ஒரு ஊர்+ கொக்குகள்( Kokokan-Herons)= மறு பிறப்பு???

0

சர்குணா பாக்கியராஜ்

1_235

“பெட்டுலு” (Petulu), என்னும் ஒரு சிறு கிராமம். இது பாலி( Bali) தீவிலுள்ள “உபுட்” (Ubud) என்ற நகரிலிருந்து, மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள சிறப்பான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணியளவில், சுமார் இருபதாயிரம் வெண் கொக்குகள் முக்கியமாக மாட்டுக் கொக்குகள் (Cattle Egrets) சின்னக் கொக்குகள் (Little Egrets Egrets), ஜாவன் குளக் கொக்குகள் (Javan pond herons)வந்து, கிராமத்திலுள்ள மரங்களில் அடைகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பாலிக்குச் சென்றிருந்த போது, ஒரு நண்பரின் மூலம் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, பறவைகளைக் காணச் சென்றோம். மாலை ஐந்து மணியளவில் பெட்டுலுவை நெருங்கிய போது, இள நீலமும், பொன்னிற மஞ்சளும் கலந்த அந்தி வானம், ஏதோ கோபம் கொண்டது போல், திடீரென சாம்பல் நிற மேகங்களால் மூடப்பட்டு, பன்னீர் தெளிப்பதைப் போல், சிறு, சிறு மழைத் துளிகளால் எங்களை வரவேற்றது.

வண்டி ௐட்டி வந்தவர், “ மழை பலமாக வரப்போகிறது, ஆகவே ஊருக்குள் போக முடியாது, சாலைகளில் வெள்ளப் பெருக்கு வர வாய்ப்புள்ளது, ஊருக்கு வெளியே இருந்து பறவைகளைப் பார்க்கலாம்” என்று கூறி, ஊரைத் தொட்டுக் கொண்டிருந்த வயல் கரையோரம் வணடியை நிறுத்திவிட்டு, வயலின் மையத்திலிருந்த ஒரு சிறு தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்றார். சற்று நேரத்தில், நெடுந்தொலைவில், அடிவானத்திலிருந்து, வெள்ளைப் புள்ளிகளாக, “V’ வடிவில் சிறு, சிறு கூட்டமாகப் பறவைகள், ஊரை நோக்கி வந்து அடைய ஆரம்பித்தன. அவை பறந்து வரும் அழகைப் பார்த்த போது,

“நெடு வேள் மார்பின் ஆரம் போல,
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
பைங் காற் கொக்கினம்——–

“நக்கீரர், (அகநானூறு: பாடல், 120: 1-3) என்ற சங்க காலப் பாடல் நினைவில் வந்தது.

சிறு தூரலில் ஆரம்பித்த மழை, பெருந்துளிகளாக மாறின. கடைக்காரர் கொடுத்த சூடான தேநீரைப் பருகிக் கொண்டிருந்த போது, அவர்,

“1965-ஆம் ஆண்டு வரையிலும், இந்தக் கிராமத்தில் கொக்குகளை (Kokocan) எவரும் கண்டதில்லை. இந்தப் பறவைகளின் வரவைக் குறித்து, எங்கள் கிராமத்தில் ஒரு சரித்திரமே அடங்கியுள்ளதென்று” உடைந்த ஆங்கிலத்தில், கீழ்க்கண்ட விவரங்களைக் கொடுத்தார்.

“1965-ஆம் ஆண்டு, இந்தோனேசியா நாட்டில், ஜனாதிபதி சுகர்ணோவை எதிர்த்து நடந்த ராணுவ எழுச்சியின் பின், லட்சக்கணக்கான பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்தவர்களும் (PKI), அவர்களை ஆதரிப்பர்வகள் என்று கருதப்பட்டவர்களும் கொல்லப்பட்டனர். பெட்டுலு கிராமத்திலும், ஊர் மக்களைக் கொண்டு தோண்டப்பட்ட குழிகளில், பெருந்திரளானவர்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டனர்.

1965-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், கடைசி வாரத்தில், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, கிராமத்திலுள்ள தீய சக்தியை அகற்ற விழா நடத்தினர், விழா முடிந்து ஒரே வாரத்தில், ஊருக்குள், கொக்குகள் தோன்றின. சில கிராம மக்கள், உணவுக்காகவும், வளர்ப்பதற்காகவும், இவைகளைப் பிடித்து வைத்திருந்தனர். ஆனால், பறவைகளைப் பிடித்து வைத்திருந்த கிராமத்தினர் பலர் பயங்கரமான ஆவிகளைக் கனவுகளில் கண்டு, பயந்து பறவைகளை விடுவித்து விட்டு கொக்குகளை வரவேற்க விழா நடத்தினர். அப்போது, பூசாரி மௌன நிலைவ்(trance) எய்தினார். அவர் விழித்த போது “கொலை செய்யப்பட்டு இறந்தவர்களுக்கு இறுதிக் கடன்கள் செய்யப்படவில்லை. ஆகவே, இவர்களின் ஆன்மாக்கள்தான், கொக்குகள் வடிவில் ஊரைக் காக்க வந்துள்ளன” என்று கூறினார். ஆகையால் கிராமத்தவர்கள் கொக்குகளை மதித்து வருடந்தோறும், கொக்குகளுக்காக விழா நடத்துகின்றனர். மேலும், இந்தப் பறவைகள் ஊருக்கு நன்மையும், செழிப்பும் கொண்டு வருகின்றன என்று நம்புகிறோம்”  என்று சொல்லி முடித்தார்.

கடைக்காரர் கொடுத்த தகவலைக் கேட்டு ஆச்சரியத்தோடே பறவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, மழை வலுத்துப் பார்வையை மறைத்து விட்டதால், அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. சுமார் ஐநூறு அல்லது அறுநூறு பறவைகள்தான் பார்க்க முடிந்தது.

விடுமுறை கழிந்து, கலிபோர்னியா வந்து சேர்ந்த போதும், கடைக்காரர் கொடுத்த தகவலை மறக்க முடியவில்லை.

அவர் கொடுத்த செய்தியைப்பற்றி, ஆராய்ந்த போது, 1965ஆம் ஆண்டு, ராணுவத்தினர் நடத்திய எழுச்சியும், அதைத் தொடர்ந்து, பொதுவுடைமைக் கட்சியினரும், அவர்களை ஆதரித்தவர்களும் கொல்லப்பட்டனர் என்பது உண்மையான நிகழ்ச்சியென்றும், ஆனால், இந்தச் சம்பவம் இந்தோனேசியா வரலாற்றில் எழுதப்படவில்லையாதலால், எத்தனைப் பேர் கொல்லப்பட்டனர் என்ற உண்மை தெரிய வாய்ப்பில்லை என்பதும் தெரிய வந்தது. இப்போதைய இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடுடோவும் (Joke Widodo), மக்களும், இந்தக் கொடூரமான நிகழ்ச்சியின் விளைவை அறியப் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

(Source: “The Indonesian Massacre: What Did the US Know? Margaret Scott)

கொக்குகள், இன்றும், மாலைதோறும், பெட்டுலு கிராமத்தில் மரங்களில் வந்தடைந்து, உல்லாசப் பயணிகளையும், பறவை ஆர்வலர்களையும் மகிழ்விக்கின்றன. மறு பிறவி என்பது, ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கையாதலால், இந்த பெட்டுலு கொக்குகள், மறு பிறவிகளா? இல்லையா?, என்பதை வாசகர்களின் கருத்துக்கு விட்டு விடுகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *