வ.சுப.மாணிக்கனாரின் ‘மாமலர்கள்’ வீசும் மணம் – 1

0

-முனைவர் ச.அருள்

முன்னுரை

நேர்மையின் இலக்கணமாய், புலமையின் இயக்கமாய், எளிமையின் உருவமாய்ச் சங்கப் பனுவலில் திளைத்தவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். தமிழ்க்காதலால் வள்ளுவத்தை வரைந்து காட்டியவர்; திருவாசகத் தேன் உண்ணும் தும்பியிவர். ஏழிளந்தமிழில் வாழப்பழகியவர்; மாணவர்களின் மனக்கோவிலில் நிலைபெற்றுத் தெய்வமானவர்; கற்றோர் உள்ளத்தில் கலந்திட்ட மாமேதை; ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று கூறி, தமிழ் வழிக்கல்விக்காகத் தெருவில் இறங்கித் தமிழ் முழக்கம் செய்தவர்; கொடை விளக்கு வழங்கிய மாமலர் இவர்; தில்லையம்பலத்தில் தேவார, திருவாசகத் திருமுறைகளை முழங்கச் செய்தவர்; கல்லாத இனத்தைக் கற்க வைத்தவருக்கு அண்ணாமலைச் செட்டியார் பாடாண் திணை பாடிய பாவலர்; வீடும் கொடுத்த விழுச்செல்வரைப் (வள்ளல் அழகப்பர்) பாட்டு மாளிகையில் படிமமாக்கிக் காட்டியவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் புலமை வழித்தோன்றலில் இவரும் ஒருவர்; தமிழ்ப் பகையை எதிர்த்து நின்றதில் சிங்கம் போன்றவர்; பார் காத்தவர்களையும் பயிர் காத்தவர்களையும் போற்றும் உலகில் செந்தமிழ் காத்தவர்களைப் போற்றிய பண்பாளர் வ.சுப.மாணிக்கனார். இவர்தம் ‘மாமலர்கள்’ என்னும் கவிதை நூலினை இக்கட்டுரை ஆராய்கிறது.

மாமலர்கள் – கவிதைப் பொருண்மைகள்

1.இந்தியப் பாயிரம், 2. காந்தி எட்டு, 3. திருவாசகச் சுவட்டில், 4. உரிமைப் பாடல்கள்,       5. கையுறைப் பாடல்கள், 6. வள்ளல் அண்ணாமலையரசர், 7. பாராட்டுப் பாடல்கள்,                  8. வாழ்த்துப் பாடல்கள், 9. குழந்தைப் பாடல்கள், 10. அறப்பாடல்கள், 11. பாடற் கலம்பகம்,   12. அழகப்பர் பத்து, 13. எண்ணம் இருபது, 14. ஊர்தி முப்பது. 15. தமிழாட்டு, 16. தமிழ் சூடி,   17. புரட்சி மண்டோதரி, 18. கொல்லாச் சிலம்பு,
19. அன்னை கொதிக்கிறாள்,   20. உலகப்பாயிரம்.

பாயிரம்

 பாயிரம் என்பது முன்னுரை, முகவுரை, அணிந்துரை, மதிப்புரை போன்றதாகும். எனினும் இலக்கணத்தில் கூறப்படும் முன்னுரையே பாயிரம் என்னும் சிறப்புடைத்தாகும் என்று வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். இலக்கணப் பாயிரத்தில் மொழி வழங்கும் எல்லைகள், அடிப்படை, நுவல்பொருள், நெறி, நோக்கம், அரங்கேறிய இடம், காலம், ஆசிரியன் பெயர், ஆசிரியர் தகுதி என்னும் அறிமுகக் கூறுகள் பெருமிதமாகவும் சுருக்கமாகவும் சுட்டப்படுதல் உண்டு.

வ.சுப.மாணிக்கனாரின் ‘மாமலர்கள்’ என்னும் கவிதை நூலில் இடம் பெற்றுள்ள தொடக்கக் கவிதையின் தலைப்பு ‘இந்தியப் பாயிரம்’ என்பதாகும். முடிவுக் கவிதையின் தலைப்பு ‘உலகப் பாயிரம்’ என்பதாகும். இந்தியப் பாயிரத்தில் தொடங்கி, உலகப் பாயிரத்தில் முடிவது போல் இந்நூலை வ.சுப.மாணிக்கனார் படைத்திருக்கும் திறம் போற்றத்தக்கதாகும்.

                தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார்,
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
                 தமிழ் கூறு நல்லுலகம்”   (தொல்.சிறப்புப்பாயிரம்,1-3)

என்று தமிழகத்தின் எல்லைகளைக் குறித்துள்ளார். எனவே, வடக்கே வேங்கட மலை முதல் தெற்கே குமரி வரை தமிழ் பேசப்பட்டதாக இதன் மூலம் அறியமுடிகிறது.

வ.சுப.மாணிக்கனார் இந்தியப் பாயிரம் என்னும் கவிதையில்,

                வடவிமயம் தென்குமரி
ஆயிடைக்
குடியரசு நடத்துங் கோடாச் செங்கோல்
படிமிசைச் சிறந்த பாரதம் வாழிய”                  (மாமலர்கள், ப. 63)

என்று கூறியுள்ளார். அஃதாவது வடவேங்கடத்துக்கும் தென் குமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் மிகச் சிறப்பாக குடியாட்சி நடத்தும் பழம்பெருமை வாய்ந்த பாரதநாடு வாழிய என்று சுட்டுகின்றார். சிறந்த பாரம்பரியத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் உடையநாடு. இங்குத் தோன்றிய சிந்து வெளி நாகரிகம், உலக நாகரிகங்களுள் தொன்மையானது. நில வளமும், நீர் வளமும்  கலை வளமும் மிகுந்த நாடு பாரதநாடு. இதன் சிறப்பினை பாரதியாரும்,
பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரதநாடு”                
                               – (பாரதநாடு – பல்லவி)

என்று புகழ்ந்துரைக்கின்றார்.

உலகப் பாயிரம் என்னும் கவிதையில், வ.சுப.மாணிக்கனார்,
உலகம் என்பது கலகம் ஆகி
இன்றோ
நாளையோ என்றோ அறியோம்
வாரா அழிவுகள் வருவ போலும்;
மாயமுன் னேற்றம் மயங்க வேண்டா;
அடக்கமொடு வளர்தல் அறிவா கும்மே;
உலகம் என்பது உயிர்களின் உடைமை
மரமுத லாக மானிடம் ஈறா
எல்லா வுயிர்க்கும் இருப்பிடம் ஆகும்”       – (மாமலர்கள், ப. 183)

என்று உரைக்கின்றார். இதில்,  உலகில் கலகம் ஏற்பட்டு இன்றோ, நாளையோ, என்றோ ஒரு நாள் அழிவுகள் ஏற்படலாம்; ஆனால் மாய முன்னேற்றம் கண்டு மயங்காமல் அடக்கத்துடன் வளர்ச்சி அடைவதே அறிவுக்கு உகந்ததாகும் என்கிறார். மேலும், உலகம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது, மரம் முதலாக, மனிதன் ஈறாக எல்லா உயிர்களுக்கும் இதுவே இருப்பிடமாகும் என்கின்றார்.

நாட்டுப் பற்று

நாட்டுப் பற்று என்பது ஒவ்வொரு குடிமகனிடமும் அவசியம் இருக்க வேண்டும். குடிமக்களிடம்  நாட்டுப் பற்று நிலை கொண்டிருந்தால் நாட்டை சிறந்த முறையில் வழி நடத்துவதோடு நாட்டை மேம்படுத்தவும் முடியும். வ.சுப.மாணிக்கனார் தம் படைப்பின் வழி நாட்டுப் பற்றை வெளிப்படுத்துகின்றார்.

சாதிப் பற்றும் சமயப் பற்றும்
காதல்
அன்ன கட்சிப் பற்றும்
மோதல் இல்லா மொழியின் பற்றும்
ஆசை நீங்காக் காசுப் பற்றும்
பாசம் ஏறிய பதவிப் பற்றும்
நேசங் கலந்த ஈசன் பற்றும்
தேசப் பற்றுமுன் சிறுபற் றாகுக;
பற்றுக நாட்டுப் பற்றினைப் பற்றுக
மற்றோர் பற்று மனம்புகல் வேண்டா”        – (மாமலர்கள், ப. 63)

இந்தியாவில் வாழும் அனைவரும் தேசப்பற்று கொண்டவர்களாகவும், தேசத்திற்காக உயிர் விடவும் துணிந்தவர்களாகவும், எந்தச் சூழலிலும் யாருக்காகவும் எதற்காகவும் தேசத்தை விட்டுக் கொடுக்காதவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிறார். இந்தியத் திருநாடு எந்தச் சூழ்நிலையிலும் பிளவுப்பட்டுப் பிரிவினைவாத நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்ற நோக்கத்தில் சாதி, சமயம், காதல், கட்சி, பதவி, பணம், மோதல் இல்லா மொழிப்பற்று ஆகியவற்றில் குறைவான பற்றும் நாட்டின் மீது அதீதப் பற்றும் கொள்ளவேண்டும் என மொழிகின்றார்.

மொழிப்பற்று

 உலகில் பிறந்த அனைத்து மக்களுக்கும் தாய்ப்பால் போன்றது அவரவர் தாய்மொழி. பாரதியார் தன் தாய்மொழியான தமிழ் மொழியை,

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்”         – (பாரதியார் கவிதைகள் – தமிழ், வரி.1-2)

என்கின்றார். இந்த உலகில் மிக உயர்வான பண்புகளைக் கொண்ட இனம் தமிழினம். தமிழ், தமிழர் என்று மொழியாலும் இனத்தாலும் அடையாளப்படுத்தி பெருமைப்பட வேண்டியவர்கள் இன்று தமிழில் பேசுவதற்கே தயங்குகிறார்கள். மொழியைப் பற்றி தந்தை பெரியார் கூறுமிடத்து, “ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு தேவைப்படும் பற்றுகளுள் முதன்மையானது மொழிப்பற்றே ஆகும். அத்தகைய மொழிப்பற்று இல்லாதவனிடத்து தேசப்பற்றும் இருக்காது என்பது நிச்சயம். தேசம் என்பது மொழி அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆதலால் தமிழர்களுக்கு மொழிப்பற்று பெருக வேண்டும் என்பதே என் பிரார்த்தனை” என்கிறார்.

வ.சுப.மாணிக்கனார் தாய் மொழியாம் தமிழ் மொழியை உயர்த்திப்பாடுகின்றார்.

தாய்காட்டும் தாய்மொழிக்கே முதன்மை வேண்டும்
தாராத
அரசினையாம் மதிப்பதில்லை
தாய்நாட்டுப் பற்றுக்கே முதன்மை வேண்டும்
தடுமாறும் கட்சியையாம் மதிப்பதில்லை”           – (மாமலர்கள், ப.104)

அரசும், அரசியல் கட்சிகளும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவ்வாறு தரவில்லை எனில் அவற்றை நான் மதிக்க மாட்டேன் என்கிறார்.

தமிழ் மொழியின் பெருமைகளை ‘அன்னை கொதிக்கிறாள்’ என்னும் கவிதையில் அழகுறப் பட்டியலிடுகின்றார்.

இந்திய மொழிகளுட் செந்தமிழ் ஒன்றே
உலக மொழியெனும் ஒண்புகழ்க் குரியது
இலங்கை சிங்கை எழிலார் மலேயா
பருமா செய்கோன் பல்வள மொரைசு
பீசி முதலாப் பிறநா டெல்லாம்
தமிழ்மொழி பேசுந் தங்குடி கொண்டது”                   – (மாமலர்கள், ப.162)

செம்மொழித் தகுதி பெற்றுள்ள தமிழ் மொழியை உலகம் முழுவதும் சுமார் 80 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். தமிழ்மொழி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா (இன்றைய மியான்மர்), மொரீசியஸ், செய்கோன், பிஜி தீவு ஆகிய நாடுகளில் பேசப்படுவதாக வ.சுப.மாணிக்கனார் தம் கவிதை வழிப் புலப்படுத்துகின்றார்.

‘பச்சைத் தமிழர்’ என்று பெரியாரால் பாராட்டப்பட்டவர் காமராசர். இவர் தம் சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றவர். கேரளத்தில் இருந்த குறைவான காலத்தில் மளையாளம் கற்றுக் கொண்டார். தெலுங்கும் தெரியும், இந்தியும் பேசுவார்.  நாடாளுமன்றத்தில் அவர் ஒருமுறை ஆங்கிலத்தில் உரையாற்றியதை ‘மாசற்ற ஆங்கிலம்’ என்று புகழ்ந்து எழுதியது ‘தி இந்து’ ஆங்கிலம் நாளிதழ் ஆனாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மாநாடுகளில் பேசும்போது தமிழில்தான் பேசுவார். கையெழுத்தும் தமிழில்தான். இவரது பெருமையைப் போற்றி கவிதைப் படைக்கின்றார் வ.சுப.மாணிக்கனார்,

உலகுபுகழ் நேருவின் உடல்மறை காலை
ஞாலத் தலைவர்கள் நடத்திய தில்லி
இரங்கற் கூட்டத்து எளியோர் தலைவன்
காமனை வென்ற காமராசன்
தமிழிற் பேசித் தாய்புகழ் நிறுத்தினன்;
ஞாலப் பெரியோன் நம்மகன் காந்தி
சாலும் தமிழில் தன்பெயர் எழுதினன்;
தன்கல் லறையில் தண்டமிழ் மாணவன்
என்று பொறித்தனன் இறையடி போப்பன்;
முதுமையில் தமிழை முறையொடு கற்றபின்
எதுகை குறையா ஏகக் காப்பியம்
ஆரமா அணிந்தான் வீரமா முனிவன்;
தனித்து வளரும் தகையது எனவே
கணித்துப் புகழ்ந்தனன் கால்டு வேலன்;
வடமொழி பிரெஞ்சு வளமார் ஆங்கிலம்
நடைமொழி பலவும் நவின்ற பாரதி
யாமறி மொழிகளுள் நற்றமிழ் ஒன்றே
தாமினி தாகும் சால்பது என்றான்;”                                – (மாமலர்கள், பக்.163-164)

காந்தியடிகள் தன் பெயரைத் தமிழில் எழுதியதை நினைவுபடுத்தியுள்ளார். மகாத்மாவின் தாய்மொழி குஜராத்தியாக இருந்தாலும் தமிழ்மொழி மீதும் பற்று கொண்டவர். வள்ளுவரைப் பற்றி மகாத்மா, “யான் தமிழ் கற்க விரும்பியதற்குக் காரணம், வள்ளுவரின் வாய்மொழியை அவருடைய தாய்மொழி மூலம் படித்தறிவதற்கேயாம்” என்று தன் விருப்பத்தைக் கூறியுள்ளார். ஜி.யு.போப் தன் இறப்புக்குப் பின் தனது கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்னும் வாசகம் இடம்பெற வேண்டும் என தனது உயிலில் எழுதியிருந்தார். ஆனால், இவரது ஆசை நிறைவேறவில்லை.

தமிழிகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவர். தேம்பாவணி என்னும் காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு ‘செந்தமிழ்த் தேசிகர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. இவர் இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப் பல்வகையிலும் சிறந்தவர். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவரைப் புகழ்ந்துரைக்கின்றார் வ.சுப.மாணிக்கனார். ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையது. இவருக்கும் வ.சுப.மாணிக்கனார் கவிதை மலர்களால் மாலைச்சூட்டியுள்ளார். பாரதியார், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவர். ஆனால், ‘தமிழ்மொழி போல் இனிமையான மொழி வேறு எங்கும் இல்லை’ என்று தன் தாய்மொழியான தமிழ் மொழியை உயர்த்திப் பாடியதற்காக மகாகவிக்கு கவிதை மாலை சூட்டியுள்ளார் வ.சுப.மாணிக்கனார்.  பாரதியின் தமிழ்மொழிப் பற்றை வ.சுப.மாணிக்கனார் தம் கவிதை வழிக் கலந்து தமிழர்களுக்கு தமிழமுதம் ஊட்டுகின்றார்.

ஆங்கில மோகம்

குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியே சிறந்தது என காந்தியடிகள் உள்ளிட்ட பலரும் எடுத்துரைத்தாலும் தமிழர்களை ஆங்கில மோகம் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. ‘ஆங்கிலம் உலகப் பொதுமொழி’ என்ற வலுவான எண்ணம்தான் இதற்குக் காரணம். சீனத்திற்கும் ஸ்பானிசிற்கும் அடுத்த நிலையில்தான் ஆங்கிலம் உள்ளது. இங்கிலாந்து அருகில் உள்ள பிரான்சில் ஆங்கிலம் ஒரு மொழியாகவே கருதப்படவில்லை. தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழ் மொழியைப் புறக்கணித்து ஆங்கில மோகத்தில் அலைகிறார்கள். தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்து அவர்களின் அறிவை மழுங்கடிக்கிறார்கள். இதனை வ.சுப.மாணிக்கனார்,

பாலர் பள்ளியாம் பாழ்கொலைக் களங்கள்
காளான் போலவும் கறையான் போலவும்
பட்டி தொட்டி பட்டினம் எல்லாம்
எட்டிப்பிடித்தும் இழுவலை வீசியும்
மூன்று வயதில் முழுத்தமிழ்க் குழவிகள்
அஆ என்பதை அறியா வகையில்
ஆங்கிலம் ஒன்றே ஆசையொடு கற்கும்
பாங்கில் உணர்ச்சியைப் பரப்புகின்றன
பள்ளிச் சிறாஅர் படிப்பிது வாயின்
கொள்ளி தமிழ்க்கெனக் கூறவும் வேண்டுமோ?”            -(மாமலர்கள், ப.170)

என்று ஆதங்கத்தோடு சாடியுள்ளார். காளான் போலவும் கறையான் போலவும் பட்டி தொட்டி எங்கும் பரவியிருக்கு மழலையர் (Nursery) பள்ளிகளைக் கொலைக்களங்கள் என்று மனக்குமுறலோடு குறை கூறுகின்றார். மூன்று வயதே நிரம்பிய மழலைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து தமிழ்ப்பாலை (தமிழ்மொழியை) ஊட்டாமல், புட்டிப்பாலை (ஆங்கிலத்தை) ஊட்டுவது பொருத்தப்பாடு இல்லாததாகும்.

இந்தி எதிர்ப்பு

இந்தி மட்டும் இந்திய அரசாங்கத்தின் மொழியாக ஆவதையும் அது மாநிலங்களில் மறைமுகமாகத் திணிக்கப்படுவதையும் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் புலவர்களும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் நாள்தோறும் எதிர்த்து வருகிறார்கள். இன்றைய சூழலில் இந்தி படித்தால்தான் நடுவண் அரசின் பதவி கிட்டும் என்றும், வடநாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும் என்றும் கூறிச் சிலர் இந்தியைக் கற்கும்படி மக்களை வற்புறுத்துகின்றனர். “இந்திக்கு அடிமையாகி இறப்பதை விட இப்பொழுதே இறந்து விடுவது மேல்” என எண்ணி எரியில் மூழ்கி உயிர் நீத்த சின்னசாமியின் வீரச்செயல் கூடத் தமிழர்களை தட்டி எழுப்ப வில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. அதனால்தான் வ.சுப.மாணிக்கனார்,

இந்தியை ஏனையோர் இனித்துக் கற்க
உந்தும் நடுவரசு உறுபொருள் அளிக்கும்;
நந்தமி ழரசோ நம்மவர் தமக்கே
செந்தமிழ் வாயிலாய்ச் சிறப்புமேற் கல்வியை
வந்து கற்க வருபொருள் வழங்கும்.
சிறுமையோ பெருமையோ சிந்திப் பீரே
ஆண்மையும் துறவும் அரசுக் கில்லை
மானமும் தெளிவும் மக்கட் கில்லை”       – (மாமலர்கள், ப.171)

என்று கேள்வி கேட்கிறார். ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பார் பெரியார். ‘மானமும் தெளிவும் மக்களுக்கு இல்லை’ என்று சாடுகிறார் வ.சுப.மாணிக்கனார்.

இந்தியாவின் தேசிய மொழி எது எனக் கேட்டால் பலரும் இந்தி என்று பதில் கூறுகின்றனர். வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்திதான் தேசிய மொழி என்கின்றார்கள். ஆனால் உண்மையில் இந்தி தேசிய மொழி அன்று. இந்திய அரசால் அங்கீகரிக்கப் பெற்ற 22 மொழிகளில் இந்தியும் ஒன்று. வட மாநிலங்களில் அதிகமாகப் பேசப்படும் மொழியாக இந்தி உள்ளது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா, உத்தரகண்ட், உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் இந்தி பேசப்படுகிறது. பிற மாநிலங்களில் இரண்டாவது, மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தி மொழி இந்தியாவிற்கான பொதுமொழி இல்லை என்பதை,

இந்திய மொழிகளுள் இந்தியும் ஒன்றாம்
என்னுடைப் போர்த்தியுள் இவளொடு சிறுமி
அன்ன உறவில் அன்பும் உடையேன்
அவள்தன் வளர்ச்சியில் அழுக்காக றில்லை
இந்தி ஒன்றே பொதுமொழி என்பதை
இந்தியன் இன்றே எதிர்க்க வேண்டும்
எதிர்க்கா எவனும் இந்தியன் ஆகான்
இந்தித் தாய்மொழி இந்தியன் கூடப்
புந்தியில் கொள்கையைப் பொசுக்க வேண்டும்
இந்தியை எதிர்த்தல் இந்தியத் தொண்டாம்”                       – (மாமலர்கள், ப. 177)

என்னும் கவிதை வழி வ.சுப.மாணிக்கனார். உணர்த்துகின்றார். இந்தி மொழி வளர்ச்சி அடையட்டும். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்தி மொழி ஒன்று மட்டுமே இந்தியா முழுவதும் ஆட்சி மொழி என்பதை நான் எதிர்கிறேன், இந்தியர்களும் எதிர்க்க வேண்டும் எனச் சாடியுள்ளார்.

[தொடரும்]

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *