மீ.விசுவநாதன்
பகுதி: 14

பாலகாண்டம்

ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1
தாடகையின் பிறப்பு
பிரும்மாவின் வரம்பெற்றுப் பிறந்தவளே இந்த
பிரும்மாண்ட பலங்கொண்ட தாடகைப்பெண் என்பாள் !
விரும்பித்தான் “சுந்தனை”யே திருமணமும் செய்தாள் !
விவேகமிலா கோபத்தால் அகத்தியரைச் சீண்ட
திரும்பியவர் சாபமிட வீழ்ந்திட்டான் சுந்தன் !
தீராத ஆத்திரத்தில் தெய்வமுனி செய்யும்
பெருமைமிகு வேள்விகளைச் சீர்கெடுத்து வந்தாள்
பெயருக்குப் பெண்னென்ற பேரரக்கிப் பேயாள் !

தீயோரைத் தீர்த்துவிட தெய்வபலங் கொண்ட
ஸ்ரீராமா உன்னால்தான் திடமாகக் கூடும் !
மாயோனாம் திருமாலே வதம்செய்தான் நன்கு
மதிப்புள்ள பிருகுமுனி பத்தினியை அன்று !
ஓயாது யோசித்தால் ஒருநாளும் எண்ணம்
ஒளிபெற்றுத் திகழாது ! உடன்நீயும் அந்தப்
பேயான தாடகையைப் பிணமாக்கி வீசு
பெரும்பேர் சேருமென்றார் விசுவாமித் ரர்தான்!

தாடகை வதம்
குருவினது வார்த்தையைக் கும்பிட்டுக் கேட்டு
குறிபார்த்து அம்பொன்றால் கொன்றிட்டான் அந்த
உருபெரிய தாடகையை உயர்வீர ராமன் !
உத்தமர்கள், தேவர்கள் ஓதினரே ஆசி !
“வரும்நாளில் உன்காட்டில் மகத்தான வெற்றி
மழைகொட்டும்! மனிதருக்குள் மாணிக்கம் உன்னால்
பெருமைபெறும் ரகுவம்சம் ! பீடித்த துன்பம்
விலகியோடும் நம்பிக்கை பெற்றோமே” என்றார் !

விசுவாமித்திரர் வழங்கிய அத்திரங்கள்

ராஜரிஷி மகிழ்ச்சியுடன் ராமனிடம் வந்து,
“ராகவனே உன்பெருமை ரகசியங்கள் யாவும்
ஆனமுதல் மூவருக்கும் அறியவொண்ணா தென்றார் !
அளப்பில்லா அத்திரங்கள் அத்தனையும் தந்தேன்
போனவுடன் அத்தனையும் திரும்பியுனைச் சேரும்
பொல்லாரைக் கொன்றதனால் புகழ்பரணிப் பாடும் !
வானவரின் துன்பத்தை மாயத்திடுக நன்றாய் !
வருங்காலம் உன்பெயரை மறக்காது வைக்கும் !
(தர்ம சரிதம் வளரும்)

 
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 25, 26, 27, 28,ம் பகுதி நிறைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *