Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்

-முனைவர் ஆறுச்சாமி. செ. 

முன்னுரை

     இயற்கை எழில்கொஞ்சும் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்தான் பாலக்காடு மாவட்டம். தமிழகத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தைக் கிழக்கு எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது இம்மாவட்டம்.

பெயர்க்காரணம்

     மாவட்டத்தின் பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை,“முற்காலத் தமிழர் தம் கடவுள் வழிபாட்டில் மரங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. பாலை, நெல்லி, வேம்பு, காஞ்சிரம், பனை போன்ற மரங்களின் கீழ் அம்மனைப் பிரதிஷ்டை செய்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்த அம்மனுடன் சேர்த்து அந்த மரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபடும் நிலை உருவானது. அத்தகைய வழிபாட்டின் மூலம்தான் இம்மாவட்டத்திற்கு இப்பெயர் வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. பாலக்காடு மாவட்டத்திலுள்ள ‘நெல்லியாம்பதி; எனுமிடத்தின் தென்பகுதியிலுள்ள வெங்கலமுடிக்கும் கல்யாணப் பந்தலுக்கும் இடையிலுள்ள வனப்பகுதியில் ‘பாலக்கடவம்மன் கோவில்’ எனும் பழம்பெரும் கோயில் ஒன்று உள்ளது. பாலை மரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் அங்கே அம்மன் அருள் பாலிக்கிறாள். அம்மன் அருளால் பிரசித்திப் பெற்ற அவ்விடத்தின் பெருமை பக்கத்திலுள்ள ஊர்களிலெல்லாம் பரவியிருந்தது. அதன் மூலமாகத்தான் பாலக்காடு மாவட்டத்திற்கு இப்பெயர் வந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.”

பாலக்காடு மாவட்டத்தில் பறையர்இன மக்கள் வசிக்கும் இடங்கள்

     பாலக்காடு மாவட்டத்தில் திருத்தாலா, பட்டாம்பி, ஒற்றப்பாலம், ஸ்ரீகிருஷ்ணபுரம், மண்ணார்க்காடு, அட்டப்பாடி, பாலக்காடு, குழல்மந்தம், கொல்லங்கோடு, நெம்மார, ஆலத்தூர், மலம்புழா ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பறையர்இன மக்கள் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தமிழ்பேசும் மக்களாக இருந்தவர்கள். மலையாள நாட்டுக் கலப்பால் இதில் பெரும்பான்மையான மக்களும் மலையாளம் பேசுபவர்களாக மாறிவிட்டனர்.”

பெயர்க்காரணமும், விளக்கமும்

     கேரள மாநிலத்தில் வாழும் இவ்வின மக்களில் தமிழ்மொழி பேசுவோர் ‘பறையர்’ என்ற பெயரிலும், மலையாள மொழி பேசுவோர் , ‘புலையன்’, ‘சாம்பவன்’, ‘சாம்பன்’ போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் ‘பறையர்’, ‘ஆதிதிராவிடர்’ போன்ற பெயர்களிலும், தெலுங்கு தேசத்தில் ‘மாலா’, ‘மாடிகா’ போன்ற பெயர்களிலும், கர்நாடகாவில் ‘ஹோலியா’ என்ற பெயரிலும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

     “பறையன்’ எனும் சொல் ‘பறை’ எனும் தமிழ்ச்சொல்லினை அடியொற்றிப் பிறந்ததாகவும், இவ்வின மக்கள் முற்காலத்தில் திருமணங்களிலும், மற்ற விழாக்களிலும் பறையடிக்கும் தொழிலைச் செய்தவர்களாதலால் ‘பறையன்’ எனும் பெயரில் அழைக்கப்பட்டதாகவும் கால்டுவெல் கூறுகிறார். ஆர்.யு.ஸ்டுவார்டு எனும் அறிஞர் பழங்காலத் தமிழ் இலக்கிங்களில் ‘பறையன்’ எனும் சொல் பயன்படுத்தப்படவில்லை எனக் கூறுகிறார். ‘புலையன்’ எனும் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என மேலும் அவர் உரைக்கிறார். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வெளிவந்த திவாகர நிகண்டில் ‘புலையன்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் வரும் நந்தனார் ‘புலையர்’ இனத்தவர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘புலையர்’ எனும் சொல்தான் பறையர்களின் முதல்பெயராக இருந்திருந்தது. ஆனால் மலையாளத்தில் இந்தச் சொல் இன்னும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்”.

     இவ்வின மக்களிடையே சாதித் தோற்றம் குறித்து வழங்கப்படும் கதைகளில் ‘மறையன்’ எனும் சொல்லிலிருந்துதான் ‘பறையன்’ எனும் சொல் உருவானதாகக் கூறப்படுகிறது. தவறு செய்துவிட்டு அதை மறைத்ததால் அவன் ‘மறையன்’ என்று ஒதுக்கப்பட்டான். காலப்போக்கில் அச்சொல் ‘பறையன்’ என மாறியது எனக் கூறப்படுகிறது. ‘பறை கொட்டுதல்’ இவர்களது குலத்தொழிலாக இருந்திருக்கிறது. பழங்கால விழாக்களில் இவ்வின மக்கள் பறையடிக்கும் தொழிலைச் செய்ததாக கால்டுவெல் கூறுகிறார். ஆய்வுக்களப் பகுதியில் சேகரித்த தரவுகளின்படி சமீபகாலம் வரை இவ்வின மக்கள் பறையடிக்கும் தொழிலைச் செய்திருந்தனர் என்பதை அறியமுடிந்தது. காலமாற்றத்தின் விளைவாகத் தற்போது பெரும்பான்மையான மக்கள் இத்தொழிலை விடுத்து வேறு தொழில்களை நாடிச் சென்றுவிட்டனர். ஆனால் இன்றும் சில பகுதிகளில் இத்தொழிலைச் செய்யும் மக்கள் இருப்பதையும் அறியமுடிந்தது.

     எனவே கால்டுவெல் கூறியதுபோல ‘பறை’ என்ற சொல்லிலிருந்தே ‘பறையன்’ என்ற சொல் உருவானதாகக் கொள்ளலாம்.

பூர்வீக வரலாறு

     பாலக்காடு மாவட்டத்தில் வாழும் பறையர் இனமக்களின் மொழியும், வாழ்வியல் முறைகளும் தமிழ்மக்களைப் போலவே உள்ளது. அதனால் இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து இங்குக் குடியேறியவர்களாயிருப்பர் எனும் கருத்து நிலவுகிறது.

     1956க்கு முன்னர் கேரளாவின் பல பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்தன. 1956இல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளமும், தமிழ்நாடும் தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது தமிழக எல்லைப்பகுதியாயிருந்த பாலக்காடு மாவட்டம் கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. அந்நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் வாழ்ந்த மக்களும் கேரள எல்லைக்குள் மாற்றப்பட்டனர். எனவே இவ்வின மக்களின் பூர்வீகம் தமிழகம் எனக் கொள்ளலாம்.    இக்கருத்தை உறுதிசெய்யும் விதமாகப் பறையர் இனமக்கள் பாலக்காடு மற்றும் அதையொட்டிய கோயம்புத்தூர் (தமிழ்நாடு) மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றனர். அவர்களது கிளைப்பிரிவுகள் அவர்கள் வாழும் இடங்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவ்வாறு வரும் இடங்கள் கொங்கு வட்டாரத்தில் அமைந்துள்ள இடங்களின் பெயர்களாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இவர்கள் பூர்வீகமாகத் தமிழ் மக்களே. காலமாற்றத்தால் இவர்கள் கேரள எல்லைக்குள் வாழ்ந்து வருகின்றனர் எனக் கருத இடமுள்ளது.

     கேரள மாநிலத்தில் வாழும் இவ்வின மக்கள் பறையர், புலையர், சாம்பவர் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் பறையர் இனத்தார் தமிழையும், மற்றவர்கள் மலையாளத்தையும் தாய்மொழிகளாகக் கொண்டுள்ளனர்.

சாதி குறித்த கதைகள்

     பறையர் சாதியின் தோற்றம் குறித்து கூறப்படும் கதைகளில் பறையனுக்கும் பார்ப்பானுக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறப்படுகிறது. ஆதியில் பறையன் பார்ப்பான் என்னும் சாதிகள் இல்லாமலிருந்தது. பின்னாளில்தான் இது உருவானதாகக் கூறப்படுகிறது.

           ‘பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன் 
           கேட்பார் சொல் கேட்டுக் கெட்டழிந்து போனான்’

என்று ஒரு மரபுத் தொடர் இவர்களிடையே வழக்கத்தில் உள்ளது. இதில் பார்ப்பான் பறையனின் தம்பி என்றும், இருவரும் சகோதர உறவுடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களுக்கிடையே உள்ள உறவு குறித்தும், பிரிவு ஏற்பட்டது குறித்தும் இவ்வினமக்களிடையே ஒரு கதை வழங்கப்படுகிறது. கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட அக்கதை பின்வருமாறு அமைகிறது.

     “முன்னாளில் ஓர் ஊரில் அண்ணன் தம்பி இருவர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். இருவரும் காளிதேவிக்குப் பூஜை செய்யும் தொழிலைச் செய்துவந்தனர். பூஜை நேரத்தில் அங்கு காராம்பசு ஒன்று வரும். அதனை காளிக்குப் பலி கொடுத்து பூஜை செய்வர். பூஜை முடிந்ததும் ஒரு கோலால் அதன் மாமிசத்தைத் தொட்டதும் உடனே அப்பசு உயிர் பெற்றுச் சென்றுவிடும். இந்நிகழ்ச்சி நாள்தோறும் நடந்து வந்தது.

     இந்நிலையில் அண்ணனின் மனைவி கர்ப்பவதியாகிறாள். அவள் ஒருநாள் தன் கணவனிடம் “உங்களிடம் மாமிச வாடை அடிக்கிறதே! காளிக்குப் படைக்கும் இறைச்சியை நீங்களும் உண்கிறீர்களா? அப்படியானால் எனக்கும் கொஞ்சம் கொண்டு வாருங்கள்” என்று கேட்கிறாள். கர்ப்பவதியான அவளின் ஆசையைத் தட்ட முடியாத கணவன், பூஜை முடிந்ததும் சிறு துண்டு இறைச்சியை தன் நகக்கண்ணில் மறைத்துவைத்துக் கொண்டு வந்து மனைவிக்குக் கொடுக்கிறான். இதனை அவனது தம்பி மறைந்திருந்து பார்த்துவிடுகிறான்.

     மறுநாள் வழக்கம் போல பூஜை முடிந்து பசுவை எழுப்ப, அது எழவில்லை. இது கண்ட தம்பி “நீ இறைச்சியை மறைத்து எடுத்துச் சென்றதால் தெய்வக்குற்றம் ஆகிவிட்டது. அதனால்தான் பசு எழவில்லை” என்று கூறி ‘போடா மறையா’ என்று திட்டுகிறான். அவன் ஊர்ப்பஞ்சாயத்தினைக் கூட்டி அண்ணன் மேல் புகார் கூறுகிறான். அண்ணன் தன் தவற்றை ஒப்புக் கொள்கிறான். தவறுசெய்த அவன் கோவில் பூஜை செய்வதிலிருந்து விலக்கப்படுகிறான். ‘இனி கோவில் பூஜைகளை யார் செய்வது’ என ஊர்மக்கள் வினவ, ‘அதை என் தம்பி பார்ப்பான்’ என்கிறான் அண்ணன். ‘அப்படியானால் நீ என்ன செய்வாய்?’ என ஊரார் கேட்க, ‘இறந்த பசு உள்ளதே! அதன் மாமிசம் மற்றும் தோலைப் பயன்படுத்தி நான் தொழில் செய்து பிழைத்துக் கொள்வேன்’ என்கிறான் அண்ணன்.

     தன் நகக்கண்ணில் இறைச்சியை மறைத்து எடுத்து வந்து தவறு செய்ததால் தம்பி அண்ணனை ‘போடா மறையா’ என்று திட்டுகிறான். ‘மறையன்’ எனும் சொல்லிலிருந்துதான் ‘பறையன்’ எனும் சொல் உருவானதாகக் கூறப்படுகிறது. மேலும் தவறு செய்த அண்ணன் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு அடிமைத்தொழில் செய்யவும் விதிக்கப்படுகிறான். இதன் காரணமாகத்தான், பறையர் இன்றைய கீழ்நிலை வாழ்வை அடைந்ததாகக் கூறப்படுகிறது.

     பஞ்சாயத்தில் ‘பூஜை வேலையை இனி தம்பி பார்ப்பான்’ என்று அண்ணன் கூறுகிறான். ‘பார்ப்பான்’ எனும் சொல்லிலிருந்தே ‘பாப்பான்’ எனும் சாதிப்பெயர் உருவானதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கோவிலில் பூஜைகள் செய்யும் பணியைச் செய்ததால் உயர் நிலையை அடைந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

     இறுதியில் அண்ணனும் தம்பியும் திரும்பிச் செல்கையில் அண்ணன் தம்பியிடம் இறந்து கிடக்கும் பசுவைத் தூக்க உதவுமாறு கேட்க தம்பியோ ‘நான் பூணூல் அணிந்து பூஜை செய்பவன். அதனால் இப்பசுவை நான் தொடமாட்டேன். மேலும் நீ ஓதுக்கப்பட்டவனாதலால் இனி நீ எனக்கு அடிமை’ என்று கூறி மறுத்து விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தன்னை அடிமை என்றும் கூறியதால் அண்ணன் கோபமுற்று தம்பியைப் பார்த்து ‘இனி நமக்குள் எந்த உறவுமில்லை. என் வீட்டுக்கு நீ வரக்கூடாது. உன் வீட்டிற்கு நானும் வரமாட்டேன். நமக்குள் இனி எந்த உறவும் இல்லை’ என்று கூறிப் பிரிந்து செல்கிறான். இவ்வகையில்தான் ‘பார்ப்பான்’, ‘பறையன்’ எனும் இரு சாதிகள் உருவானதாகக் கூறப்படுகிறது. இப்போதும் ‘பறச்சேரிக்குள் பாப்பான் நுழையக் கூடாது’ எனும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.”

     கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட இக்கதையிலிருந்து பார்ப்பானும், பறையனும் சகோதர உறவுடையவர்கள் என்றும், சூழ்நிலை காரணமாகப் பிரிவினை ஏற்பட்டு இருவரும் உயர்சாதியும், கீழ்சாதியுமாக மாறிப் போயினர் என்றும் நம்பப்படுகிறது. பார்ப்பானுக்கும், பறையனுக்கும் உள்ள தொடர்பைக் கோவில் பூசாரி தொடர்புடையதாகவும், அண்ணன் தம்பி உறவுடையதாகவும் கூறும் வாய்மொழிக் கதை குறித்து எட்கர் தர்ஸ்டன் எனும் அறிஞர் கீழ்வருமாறு கூறுகிறார்.

“ஒருஊர்ல அண்ணன் தம்பி இருவர் கோவிலில் பூசாரிகளாக இருந்தனர். அந்தக் கோவிலுக்குத் தினமும் இந்திரலோகப் பசு ஒன்று வரும். அந்த பசுவின் மடியிலிருநத்து இரத்தம் சொட்டும். அந்த இரத்தத்தை சாமிக்குப் படைத்துப் பூஜை செய்தனர்.    ஒருநாள் அண்ணன் மனைவி தன் கணவன் கையில் பட்ட இரத்தத்தைக் கண்டு காரணம் கேட்டாள் அவன் நடந்ததைக் கூற, அவள் அதை நம்ப மறுக்கிறாள். “நீ பசு இறைச்சியைத் தின்று வருகிறாய். அதை மறைக்கவே இவ்வாறு பொய்யுரைக்கிறாய். எனக்கும் சிறிது இறைச்சி கொண்டு வா” என்கிறாள். கார்ப்பவதியான அவளது ஆசையை அவனால் தட்ட முடியவில்லை. அன்று காலை தெய்வப்பசு வந்தவுடன் அதன் காம்பிலிருந்து சிறு முண்டு சதையை வெட்டியெடுத்துக் கோவிலில் வைத்து கறியைச் சமைத்துக் கொண்டு வந்து மனைவிக்குக் கொடுக்கிறான்.

     அண்ணனின் செய்கைகளை மறைந்திருந்து கண்ட தம்பி ‘அண்ணனும், அண்ணியும் மாட்டுக்கறி சாப்பிட்டனர்’ என்று பஞ்சாயத்தில் புகார் செய்தான். பஞ்சாயத்தார் அண்ணனை விசாரிக்க, அவன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். இதனால் அண்ணனைக் கோவில் வேலையிலிருந்தும், ஊரிலிருந்தும் ஒதுக்கி வைக்கின்றனர்.

     அண்ணன் அவ்வூரில் பிழைக்க வழியின்றி பக்கத்து ஊருக்குச் செல்கிறான். அங்கே ஊர்க்காவலனாக வேலை செய்கிறான். அவ்வூர்  வழக்கப்படி ஊர்க்காவலனே பறையடிக்கவும் வேண்டும். அண்ணன் பறையடித்தான். எனவே அவன் ‘பறைக்காவலன்’ எனப்பட்டான். இப்பெயா் காலப்போக்கில் ‘பறையன்’ எனும் சாதிப் பெயரானது. அதன்பின் அண்ணனும், தம்பியும் தொடா்பில்லாமல் ஆயினா்”.

     இது போன்றதொரு கதை கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கப்படுவதாக திரு. பொன்னீலன் அவர்கள் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அக்கதை பின்வருமாறு,

     “ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேரு சந்தோசமா வாழ்ந்துட்டிருந்தாங்க. அண்ணன் விவசாயத்தக் கவனிச்சிட்டிருந்தான். தம்பி சிவபக்தன். சிவபூசையில நாட்டம் உள்ளவன். தினசரி மதிய நேரம் சிவனுக்குப் பூஜை செய்வான். பூசை தொடங்கும் நேரத்திலே இந்திரலோகத்திலுள்ள காமதேனு இறங்கி அவன்கிட்ட வந்திடும். தம்பிக்காரன் அத அடிச்சிக் கறி சமச்சி சிவனுக்குப் படைச்சிப் பூசை செய்வான். பூசை முடிஞ்சதும் கெண்டியில இருக்கிற தண்ணிய எடுத்து படைப்பு மேலே தெளிப்பான். கறியெல்லாம் திரண்டு காமதேனுவாகி, அது அப்படியே ஆகாயத்துக்குப் போய்விடும்.

     பல நாளும் இப்படியே நடந்துட்டிருந்தது. ஒருநாள் தம்பிக்கு ஏதோ அவசர வேலை. வெளியூர்போகணும். அண்ணனக் கூப்பிட்டு, “அண்ணா அண்ணா! இன்னிக்கு சிவ பூசையை நீ செய்யி. எந்தத் தவறும் வந்திடாம கவனமாச் செய்யி. சாயங்காலமா நான் திரும்பி வந்திடுவேன்” என்கிறான். தம்பி சொன்னபடியே அண்ணன் சிவபூசையைத் தொடங்குகிறான். எப்போதும் போல இந்திரலோகத்தில் இருந்து காமதேனு இறங்கி வருது. காமதேனுவ அடிச்சிக் கறி சமச்சி, தலை வாழை இலையில சிவனுக்குப் படச்சிப் பூசை செய்து முடிக்கிறான் அண்ணன். பக்கத்தில கும்புட்டுக்கிட்டு நிற்கிறா அண்ணனுடைய இளம் மனைவி. ஒன்பது மாச நிறைசூலி அவ. சிவனுக்குப் படச்ச கறி கமகமன்னு அவ மூக்கில அடிக்குது. நாக்கில எச்சில் ஊறுது. கணவன்கிட்ட தன் ஆசையைச் சொல்லுறா.

     “அம்மாடி, சாமிக்குப் படச்சது, நாம எச்சில்படுத்தக் கூடாது” என்கிறான் புருசன்காரன் கண்டிப்பாக. கொஞ்சமாவது கொடுன்னு கெஞ்சுறா அவ. நிறைசூலி, கேட்டதைக் கொடுக்காம இருந்தா பிறக்கிற குழந்தை சவலையாய்ப் போய்டுமே. வேற வழியில்லாம சம்மதிக்கிறான் அவன். “இத்துனூண்டு ஒரு துண்டு மட்டும் எடுத்து ருசி பாரு” என்கிறான். ஒரு துண்டுக் கறி எடுத்துச் சாப்பிட்டா அவ. அடேயப்பா, என்ன ருசி! இன்னொரு துண்டு எடுத்தா.

     இறுதியில் எப்போதும் போலக் கெண்டித் தண்ணியப் படைப்பு மேல தெளிக்கிறான் அண்ணன். கறி கறியாக் கிடக்கு. காமதேனு எந்திரிக்கல்ல. நடுங்கிப் போறான் அவன். என்ன செய்யிறதுன்னே புரியல. சாயங்காலம் ஆகுது. வெளியூர் போயிருந்த தம்பி திரும்பி வந்து பார்க்கிறான். படச்ச மேனிக்குக் கறியாய் கிடக்கு காமதேனு! நடுங்கிக்கிட்டே அண்ணன்காரன் நடந்ததைச் சொல்லுறான்.

தம்பிக்காரனுக்குக் கோபமானா அப்படி ஒரு கோபம். “கேப்பார் சொல் கேட்டதாலே இன்று முதல் நீ கீழாய்ப் போனாய். இன்றுமுதல் நீ யாரோ, நான் யாரோ. இனிமேல் நான் உன்னோடு வாழமாட்டேன்” அப்படின்னு சொல்லிக்கிட்டு, அவனவிட்டுப் பிரிஞ்சி தனியாய் போயிட்டான்.    போனவன் அய்யனானான். இருந்தவன் பறையனானான்”.

     சிற்சில வேறுபாடுகளுடன் வழங்கப்படும் இக்கதைகளின் அடிப்படைக் கருத்து ஒன்றுதான். இக்கதைகள் பார்ப்பானுக்கும், பறையனுக்கும் இடையிலிருந்த தொடர்பை எடுத்துக் கூறுவனவாக உள்ளன. ‘பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன்’ எனும் பழமொழி இதை அடியொற்றி உருவானதாகும். “பிராமணரின் திருமண நிகழ்வில் அண்ணன் வரிசையில் பறையருக்கு வெற்றிலை பாக்கு, பழம் முதலியவை கொடுக்கும் வழக்கம் இருந்தது” என்று திரு. பக்தவத்சல பாரதி கூறும் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

தொகுப்புரை

 பாலக்காடு மாவட்டத்தில் வாழும் பறையர்களின் பூர்வீகம் தமிழகமாகும். பழமையான தமிழ்க்குடிகள் நான்கனுள் ஒன்றாகப் பறையர் குடியும் இருந்திருந்ததை இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது. பழங்காலத்தில் இவ்வினம் மேன்மையான நிலையில் இருந்திருந்தது என்பதையும், காலமாற்றத்தினால் இன்றைய கீழ்நிலைக்கு மாறிப்போனது என்பதையும் இலக்கியங்கள் வாயிலாக உணரமுடிகிறது.

பறையடித்தல் இவர்களின் பூர்வீகத்தொழிலாகும்.‘பறை’ எனும் சொல்லிலிருந்தே பறையன் எனும் சொல் உருவாகியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பறையடித்தல் தொழில் அதிகமாகச் செய்யப்படுவதில்லை. இவர்கள் வேறு வேலைகள் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். இவ்வினத் தோற்றம்குறித்து வழங்கப்படும் கதைகளில் பறையனும், பார்ப்பானும் சகோதர உறவுடையவர்கள் என்றும், சூழல் காரணமாக இருவரும் இருவேறு சாதிகளாக மாற்றப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

இவ்வினத்தின் உட்பிரிவுகள் ‘கிளைகள்’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. அவர்கள் வாழ்ந்த இடங்களின் பெயரிலும், செய்த தொழில்களின் அடிப்படையிலும் இக்கிளைப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. வாழிடங்களின் அடிப்படையில் 24 கிளைகளும், தொழில் அடிப்படையில் 29 கிளைகளும் உள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் வாழும் இவ்வின மக்கள் ‘சங்குப்பறையர்கள்’ எனும் கிளையைச் சார்ந்தவர்களாவர். கேரளமண்ணில் வாழ்ந்தாலும் இவ்வினமக்களின் வாழ்வியல் நெறிமுறைகள் தமிழ்ப்பண்பாட்டைப் பின்பற்றியே அமைந்துள்ளன.

*****

பயன்பட்ட நூற்கள்

 1. Edgar Thurston, Castes and Tribes of Southern India.
 2. புறநானூறு

Edgar Thurston, Castes and Tribes of Southern India

 1. Edgar Thurston, Castes and Tribes of Southern India
 2. Edgar Thurston, Castes and Tribes of Southern India
 3. செம்பான், தகவலாளி, பூலாம்பாறை, வாளையார், பாலக்காடு.
 4. புதிய பனுவல், மாத இதழ், ஜூலை 2010
 5. இது பெரிய எழுத்து, மாத இதழ், மார்ச் 2010
 6. புதிய பனுவல், மாத இதழ், ஜூலை 2010
 7. Edgar Thurston, Castes and Tribes of Southern India
 8. கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள்

*****

கட்டுரையாளர்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம்,
கோவை.

 

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  1. யார் இந்த ஆர்.யு. ஸ்டுவார்டு? அவருக்குத் தமிழ் இலக்கியம் தெரியுமா?

  2. பறையன் என்ற சொல் பறை என்பதிலிருந்து பிறந்ததாகக் கால்டுவெல் சொன்னதால்தான் நம்புகிறீர்களா? நீங்களும் தமிழிலக்கியம் படித்திருப்பீர்கள், இல்லையா?

  சங்க இலக்கியத்தில் தேடவும்; பறையன் என்ற சொல் இருக்கிறது. அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எவ்வளவு காலம் வெள்ளையர் காலைப் பிடித்து அலையப்போகிறீர்கள்?

 2. Avatar

  kaaduvellin kaalam yenge ! , sanga kaalam yenge ?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க