தமிழ் யாப்பு எழுத்துக்களும் வடமொழி யாப்பு எழுத்துக்களும் – 1

0

ம.பிரபாகரன்

தமிழ், வடமொழி ஆகிய இரண்டுமொழிகளிலும் உள்ள யாப்பிலக்கணத்தில் எழுத்தெண்ணிக்கை மரபு காணப்படுகின்றது. அடிப்படையில் இந்த எழுத்தெண்ணிசெய்வதைத் தன் நோக்கமாகக் கொள்கிறது.

முதலில் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபைக் பார்பதற்கு முன் வடமொழி எழுத்துக்களோடும், எழுத்தெண்ணிக்கை மரபோடும் அறிமுகம் ஆகிக் கொள்வது பயனுடையதாயிருக்கும். அங்ஙனம் செய்கையில் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபோடு வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபை ஒப்பிட வசதியாக இருக்கும்.

வடமொழி யாப்புலகில் குறிலை இலகுவென்றும் நெடிலைக் குருவென்றும் வழங்குவர். அதுபோல் குறில் ஒற்றையும் நெடில் என்றே வழங்குவர் அதாவது க- இலகு, கக்- குரு.  விருத்தமஞ்சரி என்னும் மலையாள யாப்புநூல் இது குறித்து விரிவாக கூறுவதைக் கீழே காணலாம்:

கிருஸ்வா க்ஷரம் லகுவதாம்
குருவாம் தீர்க்க மாயது
அனுஸ்வாரம் விஸர்க்கம்தான்
தீவிர இயத்தினம் உரைச்சிடும்
சில்லு கூட்டக்ஷரம் தானோ
பின்வந்தால் ஹ்ரஸ்வம் குரு ”

ஹ்ரஸ்வம் – இலகு (குறில்)
தீர்க்கம் – குரு (நெடில்)

ஹ்ரஸ்வத்திற்குப் (இலகு) பின் அனுஸ்வாரம் (o) விஸர்க்கம் (:) நீட்டி ஒலிக்கும் சில்லு இவை வந்தால் ஹ்ரஸ்வம் (இலகு) குருவாய் ஒலிக்கும்.

കമല (கமல) – ஹ்ரஸ்வம் ஆனதால் எல்லாம் இலகு.
வம்சம் – இதில் அனுஸ்வாரம் (o) வந்ததனால் எல்லாம் குரு.
துக்கம்     – இதில் து என்பதற்குப் பின் விஸர்க்கம் இருப்பதனால் இதில் ஹ்ரஸ்வமான (இலகு) து குருவாகிறது. க என்ற ஹ்ரஸ்வத்தின் பின் அனுஸ்வாரம் வந்ததனால் இலகுவான ‘ க ‘ குருவாய் மாறியது.

க்ருஷ்ணன் – இதில் க்ரு என்பதற்குப் பின்னர் ‘ ஷ்ண ‘ என்ற கூட்டெழுத்து வந்தனால் ஹ்ரஸ்வமான (லகு) க்ரு என்பது குருவானது.

ஷ்ண என்பதற்குப் பின்னால் ‘ ன் ‘ என்ற சில்லெழுத்து வந்ததனால் ‘ ஷ்ண ‘ என்ற இலகு குருவாகியது.

ரோசாப்பூ – இதில் எல்லாமே தீர்க்கமாகியதால் (நெடில்) இதில் உள்ள எல்லா எழுத்தும் இரண்டு மாத்திரைகள் பெறும்.

வெஞ்சனமும் சில்லும்:

க 1 க 2 க 3 க    இவை தமிழ் ‘ க ‘ வை ஒத்தவை. இவை போன்றன வெஞ்சனம் (உயிர்மெய்) என்றழைக்கப்படுகின்றன. தனியாய் நிற்கும் வெஞ்சனங்களுக்கு (மெய்யெழுத்துக்கள் ) சில்லு என்று பெயர்.

சில்லுகள், கூட்டெழுத்துகளுக்கு ஒரு சிறப்பு விதி:

சில்லுகளையும் கூட்டெழுத்துக்களையும் உச்சரிப்பது சில இடங்களில்                    தீவிரமாகவும் (அழுத்தமாகவும்) சில இடங்களில் லகு அளவிலும் (Normal) நடைபெறும். அவைகளில் தீவிரமாய் (அழுத்தமாய்) உச்சரிக்கப்படும் சில்லுகளுக்கு முன்வரும் லகுதான் குருவாய் மாறும். அல்லாத இடங்களில் லகு லகுதான்.

உதாரணம்:

மலர்பொடி – இதில் ர் என்பது அழுத்தமாய் உச்சரிக்கப்படுவதால் ‘ ல ‘ என்னும் இலகு குருவாய் மாறியது.

மலர்மால – இதில் ர் என்பது அழுத்தம் இல்லாமல் சாதாரணமாக அல்லது இயல்பாக வந்தமையால் ‘ ல ‘ என்பது லகுவேதான்.

கல்ப்னப்ரகாரம் – ப்ர என்பது அழுத்தமாக உச்சரிக்கப்படுவதால் இலகுவான ‘ ன ‘ என்பது குருவாய் மாறியது.

கல்பிச்சப்ரகாரம் – ‘ ப்ர ‘ என்பது அழுத்தமாக உச்சரிக்கப்படாததால் லகுவான ச்சா என்பது குருவாய் மாறவில்லை. மேலும் ஓர் அடியின் இறுதியில் வரும் லகு நீட்டம் வேண்டுமிடத்து குருவாகவும் மாறும்.

வடமொழி விருத்தங்களும் எழுத்துக்களும்:

வடமொழியில் விருத்தங்கள் எழுத்து, மாத்திரை ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்படுகின்றன. எழுத்தின் அடிப்படையில் அமையும் விருத்தம் வர்ணவிருத்தம் (வர்ணம் – எழுத்து) என்று அழைக்கப்படுகிறது. மாத்திரை அடிப்படையில் அமையும் விருத்தம் மாத்திராவிருத்தம் என்று அழைக்கப்படுகிறது.

வர்ணவிருத்தத்தில் மூன்று எழுத்துக்கள் சேர்ந்தால் ஒரு கணம் என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 8 வகைக் கணங்கள் காணப்படுவதாக வடமொழி விருத்த நூலான சந்தசூத்திரம் கூறுகிறது.

1.குரு /குரு /குரு – சர்வகுரு – மகணம்

  1. லகு /லகு/ குரு – ஆதிலகு – யகணம்

3.குரு/லகு/குரு – மத்யலகு – ரகணம்

4.லகு/லகு/குரு – அந்திகுரு- சகணம்

5.குரு/குரு/லகு- அந்திலகு- தகணம்

6.லகு/குரு/லகு- மத்யகுரு – ஜகணம்

7.குரு/லகு/லகு – ஆதிகுரு – பகணம்

8.லகு/லகு/லகு- சர்வலகு- நகணம்

வர்ணவிருத்தம் மூன்று வகைப்படும்:

  1. சமவிருத்தம் : நான்கு அடிகளும் ஒரே மாதிரியான கணங்களைக் கொண்டு வருவது சமவிருத்தமாகும்.
  1. அர்த்தசமவிருத்தம்: முதலடியிலும் மூன்றாமடியிலும் ஒரே மாதிரியான கணங்களையும், இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும் ஓரே மாதிரியான கணங்களையும் பெற்றுவருவது அர்த்தசமவிருத்தமாகும்.
  2. வியமவிருத்தம்: நான்கு அடிகளும் ஒன்றுபோல் அமையாமல் ஒன்றுக்கொன்று வேறுபட்டு வருபவை வியமவிருத்தம்.

மேற்கண்ட மூன்று பெரும் வர்ணவிருத்தங்களுள் சமவிருத்தம் 26 வகைப்படும். இந்த 26 விருத்தங்களும் குறிப்பிட்ட எழுத்தெண்ணிக்கை அடிப்படையில் அமைவனவாகும். இதைக் கீழ்க்கண்ட அட்டவணை மூலம் அறியலாம்.

எழுத்துக்கள்          சந்தஸ்கள்

1          உக்தா

2          அதியுக்தா

3          மத்யா

4          ப்ரதிஷ்டா

5          சூப்ரதிஷ்டா

6          காயத்ரி

7          உஷ்ணிக்

8          அனுஷ்டுப்பு

9          ப்ரஹதி

10        பங்தி

11        த்ருஷ்டுப்பு

12        ஜகதி

13        அதிஜகதி

14        சக்வரி

15        அதிசக்வரி

16        அஷ்டி

17        அதியஷ்டி

18        த்ருதி

19        அதித்ருதி

20        க்ருதி

21        ப்ரக்ருதி

22        ஆக்ருதி

23        விக்ருதி

24        ஸம்க்ருதி

25        அபிக்ருதி

26        உத்க்ருதி

இந்த 26 வகைகளுள்ளும் எழுத்து மாற்ற அடிப்படையிலான உள்வகைகள் உள்ளன. இது குறித்த விரிவான விளக்கத்திற்கு  விருத்த மஞ்சரியைக் காண்க.

வியம விருத்தங்களில் எழுத்துக் குழுக்கள்:

வியமவிருத்தங்களில் எழுத்துக்கள் அடிப்படையில் குழுக்கள் இருந்தமையை வடமொழி யாப்புநூல்கள் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

பிங்கலர் கூறும் வர்ணவிருத்தங்களில் ஒரு வகையான வியமவிருத்தம் 4 குழுக்களைக் உடையதாக உள்ளது.முதல் குழு வக்த்ரா குழுவாகும். இதில்  நான்கடிகள் வரும். ஒவ்வொரு அடியும் எட்டெழுத்துவீதம் வரும். இரண்டாவது குழு பாதசதுரூர்த்துவா குழுவாகும். இதில் நான்கடிகள் வரும். முதல் அடி எட்டெழுத்தும், இரண்டாம் அடி பன்னிரண்டு எழுத்துக்களையும்,  மூன்றாம் அடி பதினாறு  எழுத்துக்களையும் நான்காம் அடி இருபது எழுத்துக்களையும் கொண்டு அமையும். மூன்றாவது உத்காதா குழு, இதில் நான்கடிகள் வரும். முதல், இரண்டு, மூன்று, நான்காம் அடிகள் முறையே பத்து , பத்து, பதினொன்று, பதின்மூன்று எழுத்துக்கள் பெற்று வரும். நான்காவது குழு, உபஸ்திதப்ரஜீபிதா குழு ஆகும். இதிலும் மற்றைய குழுக்கள் போலவே நான்கு அடிகள். முதல் அடி பதினான்கு எழுத்துக்களும், இரண்டாம் அடி பதின்மூன்று எழுத்துக்களும், மூன்றாமடி ஒன்பது எழுத்துக்களும், நான்காமடி பதினைந்து எழுத்துக்களும் பெற்றுவரும். மேற்கூறிய எழுத்துக்களின் எழுத்துவரிசையை மாற்றி ஒவ்வொரு குழுக்களிலும் பல்வேறு வகைகளை உருவாக்க முடியும். ஜெயகிருதி என்ற வடமொழி யாப்பியலாளர் மூன்று வகைப்பட்ட வியமவிருத்த (எழுத்து) குழுக்களைக் கூறுகிறார். அவையாவன:

(I) சமனாக்ஷரா குழு
(II) ஊனாக்ஷரா குழு
(III) அதிகாக்ஷரா குழு

இம்மூன்றுள் முதல்குழு பிங்கலரின் வக்த்ரா குழுவினோடும், இரண்டாவது குழு உத்காதா குழுவினோடும், மூன்றாவது குழு பாதசதுரூர்த்துவா குழுவினோடும் பொருந்தி வருகின்றன.

மாத்திரா விருத்தம்:

மாத்திராவிருத்தத்தைப் பொறுத்தவரை நான்குமாத்திரைகள் சேர்ந்தது ஒருகணம். இங்கு மாத்திரையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுக்கப்படுகிறது. மாத்திரை கணம் ஐந்து வகையாக வரும்.

  1. _ _ _ சர்வகுரு
  2. _ U U ஆதிகுரு
  3. U _ U மத்யகுரு
  4. U U _ அந்திகுரு
  5. U U U U சர்வலகு

வர்ணவிருத்தம் போல் இவற்றிற்கு பகணம் ஜகணம், சகணம் என்ற பெயர்கள் கொடுப்பதில்லை. மேற்கண்ட ஐந்து வகையில் ஒன்றாவது வகை குருமயம் என்றும் ஐந்தாவது லகுமயம் என்றும் அழைக்கப்படுகிறது. 

தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு:

தொல்காப்பியர் செய்யுளியலில் எழுத்தெண்ணிக்கை பற்றி விரிவாகப் பேசுகிறார். தொல்காப்பியர் பேசும் இவ்வெழுத்தெண்ணிக்கை மரபு தமிழிற்குரியதா? வடமொழிக்குரியதா? இத் தொடர்பில் பூ.கு.குப்புசாமிராஜா என்பவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் தொல்காப்பியச் செய்யுளியலில் வரும் எழுத்தெண்ணிக்கை மரபு வடமொழி நெறிபட்டது என்றும் எழுத்தெண்ணிக்கை பற்றி வரும் சூத்திரங்கள் இளம்பூரணருக்கு முன்வந்த உரையாசிரியர்களின் இடைச்செருகல்கள் என்றும் கூறுகிறார். இவர் கருத்து எழுத்தெண்ணிக்கை பற்றிய விவாதத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது. அவர் கூறுவதாவது: தொல்காப்பியத்தில் நிலத்தை எழுத்தெண்ணும் முறை பற்றி வரும், 

நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே
நாலெழுத் தாதியாக வாறெழுத்
தேறிய நிலத்தே குறளடி என்ப ”

என்று தொடங்கும் ஒன்பது சூத்திரங்களும் கூறுவது கட்டளையடியன்றோ? அது பற்றிக் கருத்தென்னை எனின் அச்சூத்திரங்கள் தொல்காப்பியர் சூத்திரங்களல்ல. இளம்பூரணருக்கு முன்பிருந்த உரையாசிரியர்களால் இயற்றப்பட்ட உரைசூத்திரங்களிவை எனத்தெரிகிறது. செய்யுளியலின் முதற்சூத்திரத்திற் தொகையாகக் கூறியபடி,

மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ
யாத்த சீரே யடியாப் பெனாஅ ”

என்றபடி மாத்திரை, எழுத்து, அசைகளை விளக்கிப் பின் சீர்களை விளக்கும் சூத்திரங்களை நிரல்பட வைத்துள்ளார்.

அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீர்
ஒன்றுத லுடைய வோரொரு வழியே ”

என்று சீரைப் பற்றிக் கூறுகிறார். அந்த ஒன்பது சூத்திரங்களையும் கழித்தபின்

”   சீர்நிலை தானே ஐந்தெழுத்திறவாது
நேர்நிலை வஞ்சிக் காறு மாகும்
எழுத்தள வெஞ்சினும் சீர்நிலை தானே
குன்றலு மிகுதலு மில்லென மொழிப ”

என்ற சூத்திரங்களால் சீர்களைப் பற்றியே கூறுகிறார். அதன் பிறகுதான், ” வஞ்சியடியே இருசீர்த்தாகும்” என்று அடிகளை விவரிக்கிறார். ஆதலின் சீரைப் பற்றிக் கூறும் சூத்திரங்களிடையே அடியைப் பற்றி நிரல்பட அமைக்கும் போக்குடைய தொல்காப்பியர் சூத்திரம் செய்திருக்க மாட்டார். ஆதலின் வடமொழி நெறிபற்றி வந்த எழுத்தெண்ணும் முறையை  தொல்காப்பியர் மேலே சுமத்த விரும்பிய பிற்காலத்தவர்களின் இடைச்செருகலே கட்டளை அடி என்னும் கற்பனை அடிகள் என்பது தெளிவாகும். அளவடிக்குள் குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என்று கூறுவது யாப்புக்குப் பொருத்தமில்லை என்பது நன்கறிந்த தொன்றாதலின். அஃது தொல்காப்பியர் கருத்தன்று என்றும் பதினேழு நிலம் என்பதும் எழுத்தலவு பற்றி வருவதன்று அசைச் சீர்களின் இடைநிலமே என்றும் தெளிவாக உணர வேண்டும் ” (தொல்காப்பியச் செய்யுளியல் இரு சூத்திர விளக்கம், மணிமேகலை மன்றம், இராஜபாளையம், ஆண்டு தெரியவில்லை)

இக்கூற்று பொருந்துமாறில்லை. தமிழ்ச்செய்யுள் மரபில் ” எழுத்தெண்ணிக்கை ” என்பது முக்கிய இடத்தை வகித்துள்ளது என்பதை தொல்காப்பியரின், 

உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ
உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான ”

என்ற செய்யுளியல் நூற்பா மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. இங்கு ” உயிரில் எழுத்து எண்ணப்படா ” என்பது மேலும் கவனதிற்குரியது. இந்த இடம் குறிப்பிடத்தக்கது. இது வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபையும், தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபையும் பிரித்துக்காட்டுகிற இடம். எழுத்தெண்ணிக்கை மரபு தமிழில் அதற்கேயுரிய முறையியல் படி அமைந்திருந்தது என்பதைக் காட்டும் இடம்.

தமிழ்ச்செய்யுளில் உயிரில் எழுத்து- மெய், சார்பெழுத்துக்கள் எண்ணப்படாது. ஆனால் வடமொழி யாப்பில் ‘ மெய் ‘ எண்ணப்படுவதற்குரியது. விலக்கப்படும் தன்மையுடையதன்று.

( தமிழில் கக் – 1 மாத்திரை.

வடமொழியில் கக் – 2 மாத்திரை )

மேலே காட்டிய உயிரில் எழுத்து….என்ற சூத்திரத்தோடு தொல்காப்பியர், ” அளபெடை அசைநிலை ஆகல் உரித்து ” ” ஒற்று அளபெடுப்பினும் அற்றென மொழிப ” ஒற்றெழுத்தியற்றே குற்றியலிகரம் ” என்ற சூத்திரங்களை எழுத்தெண்ணிக்கையோடு தொடர்புபடுத்திச் சிந்தித்திருக்கிறார் என்பது வெளிப்படை. எழுத்தெண்ணும் இம்முறையியல் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபிற்கே யுரியது. இத்தன்மையை வீரசோழிய உரைகாரர் பெருந்தேவனார் உரை மூலமும் நம்மால் அறிந்துகொள்ளமுடிகிறது. அவர் கூறுவதாவது:

கடாஅ வுருவொடு கண்ணஞ்சாதி யாண்டு
முகாஅமை வல்லதே யொற்று ”

இதனை எப்படி ஓசையூட்டுவதெனிற் குற்றியலிகரம் என்று ஒன்றாக்கி அதனைச் சீரும் தளையுஞ் சிதையிற் சிறிய இட அளபோடாது மறிவர் அலகுபெறாமை யென்றிகரம் அலகுபெறாதாக்கி ஓசையூட்டுக என்பர். அதுவும் பிழையென்க. இகரங் குற்றெழுத்தாய் நின்று அலகு காரியம் பெறுதலல்லது ஒற்றெழுத்தே போல் அரைமாத்திரை உடைத்தாயினும் அலகு காரியம் பெறாதொழிதற்குக் காரணமின்மையாலென்க. அன்றியும் அலகு காரியம் பெறாவிடில் எல்லாவிடத்தும் பெறாதொழிய வேண்டுமென்க. அன்றியும் குற்றியலிகரம் அரைமாத்திரையாய் முற்றியலுகரம் ஒருமாத்திரையானமை உச்சாரணையினால் வேறுபடுத்திக் காட்டவொண்ணா வென்க…….அன்றியும் வடநூல் புலவர்க்கு ஓசையூட்டுக என்பதில்லை ”. (சி.வை.தாமேதரம்பிள்ளை பதிப்பு, வீரசோழியம்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்: 142: 2008) இங்குக் குற்றியலிகரத்தை அலகு பெறாதாகி ஓசையூட்டுவது போன்ற முறையியல் வடமொழியில் இல்லை என்று பெருந்தேவனார் கூறுவதைக் கவனிக்க.

முன்னர் காட்டிய பூ.கு. குப்புசாமி கட்டுரையிலிருந்து இன்னொரு கருத்தை எடுத்து விவாதிப்பதும் இக்கட்டுரைக்கு அவசியமானதாகும். அவர்தம் கூற்றாவது: ” மேலும் நமக்குக் கிடைத்த சங்க இலக்கியத்திலும் பயிலாத – முற்காலத்தில் இருந்ததாக உரையாசிரியர்களின் கற்பனையாகிய கட்டளை அடிகட்கே இச்சூத்திரம் பொருந்தும் என்பது சிலர் கருத்து ” (மு.சு.க.பக்.5)

தொல்காப்பியரின் எழுத்தெண்ணி அடிவகுக்கும் முறை சங்க இலக்கியத்தில் இருக்கிறதா என்பது பற்றி இன்னும் முழுமையான ஆய்வு செய்யப்படவில்லை. இது முழுமையாகச் செய்யப்படவேண்டிய ஆய்வாகும். தொல்காப்பியர் செய்யுளியலில் கூறிய பல இடங்கள் தெளிவுபடுத்தபடாமலேயே உள்ளன. அவை உரிய தரவுகள் கிடைக்கும்போது தெளிவாகும். ஒரு வாதத்திற்காக குப்புசாமிராஜாவின் கருத்தை நாம் ஒப்புக்கொண்டாலும் கூட அதாவது எழுத்தெண்ணி அடிவகுக்கும் முறை சங்க இலக்கியத்தில் இல்லை என்பதற்காக அவ்வெழுத்தெண்ணிக்கை பற்றித் தொல்காப்பியர் கூறவில்லை என்ற பொருளில் குப்புசாமிராஜா கூறுவது பொருந்துமாறில்லை. வீரசோழிய ஆசிரியர் புத்தமித்திரர்  கூறும் ஏழ்வகைப் பத்தியக்கவிகளுக்கு  இலக்கியச்சான்றுகள் இல்லை என்பதற்காக அவற்றை இடைச்செருகல்கள் என்று ஒதுக்கமுடியாது. தொல்காப்பியர் கூறும் எழுத்தெண்ணி அடிவகுப்பது தொடர்பான சூத்திரங்கள் என்று குப்புசாமிராஜா கூறுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை.

[தொடரும்]

******

கட்டுரையாசிரியர்
ஆய்வாளர்,
EFEO,
புதுச்சேரி.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *