புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுள்                                                  

துச்சி லிருந்த வுயிர்க்கு.

       -திருக்குறள் -340(நிலையாமை)

 

புதுக் கவிதையில்…

 

நோய் நொடிகளால்

நிறைந்திருக்கும் வீடு,

மனித உடல்..

 

அதில்

மறைந்து குடியிருந்து

வெளியேறிய உயிர்,

நிரந்தரமாய்க் குடியிருக்க

இதுவரை கிடைக்கவில்லை

வீடொன்று…!

 

குறும்பாவில்…

 

உடலெனும் வீட்டில் நெருக்கிக் குடியிருந்த           

உயிரதற்குக் கிடைக்கவில்லை வீடு, 

நிரந்தரமாய்க் குடியேற…!

 

மரபுக் கவிதையில்…

 

பிணிநிறை மனித உடலென்னும்

     பொருத்த மில்லா வீட்டைவிட்டு

துணையா யிருந்த உயிரதுதான்

     துறந்து வெளியே சென்றபின்னே,

துணிந்து மீண்டும் குடியேறத்

     தகுந்த நிரந்தர வீடெதுவும்

அணுகிட யெங்கும் கிடையாத

     அகில வாழ்வின் நிலையதுவே…!

 

லிமரைக்கூ..

 

உயிரிருந்தது உடலெனும் கூட்டில் , 

வெளியேறியபின் அதற்கு இடமேயில்லை குடியேற    

நிரந்தரமாய் ஆங்கோர் வீட்டில்…!

 

கிராமிய பாணியில்…

 

நெரந்தரமில்ல நெரந்தரமில்ல

நிக்கும் உசிரு நெரந்தரமில்ல..

 

நோநொடி நெறஞ்ச ஒடம்புலதான்

நெருக்கியிருந்த உசிரதுதான்

நெனச்சநேரம் போயிருமே,

ஒடலவுட்டுப் போயிருமே..

 

வெளியவந்த உசிரதுக்கு

எப்பவும்

நெலயாத்தங்க எடமில்லியே,

ஒலகவாழ்க்க இதுதானே..

 

பாத்துக்கோ

நெரந்தரமில்ல நெரந்தரமில்ல

நிக்கும் உசிரு நெரந்தரமில்ல…!

 

-செண்பக ஜெகதீசன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *