ச் மாதம் காவற்படையினரால் எடுத்துச் செல்லப்பட்டு அரச சமூகநலத் துறையினரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. காரணம் அக்குழந்தையைத் தாயார் சரியான முறையில் பராமரிக்கவில்லை என்பதுவே. இது நடந்தது இங்கிலாந்தின் கிழக்கு இலண்டனின் பகுதியான “டவர் ஹம்லெட் (Tower Hamlet) எனும் பகுதியிலேயாகும். இப்பகுதி ஆசியர்கள் பெரும்பான்மையாக அதுவும் இஸ்லாமிய மதத்தினைப் பின்னணியாகக் கொண்டோர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாகும். அரசு நடைமுறைப்படி இப்படி பெற்றோரிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தகுந்த வளர்ப்புப் பெற்றோர் யாரெனத் தெரிந்து அவர்களிடம் வளர்ப்புப் பொறுப்பை கையளிப்பதேயாகும். இப்படியான வளர்ப்புப் பெற்றோர்கள் அக்குழந்தையின் கலாசாரப் பின்னணியைக் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. அப்படியான அதே கலாசாரப் பின்னணி கொண்ட வளர்ப்புப் பெற்றோர்கள் இல்லாத நிலையில் மற்றைய கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோர்கள் முன்வருவாராகில் அவர்களிடம் கையளிப்பார்கள்.

நான் மேற்குறிப்பிட்ட அக்குழந்தையின் கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோர் அப்பகுதியில் கிடைக்காத காரணத்தினால் கிறீஸ்தவப் பின்னணியைக் கொண்ட அக்குழந்தை இஸ்லாமிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. அங்கேதான் சிக்கல் உருவானது. அக்குழந்தை அதனது வளர்ப்புப் பெற்றோரினால் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளைப் பின்பற்றும்படியாக வற்புறுத்தப்பட்டது என்பதே குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அக்குற்றச்சாட்டுக்களை பரிசீலனையின் பின்னால் ஏற்றுக்கொண்டு அக்குழந்தை அதனது பாட்டியுடன் வாழும்படி தீர்ப்பளித்துள்ளார். இக்குற்றச்சாட்டுகள் சரியான வகையில் பரிசீலிக்கப்பட்டு நிரூபணமாகியது எனில் இங்குப் பல கேள்விகள் எழுகிறது. சந்தர்ப்ப சூழலினால் தான் வாழும் கலாசாரப் பின்னணியில் இருந்து பிரியும் ஒரு குழந்தை தானே தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாத நிலையில் நிர்ப்பந்தமாக தனக்குப் பரிச்சயமில்லாத கலாசாரச் சூழலுக்குள் தள்ளப்படுவது நியாயமானது தானா ? தனது உரிமைத்தாயிடமிருந்து சட்டத்தின் கரங்களினால் பிரிக்கப்பட்ட ஒரு குழந்தையைப் பராமரிக்க முன்வரும் மனிதர்கள் போற்றப்பட வேண்டியவர்களே! ஆயினும் அக்குழந்தையின் இயற்கையான கலாசாரப் பின்னணியில் இருந்து அதனை முழுமையாக தமது கலாசாரப் பின்னணிக்கு மாற்ற முயல்வது அக்குழந்தையின் தன்னுரிமையைப் பறித்தெடுப்பதாகாதா?அன்றி அக்குழந்தைக்கும் தமது சொந்தக் குழந்தைகளுக்கும் எதுவித பேதங்களும் இருக்கக்கூடாது எனும் தூயநோக்கில் அக்குழந்தையையும் தமது கலாசாரப் பின்னணிக்கு மாற்றுவது என்பதில் எதுவிதமான தவறுமில்லை என்பதுதான் உண்மையாகுமா? இவைகள் பல முனைகளில் இருந்து கிளம்பும் யதார்த்தமான கேள்விகளே!

அதேநேரம் பல வேற்றுமதக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் கிறீஸ்தவ மத வளர்ப்புப் பெற்றோர்கள் மீது இத்தகைய நுணுக்கமான பார்வையோ அன்றி அவர்கள் மதத்தின் மீது ஒரு தீவிரக் காட்டம் நிறைந்த பார்வையோ நடத்தப்படுவதில்லையே! ஏன் எம்மீது மட்டும் இப்படி என்று வேதனையடையும் சில இஸ்லாமிய மதத்தினரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நீதித் தராசு என்பது இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் நம்பும் வரைதான் சட்டமும், ஒழுங்கும் உள்ளத்தில் முதன்மை நிலைபெறும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மிகத் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்ன என்கிறீர்களா?

ஒரு குழந்தையின் இக்கட்டான நிகழ்வு இங்கிலாந்தில் இன்று இஸ்லாமிய மதத்தின் மீதான ஒரு நுணுக்கமான கண்ணோட்டத்தை அம்மதத்துக்கு எதிராகத் திருப்பும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளும் சில தீவிர வலதுசாரப் பத்திரிகைகளின் இப்பிரச்சார வேட்கைக்குத் தீனிபோடும் நிலையாக உருவெடுத்திருப்பதே !

கவியரசரின் வரிகளில் “மதம் என்பது ஒரு மனிதனுக்கு அணிகலனேயன்றி ஆடையல்ல!”

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்,
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *