-மேகலா இராமமூர்த்தி

இரவுநேரத்தில், வீட்டிலுள்ளோர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தலைவி தன் காதற்தலைவனைச் சந்திக்க வெகுதொலைவு வருவதென்பது தினமும் ஏலாத காரியமாகையால் பெரும்பாலும் இரவுக்குறி வீட்டினர் அறியாவகையில் தலைவியின் இல்லத்துக்குள்ளேயோ, அல்லாதவிடத்து வீட்டுக்கு மிக அணித்தே வீட்டிலுள்ளோர் குரல் கேட்கும் தொலைவிலோதான் நிகழ்வது வழக்கம்.

அத்தோடு இரவுக்குறி பகற்குறிபோல் எளிதானதும் அன்று. இரவென்பதால் தலைவன் பல்வேறு இடையூறுகளைக் கடந்தே தலைவியைச் சந்திக்க இயலும்.

அவ்விடையூறுகள் யாவை?

துஞ்சாக் கண்ணரும் அஞ்சாக் கொள்கையருமாய் ஊர்க்காவலர்கள் தலைவன் வரும் வேளைபார்த்து ஒருநாளிரவு சுற்றிக்கொண்டிருப்பர். அதனால் தலைவியைச் சந்திக்காமலே அவன் ஊர் திரும்பநேரும். மற்றொருநாள் கதநாய்கள் விடாதுகுரைத்து தலைவன் ஊருக்குப் புதியவன் என்பதை ஊரார்க்குப் பறைசாற்ற முற்பட, அதுகண்டு அஞ்சி அவன் திரும்பவேண்டியிருக்கும்.

நாய்தரும் தொல்லை போதாதென்று சில இரவுகளில் தலைவியின் தாய் கண்துஞ்சாது விழித்திருந்து காதலர் சந்திப்புக்கு ஏதம் விளைவிப்பாள். நிறைமதி (பௌர்ணமி) நாளாயிருந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்; நிலவுவிரிக்கும் கிளரொளியில் இரவுவேளை பகலாகும்; அது காதலர் சந்திப்புக்கு இகலாகும்.

இவ்வளவு தடைகளையும் தாண்டியே தலைவன் வருகின்றான் தலைவியைத் தேடி; அவள் இல்லம் நாடி!

அன்றிரவும் அப்படித்தான் தலைவியைச் சந்திக்க வந்துகொண்டிருந்தான் தலைவன். தலைவியின் வீட்டருகே சற்றே மறைவாய் நின்றுகொண்டிருந்த தோழி வானூர் மதியம் வஞ்சனையின்றித் தன் தண்ணொளியை எங்கும் வாரியிறைப்பதைக் கண்டு கவலைகொண்டவளாய் நிலவைப் பார்த்துப் பே(ஏ)சலானாள்…

”நெடுநேரம் எறிக்கும் வெண்ணிலவே! கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த பெரிய பாறையானது, வேங்கைப் புலியின் குருளையைப்போல் தோன்றும் காட்டுவழியே வரும் தலைவனுக்கு நீ நன்மைதருவாய் அல்லை!” என்றாள் சினந்து. அப்போதுதான் அங்குவந்து சேர்ந்திருந்த தலைவனின் காதுகளிலும் தோழியின் மொழிகள் விழவே செய்தன!

நிலவு தனக்குரிய நேரத்தில் மட்டுமே எறிக்கும் இயல்புடைத்தாயினும், அது விரைவில் மறையவேண்டும் எனும் தோழியின் உட்கிடக்கையே அது நெடுநேரம் எறிப்பதாய் ஒரு மாயத்தோற்றத்தை அவளுள் ஏற்படுத்தியது எனலாம். அதனால்தான், ’நெடுவெண்ணிலவே’ என்று அதனை விளித்தாள். 

பொன்போலும் நிறங்கொண்ட வேங்கை மலர்கள் பாறைகளில் குவிந்துகிடப்பது அப்பாறையை வேங்கைப் புலியின் குருளையைப்போல் (உரு)மாற்றி, அவ்வழி வருவோரை ஆங்கே ஒரு வேங்கையே படுத்துக்கிடக்கின்றதோ என்று கிலிகொள்ள வைக்கும் தன்மையுடையது. ஆதலால், இரவுக்குறி வருதலும் தவிர்த்தலுக்குரியதே என்பதைத் தலைவனுக்குணர்த்தும் உள்ளுறையும் தோழியின் இக்கூற்றில் ஒளிந்துகிடப்பதை உணரலாம்.

கருங்கால் வேங்கை  வீயுகு  துறுகல்
இரும்புலிக்  குருளையின்  தோன்றுங்  காட்டிடை
எல்லி  வருநர்  களவிற்கு
நல்லை  யல்லை  நெடுவெண்  ணிலவே.  (குறுந்: 47நெடுவெண்ணிலவினார்)

full-moonஇப்பாடலைப் பாடிய புலவர்பெருந்தகையின் பெயர் இன்னதென்று அறியக்கூடாததால், இதன்கண் பயின்றுவரும் சிறந்த தொடரான ’நெடுவெண்ணிலவு’ என்பதை வைத்தே அவருக்கு ‘நெடுவெண்ணிலவினார்’ என்று பொருத்தமாய்ப் பெயர் சூட்டிவிட்டனர் நம் தமிழ்ச் சான்றோர்!

மற்றொருநாள் தலைவியைச் சந்திக்க இரவில் தலைவன் வந்துகொண்டிருந்த வேளையில் பெருமழை பிடித்துக்கொண்டது. கடும் மழையையும் பொருட்படுத்தாது, காதலி வீட்டின் கொல்லைப்புறத்தில் நடுயாமத்தில் வந்து நின்ற அவ்விளைஞனைக் கண்ட தோழி உண்மையில் நொந்தேபோனாள்.

”உயர்ந்த  மலையையுடைய தலைவ! பெய்யும் கடுமழை எல்லாவிடத்தையும் மறைத்ததனால் வானம் தென்படவில்லை; அம்மழைநீர் எங்கும் பரந்து ஓடுதலினால்  நிலமும் தென்படவில்லை; சூரியன் மறைந்துவிட்டதால் எங்கும் இருள் பரந்துவிட்டது. இந்நிலையில், பலரும் துயில்கின்ற நள்ளிரவில் இந்தக் கொட்டும் மழையில் நீ எப்படித்தான் இங்கு வந்தனையோ? வேங்கை மலர்ந்து மணம் வீசுகின்ற எம் சிற்றூரை எப்படித்தான் அறிந்தனையோ? உன் மெய்வருத்தம் கண்டு என்னுளம் நோகின்றது ஐய!” என்றாள்.

பெயல்கண்  மறைத்தலின்  விசும்புகா ணலரே
நீர்பரந்து
 ஒழுகலின்  நிலம்கா ணலரே
எல்லை
சேறலின்  இருள்பெரிது  பட்டன்று
பல்லோர்
 துஞ்சும்  பானாட்  கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல்
 வெற்ப
வேங்கை
 கமழும்எம் சிறுகுடி
யாங்கறிந் தனையோ
நோகோ  யானே.  ( குறுந்: 355 – கபிலர்)

காதற் பெருமழையில் நனைவதில் இன்பங்கண்டுவிட்ட தலைவன் வான்மழைக்கும் காற்றுக்குமா அஞ்சுவான்?

தன்னூரைக் கடந்துவரும் வழியில் நீண்டுகிடக்கும் கானகத்தில் புலியும், ஆளியும், களிறும், கரடியும், தீண்டிவருத்தும் அணங்கும், இரவில் இரைதேடித் திரியும் பாம்பும், ஆழமான நீர்நிலைகளில் வதியும் முதலையும் இடங்கரும் கராமும், வழுக்குப் பாறைகளும் இன்னபிற ஏதங்களும் இருப்பதையறிந்தும் அவற்றுக்கே அஞ்சாத அரிமா அவன்!

தலைவியின் இல்லத்தார்க்குத் தெரியாமலே அதுவரைத் தலைவியொடு காதல் வளர்த்துவந்த தலைவன், ஒருநாளிரவு விருந்தினன்போல் அவள் இல்லத்துக்குள் நுழைந்துவிட்டான். என்ன துணிச்சல்! (இல்லத்துக்கு வரும் அறிமுகமில்லாப் புதியவரையே விருந்தினர் என்று அந்நாளில் அழைப்பர்; உறவினரை அல்ல!)

’அல்லில்லாயினும் விருந்துவரின் உவக்கும்’ அரும்பண்பு தமிழரிடம் தழைத்திருந்த காலமது! ஆதலால் இரவில் இல்லம்வந்த தலைவனை ’வழிப்போக்கன்’ என்றெண்ணித் தன் இல்லில் தங்க அனுமதித்தாள் தலைவியின் தாய். எனினும் அவ்விளைஞனின் செய்கைகள், தன் மகளுக்கு அவன் முன்பே அறிமுகமானவனோ எனும் ஐயத்தை அவளுள் விதைக்காமலில்லை. அதுமுதலே தன்மகளை முன்னினும் அதிகமாய்க் கவனிக்கவும், பாதுகாக்கவும் தலைப்பட்டாள் அந்தத் தாய்.

இரவிலும் கண்துஞ்சாது தாய் தம்மைக் கண்காணிப்பது தலைவிக்கும் தோழிக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

”ஒருநாள் தலைவன் சிரித்தமுகத்தோடு வீட்டுக்கு விருந்தினனாக வந்தாலும் வந்தான்…ஏதோ போர் நடக்கின்ற ஊரின் மக்கள் அச்சத்தால் துஞ்சமாலிருப்பதுபோல் இந்த அன்னையும் துயிலாது உன்னையும் என்னையும் கண்காணிக்கத் தொடங்கிவிட்டாளே! நீராடும் பொருட்டு ஆற்றுக்குச் சென்ற சிறுபெண்ணொருத்தி தன் தோட்டத்திலிருந்து ஆற்றில் விழுந்த மாவின் பசுங்காயைத் தின்றுவிட்டாள் என்ற குற்றத்திற்காக, அவள் தந்தை 81 (ஒன்பதிற்றொன்பது = 9 x 9) களிறுகளையும், அப்பெண்ணின் நிறைக்கு நிகராகப் பொன்னாற்செய்த பாவையையும் தருகின்றேன் என்று மன்றாடியபோதும் மனமிரங்காது, அந்த அப்பாவிப் பெண்ணைக் கொலைபுரிந்த பாவியான நன்னன் எனும் மன்னனைப்போல நம் அன்னையும் நரகத்துக்கு செல்லட்டும்” என்று கோபத்தோடு சாபமிட்டாள்!

மண்ணிய  சென்ற  ஒண்ணுத  லரிவை
புனல்தரு  பசுங்காய்  தின்றதன்  தப்பற்கு
ஒன்பதிற்  றொன்பது  களிற்றொடு  அவள்நிறை
பொன்செய்  பாவை  கொடுப்பவுங்  கொள்ளான்
பெண்கொலை  புரிந்த  நன்னன்  போல
வரையா  நிரையத்துச்  செலீஇயரோ  அன்னை
ஒருநாள்  நகைமுக  விருந்தினன்  வந்தெனப்
பகைமுக  ஊரின்  துஞ்சலோ  இலளே.  (குறுந்: 292 – பரணர்)

காதலெனும் பித்து இளையோரின் சித்தத்தில் புகுந்துவிட்டால் அன்னையென்ன அத்தனென்ன…அனைவரையும் ஏசவும், வரம்புகடந்து பேசவும் அவ்விளையோர் தலைப்படுவர் என்பதற்கு இப்பாடலே சாட்சி!

அப்பப்பா…! பெற்ற அன்னையையே அளற்றுக்கு (நரகம்) அனுப்பவிரும்பும் காதலின் மாட்சி அளத்தற்கு அரியதுதான்!

[தொடரும்]

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *