-மேகலா இராமமூர்த்தி

நாளைக் காலை எவரும் அறியாமல் நான் தலைவியை மலைச்சாரலிலுள்ள வேங்கை மரத்தடிக்கு அழைத்துவருவேன். நீங்களும் அவ்விடம் வந்துவிடுங்கள். அங்கிருந்தே நீங்கள் இருவரும் உங்கள் இல்லறப் பயணத்தை தொடங்கிவிடலாம் என்றாள் தோழி தலைவனைப் பார்த்து.

அவள் யோசனைக்கு அமைதியாய்த் தலையசைத்துத் தன் ஆமோதிப்பைத் தெரிவித்தான் தலைவன்.

அன்றைய இரவுப்பொழுது கழிந்தது. கதிரவன் தன் கிரணங்களை நீட்டிப் புவியின் இருளைத் தொட்டழித்தான். புள்ளினங்கள் மரங்களில் இருந்தபடியே பள்ளியெழுச்சி பாடின.

தலைவியைச் சந்திக்க அவள் இல்லம் நோக்கி நடைபோட்டாள் தோழி. தலைவியைச் சந்தித்தவள், ”இன்னுமா நீ கிளம்பவில்லை? நேரம் கடந்துகொண்டிருக்கிறதே! புறப்படு சீக்கிரம்” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தாள்.

உடன்போக்கன்றித் தானும் தலைவனும் இல்லறத்தில் இணைய வழியேதுமில்லை என்பதைத் தலைவியும் அறிந்திருந்தபோதிலும், அன்னையும் அத்தனும் அறியாது பிறந்தகம் நீங்கி, காதலனொடு தனித்துச் செல்ல அந்தப் பெண்ணுளம் மறுத்தது; உடன்பிறந்த நாணம் தடுத்தது. கால்களோ வாயில்கடக்க மறுத்து மறியலில் ஈடுபட்டன.

தன்னைத் துரிதப்படுத்திய தோழியை நோக்கி, “இன்றே செல்லவேண்டுமா? நாளை செல்லலாமே!” என்று தட்டுத்தடுமாறி சொல் முத்துக்களை உதிர்த்தாள் தலைவி!

தோழி வியப்பில் தன் புருவங்களை உயர்த்தியவளாய், ”பெண்ணே! என்ன சொல்லுகிறாய்?! நீ உடன்போக இசைந்தாய் என்று நான் கூறியதால்தான் தலைவன் குறியிடத்திற்கு வந்து உனக்காகத் காத்திருக்கின்றான். நீயோ கையும் காலும் ஓய்ந்து வருத்தமுற, இன்றைய பொழுது கழியட்டும்; நாளை போகலாம் என்கிறாயே! உன் சொற்கேட்டுத் தீயில்விழுந்த தளிராய் நான் நடுங்குகின்றேன். இனி நான் செய்வதற்கு ஏதுமில்லை” என்றாள் ஏமாற்றத்தோடு!

நீயுடம்  படுதலின்  யான்தர  வந்து
குறிநின்  றனனே  குன்ற  நாடன்
இன்றை  யளவை  சென்றைக்  கென்றி
கையுங்  காலும்  ஓய்வன  அழுங்கத்
தீயுறு  தளிரின்  நடுங்கி
யாவதும்  இலையான்  செயற்குரி  யதுவே.   (குறுந்: 383: படுமரத்து/படுமாத்து மோசிகீரன்.)

தலைவி நாணமிகுதியால், ”இன்று வேண்டாம்… நாளை செல்வோம்” என்று கூறியபொழுதில், ”நாணினும் உன் கற்பே நனிசிறந்தது. காதலித்த தலைவனையன்றி வேறொருவனை நீ மணப்பது உன் கற்புக்கு இழுக்கு; ஆதலால் தலைவனொடு உன் வாழ்வை அமைத்துக்கொள்ள இன்றே புறப்படு!” என்று தலைவியை ஆற்றுப்படுத்துவதே இங்குத் தோழியின் நோக்கம்.

நாணால் தடுமாறிய தலைவி, சிறுபொழுதில் தன்னிலை உணர்ந்தாள்; தமரறியாது தோழியொடு புறப்பட்டாள்.

குறியிடத்தில், தலைவியை அழைத்துச்செல்ல ஏற்கனவே வந்து காத்திருந்தான் தலைவன்.

”அன்ப! நான் சொன்னதுபோலவே தலைவியை அழைத்துவந்து உம்மிடம் ஒப்படைத்துவிட்டேன் என்றாள் தோழி. உணர்ச்சிமேலீட்டால் அவள் குரல் கரகரத்தது. ஒருசில நொடிகள் மௌனமாய் நின்றவள், தான் சொல்லவேண்டிய கருத்துக்களை மனத்துக்குள் ஒழுங்குபடுத்திக்கொண்டு மீண்டும் பேச்சைத் தொடங்கினாள்…

cow_elk”அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, தண்ணிய நறிய மலைப்பக்கத்தின்கண், மெல்லிய நடையுடைய மரையா (female elk), இலைகளை விரும்பி உண்டு, துயிலுதற்கிடமாகிய, நல்ல மலை நாட்டையுடைய தலைவ! பெரிய நன்மையொன்றை ஒருவர் தமக்குச் செய்தால் அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உளரோ?  யாவருமே போற்றுவர்! ஆனால் அஃது சிறப்புக்குரியதன்று! சிறிதளவு நன்மையை இத்தலைவி பெற்றவளாயிருக்கும் காலத்திலும் விருப்பத்தோடு புலவிதீர இவளை நீ பாதுகாப்பாயாக! நினையன்றி பற்றுக்கோடு ஏதுமற்றவள் இவள்!” என்றாள் தோழி. 

பெருநன்  றாற்றிற்  பேணாரும் உளரே
ஒருநன்  றுடையள்  ஆயினும்  புரிமாண்டு
புலவி  தீர  அளிமதி  இலைகவர்
பாடமை  ஒழுகிய  தண்ணறுஞ்  சாரல்
மென்னடை  மரையா  துஞ்சும்
நன்மலை  நாட  நின்னல  திலளே.  (குறுந்: 115 – கபிலர்)
 

இப்பாடலின் பொருளை இன்னும் சற்று எளிமைப்படுத்திச் சொல்வதானால்…”தலைவி இப்போது இளமை நலத்தினள்; தலைவனுக்கு இன்பம்நல்கும் பருவத்தினள்; ஆதலால் தலைவன் அவளை விரும்புவதில் வியப்பில்லை. ஆனால் இதே தலைவி நரைகூடிக் கிழப்பருவம் எய்தும் காலமும் வரும். அப்போது தலைவி,

”புதுமலர் அல்ல; காய்ந்த 
     புற்கட்டே அவள் உடம்பு! 
சதிராடும் நடையாள் அல்லள்
 
     தள்ளாடி விழும் மூதாட்டி 
மதியல்ல முகம் அவட்கு
 
     வறள்நிலம்! குழிகள் கண்கள்!”  என்று சொல்லும் நிலையில் இருப்பள்.

அப்போதும் தலைவன் அவளை வெறுக்காது, அவளிடம் அன்புகாட்ட மறுக்காது அவளை இன்முகத்தோடு காக்கவேண்டும் எனும் தன் எதிர்பார்ப்பைத் தலைவனுக்கு இப்பாடலில் குறிப்பால் உணர்த்துகின்றாள் சிறுமுதுக்குறைவியான (சிறு பருவத்திலேயே பேரறிவு படைத்தவள்) தோழி.

ஈதொப்ப, தலைவியைத் தலைவனிடம் ஓம்படுத்தி (அடைக்கலப்படுத்தி), இவள் இளமை யெழில்நலம் தளரினும், நன்னெடுங்கூந்தல் நரையெய்தினும் அன்பொடு புரப்பாய்” என்று தோழி மொழியும் பொருள்செறிந்த அரும்பாடலை நற்றிணையிலும் காணலாம்.

அண்ணாந்து   ஏந்திய   வன முலை   தளரினும்
பொன்நேர்   மேனி   மணியின்  தாழ்ந்த
நல்நெடுங்  கூந்தல்  நரையடு  முடிப்பினும்
நீத்தல்   ஓம்புமதி  பூக்கேழ்  ஊர
இன்கடுங்  கள்ளின்  இழைஅணி  நெடுந்தேர்க்
கொற்றச்  சோழர்  கொங்கர்ப்  பணீஇயர்
வெண்கோட்டு  யானைப்  போஒர்  கிழவோன்
பழையன்  வேல்  வாய்த்தன்ன  நின்
பிழையா  நன்மொழி  தேறிய  இவட்கே.  (நற்: 10)

தலைவியின்மாட்டுப் பெருங்காதலும் பேரன்பும் கொண்டவள் அல்லவோ தோழி? ஆதலால், தலைவியை இன்னும் சற்றுநேரத்தில் பிரியப்போகிறோம் எனும் உணர்வு அவளுக்குச் ஆற்றொணா வேதனையை அள்ளித்தந்தது. தன்னருமைத் தோழி அவள்விரும்பிய காதலனோடு இன்பமாய் வாழவேண்டும் எனும் நாட்டமும், அவளை இனி எப்போது மீண்டும் காண்போம் எனும் வாட்டமும் அவளை மாறிமாறி அலைக்கழித்தன.

தன் உயிரன்ன தோழியாம் தலைவியைக் கண்ணின் கருமணியாய்த் தலைவன் பேணவேண்டும் எனும் தன் வேணவாவை மீண்டும் ஒருமுறை அவனிடம் அழுத்தமாகத் தெரிவிக்க விரும்பிய தோழி மேலும் சில சொல்லலுற்றாள்… 

“அரும்புகள் முதிர்ந்த ஞாழலினது முட்டையைப் போன்ற திரண்ட மலர்களை  நெய்தலது கரிய மலரிலேwater-lily பெய்வதைப்போலக் குளிர்காற்றுத் தூவுகின்ற வன்மையுடைய கடற்கரைக்குத் தலைவ! ஈன்றவள் சினந்து வருத்தும்போதும் வாய்திறந்துஅன்னையே என்று அழுங் குழந்தையைப் போல் என் தோழியாகிய இத்தலைவிக்கு நீ இன்னாதவற்றைச்செய்தாலும், இனிதாகத் தலையளி செய்தாலும் இவள் நின்னாற் புரக்கப்பட வேண்டிய எல்லையிலிருப்பவள்; நின்னையன்றித் தனது மிக்க துன்பத்தை நீக்குவாரைப் பெற்றிலள் என்பதை அறிந்து இதமாக நடந்துகொள்க” என்றாள்.

நனைமுதிர்  ஞாழற்  தினைமருள்  திரள்வீ
நெய்தல்  மாமலர்ப்  பெய்தல்  போல
ஊதை  தூற்றும்  உரவுநீர்ச்  சேர்ப்ப
தாயுடன்று   அலைக்கும்  காலையும்  வாய்விட்டு
அன்னா  வென்னுங்  குழவி  போல
இன்னா  செயினும்  இனிதுதலை  யளிப்பினும்
நின்வரைப்  பினளென்  தோழி
தன்னுறு  விழுமம்  களைஞரோ  இலளே.  (குறுந்: 397 – அம்மூவனார்)

தாய் தனக்குத் துன்பம் செய்தாலும் குழந்தையானது அழுதுகொண்டு அவளையே நாடி நிற்பதுபோல், தலைவனல்லால் வேறு பாதுகாப்பும், பற்றுக்கோடும் அற்றவளாய்த் தலைவி இருப்பதனால், அவளிடம் தலைவன் எப்போதும் தயவாய் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவனுக்குப் பல்லாற்றானும் வலியுறுத்துகின்றாள் தோழி.

mother-and-child-pencil-artதாய் அலைப்பினும் தளர்நடைக் குழவி அவளையே நாடிநிற்கும் நிலையை குலசேகராழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியும், நான்மணிக்கடிகை (எனும் பதினென்கீழ்க்கணக்கு) நூலின் 25ஆம் பாடலும் உருக்கமாய்ப் பேசுகின்றன.

 “….அரிசினத்தால்  ஈன்றதாய்  அகற்றிடினும்  மற்றவள்தன்,
அருள்நினைந்தே அழுங்குழவி அதுவேபோன் றி ருந்தேனே (பெருமாள். 5:1.)

குழவி அலைப்பினும்  அன்னேயென்  றோடும் (நான்மணி. 25)

தலைவனும் தலைவியும் தோழியிடம் பிரியாவிடைபெற்றுப் புறப்பட, விழிநீர் பார்வையை மறைக்க அவர்கள் செல்லும் வழியையே நெடுநேரம் பார்த்தபடி நின்றிருந்தாள் அந்த அருள்நங்கை!

தலைவியின் நல்வாழ்வே தன்வாழ்வு எனும் நன்னர்நெஞ்சுடைய தோழியின் கழிபேரன்பு நமக்குப் பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. தன்னலம் என்பது கடுகளவுமற்ற தூயபெண்ணாய்த் தோழியைப் புனைந்திருக்கும் சங்கப் புலவோரின் திறத்தைப் போற்றுதற்கு வார்த்தையில்லை!

[தொடரும்]

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *