(காதலின் புதியதொரு பரிமாணம்)

            மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;

ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

                             *****************

                           தொடர்ச்சி: காட்சி- 5

            வசந்தன்: உன் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை, நண்பா! எனக்குக் களைப்பாக இருக்கிறது. உன்னால் மூட்டப்பட்ட இந்த நெருப்பினைத் தொடர்ந்து எரிய வைப்பதென்பது பெரும் சோதனையாக உள்ளது. உறக்கம் என் கண்களைத் தழுவுகிறது, கையிலுள்ள விசிறி தவறி விழுகின்றது, ஆறிப்போன சாம்பல் தீயின் ஒளியை மழுங்கவைக்கின்றது. நான் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு அணைந்துகொண்டிருக்கும் தீயை மறுபடியும் காப்பாற்ற முயல்கிறேன். நீண்ட நேரம் இதை என்னால் இனிச் செய்ய முடியாது!

         மதனன்: நீ குழந்தையைப்போல் சலனபுத்தியுடையவன் என்று எனக்குத்தெரியுமே! சொர்க்கத்திலும் பூமியிலும் உன்னுடைய விளையாட்டில் பொறுமை இழந்து விடுபவன் நீ! மிகுந்த நாட்களைச் செலவிட்டுப் பொறுமையாக எல்லா விஷயங்களையும் பார்த்துப்பார்த்து நீ செய்வனவற்றை, ஒரே நாழிகையில் சிறிதும் வருத்தமின்றி உடைத்தெறிகிறாய். இந்த நம்முடைய வேலை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. களிப்பின் சிறகுகளைக்கொண்ட நாட்கள் விரைந்தோடும்; ஆண்டும் அதன் முடிவினை எட்டும்போது எல்லையற்ற ஆனந்தத்தில் மயங்கிக்கிடக்கும்.

            காட்சி- 6

            அர்ஜுனன்: நான் காலையில் எழுந்ததும் எனது கனவுகள் உருவாக்கி வடித்தெடுத்த ஒரு மாணிக்கத்தைக் கண்டேன். அதனைப் பாதுகாக்க என்னிடம் ஒரு பேழையுமில்லை, அதனைப் பதித்து வைக்க ஒரு மணிமகுடமுமில்லை, அதனைத் தொங்கவிட ஒரு சங்கிலியுமில்லை, அதனைத் தூக்கியெறிய மனமுமில்லை. க்ஷத்திரியனான எனது வலதுகரம் வேலையின்றி அதனைப் பிடித்துக்கொண்டு தனது கடமைகளை மறந்திருக்கிறது.

            [சித்ரா உள்ளே நுழைகிறாள்]

            சித்ரா: தங்கள் எண்ணங்களைக் கூறுங்கள் ஐயா!
ர்ஜுனன்: இன்று என் சிந்தனை வேட்டையாடப்போவதில் ஈடுபட்டுள்ளது. எப்படி இந்த மழை தாரையாகப் பெய்து ஆக்ரோஷமாக மலைப்பிரதேசத்தை அடித்துத் துவைக்கின்றதெனப்பார்! மேகங்களின் கருநிழல் கானகத்தின் மீது கவிந்திருக்கிறது; பெருகிவரும் வெள்ளம், பொறுப்பற்ற இளைஞனைப்போல் எல்லாத் தடைகளையும் உடைத்துக்கொண்டு பரிகசித்துச் சிரிப்பதனைக் காண்பாய்! இத்தகைய மழைநாட்களில் நாங்கள் ஐந்து சகோதரர்களும் ‘சித்ரகா’ கானகத்திற்குச் சென்று வனவிலங்குகளைத் துரத்துவோம். அவை இன்பமான நாட்கள்; எங்கள் உள்ளங்கள் மேகங்கள் முழக்கும் மத்தள ஒலிக்கேற்ப நடனமாடும். கானகம் முழுதிலும் மயில்களின் கூச்சல் எதிரொலிக்கும். மழைவிழும் சப்தத்திலும், அருவிநீரின் ஓசையிலும், தைரியமில்லாத மான்கள் நாங்கள் அவற்றினை நெருங்கிவரும் காலடி ஓசையைக் கேட்க முடியாது. சிறுத்தைகளின் கால்தடங்கள் ஈரமான மண்ணில் பதிந்து அவைகளின் இருப்பிடத்தை வெளிக்காட்டிக் கொடுத்துவிடும். எங்கள் வேட்டையாடும் கேளிக்கைகள் முடிந்தபின், கட்டவிழ்ந்து கரைபுரண்டோடும் புனல்களில் நீந்திச்சென்று வீட்டை அடைய நாங்கள் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொள்வோம். அந்த அமைதியற்ற தன்மை என்னை ஆட்கொண்டுள்ளது. நான் வேட்டையாடச் செல்ல ஏங்குகிறேன்.

            சித்ரா: முதலில் தாங்கள் இப்போது தொடரும்Chitrangadha-1 இரையை வீழ்த்துங்கள். தாங்கள் தேடும் மாயமானை வீழ்த்த வேண்டியது அவசியம் தான் என எண்ணுகிறீர்களா? இல்லை, இன்னும் இல்லை. ஒரு கனவுபோன்ற அதனைத் தாங்கள் மிக நெருங்கும்போது அது தங்களை விட்டோடுகின்றது. இந்த பயித்தியக்கார மழை, காற்றினைத் துரத்தி, அதனின்றும் ஓர் ஆயிரம் அம்புகளை எய்வதனைப் பாருங்கள். இருப்பினும் அதனை யாராலும் பிடிக்க முடியாமலும் வெல்லமுடியாமலும் இருக்கிறது. நமது விளையாட்டும் அத்தகையதே, அன்பே! விரையும் அதனை நீங்கள் உங்கள் கரத்திலுள்ள எல்லா அம்புகளையும் எய்து, விடாது துரத்துகிறீர்கள்! இருப்பினும் அந்த மாயமான் எப்போதும் யாராலும் தொடமுடியாமல் ஓடிக்கொண்டுள்ளது.

            அர்ஜுனன்: என் அன்பே, அன்பான உள்ளங்கள் உனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வீடு உனக்கு இல்லையா? உனது மென்மையான பணிவிடைகளால் இனிமை நிரம்பச் செய்த அந்த வீடு, நீ அதனை விட்டு வெளியேறியதும் களையிழந்து போயிருக்குமே?

            சித்ரா: எதற்காக இந்தக் கேள்விகள்? நமது எல்லையற்ற இன்பத் தருணங்கள் முடிவுற்று விட்டனவா? தற்போது தங்கள் கண்முன் காணும் என்னைத்தவிர நான் வேறொன்றுமில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா? எனக்கு இதனைத்தவிர வேறொரு கற்பனைத் தோற்றம் கிடையாது. கிம்சுகா மலரின் இதழ் நுனியில் தொங்கும் பனிநீருக்கு பெயரும் இடமும் கிடையாது. அது எந்தக் கேள்விக்கும் விடையளிப்பதில்லை. நீர் காதலிக்கும் மங்கையும் அந்தப் பனிநீர்த்துளி போன்றவளே!

            அர்ஜுனன்: அவளுக்கு இந்த உலகுடன் தொடர்பு ஏதும் கிடையாதா? ஒரு விளையாட்டுத்தனமான கடவுளின் பொறுப்பற்ற செய்கையினால் சுவர்க்கத்திலிருந்து விழுந்துவிட்ட ஒரு துகள்தானா அவள்?

            சித்ரா: ஆமாம்.

            அர்ஜுனன்: ஆ! அதனால்தான் நான் எப்போதும் உன்னை இழந்துவிடக் கூடிய நிலையில் இருக்கிறேன். எனது உள்ளம் நிறைவு அடையவில்லை, என் சிந்தையில் நிம்மதி இல்லை. அடைய இயலாதவளே, என்னருகே நெருங்கி வா! பெயர், வீடு, பெற்றோர் எனும் தளைகளுக்குள் உன்னை அர்ப்பணிப்பாயாக. எனது இதயம் உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் உணர்ந்து, உன்னுடன் அமைதியான, அன்பின் பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கையை வாழட்டும்.

            சித்ரா: மேகங்களின் நிறங்களையும், அலைகளின் நடனத்தையும், மலர்களின் வாசனையையும் பிடித்து நிறுத்தும் இந்த வீண்முயற்சி எதற்காக?

            அர்ஜுனன்: எனது தலைவியே! காதலை உனது வெற்றுமொழிகளால் அமைதிப்படுத்த முயலாதே! எனக்குப் பற்றிக்கொள்ள எதையாவது கொடு; இன்பத்தைவிட நீடிப்பதாகவும், துயரத்திலும் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவும் அது இருக்கட்டும்.

          சித்ரா: எனது வீரத்தலைவரே, ஆண்டு முடியவில்லை, ஆயினும் அதற்குள் நீங்கள் சலித்து விட்டீர்களா? ஒரு மலரின் ஆயுளைக் குறைவாக வைத்த ஆண்டவனின் செய்கையை நான் இப்போது புரிந்து கொண்டேன். எனது இந்த உடல் வசந்தகாலத்து மலர்களுடன் உலர்ந்து இறந்து போயிருந்தால் அது கட்டாயம் மரியாதையுடன் இறந்திருக்கும். இருப்பினும் அதன் நாட்கள் எண்ணப்பட்டு உள்ளன, அன்பே! அதனை விடாது, தேன் வறண்டுபோகும்வரை சுவையுங்கள். வேனிற்காலத்து மலர்கள் வாடி மண்ணில்வீழ்ந்து இறந்தபின் அதனைத் தேடிவரும் வண்டினைப்போலாகாமல் உங்களுடய யாசகனின் இதயம் திரும்பத்திரும்ப தணியாத ஆசையுடன் வேண்டும்வரை விடாது எடுத்து அனுபவியுங்கள்.

            காட்சி- 7

            மதனன்: இந்த இரவே உந்தன் கடைசி இரவு.

            வசந்தன்: நாளை உனது உடலின் வனப்பு வசந்தகாலத்துக் குறைவற்ற பொக்கிஷத்தினுள் சென்றடையும்; அர்ஜுனனின் முத்தங்களின் நினைவிலிருந்து அழிக்கப்பட்ட உனது இதழ்களின் அழகான சிவப்புநிறம் புதியதான ஒரு ஜோடி அசோக இலைத்தளிர்களாக முகிழ்க்கும்; மின்னலைப்போலும் உன் மேனிவண்ணம் திரும்பவும் ஓராயிரம் மல்லிகை மலர்களாகப் பிறவியெடுக்கும்.

            சித்ரா: கடவுள்களே! எனக்கு இந்த வரத்தை மட்டும் அளியுங்கள்! அணையப்போகும் தீச்சுடரின் கடைசிச் சுடரொளி போல இன்றிரவு மட்டும் எனது அழகு அதன் கடைசி நேரத்தில் மிகுதியாக ஒளிரட்டும்.

            மதனன்: உனது விருப்பம் நிறைவேறும்.

            காட்சி- 8

            கிராம மக்கள்: யார் நம்மை இப்போது காப்பாற்றுவார்கள்?

            அர்ஜுனன்: ஏன், என்ன தீங்கு உங்களை இப்போது அச்சுறுத்துகின்றது?

            கிராம மக்கள்: மலையிலிருந்து பெருகிவரும் வெள்ளம்போல, கொள்ளைக்காரர்கள் வடதிசையிலுள்ள மலைகளிலிருந்து நமது கிராமத்தை நோக்கி அதனை கொள்ளையிட்டு அழிக்க வந்துகொண்டிருக்கிறார்கள்.

            அர்ஜுனன்: இந்த நாட்டில் உங்களைக் காக்க யாருமில்லையா?

            கிராம மக்கள்: கொடுமைக்காரர்கள் அனைவருக்கும் இளவரசி சித்ரா ஒரு அச்சுறுத்தலாக இருந்தாள். அவள் இந்த நாட்டில் இருந்தபோது நாங்கள் வேறொன்றைப்பற்றிய பயமும் இல்லாமல், இயற்கையாக நிகழும் மரணமொன்றையே பயந்திருந்தோம். அவள் இப்போது தீர்த்தயாத்திரை சென்றிருப்பதால், யாருக்கும் அவளை எங்குபோய்த் தேடுவதெனத் தெரியவில்லை.

            அர்ஜுனன்: உங்கள் நாட்டின் காவலன் ஒரு பெண்ணா?

            கிராம மக்கள்: ஆம்; எங்களுக்குத் தாயும் தந்தையும் அவள் ஒருவளே!

            [அனைவரும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்]

            [சித்ரா நுழைகிறாள்]

            சித்ரா: ஏன் தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்?

            அர்ஜுனன்: இளவரசி சித்ரா எப்படிப்பட்ட பெண்ணாக இருப்பாள் எனக் கற்பனை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவளைப்பற்றிய பலவிதமான கதைகளை பல மனிதர்கள் கூறக் கேட்கிறேன்.

            சித்ரா: ஆ! ஆனால் அவள் ஒன்றும் அழகியல்ல. எனது கருமையான கொல்லும் விழிகளைப்போல் அவள் கண்கள் ஒன்றும் அழகானதல்ல. அவளால் எந்தக் குறியையும் நோக்கி அம்பெய்ய முடியும்; ஆனால் தனது காதலனின் இதயத்தை விழியெனும் அம்பால் துளைக்க இயலாது.

            அர்ஜுனன்: அவள் வீரத்தில் ஆண்மகனாகவும், இளகிய மனம்கொண்ட பெண்ணாகவும் உள்ளவள் என்கின்றனர்.

            சித்ரா: அது உண்மையிலும் ஒரு துரதிர்ஷ்டமே! ஒருபெண், பெண்ணாக மட்டுமே இருக்கும்போது தனது புன்சிரிப்பாலும், அழுகையாலும், பணிவிடைகளாலும் இன்னும் அன்புப்பிணைப்பான தழுவல்களாலும் தன்னை ஆண்மகனின் இதயத்தைச்சுற்றி பின்னிப் பிணைத்துக் கொள்கிறாள்: அப்போதுதான் அவள் மகிழ்ச்சியடைகிறாள். கல்வியாலும் தனது மற்ற சாதனைகளாலும் அவளுக்கு என்ன பிரயோசனம்?

            நேற்று மட்டும் நீர் அவளை காட்டுப்பாதையிலுள்ள சிவன்கோவிலின் முற்றத்தில் பார்த்திருந்தால் இன்னொருமுறை அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றிருப்பீர்கள். ஒரு பெண்ணிடம் ஆண்மையின் வலிமையைத் தேடும் உங்களுக்கு, பெண்மையின் அழகில் சலிப்பு ஏற்பட்டு விட்டதா என்ன? அருவிநீரால் நனைந்த பசிய இலைகளால் குகையிலுள்ள நமது மதியப் படுக்கையை நான் இரவுபோல இருளாகச் செய்துவைத்திருக்கிறேன். அங்கு கருநிற ஈரக்கற்களில் படர்ந்திருக்கும் மென்மையான பச்சைநிறப் பாசிகள் உமது இமைகளை முத்தமிட்டு உறங்கவைக்கும். நான் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன்.

            அர்ஜுனன்: இன்று வேண்டாம், அன்பே!

            சித்ரா: ஏன் இன்று வேண்டாம்?

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *