சிறீசிறீஸ்கந்தராஜா

**************************************************

உலகின் முதல் இசை

தமிழிசையே!!

***********************************************

இசைத்தமிழின் தொன்மை – 78

***********************************************

பழந்தமிழிசையில் பண்கள்

**********************************

அமைச்சர் கோவிந்த தீட்சதர்

********************************************

தஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் இருந்து வழிகாட்டி, நல்ல பல காரியங்களை மக்கள் நலனுக்காக செய்தவர் கோவிந்த தீட்சதர்.

எழுபத்தைந்து ஆண்டுகள் இவர் அமைச்சராக மூன்று மன்னர்கள் காலத்தில் இருந்து தொண்டாற்றியவர் கோவிந்த தீட்சதர்.

நாயக்கர் காலத்திலும், பின்னர் வந்த மராத்தியர் காலத்திலும் தஞ்சை அரசர்களின் ஆளுமைக்குள் இருந்த கலைஞர்கள், வேத விற்பன்னர்கள், இசைக் கலைஞர்கள் போன்றோர் இங்கிருந்து சிறிது தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருவையாற்றில் குடியிருந்திருக்கின்றனர்.

காவிரி ஒரு புனித நதி. கரையெங்கும் காவிரித்துப் புகழ் பரப்பி ஓடும் ஜீவநதி.

அந்த காவிரியின் கரையெங்கும் படித்துறைகள்.

புனிதத் தலங்களில் புஷ்ய மண்டபங்கள், அவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை என்று இன்றும் மக்கள் பயன்பாட்டுக்குக் காணக்கிடைப்பவை.

இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் சில ஊர்களை முழுவதும் தானமாகக் கொடுத்திருந்தார்.

பல வேத பாடசாலைகளையும் அவர் உருவாக்கிவைத்தார்.

இத்தகைய பாடசாலையில் படித்துப் பின் இசைத் துறையில் பிரபலமடைந்தவருள் ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் முக்கியமானவர்.

பெருமைக்குரிய கோவிந்த தீட்சதருடைய இளைய மைந்தன் வேங்கடமகி என்பார் பல இலக்கியங்களைப் படைத்திருக்கிறார்.

சம்ஸ்கிருத இலக்கியங்கள் தவிர இசைத் துறையில் “சதுர்தண்டி பிரகாசிகா” எனும் நூலையும் இயற்றியிருக்கிறார்.

வெங்கடமகி

**********************

72 மேளகர்த்தா ராகங்களின் அட்டவணை,

16-ஆம் நூற்றாண்டில் வெங்கடமகி என்ற இசைமேதையால் தொகுக்கப்பட்டவை.

கர்நாடக இசை வரலாற்றின் ஒரு முக்கியமான நிகழ்வு வேங்கடமகியின் மேளகர்த்தா ராக அட்டவணை ஆகும்.

வேங்கடமகி இப்படி ஒரு அட்டவணையை முன்வைக்கும்வரை, வெறும் 19 ராகங்களே கர்நாடக இசையில் பிரபலமாக இருந்திருக்கின்றன.

அரிதாக உபயோகப்படுத்தப்பட்ட சில ராகங்களோடு சேர்த்து அதிகபட்சம் நாற்பது ராகங்கள் புழங்கி வந்திருக்கின்றன.

வெங்கடமகி அடிப்படை ஸ்வரங்களைக் கணித வரிசைப்படுத்தி ஆரோஹணம், அவரோஹணத்தில் முழுமையாக ஏழு ஸ்வரங்கள் இருக்கும் 72 ராகங்களை அட்டவணைப்படுத்தினார்.

மனிதக் காதுகளால் 22 ஸ்வரங்களைப் பிரித்தறிய முடியும் என்று அறிவியல் சொல்கிறது.

சீன மரபிசையில் இன்னும் 22 ஸ்வரங்களை உபயோகப்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்த 22 ஸ்வரங்களிலும் வெகு துல்லியமாகப் பிசிறில்லாமல் நாம் அறிய முடிவது 12 ஸ்வரங்களேயாகும்.

மேற்கிசையிலும் இந்திய இசையிலும் மேலும் இந்த 12 ஸ்வரங்களே உபயோகப்படுத்தப்படுகின்றன.

(ச-ரி-க-ம-ப-த-நி-ஸ என்று ஏழு ஸ்வரங்கள் என்று சொன்னாலும் சின்ன ரி, பெரிய ரி என ரி, க, ம, த, நி இவை இரண்டிரண்டாக இருக்கும்).

வேங்கடமகி இந்த 12 ஸ்வரங்களோடு சேர்த்து மேலும் நான்கு ஸ்வரங்களை இணைத்து 16 ஸ்வரங்களாக்குகிறார்.

(ரி, க, ப, த ஆகியவை மூன்று மூன்றாக இருக்கும்).

16 ஸ்வரங்களிலிருந்து ஏழு ஆரோஹணம், ஏழு அவரோஹணங்கள் இருக்கும் முழுமையான ராகங்களை

இவர் அட்டவணைப்படுத்தியதே ‘வேங்கடமகி மேளகர்த்தா அட்டவணை’.

தில் அவர் இசையினிமையை அளிக்காத ஸ்வரக்கூட்டுகளைத் தவிர்த்தே 72 ராகங்களைத் தந்திருக்கிறார்.

ஆக, கணிதமுறையையும், இசை இனிமையையும் முன்வைத்துக் கிடைக்கும் அதிகபட்ச சம்பூர்ண ராகங்கள் இந்த 72 ராகங்கள்.

“12 அடிப்படை ஸ்வரங்களைக் கொண்டு 72 ராகங்களைத்

தரமுடியும் என ஒரு தென்னிந்திய மேதை நிரூபித்திருக்கிறார்.

இந்த மேளகர்த்தா திட்டம் தர்க்க ஒழுங்குடனும், கணித நேர்த்தியுடனும், இசையினிமையுடனும் இருக்கிறது” என்று சொல்கிறார் பிரபல இசை வல்லுநர் பேரா.சாம்பமூர்த்தி.

(வேங்கடமகி 16 ராகங்களைக் கொண்டு அட்டவணையைத் தந்திருந்தாலும், அவற்றில் நான்கு துணை ஸ்வரங்கள் என்றறியப்படுகின்றன.)

தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்களில் தலைசிறந்த மன்னன் விஜயரகுநாத நாயக்கன் என்பவன்ஆவான்.

சுமார் 1600லிருந்து 1630 வரை ஆண்ட இம்மன்னன் இசைக்கலையிலும், நாட்டியக்கலையிலும் சிறந்திருந்தான்.

பல நூல்களை இயற்றியிருக்கிறான்.

இவனது அவையை அலங்கரித்தவர்களில் வேங்கடமகி

என்பவர் குறிப்பிடத் தகுந்தவர்.

அவர் கர்நாடக இசைக்கு இலக்கண நூல் எழுதியிருக்கிறார்.

72 மேளகர்த்தா இராகங்கள் என்று வகுத்தவர் இவர்தான்.

இன்றைய கர்நாடக சங்கீதத்துக்கு இவரையே தந்தை என்று கூறுவர்.

தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் போன்ற இசைமேதைகள் எல்லாம் இவரது மரபைத்தான் பின்பற்றினார்கள்.

இந்த வேங்கடமகி என்பவர் 1625ல் சதுர்தண்டி பிரகாசிகை என்ற ஒரு சிறந்த இசை நூல் சமஸ்கிருத மொழியில் இயற்றியிருக்கிறார்.

இவருக்கு முன்னர் திகழ்ந்த மரபுகளைத் திரட்டி இந்நூலில் வகைப்படுத்தியுள்ளார்.

இன்றைய கர்நாடக இசைக்கு அடித்தளமான நூல் இதுவேயாகும்.

இதில் சுருதி ஸ்வரம் ராகம் கீதம் என்றால் என்ன?

அவை எவ்வளவு வகைப்படும்?

என்று தனித்தனி அத்தியாயங்களில் விவரித்துள்ளார்.

இவற்றில் “ஆலாபம்” என்று ஒரு அத்தியாயம் உள்ளது. ஆலாபனை என்பது என்ன?

எப்படி செய்தல் வேண்டும்?

அதன் உட்பிரிவுகள் என்ன?

என விவரிப்பது இப்பகுதி.

அதாவது ராகங்களை ஆலாபனை செய்யும்

விதத்தைக் கூறுவது.

இசைச் சொற்களை இவர் விளக்கும்போது உலகிலே மக்கள் இதை என்ன சொல்லி வருகிறார்கள் என்பதையும் இவர் குறிக்கிறார்.

இது ஒரு பாரிய தொண்டாகும்.

ஆராச்சியாளருக்கு அமுதம் போன்றது.

இவருக்கு முன் இருந்த மரபு இச்சொற்களில்

இடம் பெறுகின்றன.

அவ்வாறு “ஆயத்தம்” என்று ஒரு சொல் உள்ளது.

ராகத்தை ஆலாபனை செய்ய தொடங்குவதற்கு

“ஆயத்தம்” என்று சொல்வது உலக வழக்கு.

ஒரு ராகத்தை ஆலாபனைக்கு எடுத்துக் கொண்டதும் “ஆயத்தம்” செய்து படிப்படியாக அதை “விஸ்தாரம்” செய்து ராகத்தின் இயல்பை உணரும்படி பாடுதல் என்பது ராக ஆயத்தம் தொடங்கிய பிறகு படிப்படியாக வளர்க்க வேண்டும்.

அதற்கு ராகவர்த்தினி என்று பெயர்.

ராகவர்த்தினிக்கு மக்கள் வழக்கில் “எடுப்பு”

என்று வேங்கடமதி கூறுகிறார்.

ஆதலின் “எடுப்பு” என்பது ராக ஆலாபனையின்

நூணுக்கமான இன்றியமையாத அரங்கம் ஆகும்.

எடுப்பு எடுத்தல் என்றால் இசை மரபில் இராக ஆலாபனை செய்தல் என்று பொருள்.

கர்நாடக இசையின் அடிப்படை நூலான இந்த

வேங்கடமகியின் நூலில் “எடுப்பு” என்ற தமிழ்ச் சொல்

அப்படியே எடுத்தாளப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

வேங்கடமகி தமிழ்நாட்டிலிருந்த இசை மரபை அப்படியே எடுத்துக்கொண்டு அதை தம் நூலில் வகுத்துள்ளார் என்பது

இதனால் தெளிவு பெறுகிறது.

சுருங்கச் சொன்னால் தமிழ் இசையின் மறு வடிவே கர்நாடக இசை என்பதற்கு இது ஒரு அடிப்படை சான்று எனலாம்.

திருஞானசம்பந்தர் “பாடல் எடுத்தல்” என்பதின் நூணுக்கம் இப்பொழுது தெளிவாகிறது.

தாம் பாட எடுத்துக்கொண்ட பாடலின் இராகத்தை விரிவாக ஆலாபனை செய்வதையே எடுத்த பாடல் என்பதால் குறிக்கிறார்.

இதனால் இசை மரபில் “எடுத்தல்”, “எடுப்பு” அல்லது “ராக ஆலாபனை” என்பது 1300 ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழகத்தில் சிறந்திருந்தது என்று அறிகிறோம்.

***********************************************

சிறீ சிறீஸ்கந்தராஜா

16/09/2017

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *