மீ.விசுவநாதன்
பகுதி: 19
பாலகாண்டம்

ஸ்ரீராம-தர்ம-சரிதம்

“கங்கையின் கதையும், பகீரத முயற்சியும்”

சரகனின் பிள்ளை அம்சுமானும் 
சந்ததி யான திலீபனிடம்
அரசினைத் தந்து சென்றிட்டான்
அறத்தினைப் போற்றும் அம்மகனும்
உரசலே இன்றி ஆண்டாலும்
உத்தம முன்னோர் நீர்க்கடனை
விரைவிலே முடிக்க முடியாமல்
விண்ணக வாழ்வைப் பெற்றிட்டான் ! (1)

பகீரதனின் தவம்

திலீபனின் பிள்ளை பகீரதனோ
திடமுடை உள்ளங் கொண்டவனாய்
பளீரென வீசும் ஒளிமுகத்தால்
பக்தியில் தவமே மேற்கொண்டான் !
பிரும்மனும் நேரில் காட்சிதந்து
பெரும்புகழ் கங்கை நீர்மண்ணில்
வருமென வரமும் கொடுத்திட்டார்
மனத்திலே சிவனைத் துதியென்றார் ! (2)

காற்றினை உணவாய்க் கொண்டபடி
கடுந்தவம் செய்த பகீரதனின்
ஆற்றலை வாழ்த்திப் பரமசிவன்
அவனது எண்ணம் நிறைவேற
ஊற்றெனப் பொங்கும் கங்கையினை
உச்சியில் தாங்கி முடிந்திட்டான் !
போற்றியே மீண்டும் வேண்டிடவே
புகழ்மிகு நதியாய் ஓடவிட்டான் (3)

அப்படி “அலகா நந்தா”வாய்
அமுதெனப் பாய்ந்து வரவழியை
தப்படி இன்றி பகீரதனும்
சரியெனக் காட்டப் பின்தொடர்ந்தாள் !
இப்படி கங்கை வந்ததனால்
இவளினை “பாகீ ரதி”யென்பர் !
குப்புற வீழ்ந்தும் குதித்தெழுந்தும்
குஷியுடன் பாய்ந்து வரும்போது (4)

தவசியர் “ஜன்கு” மகரிஷியின்
தரமிகு யாக சாலையினை
இவளது தண்ணீர் வேகத்தால்
இடித்திடச் செய்து போகையிலே
அவளது செருக்கு நீரதனை
ஆவென “ஜன்கு” குடித்திட்டார் !
உளமது இன்பம் கொண்டவரின்
உயரிய இந்தச் செயல்கண்டு (5)

தேவரும் ஜன்கு முனிபணிந்து,
“தேவரீர் கங்கை உம்மகளாய்
பாவனை செய்து கொள்ளுங்கள்,
பாவமே தீர்க்கும் அவளைஎங்கள்
தாகமே தீர்க்கத் தருகவென்றார்”
தன்னுடை செவிகள் மூலமாக
வேகமாய் ஜன்கு திறந்துவிட்டார்
விரைந்தது “ஜான்ஹ வி”நதியாக ! (6)

“சரக குமாரர்கள் நற்கதி அடைதல்”

சிவனது தலையில் விழுந்துவந்த
சிறந்ததோர் கங்கை நதிநீரில்
பவதொடர் நீங்க நீராடி
பரமனை அடைந்தோர் பலகோடி !
உவமையே இல்லா நீரிதனால்
உயரிய முறையில் தர்ப்பணத்தை
தவசினால் முடித்த பகீரதனை
தரணியே நினைத்துத் துதிக்கிறது ! (7)

இந்தவோர் கதையை இராமனுக்கு
இனிமையாய்ச் விச்வா மித்ரர்தான்
சந்தியா கால வேளைவரை
சரித்திரம் பிசகா தெடுத்துரைத்து,
“விந்தையே மிகுந்த இக்கதையை
விரும்பியே கேட்போர் மனங்குளிரும்
பந்தமோ விலகும் பரமசுக
பக்தனின் நிலைபோல் இருப்பரென்றார்!” (8)

(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 42, 43, 44ம் பகுதி நிறைந்தது)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *