இலக்கியம்கவிதைகள்பத்திகள்மரபுக் கவிதைகள்

“ஸ்ரீராம தர்ம சரிதம்” (18)

 
(மீ.விசுவநாதன்)

பகுதி: 18
பாலகாண்டம்
ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1-2-1-1
“சரகன் வரலாறு”

 

சூர்ய குலத்து வழியினிலே
சொல்லும் செயலும் ஒன்றான
சுத்த அரசன் சரகனென்பான்
சொந்தப் பிள்ளை வேண்டுமென
பார்யாள் “சுமதி, கேசினீயை”
பக்கம் அழைத்து வனம்சென்று
பக்தி யுடனே தவம்செய்தான்!
பரிவு கொண்ட முனி”பிருகு”
கார்யம் அறிந்து சரகனிடம்
“காதல் மனைவி ஒருத்தியின்
கனவு பலிக்க ஓர்மகனும்
களிறு போன்ற பலமுடைய
பேர்கள் அறுப தாயிரமும்
பெறுவர் இரண்டாம் மனைவியுமே
பிள்ளை வம்சம் கொண்டுதர்மப்
பிடிப்பில் மகிழ்வாய்” என்றுரைத்தார்! (1)

ஒன்று பெற்றாள் கேசீனி
உச்சி மோந்து “அசமஞ்சன்”
உன்பேர் என்று முத்தமிட்டார்
உவகை கொண்டு சரகனுமே !
குன்று போலச் சதைப்பிண்டம்
புவியில் போட்டாள் சுமதியுமே !
புட்டுக் கொண்டு அதிலிருந்து
பூவாய் “அறுப தாயிரமாய்”
நன்றாய் வந்த பிள்ளைகளை
நறுநெய்க் குடத்தில் வைத்திருந்து
நன்கு வளர்த்தார் தாதியர்கள் !
நாளில் பலவான் ஆனார்கள் !
ஒன்றாய் வந்த அசமஞ்சன்
ஊரில் கெட்ட பேர்கொண்டான்
உடனே அரசன் அம்மகனை
ஊரை விட்டே விரட்டிவிட்டான்! (2)

அவனின் மகனே “அம்சுமா”னாம்
அறிவு வீரம் கொண்டவனாம்
அந்தப் பேரப் பிள்ளையிடம்
அளவு கடந்த அன்புவைத்து
அவனைத் தான்செய் வேள்விக்கு
அசுவம் காக்கும் பொறுப்புதனை
அரசன் சரகன் கொடுத்திருந்தார்
அந்த நேரம் பார்த்துத்தான்
கவன மாக இந்திரனும்
களவு செய்து குதிரையினை
காணா இடத்தில் கொண்டுவிட்டான் !
கவலை கொண்ட சரகனுமே
தவமாம் வேள்வி நடப்பதற்குத்
தடையாய்ப் போன அசுவத்தைச்
சரியாய்க் கண்டு பிடித்திங்கே
சடுதி வரவே ஆணையிட்டான் ! (3)

பூமி எங்கும் தேடினார்கள்
புழுதி பறக்க ஓடினார்கள்
உள்ள அறுப தாயிரம்பேர்
ஊரை துவம்சம் செய்தார்கள்
தாமி ருக்கும் தரையெங்கும்
சக்தி கொண்ட லைந்தபின்னும்
சரியாய்க் காண முடியாமல்
சரகன் முன்னே போனார்கள் !
“பூமி தன்னைத் தோண்டுங்கள்
பொல்லா நாகர் உலகத்தில்
புனித இடபா தாளத்தில்
ஒன்று விடாமல் தேடுங்கள்
சாமி நமக்குத் துணையுண்டு
சத்தாம் செயல் செய்பவர்க்குச்
சரித்தி ரத்தில் இடமுண்டு”
தந்தை சொல்லச் சென்றார்கள் ! (4)

சரகர் மகன்கள் செயல்கண்டு
சபையைக் கூட்டி தேவர்கள்
தரையைத் தோண்டும் கொடுமைகளை
தலைவன் பிரும்மா விடம்சொன்னார் !
அரண்டு போன முகம்பார்த்து
“அரியே கபில முனியாக
அகிலம் முழுதும் காக்கின்றான்
அவரின் கருணை புவிகாக்கும்
அரங்கன் அவனைத் துதியுங்கள்
அடுத்த செயலை அவன்பார்ப்பான்”
அயனின் இந்த வார்த்தைகளில்
அமைதி பெற்றார் தேவர்கள்!
கரத்தில் கொடிய ஆயுதத்தால்
பள்ளம் தோண்டிப் பூமிக்குள்
பக்கம் பக்கம் தேடுகையில்
கண்ணில் பட்டது குதிரைதான் ! (5)

கபில முனிவர் தவம்செய்யும்
காட்சி கண்ட புத்திரர்கள்
கள்வன் இவர்தான் என்றெண்ணி
கடிந்து கொண்ட வேளையிலே
அமிலக் கண்கள் முனிதிறக்க
அங்கே அவர்கள் எரிந்தார்கள் !
அதுவே சாம்பல் மாலையாச்சு
அசுவம் தேடிச் சென்றவர்கள்
சபிக்கப் பட்டு இறந்தகதை
சரக மன்னன் அறியவில்லை
தனது பேரன் “அம்சுமானை”
தகவல் அறிந்து வரச்சொன்னான்!
தவிக்கும் தாத்தா மனம்தேற்றி
தடையம் தேடித் புறப்பட்டான்
கண்டான் சாம்பல் குவியலினை
கண்டான் யாகக் குதிரையினை ! (6)

துக்கம் கொண்ட அம்சுமான்தன்
சோகம் அறிந்த கருடனவன்,
“சொந்தம் யார்க்கும் நீர்க்கடனை
துளபம் சேர்த்துச் செய்வதற்கு
அக்கம் பக்க நீர்வேண்டாம்
அமுத கங்கைத் தண்ணீரால்
அர்க்யம் கொடுத்துக் கரையேற்று !
அந்தச் செயலைச் செய்வதற்குத்
தக்க தருணம் இதுவென்றான்!”
சரிதான் என்று குதிரையினை
சவாரி செய்து அழைத்தபடி
தாத்தா சரக மன்னனிடம்
இக்கட் டான நிலைசொன்னான்!
ஏற்ற மிக்க வேள்வியினை
வேந்தன் “சரகன்” முடித்தவுடன்
மேலு லகமும் அடைந்திட்டான்! (7)

(பாவகை : பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 38, 39, 40, 41ம் பகுதி நிறைந்தது)

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    Arumai Viswanathan Sir….!

Leave a Reply to Crazy mohan Cancel reply