பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

22016179_1439541572766704_1378290575_n

யெஸ்ஸெம்கே எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி (129)

  1. காளைகளே…

    துள்ளிவரும் காளையைத்
    துடுக்கடக்கக்
    காத்திருக்கும் காளையர்-
    எள்ளளவும் பயமின்றி..

    காளையரே,
    வீர விளையாட்டு இதில்
    விவேகமும் சேர்ந்திருக்கட்டும்..

    விளையாடுங்கள் விளையாடுங்கள்
    வீரம்காண விளையாடுங்கள்-
    விரயம் வராமலே…!

    -செண்பக ஜெகதீசன்…

  2. எங்க ஊர் காளை: அஞ்சாது அனைவரையும் எதிர்த்து நிற்கும் காளை!
    ஆயிரம் பேர் வந்தாலும் அஞ்சாத காளை!
    சிராவயல் மஞ்சு விரட்டில் சீறிப் பாய்ந்த காளை!
    அரளிப் பாறை மஞ்சு விரட்டில் அஞ்ச வைத்த காளை!
    அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் செயித்து வந்த காளை!
    மேல் பாய்ச்சல், கீழ் பாய்ச்சல் பழகி வந்த காளை!
    வெற்றி மேல்,வெற்றிகளை குவித்து வந்த காளை!
    காளையரை கதிகலங்க வைத்த எங்க ஊர் காளை!
    துணிச்சலிலே, தமிழருக்கு இணை இந்த காளை!
    அன்புக்கு மட்டும் அடி பணியும் காளை!
    அடக்க நினைப்பவர்க்கு, காலனாகும் காளை!

  3. காளையும் – மனிதனும்

    காளை – காளையர்
    எங்கிருந்து வந்தது இந்த பெயர் பொருத்தம்!

    காளையை அடக்குபவனும்,
    கல்லைத் தூக்குபவனும்,
    கன்னியின் கழுத்தில் மாலையிடலாம்
    எங்கிருந்து வந்தது இந்த எழுத்து ஒற்றுமை!

    இது என்ன மரபா? இல்லை வழக்கமா?

    உலகிற்கே சொன்னோம் உணவு முறையை
    ஏர் பிடித்து!
    இன்று ஆள் இல்லை ஏர் பிடித்து உழ,
    ஆனால்,
    காளைகள் உண்டு!
    காகிதத்தில், அழியும் இனம் என்று!

    நாட்டு பூக்கள் உண்டு!
    நாட்டு புலிகள் உண்டு ….!
    என ஏராளம் உண்டு!
    எல்லா இடத்திலும், ஆனால்,
    நாட்டு காளை இனம் இங்கு மட்டுமே உண்டு,
    என்பதனை மறந்தனரோ!

    எத்தனை கூட்டம் இருந்தாலும்,
    வாலிபன் இரத்தம் சொட்டினாலும்,
    எந்த பக்கம் திரும்புமோ!
    என் வீரத்தை சோதிக்க, என்றெண்ணினாலும்!
    நிற்க இடம் தேடி காணுவோம்
    உன் நிமிர்ந்த முகத்தையும்,
    உன் அழகிய திமிலையும்!

    இப்பொழுது தோன்றுகிறது நீ
    எங்களுக்கு நன்றி சொல்வது போல்!

    என்னையும்,
    என் பளுவையும்,விட்டு கொடுக்காது,
    ஒற்றைக் கோட்டில் நின்ற உங்களுக்கு,
    நன்றி சொல்லி நிறகின்றேன்,
    அதே நிமிர்ந்த நடையில்!

    இத்தனையும் போட்டிக்காகவா?
    இல்லை, நம் கலாச்சாரத்திற்க்காக,
    நமக்கும், காளைக்கும், கோ-விற்கும்
    இடைப்பட்ட பந்தத்திற்காக.

    அன்பினால் அஞ்சுகிறோம்
    உன் முன்பு
    நன்றி வேண்டாம்
    வேண்டிக்கொள்கிறோம் உங்களிடம் நாங்கள்
    வீடு செழிக்கும், கோ -வின் கால் பட்டால்!
    பூமி செழிக்கும் காளையின் கால் பட்டால்!

    மறந்து விடாதீர்கள்!
    யாரையும் மறக்கவும் விடாதீர்கள்!
    நீங்கள் இந்த பூமியின்…………..!

    -கா. முருகேசன்

  4. ஏறுதழுவ வாருங்கள் இளைஞர்களே!

    கால்நடையின் வளத்தை கட்டிக்காத்த தமிழினம்
    கண்ணியமாக நிகழ்த்தியது காளைப்போர்
    எங்கே சென்றது நம் மானமரபு
    பேணமறந்தீரோ?
    முல்லைநிலத்தில் ஆயர்களின் வீரத்தை
    காளையின் நேரெதிரில் கண்டோமே!
    கொல்லேறு தழுவா ஆண்மையை
    கனவிலும் தழுவா பெண்மை
    திமில் பற்றி திடம் காட்டிய வீரம்
    குடரோடு குருதியோடிய நேரம்
    குரவைக்கூத்தாடி குதூகலித்த மானம்
    கட்டுக்குலைந்து கலைந்து போன மாயம்

    மஞ்சுவிரட்டு சல்லிக்கட்டென
    மங்கையின் முன் சாகசம் காட்டும் பேரம்
    போலியான பாவனையில் பண்பாட்டுச் சோரம்
    நாகரிக மாற்றத்தில் மரபணுமாற்றமாக
    நாட்டுப்பசு நாட்டுக்காளை நலமொழிந்து….
    சிதிலமடைந்த சின்னமதை சிறப்பாக்க
    சிந்தனை செய் மனமே!
    சிந்துவெளி நாகரிகத்தில் புதையுண்ட மரபு
    செப்பம் செய்வதே பண்பாட்டின் நல்வரவு

  5. காளையின் பெருமை..!
    ==================

    காளையரைக் கண்டால் ஜல்லிக் கட்டுக்
    ……….காளையும் தன்காலை யுதைத்துத் திமிரும்.!
    பாளைமடல் போன்றதன் கொம்பால் மணற்
    ……….பாங்கான இடத்தில் முட்டி முறுக்கேற்றும்.!
    தோளான அதன்திமில் கர்வ மிகுதியாலது
    ……….தொய்ந்துயர சற்றேபக்க வாட்டில் சாயும்.!
    வேளை வரும்போது வீரத்தை நிரூபிக்க
    ……….வாடிவாசல் திறக்கும் வரைக் காத்திருக்கும்.!

    முட்டிச் சாய்ப்பதற்கென்றே வாழப் பழகிடும்
    ……….மூர்க்கத்தனமாய் வாய்பிளந்து குரலெழுப்பும்.!
    கட்டான இளைஞர்களைக் கண்டு விட்டால்
    ……….கட்டுக் கடங்காமல் கூட்டத்துள் சீறிப்பாயும்.!
    கிட்ட யாரையும் நெருங்கவிடாமல் துரத்தும்
    ……….கிட்டாத பெருமையெலாமதற்கு வந்து சேரும்.!
    போட்டியென வந்துவிட்டால் போதும் அது
    ……….மாட்டு வண்டியாயினும் மகிழ்ந்தே இழுக்கும்.!

    வாசுதேவனுனை மேய்த்த அருஞ் செயலால்
    ……….வண்டி யிழுக்கும் உனக்குப் பெருமையுண்டு.!
    ஈசனும் விரும்பியுனை வாகன மாக்கியதால்
    ……….பூசைக்குமுன் உனக்குத்தான் முதல் மரியாதை.!
    பாசமுடனுனை அரவணைத்துப் பழகி விட்டால்
    ……….பகுத்தறி வென்பதுனக்குத் தானாக வந்துவிடும்.!
    நேசிக்கும் உழவனுக்கே உயர் நண்பனானதோடு
    ……….நெஞ்சுரத்துக்கு நீயேயோர் சிறந்த உதாரணம்.!

Leave a Reply to Shenbaga jagatheesan

Your email address will not be published. Required fields are marked *