பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

21622086_1427486197305575_203494868_n
வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.09.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி (128)

  1. வருமா…

    காத்திருக்கிறது கொக்கு,
    கானல்நீராம் வாழ்வை எண்ணி..

    முன்பு
    குளம் வறண்டபோது,
    குடிக்கக்கூட நீரின்றி
    காத்திருந்தது-
    குளத்தில் தண்ணீருக்காக..

    தண்ணீர் வந்தது,
    குடித்துவிட்டு
    நீரில்
    நிலையாய் நின்று
    காத்திருக்கிறது இப்போது-
    மீனுக்காக..

    வருமா,
    வாழ்க்கையது கானல்நீரா…!

    -செண்பக ஜெகதீசன்…

  2. காலமறிந்த கொக்கே

    வெண்மையின் உருவே!
    வெண்பட்டு வனப்பே!
    நீரைத் தாண்டிய நீளமான காலழகே!
    காலத்தின் மதிப்பே
    கூர்ந்த நோக்கே
    சித்திரத்தில் முத்திரை பதிக்கும்
    தூரிகையின் துடிப்புடன் துழாவும் அலகே!
    அலகுயெனும் தடம்பிடித்து வெற்றித் தடம் பதித்த அழகியே!
    குறிக்கோள் கொண்டு குறிவைக்கும் குறிகாரி
    இலக்கினை அடைய தனித்திருந்து விழித்திருக்கும் வித்தகி
    இடமறிந்து திடமுடன்
    இலகுவாய் இரைகவரும் இலட்சியவாதி
    ஒற்றைக் கால் தவத்தில்
    ஓடுமீன் பற்றும் பண்பான பறவையே
    ஆதலால் காதல் கொண்டே
    உன்னை பாடியது வான்புகழ் வள்ளுவம்
    உலகமறிந்த உன்னுழைப்பை
    உறங்கும் உள்ளங்களில் தூவ வேண்டும்
    பறவையின் பவிசு பாரென
    பாரெங்கும் பாடவேண்டும்
    மானுட மதிப்பறியா
    மயங்கிய மனங்களில்
    சிறகசைத்து பறவையின் புகழை ஓதவேண்டும்
    ஒய்யார கழுத்தசைத்து
    அலகு தூரிகையில்
    காலத்தின் மதிப்பெழுது கொக்கே!
    கடமை மறந்து களித்திருப்போரை கைவிடட்டும் சோம்பல் சொக்கே!

  3. பறவை சொன்ன பாடம்: நீர் நிலையில் நின்று தவம் செய்யும் பறவை இது!
    பொறுத்திருந்தால் நன்மை உண்டென்று உணர்த்தும்பறவை இது!
    பதறிய காரியம் சிதறி விடும் என்று நமக்கு
    காட்டும் பறவை இது!
    பாலின் நிறம் கொண்ட அழகுப் பறவை இது !
    உள்ளது போகாது! இல்லது வாராது!
    எனும் பாடம் சொல்லும் பறவை இது!
    ஆண்டவன் படைத்த அற்புத படைப்பு இது!
    பொறுத்தார் பூமி ஆள்வார்!
    கொக்கிடம் இது நான் கற்ற பாடம்!
    என் வாழ்க்கையில் கூட வரும்!
    அனைத்தும் இனி எனக்கு கை கூட வரும்!

  4. உயிர் உணவு..!
    ============

    அக்கால முனிவர் அந்தரத்தில் தொங்கியே..
    ……….அருந்தவம் புரிவார் வாழ்வின் காரணமறிய..
    கொக்கொன்று இரை தேடித் தண்ணீரின்மேல்..
    ……….கொள்வது தன்வயிறை நிரப்பும் தனித்தவமாகும்.!
    பக்குவமாய்த் நீரில் தவமிருந்து இரைபிடிக்க..
    ……….பாம்புபோல் இருக்கும் தன்கழுத்தை நீட்டும்.!
    சிக்குமென சிலமணி நேரம் காத்திருக்கும்..
    ……….சீராகக் கண்ணை இரைமேல் பதித்திருக்கும்.!

    பாவப்பட்ட ஜென்மமது பறந்து திரிந்தாலும்..
    ……….பசியாற ஓரிடத்தில் உட்காரும்.!….அப்போது
    ஏவப்பட்ட தோட்டாவுக் கது இரையாகும்.!
    ……….இதுவுமோர் இயற்கை வகுத்த விதியாகும்.!
    தூவப்பட்ட இரை எளிதே கிடைக்குதென்று..
    ……….தீதுநினையாப் பறவைகள் வலையில் சிக்கும்.!
    தேவைப் பட்டால் எவ்வுயிரும் உணவாகும்..
    ……….தங்கும் மண்ணில் வாழுகின்ற மனிதனுக்கே.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *