image (1)

அங்கம் -2 பாகம் -11

மேலங்கியை மாட்டு! எனக்கு மகுடத்தைச் சூட்டு!
மேலோங்கி எழுகிற தெனக்குள் தெய்வீக வேட்கை! …

(கிளியோபாத்ரா)

கடவுளுக் களிக்கும் சுவைத் தட்டு
மடந்தை யவள் என்று நானறிவேன்,
உடல் மீது பிசாசு அவளுக்கு
ஆடை அணியா விட்டால்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

“ஆத்ம உள்ளுணர்வு கைகளோடு ஒன்றி உழைக்கா விட்டால், உன்னதக் கலைகளைப் படைக்க முடியாது.”

“மேதையர் சில சமயங்களில் பணிப்பாரம் குறைவாக உள்ள போது மேலானவற்றைச் சாதிப்பார்! அப்போதுதான் அவர் தமதரிய கண்டுபிடிப்புகளைச் சிந்தித்து, ஓர் உன்னதக் கருவை விரிவாக்கி அவரது கைகள் அதனைப் பிறகு ஓவியமாக்கி வெளிப்படுத்து கின்றன.”

லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)

“பளிங்குக் கல்லில் ஒரு தேவதையை (ஞானக் கண்ணில்) நான் பார்த்தேன். அதனைக் கல்லில் செதுக்கி அவளுக்கு விடுதலை அளித்தேன்.”

“அழகுணர்ச்சியைப் புறக்கணிப்பது போல அல்லது அதைப் பற்றி அறிய மறுப்பது போல, கவர்ச்சியான ஒன்று மாந்தருக்குத் துயர் கொடுப்பது வேறு எதுவு மில்லை!”

மைக்கேலாஞ்சலோ ரோமானிய ஓவிய மேதை (1475-1564)

++++++++++++++++++

கதைச் சுருக்கம்

 

கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

++++++++++++++++

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

 

நாடகப் பாத்திரங்கள்ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

காட்சி அமைப்பு

 

கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள்.

கிளியோபாத்ரா: [அருகில் நெருங்கி மிக்கக் கனிவுடன்] ஆனாலும் அவன் உங்கள் மகன்! ரோமானிய மாது கல்பூர்ணியா அளிக்க முடியாத ஆண் பரம்பரையை, எகிப்தின் கிளியோபாத்ரா ஆக்கித் தருகிறாள்! மாவீரர் சீஸரே! நீங்கள் ரோமுக்கு மீள்வதைச் சற்று தள்ளிப் போடுங்கள்! எனக்கு உங்கள் கையால் எகிப்து மகாராணி என்று முதலில் மகுடம் சூட வேண்டும்! என் மாளிகையில் எனது சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும்! எனக்குப் பிறக்கப் போகும் ஆண்மகவை உங்கள் ஆசைக் கரங்களில் முத்தமிடக் கொடுத்து நான் ஒப்படைக்க வேண்டும்! அதன் பிஞ்சு வாயில் தவழும் புன்னகையை நீங்கள் மனதில் படமெடுத்துக் கொண்டு ரோமாபுரிக்குச் செல்ல வேண்டும்.

ஜூலியஸ் சீஸர்: அப்படியே செய்கிறேன். எனக்கு ஆண்பிள்ளை வேண்டுமென்று வெகு நாட்களாக ஆசை யிருப்பது உண்மை. அந்த ஆசையை என் மனைவி கல்பூர்ணியா பூர்த்தி செய்ய முடியவில்லை. அந்த ஆசையை நீ நிறைவேற்றுவாய். ஆனால் என் ஏக மகனை ஆசை நாயகியின் மோகப் பிள்ளை எனப் பலர் ஏசுவதை நான் விரும்பவில்லை.

கிளியோபாத்ரா: அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறேன். உங்களை நான் மணந்து நமக்குப் பிறக்கும் பிள்ளை சட்டப்படி உதித்த உங்கள் மகனென்று சரித்திரம் சொல்ல வைப்பேன். கிளியோபாத்ராவுக்கும், சீஸருக்கும் பிறந்த பட்டத் திளவரசன் என்று எகிப்தின் மாந்தர் பாராட்டுவார்! ரோமாபுரியின் எதிர்கால வேந்தன் என்று ரோமானியர் கொண்டாடுவார்! அது மட்டுமல்ல, உங்களை நான் எகிப்தின் மன்னராகவும் அறிவித்து விடுகிறேன்!

ஜூலியஸ் சீஸர்: [மன மகிழ்ச்சியுடன் ஆனால் சற்று தயக்கமுடன்] கண்ணே கிளியோபாத்ரா! என்னை மணந்து நீ ஓர் ஆண்மகனைப் பரிசாக அளிப்பதே எனக்குப் போதும்! நான் ஒரு ரோமன்! நான் ·பாரோ கடவுள்களின் பரம்பரையில் வந்தவன் அல்லன்! என்னை எப்படி எகிப்துக்கு மன்னன் ஆக்குவாய் நீ! அந்த மதிப்பு எனக்குத் தேவையு மில்லை! எகிப்த் ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! ரோமாபுரிக்கு யார் அதிபதியாயினும் அவரே எகிப்துக்கும் தளபதி! அதை நீ அறிவிக்கத் தேவையில்லை! பிறக்கும் மகனைப் பார்த்த பிறகே நான் ரோமாபுரிக்குப் போக ஏற்பாடு செய்யவேன். அங்கே நிரம்ப வேலை இருக்கிறது எனக்கு!

கிளியோபாத்ரா:  ஃபெரோ மன்னரின் பரம்பரைப் பாவையான நான், உங்களை எகிப்துக்கு மன்னராக்குவேன், கவலைப்பட வேண்டாம். அலெக்ஸாண்டிரியாவில் சில நாட்கள் ஓய்வெடுங்கள். மாபெரும் வேந்தர் சீஸரின் அருகில் நான் உள்ள போது, நீங்கள் ஒரு வேலையும் செய்யத் தேவை யில்லை! மன்னர்களுக்கு வேலை யில்லை! மன்னர்கள் வேலை செய்யக் கூடாது!

ஜூலியஸ் சீஸர்: யார் சொல்வது, மன்னருக்கு வேலை யில்லை என்று? வாலிப ராணி கிளியோபாத்ராவுக்கு வேலை யில்லை! அதே போல் வயோதிக சீஸருக்கும் வேலை யில்லை என்பதா? வேடிக்கையாக இருக்கிறதே!

கிளியோபாத்ரா: எகிப்தில் என் தந்தை சில ஆண்டுகள் மன்னராக இருந்தார்; அவர் என்றைக்கும் வேலை செய்ததில்லை. அவர் மாபெரும் மன்னரே! ஆனால் மிகவும் பொல்லாதவர்! புரட்சி செய்து நாட்டைப் பிடுங்கி அரசாண்ட, என் மூத்த சகோதரியின் கழுத்தை அறுத்தவர்!

ஜூலியஸ் சீஸர்: அப்படியா? பிறகு நாட்டை மீண்டும் எப்படிக் கைப்பற்றினார், உன் தந்தை?

கிளியோபாத்ரா: [கண்களில் ஒளிவீசப் புன்னகையுடன்] எப்படி என்று சொல்லவா? பாலை வனத்தைக் கடந்து பராக்கிரமம் மிக்க ஒரு மன்மத வீரன் பல குதிரைப்படை ஆட்களோடு வந்தார்! தமக்கையின் கணவரைக் கொன்றார்! தந்தையை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமரச் செய்தார்! அப்போது எனக்கு வயது பன்னிரண்டு! அந்த வாலிபர் என் கண்ணுக்குள்ளே நின்று காட்சி அளிக்கிறார்! மீண்டும் இப்போது வந்தால் ஆனந்தம் அடைவேன்! நானிப்போது பட்டத்து அரசி! அப்படி வந்தால் அவரை என் கணவராக்கிக் கொள்வேன்!

ஜூலியஸ் சீஸர்: [ஆர்வமுடன்] அப்படியானால் என்கதி என்னவாகும்? நான் உன்னைத் திருமணம் செய்யப் போகிறேனே! ஆண்மகவு ஒன்றைக் கூட எனக்குப் பரிசாக அளிப்பதாகக் கூறுகிறாய்!

கிளியோபாத்ரா: அந்த வாலிபர் என் வயதுக் கேற்றவர்! நீங்கள் என் வயதுக்கு மீறிய வயோதிகர்! பிறக்கும் என் ஆண்மகவின் தந்தை நீங்கள்! ஆனால் எனக்குப் பொருத்த மில்லாதவர்! பிறக்கப் போகும் நமது மகனுக்குத் தந்தை சீஸர் என்பதை ரோம சாம்ராஜியத்துக்கு அறிவிக்கவே உங்களைத் திருமணம் செய்ய உடன்படுகிறேன்! ரோமாபுரியில் உங்கள் மனைவி கல்பூர்ணியா, உங்களுக்குக் காத்துக் கொண்டிருக்கிறாள். வயோதிகரா அல்லது வாலிபரா என்று என்னைக் கேட்டால், யாரை நான் கணவனாக தேர்ந்தெடுப்பேன்? ஐயமின்றி ஓர் வாலிபரைத்தான்!

ஜூலியஸ் சீஸர்: [சட்டென] உன் கற்பனை வாலிபனும் ஏற்கனவே திருமணம் ஆனவன்தான்!

கிளியோபாத்ரா: அப்படியா? மீன் குஞ்சிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கத் தேவை யில்லை! அவளுடைய இடத்தைப் பிடிக்க எனக்குத் தெரியும். அந்த வாலிபர் என் கண்வலையில் சிக்கி விட்டால், மீண்டுமவர் தன் மனைவியைக் கண்டு கொள்ள மாட்டார்! என் மந்திரக் கண்களின் தந்திரப் பிடியிலிருந்து அவர் தப்ப முடியாது! விளக்குத் தீயை ஆராதிக்கும் எந்த விட்டிலும் தீபத்திலே எரிந்து சாம்பலாகும்! [மிக்க ஆர்வமுடன்] அவரது உண்மைப் பெயரென்ன? உங்களுக்குத் தெரியுமா? மீண்டும் அவரை அலெக்ஸாண்டிரியாவுக்கு அழைத்து வரச் செய்ய முடியுமா?

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] முடியும், என்னால் முடியும். முதலில் உன் தந்தைக்கு உதவி செய்ய அந்தக் கவர்ச்சி வாலிபனை அனுப்பியவன் நான்தான்!

கிளியோபாத்ரா: [சீஸரை நெருங்கி] அப்படியா? அந்த வசீகர வாலிபனை உங்களுக்குத் தெரியுமா? அவர் பெயரென்ன கூறுவீரா? உங்களை விட வயதில் சிறியவர்தானே! உங்களுடன் இப்போது வந்திருக்கிறாரா?

ஜூலியஸ் சீஸர்: இல்லை! என்னுடன் வரவில்லை. ஆம், அவன் என்னை விட வயதில் சிறியவன்தான். அந்த வாலிபன் பெண்களின் வசீகரன்! உன்னைப்போல் அவன்மீது கண்வைத்திருக்கும் பெண்கள் அநேகம்! நீ அவனை மோகிக்கிறாய்! அவனுக்கு உன்னைப் பிடிக்குமா என்பது எனக்குத் தெரியாது! வசீகர வாலிபருக்கு ஒரு வனிதைமேல் மட்டும் வாஞ்சை உண்டாகாது! அவருக்கு ஆயிரம் வனிதைகள் உள்ளார்! ஆயிரத்தில் ஒருத்தியாக நீ யிருக்க விரும்புகிறாயா?

கிளியோபாத்ரா: நான் ஆயிரத்தில் ஒருத்தியான ஆசைநாயகி யில்லை! ஆயிரத்தில் முதல்வி, அவரது ஆசை மனைவியாக வாழ்வேன்! அவர் என்னைக் காதலித்தால், அவரை என் வசப்படுத்தி மற்ற ஆசை நாயகிகளைக் கொல்லும்படிச் செய்வேன். சொல்லுங்கள் அவர் பெயரை! சொல்லுங்கள் எங்கிருக்கிறார் என்று! நான் அவரை நேசிக்கிறேன். அவர் என்னை விரும்புகிறாரா என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜூலியஸ் சீஸர்: அவன் ஒரு காப்டன். குதிரைச் சவாரி வீரன்! ரோமாபுரிப் பெண்டிரின் கனவு மைந்தவன் அவன்!

கிளியோபாத்ரா: [கெஞ்சலுடன்] அவர் உண்மைப் பெயரென்ன கூறுங்கள்! அவர் என் தெய்வம். நான் அவரை அழைப்பது, “ஹோரஸ்” [*1] என்றுதான்! எங்களுடைய கடவுள்களில் ஹோரஸ்தான் மிக்க எழிலான கடவுள். ஆனால் அவரின் உண்மைப் பெயரை அறிய ஆவல்.

ஜூலியஸ் சீஸர்: அவன் பெயர்தான் மார்க் ஆண்டனி! ரோமின் மாவீரன் மார்க் ஆண்டனி! என் பிரதமச் சீடன், மார்க் ஆண்டனி! எனக்காக உயிரைக் கொடுக்கவும் அஞ்சாத மார்க் ஆண்டனி!

கிளியோபாத்ரா: [மனம் நெகிழ்ந்து இசையோடு உச்சரித்து] ஆஹா! மார்க் ஆண்டனி! என்ன அழகிய பெயர்! மார்க் ஆண்டனி! உங்களுக்குச் சீடன்! ஆனால் எனக்குத் தேவன்! மார்க் ஆண்டனி! உங்களுக்காக உயிரைக் கொடுப்பவர்! ஆனால் மார்க் ஆண்டனிக்காக நான் உயிரைக் கொடுப்பேன்! எங்கே உள்ளார் மார்க் ஆண்டனி? அழைத்து வாருங்கள் மார்க் ஆண்டனியை! சீஸர், கனல் பற்றி எரியும் நெஞ்சில், பாலை வார்த்தீர்கள்! அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்து என்னைக் காண ஏற்பாடு செய்வீரா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று தயக்கமுடன்] மார்க் ஆண்டனி ரோமாபுரியில் உல்லாசமாக இருக்கிறான்! அலெக்ஸாண்டிரியாவுக்கு ஆண்டனியை அழைத்து வருபது எளிய தில்லை! நான் போனால்தான் அவன் வருவான். ரோமாபுரிக்கு நான் போய்த்தான் அவனை அனுப்ப வேண்டும்! நான் ரோமுக்குப் போனால் எகிப்துக்குத் திரும்ப மாட்டேன்! ஆண்டனி எகிப்துக்கு வந்தால், அவன் ரோமுக்கு மீள மாட்டான்!

*********************

[*1] “ஹோரஸ்” [Horus is the Sun God of the Egyptians]

+++++++++++++++++++

அங்கம் -2 பாகம் -12

“எனக்கு முன்னால் நடக்காதீர்; உங்களை நான் பின்பற்றப் போவதில்லை! என் பின்னால் வர வேண்டாம்; ஏனெனில் உம்மை நான் வழிநடத்தப் போவதில்லை! வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டும்தான் உள்ளது: நேசிப்பதும், நேசிக்கப் படுவதும்!

“கலைப் படைப்பாளியின் குறிநோக்கு, மனித உள்ளத்துக்கு ஒளி பாய்ச்சுவது.”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளர் [George Sand (1804-1876)]

ஆண்டனி மீண்டும் என் தேவன் ஆனதால்,
நான் கிளியோபாத்ரா மறுபடியும்!….
வண்ண உடையில் அவர் மாட்டி யிருப்பது,
வாலிப ரோஜா மலர்! …

(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

குறுகிய பூமியில் அவர் (சீஸர்),
பெருநடை போடுகிறார்! ஓ மனிதா!
கீழான காலாட் படைநாம் அவர் நீள்
காலிடைப் புகுந்து தலை நீட்டுகிறோம்,
சுய மதிப்பினை யிழந்து!
மனிதரே அதிபதி! சில வேளை,
அவரது ஊழ் விதிக்கு!
தவறு வானத்துக் கிரகங்களில் அல்ல,
அருமை புரூட்டஸ்! நம்மிடமே உள்ளது!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

காட்சி அமைப்பு:

கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள்.

கிளியோபாத்ரா: [மனம் நெகிழ்ந்து இசையோடு உச்சரித்து] ஆஹா! மார்க் ஆண்டனி! என்ன அழகிய பெயர்! மார்க் ஆண்டனி! உங்களுக்குச் சீடர்! ஆனால் எனக்குத் தேவர்! மார்க் ஆண்டனி! உங்களுக்காக உயிரைக் கொடுப்பவர்! மார்க் ஆண்டனிக்காக நான் உயிரைக் கொடுப்பேன்! எங்கே உள்ளார் மார்க் ஆண்டனி? அழைத்து வாருங்கள் மார்க் ஆண்டனியை! சீஸர், கனல் பற்றி எரியும் நெஞ்சில், பாலை வார்த்தீர்கள்! அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்து மார்க் ஆண்டனி என்னைக் காண ஏற்பாடு செய்வீரா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று தயக்கமுடன்] மார்க் ஆண்டனி ரோமாபுரியில் உல்லாசமாக இருக்கிறான்! அலெக்ஸாண்டிரியாவுக்கு ஆண்டனியை அழைத்து வருபது எளிய தில்லை! நான் போனால்தான் அவன் வருவான். ரோமாபுரிக்கு நான் போய்த்தான் அவனை அனுப்ப வேண்டும்! நான் ரோமுக்குப் போனால் எகிப்துக்குத் திரும்ப மாட்டேன்! ஆண்டனி எகிப்துக்கு வந்தால், அவன் ரோமுக்கு மீள மாட்டான்! எனக்கு வேலை இருக்கிறது. நான் என் அறைக்குப் போக வேண்டும்.

கிளியோபாத்ரா: [கெஞ்சிக் கொண்டு] என்னருகில் அமர்ந்து, என்னுள்ளம் குளிரக் கொஞ்சம் மார்க் ஆண்டனியைப் பற்றிப் பேசுங்கள்.

ஜூலியஸ் சீஸர்: நான் போகாவிட்டால் டாலமியின் படைக் காவலர் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்திலிருது ரோமானியப் படையை வெட்டிவிடுவார்!

கிளியோபாத்ரா: [விறுவிறுப்புடன் பதறி] டாலமியே செத்த பிறகு அவனுடைய படையாட்கள் எப்படி ரோமானியரைத் தாக்க முடியும்?

ஜூலியஸ் சீஸர்: [சட்டென வெகுண்டு] டாலமி செத்த பிறகு அவரது மெய்க்காப்பாளி போதினஸ், போர்த் தளபதி அக்கிலஸ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டதாக அறிந்தேன். அவர்கள் அலெக்ஸாண்டியாவில் ரோமானிய ஆக்கிரமிப்புப் படையினருக்குத் தொல்லை கொடுத்து வருவதாகக் கேள்விப் படுகிறேன். … [வாயில் புறம் பார்த்து] .. அதோ! என் ரோமானியப் படைவீரன் ஒருவன் நொண்டிக் கொண்டு வருகிறான்! முகத்தைப் பார்த்தால் மகிழ்ச்சி ஊட்டும் செய்தியாகத் தெரிய வில்லை. [சீஸர் பதறிக் கொண்டு காவலனைக் கனிவுடன் நோக்குகிறார்]

படைவீரன்: [காயங்களைக் காட்டி] பிரிட்டானஸ்! பாருங்கள் என்ன நடந்து விட்டதென? இனியென்ன செய்வீர்? [சீஸரைப் பார்த்து] ஜெனரல், பாருங்கள் என் படுகாயத்தை! காயப் பட்டது நான்! தாக்கப் பட்ட படைவீரர் இருவர் மாண்டு போனார் அங்காடி வீதியில்!

ஜூலியஸ் சீஸர்: [கவனமுடன்] ஏன் அவர்கள் தாக்கப் பட்டார்? எப்படி உனக்குக் காயம் உண்டானது?

படைவீரன்: அக்கில்லஸ் தலைமையில் படைக்குழு ஒன்று அலெக்ஸாண்டிரியாவில் நுழைந்தது. உடனே எகிப்திய மக்கள் அவருடன் சேர்ந்து, ரோமானியரைத் தாக்க ஆரம்பித்தனர். ரோமானியர் உதைக்கப் பட்டார். எனக்குக் கிடைத்த உதையில் நான் தப்பினேன். மற்ற இருவர் மாண்டு போனார்.

ஜூலியஸ் சீஸர்: உன்னுயிர் தப்பியதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். … [படைவீரனைப் பார்த்து] உள்ளே சென்று காலுக்கு மருந்து போட்டுக்குள். [படைவீரன் உள்ளே செல்கிறான்.]

[சீஸரின் படைவீரர் லெஃப்டினென்ட் ரூஃபியோ வேகமாக வருகிறார்]

ரூஃபியோ: [ஆங்காரமாக] சீஸர்! மகா அவமானம் நமக்கு! நமது ஆக்கிரமிப்புப் படையை எகிப்த் படை அடைத்துச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. யாருமிதை எதிர்பார்க்க வில்லை! உயிர்ச் சேதமும், பொருட் சேதமும் உண்டாகும்!

ஜூலியஸ் சீஸர்: ரூ·பியோ! நமது கப்பல்கள் சில மேற்குத் துறைமுகத்தில் உள்ளன. அவற்றில் எல்லாம் தீவைத்து விடுங்கள்!

ரூஃபியோ: [ஆச்சரியமுடன்] என்ன கப்பல்களை எரித்து விடவா?

ஜூலியஸ் சீஸர்: ஆம் அவற்றை எரித்து விடு! ஆனால் கிழக்குத் துறைமுகத்திலிருக்கும் ஒவ்வொரு கப்பலையும் பயன்படுத்தி ·பரோக்களின் படகுகளைக் கைப்பற்று. அந்த தீவையும் பிடித்து விடு! விடாதே! பாதிப் படையினரை கடற்கரையில் காவல் வை. மீதிப் பேரை வெளியே படகில் நிறுத்து.

ரூஃபியோ: [முழுவதும் உடன்படாமல்] அலெக்ஸாண்டிரியா நகரை விட்டுவிடச் சொல்கிறீரா?

ஜூலியஸ் சீஸர்: நாமின்னும் அதைக் கைப்பற்ற வில்லை, ரூ·பியோ! கைவசப்படாத ஒன்றை எப்படி நாமிழக்க நேரிடும்? இந்த மாளிகை நம்முடையது! அடுத்தது அந்த மாளிகை, என்ன பெயர் அதற்கு?

ரூஃபியோ: நாடக அரங்கம்.

ஜூலியஸ் சீஸர்: ஆமாம், நாடக அரங்கமும் நமதே! மற்ற எகிப்தின் பகுதிகள் எகிப்தியருக்குச் சொந்தம்.

ரூஃபியோ: சீஸர்! உங்களுத்தான் எல்லாம் தெரியும்! சரி நான் விடை பெறுகிறேன்.

ஜூலியஸ் சீஸர்: அந்தக் கப்பல்கள் அனைத்தும் எரிக்கப் பட்டனவா?

ரூஃபியோ: இதோ போகிறேன்! ஆணைப்படி நிறைவேறும்! கால தாமத மாகாது! [வெளியேறுகிறார்]

பிரிட்டானஸ்: சீஸர்! டாலமியின் மெய்க்காப்பாளி போதினஸ், உங்களுடன் பேச விரும்புகிறார். அவருடைய போக்கு சரியில்லை! அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.

ஜூலியஸ் சீஸர்: போதினஸ், எங்கிருக்கிறார்? அனுமதி அளியுங்கள் அவருக்கு! [போதினஸ் நுழைகிறார்] .. ஹலோ போதினஸ்! உமக்கு என்ன வேண்டும்? நண்பனாக வந்திருக்கிறாயா? அல்லது ரோமானியருக்கு நாச காலனாக வந்துள்ளாயா?

போதினஸ்: உங்களுக்கு முடிவுரை கூற வந்துள்ளேன்! உங்களுக்கு முடிவு காலம் வந்து விட்டது!

ஜூலியஸ் சீஸர்: [கோபமாக] எங்களுக்கு முடிவு காலமா? சீஸருக்கு முடிவுரையா? கூறுவது யார்? தலையில்லாத முண்டமா? உங்கள் அரசர் டாலமிக்கு என்ன ஆயிற்று தெரியுமா? … நாங்கள் விரட்டிச் சென்ற போது, நைல் நதியில் குதித்து மூழ்கி விட்டார்! ·பரோ பரம்பரைக்காரி கிளியோபாத்ராவைத் தவிர உமக்கு அரசர் யாருமில்லை! அவர்தான் எகிப்தின் ராணி என்று ஒப்புக் கொள்ளுங்கள். கிளியோபாத்ரா எங்கள் பாதுக்காப்பில் இருக்கிறார். நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளா விட்டால். உங்களை அரண்மனையில் தடம் வைக்க விட மாட்டார்!

போதினஸ்: [ஆங்காரமாக] நாங்கள் கிளியோபாத்ராவை ராணியாக ஏற்றுக் கொள்ள முடியாது! உங்களையும் எகிப்த் ஆக்கிரமிப்புத் தளபதியாக ஒப்புக் கொள்ள முடியாது! டாலமியின் அடுத்த சகோதரி அரச பீடத்தில் அமரத் தயாராக உள்ளார்! அவர்தான் எங்கள் புது ராணி!

ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] முதலில் நீவீர் எமது போர்க்கைதி! போரை அறிவிக்காமல் போர் தொடுத்து, ரோமானிய வீரர் இருவரைக் கொன்றது உங்கள் குற்றம். பிரிட்டானஸ்! கைது செய் போதினஸ் போர்க் கைதியை!

++++++++++++++++

அங்கம் -2 பாகம் -13

“எனது உள்ளம் ஒருவரால் கவரப்பட்ட வேளையில், ஒருமாதிரி ஆங்காரப் பூரிப்போடு, நிதானமாக அதன் காரணத்தை வெளியேற்றக் கதவைத் திறந்து வைத்தேன்! தர்க்கமின்றி, போராட்ட மின்றி, பொய் வெட்கமின்றி, மன வேதனை யின்றி, நெஞ்சக் கலக்க மின்றி அனைத்துக்கும் உடன்பட்டேன், அனைத்தையும் நான் நம்பினேன்! முகம் சிவந்து ஒருத்தி வெட்கப் படுவது எப்படி, ஒருவரால் ஈர்க்கப்பட்டு ஆராதிக்கப்படும் போது?”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

“ஒவ்வொரு பாறைத் துண்டமும் ஒரு சிலையைத் தன்னுள் ஒளித்து கொண்டுள்ளது! சிற்பியின் கலைப்பணி அச்சிலையை அதில் கண்டுபிடிப்பதுதான்!”

மைக்கேலாஞ்சலோ [1474-1564]

“என்னைப் பாராட்டுபவன் எவனையும் நான் பாராட்டுவேன்! நாட்டைக் கைப்பற்றப் போர்க் களத்தில் நான் புரிந்த மாவீரச் செயல்களை யாரேனும் மறுக்க முடியுமா?”

அண்டனி

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

“சீஸர்! பத்துத் தலைமுறைகளுக்கு [முன்னூறு ஆண்டுகள்] ஒருதரம் உலகத்துக்கு ஓர் உன்னத நூல் கிடைக்கிறது. வரலாறின்றிப் போனால், மரணம் உங்களை மூடப் படைவீரன் அருகிலே புதைத்து விடும்!”

[தியோடோடஸ், அலெக்ஸாண்டிரியா நூலகம் தீப்பற்றி எரியும் போது]

பெர்னாட் ஷா [சீஸர் & கிளியோபாத்ரா]

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

காட்சி அமைப்பு:

கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்!

++++++++++++++

ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] முதலில் நீவீர் எமது போர்க்கைதி! போரை அறிவிக்காமல் போர் தொடுத்து, ரோமானிய வீரர் இருவரைக் கொன்றது உங்கள் குற்றம். பிரிட்டானஸ்! கைது செய் போதினஸ் போர்க் கைதியை!

போதினஸ்: [கேலியாக] நானா உங்கள் கைதி? வியப்பாக இருக்கிறதே! நீங்கள் தங்கி யிருப்பது எங்கே என்று தெரிகிறதா? அலெக்ஸாண்டிரியாவில்! எகிப்தியர் பூமியில்! டாலமியின் படைவீரர் உங்களை விட மிகையான எண்ணிக்கையில் அலெக்ஸாண்டிரியாவை முற்றுகை செய்துள்ளதைச் சற்றேனும் அறிவீரா?

ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] நண்பா! வந்த வழியே திரும்பிச் செல், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால்! சீக்கிரம் செல்! தூதன் என்பதால் உன்னைத் தப்பிச் செல்ல விடுகிறேன்! வெளியே உன் படையாட்களிடம் உடனே சொல், ரோமானியரை இனிமேலும் கொல்ல வேண்டாமென்று! அல்லாவிடில் நீ கொல்லப் படுவாய், அறிந்து கொள். என்னைப் போல் பரிவு மிக்கவர், என்படை வீரர் என்று எண்ணாதே! பிரிட்டானஸ், செய்தியைப் பரப்பு; எனது போர்க் கவசத்தை எடுத்து வரச்சொல்! [பிரிட்டானஸ் போகிறான். ரூ·பியோ நுழைகிறான்.]

ரூஃபியோ: [ஜன்னல் பக்கம் சீஸரை அழைத்துச் சென்று, தூரத்தில் எழுகின்ற புகை மூட்டத்தைக் காட்டி] பாருங்கள் வெடிப் புகையை. [போதினஸ் ஓடி வந்து பார்க்கிறான்]

ஜூலியஸ் சீஸர்: [கவசத்தை அணிந்து கொண்டே] ஓ, அதற்குள் கலகம் ஆரம்பித்து விட்டதா? எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது? நம் கண்முன்பாகவே நமது ரோமானியர் கொல்லப் படுவது அவமானம்! அக்கிரமம்! அயோக்கியத்தனம்!

ரூ·பியோ: நமது ஐம்பெரும் கப்பல்கள் துறைமுகத்தில் தகர்க்கப் பட்டன! கப்பலுக்கான எண்ணைக் கலன்களை ஏந்திச் சென்ற கட்டுமரமும் எரிக்கப் பட்டது! எகிப்தியர் படை மேற்குத் துறைமுகத்தைக் கைப்பற்றி விட்டது உண்மை! அவர்கள் வைத்த தீ வளர்ந்தோங்கி வருகிறது!

ஜூலியஸ் சீஸர்: [சீற்றமுடன், கவசத்தை சரிசெய்து கொண்டு] அப்படியானால் கிழக்குத் துறைமுகம் யார் கையில் உள்ளது? கலங்கரை விளக்கம் யார் கையில் உள்ளது, ரூ·பியோ?

ரூ·பியோ: [கோபத்துடன்] சீஸர்! நீங்களே களத்துக்கு வந்து கட்டளை யிடுங்கள்! ஐந்து நிமிடத்தில் என்னால் படை திரட்டித் தாக்க முடியாது! கிளியோபாத்ராவின் பட்டம் சூட்டு விழாவுக்கு நீங்கள் ஒத்திகை பார்த்து வருகிறீர், அலெக்ஸாண்டிரியாவை எகிப்தியர் அபகரிக்கும் போது! நாம் விழித்தெழா விட்டால், நம்மையும் சிறைப் படுத்திக் கொன்று விடுவர் டாலமியின் ஆட்கள்!

ஜூலியஸ் சீஸர்: [சற்று நிதானமுடன்] எகிப்த் ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! ஜூலியஸ் சீஸர் உள்ள வரை அலெக்ஸாண்டிரியா ஒருபோதும் அவரது கையிக்கு மீளாது, ரூஃபியோ!

[அப்போது தியோடோடஸ் அலறிக் கொண்டு ஒருபுறம் நுழைகிறார். கிளியோபாத்ரா தீயெரிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பின்பு ஆத்திரப் பட்டு மாளிகைக்குள் நுழைகிறாள்]

தியோடோடஸ்: [பயங்கரக் குரலுடன்] எகிப்திய மாந்தர்காள்! நமது நகரம் நரக மாகுது! அலெக்ஸாண்டிரியாக் கடற்கரை எங்கெங்கு நோக்கினும் தீ மயம்! நமது உன்னத நூலகம் வெந்து சாம்பலாகுது! நமது எகிப்த் நாகரீகம் மாயுது! நமது கலாச்சாரம் எரிந்து போகுது!

[எல்லாரும் மாளிகை ஜன்னல் வழியாகத் தூரத்தில் தீ மண்டலங்களைக் காண்கிறார்]

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக, கொதிப்புடன்] காட்டுமிராண்டியர், ரோமானியர்! நூலகத்தில் எப்படித் தீ வைக்கலாம்? அலெக்ஸாண்டிரியா நூலகம் வரலாற்றுக் களஞ்சியம்! உலகின் முதல் நூலகம் எரியுது! வான சாஸ்திரம், கணித சாஸ்திரம், அண்ட கோள்களின் நகர்ச்சி விளக்கம், கட்டடக் கலைகள், பிரமிட்களின் அமைப்பு அனைத்தும் எரிந்து புகையாய்ப் போகின்றன! வரலாற்றுப் புகழ் பெற்ற எங்கள் நூலகம் கருஞ் சாம்பலாகுது! பிளாடோவின் உரையாடல் நூல் வெந்து போகுது! அரிஸ்டாடலின் படைப்புகள் கரும் புகையாய் போகுது! அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பு வரலாறுகள் கரிந்த சாம்பலாகின்றன! கிரேக்க, ·பாரோ வரலாறுகள், காவியங்கள், ஹீப்ரூ படைப்புகள் அனைத்தும் நாசமாகின்றன! காட்டுமிராண்டித்தனம் சீஸரே!

ஜூலியஸ் சீஸர்: [சற்று கனிவோடும், சீற்றத்தோடும்] வருந்துகிறேன், கிளியோபாத்ரா! நூலகத்துக்கு யாரும் திட்டமிட்டுத் தீ வைக்க வில்லை! டாலமியின் படகுகளில் வைத்த தீ காற்றடித்தால் நூலகத்தில், தாவிப் பற்றி யிருக்க வேண்டும், என்பது எனது யூகம்!

கிளியோபாத்ரா: வருந்துகிறேன் என்று வெறும் வாய் வார்த்தை போதாது! நூலகம் திரும்பவும் மீளுமா? எப்படி அதை மீண்டும் உருவாக்குவது? முதலில் தீயை அணைக்க யாரும் போக வில்லை!

ஜூலியஸ் சீஸர்: [சற்று குற்ற உணர்வுடன்] டாலமியின் படையினர் எமது கப்பல் மீது முதலில் இட்ட தீ! ரோமானியர் யாரும் அந்தப் போரை ஆரம்பிக்க வில்லை! டாலமியின் ஆட்கள் ரோமானியரைக் கொல்லத் தொடங்கினர். பிறகு என்ன நடக்கும், போரைத் தவிர? ரோமானியரும் வெடிப்புக் குண்டுகளை எகிப்தியர் கப்பல்கள் மீது வீசினர்! அந்தத் தீயைக் காற்று தூக்கிச் சென்று தவறாக நூலகத்தில் விட்டுவிட்டது!

கிளியோபாத்ரா: [கோபத்துடன்] நூலகத்தின் பெயர் முன்னால் காட்டப் பட்டுள்ளது. அதைப் பார்க்காமல், அதன் அருகே எப்படி வெடிகுண்டை வீசலாம்! காட்டுமிராண்டிகள்தான் சிந்தனை யில்லாமல், கண்ணால் பாராமல் இப்படிச் செய்வார்!

ஜூலியஸ் சீஸர்: [தன் படையாட்களை வெளியே போகச் சொல்லி, அவர்கள் சென்ற பிறகு, பெருங் கோபத்துடன்] வாயை மூடு! ரோமானியரைக் காட்டுமிராண்டிகள் என்று எப்படி நீ திட்டலாம்? ஒழுக்கமுள்ள ரோமானியப் படைக்கு நிகராக எப்படையும் கிடையாது! நாகரீக மற்றவர் எகிப்தியர்தான்! ரோமானியர் அல்லர்! நான் ஜூலியஸ் சீஸர்! ரோமானியர் தலைவனாய்ப் போற்றுப் படுபவன்!

கிளியோபாத்ரா: நான் கிளியோபாத்ரா! எகிப்தியர் வணங்கும் மகாராணி! ஐஸிஸ் [1*] கடவுளாக வணங்கப் படுபவள் நான்! ·பாரோ மன்னர் நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உதயமானது! எங்கள் நாகரீகம் எப்படிப் பட்டதென்று நேராகப் பார்க்க வேண்டுமா? அதோ அங்குள்ள எங்கள் பிரமிட் கோபுரத்தில் புதைத்து வைத்துள்ள களஞ்சியங்களைப் பாருங்கள்! அதோ அங்கு படுத்துள்ள மனிதத் தலைச் சிங்கத்தைப் பாருங்கள்! ஈராயிரம் ஆண்டுக்கு முன் விருத்தியான எங்கள் கட்டடக் கலைக்கு நிகராக எந்த நாட்டில் உள்ளது?

ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! அவை எல்லாம் புராணக் கதைகள்! நீங்கள் இப்போது எங்கள் அடிமை! எகிப்த் நாடு ரோமுக்குக் கீழ் உள்ளது! நீ எப்போது எகிப்தின் அரசி ஆவாய் என்பது என் கையில் உள்ளது! நீ எகிப்தின் தேவதை ஐஸிஸ்தான்! ஆனால் நீ வெறும் ஓர் அழகுப் பதுமை! உன்னை அரசியாக என்றைக்கு நான் ஆசனத்தில் ஏற்றுவேனோ அன்றுதான் நீ எகிப்தின் ராணி! அதுவரை நீ வெறும் கவர்ச்சி மாதுதான்! காட்டுமிராண்டி என்று எங்களைத் திட்டியதற்கு நீ மன்னிப்புக் கேட்க வேண்டும்!

கிளியோபாத்ரா: சீஸரே! அது மட்டும் நடக்காது! ஐஸிஸ் கடவுளான கிளியோபாத்ரா யாரிடமும் மன்னிப்புக் கேட்க மட்டாள்! எகிப்தியர் நாகரீக மற்றவர் என்று அறிவில்லாமல் ஏளனப் படுத்திய நீங்கள்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை உங்கள் முகத்தில் நான் விழிக்கப் போவதில்லை! நான் போகிறேன்!

[கிளியோபாத்ரா கோபத்துடன் வெளியேறுகிறாள். சீஸர் பரிதாபமாய் விழித்துக் கொண்டு நிற்கிறார்]

[1*] ISIS – Egyptian Goddess

*********************

அங்கம் -2 பாகம் -14

“காதல் சம்பந்தப்பட்ட வரையில் பாலுணர்ச்சிகளைப் பொய்யாக எண்ணுவதைப் நானொரு மனிதப் பாபமாகக் கருதுகிறேன். அதே சமயத்தில் காதல் முழுதாயின்றிப் பின்னமாக உள்ள போது ஏற்படும் உணர்ச்சிகளை போலித்தனமானத் தவறென்று நான் மதிப்பீடு செய்கிறேன். நான் நம்புவதையே சொல்கிறேன்: காதலுற்ற போது ஒருவரை ஒருவர் முடிந்தவரை முழுமையாக நேசிக்க வேண்டும். அல்லாவிட்டால் என்ன நேர்ந்தாலும் சரி, ஒருவர் முழுக் கற்புடன் தனிமையாக வாழ வேண்டும்.”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

“இறைவா! எப்போதும் நான் சாதிக்கக் கூடுவதை விட மிகையாக வேட்கை கொள்வதையே எனக்கு அளித்திடு.”

மைக்கேலாஞ்சலோ [1474-1564]

“ஒரு நாளைப் பொழுதில் கடிது உழைத்துக் காலத்தைச் செலவழித்த பிறகு அன்றிரவில் ஆழ்ந்த சுகமான தூக்கம் வருவதைப் போல், நன்னெறியுடன் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியான மரணத்தை அளிக்கிறது!”

லியானார்டோ டவின்ஸி [1452-1519]

“என் எகிப்து நாடே! நன்கு அறிவாய் நீ!
நின் திசைதிருப்பிப் பின்தட்டுடன் கயிற்றால்
பிணைக்கப் பட்டு துள்ள தென்  இதயம் !
பிறகு நீதான் இழுத்துச் செல்ல வேண்டும்!”

[கிளியோபாத்ரா]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

நேரம், இடம்

 

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

 

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

 

காட்சி அமைப்பு

 

கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிகிறது!

தியோடோடஸ்: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] உலகப் புகழ் பெற்ற எங்கள் பெரு நூலகம் தீப்பற்றிக் கரியாகக் காரணமானீர்! உலக வரலாற்றை உருவாக்கும் மாவீரர் நீங்கள் பூர்வீக வரலாற்றை அழிப்பதில் பூரண விருப்பமா? எரிந்து போன நூல்களைப் புதிதாகப் பெற்றுத் தர வேண்டும். அல்லது நீங்கள் நட்ட ஈடு தர வேண்டும் எங்களுக்கு!

ஜூலியஸ் சீஸர்: [சற்று சீற்றமுடன்] ரோமானியக் கப்பலில் தீவைத்தது யார்? எகிப்தியப் படைகள்! கலகம் உண்டாக்கி நூலகத் தீயை அணைக்க முயலும் ரோமானியப் படைகளைத் தடுப்பது யார்? உங்கள் பரம்பரை! தொட்டில் பிள்ளையைக் கிள்ளி விட்டு, தாலாட்ட தாயைத் தேடுகிறீரா? உன்னத நூலகத்தின் மதிப்பை அறியாதவர் உங்கள் மூட மக்கள்! அறிவு கெட்டதனமாய் ரோமானியர் மீது பழி சுமத்த வேண்டாம்! உமது அறிவும் பழுதாகி விட்டது. ஏனிப்படிச் சும்மா நின்று கொண்டு என்னுடன் வாதாடிக் கொண்டிருக்கிறீர்? மெய்யாகவே நூலகத்தைக் காக்க விரும்பினால், வெளியே போய் தீயை அணைப்பீர்!

[தியோடோடஸ் பக்கத்தில் நிற்கும் போதினஸைப் பார்த்தவண்ணம் விரைந்து வெளியேறுகிறார்]

போதினஸ்: தியோடோடஸ், நான் போக முடியாது உன்னுடன்! நானொரு வீட்டுக் கைதி இங்கே! வெளியே எங்கும் உன்னைப் போல் நடமாட முடியாது நான்!

தியோடோடஸ்: [நடந்து கொண்டே] என்ன நீ ஒரு கைதியா? நூலகத்தை என்னால் முடிந்தவரைக் காக்க வேண்டும்! [போகிறார்]

ஜூலியஸ் சீஸர்: போதினஸ் நீதான் சொல்ல வேண்டும், உலக வரலாறுகள் எரிந்தழியும் இந்த நேரத்தில்! தியோடோடஸ் மூலம் செய்தி அனுப்பு, இனிமேலும் ரோமானியரைக் கொல்ல வேண்டா மென்று! என் நெஞ்சம் கொதிக்கிறது! போரிடாமல் வாளா நிற்கும் ரோமானியரைக் கொல்லத் துணியாதீர்! உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது, எமது படையினரைக் காப்பாற்றுவீரா?

போதினஸ்: [கோபமாக] உமது படையினர் உயிர் உமது கையில் உள்ளது! அவரைக் கப்பலில் ஏற்றி வந்தவன் நானில்லை! ஆனால் எமது உயிரைப் போக்கத் துணிந்தால், அதற்குப் பதிலாக நீவீர் பெருமிழப்பை ஏற்க வேண்டிய திருக்கும்!

ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] டாலமியும், நீயும் அக்கிலஸ் மூலமாக ஆயுதமற்ற என் மருமகன், ரோமானிய மாவீரன், பாம்ப்பியின் தலையை வெட்டிய பயங்கர வாதிகள்! உங்கள் குற்றத்துக்குத் தக்க தண்டனை கிடைக்கும்! அதில் ஐயமில்லை! நீவீர் நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரையில் முதல்தரக் கொலையாளியாகத்தான் எண்ணப்படுவீர்!

ரூஃபியோ: [அவசரமாய்க் குறுக்கிட்டு] ஜெனரல் சீஸர்! உங்கள் வருகை தேவைப் படுகிறது! உங்கள் முடிவு வேண்டப் படுகிறது! [துறைமுகம் வழியே எட்டிப் பார்த்து, படை வீரனிடம்] கிழக்கில் நிற்கும் சிறிய படகுகளை வெளியேற்று! நீண்ட படகுகளை என்ன செய்ய வேண்டுமென்று ஆணையிடச் சீஸர் வருவதாகச் சொல்! [சீஸரைப் பார்த்து] எங்கே அந்த எகிப்திய பயங்கர வாதிகளை? கொலைகாரர் அவர்கள்! அவர் மீது உங்களுக்குப் பரிவு மிகுந்து விட்டதா? அவருக்கு விடுதலை அளித்து விட்டீர்களா? பாம்ப்பியைக் கொன்ற அந்த பாதகரைச் சும்மா விடலாமா?

ஜூலியஸ் சீஸர்: ரூஃபியோ! நூலகத் தீயை அணைக்க தியோடோடஸை அனுப்பி யுள்ளேன்! உலக வரலாறுகளை, காவியங்களைப் பாதுகாக்க வேண்டும். போதினஸ் சிறைக் கைதியாக வைக்கப் பட்டிருக்கிறான்! நினைவில் வைத்துக் கொள் ரூ·பியோ! எத்தனை எகிப்தியனை நாம் சிறைப் படுத்தி வைத்திருக்கிறோம்! அதே சமயத்தில் ஒவ்வோர் எகிப்தியனுக்கும், இரட்டை ரோமானியக் காவலரைச் சிறைப்படுத்தி வைத்துள்ளோம், பாதுகாக்க.

ரூஃபியோ: சீஸர்! உங்கள் கசப்பான சுவைப் பேச்சில் ஏதோ ஒரு குள்ள நரித்தனம் தெரிகிறது எனக்கு! எகிப்தியர் மீது ஏன் உங்களுக்கு அத்தனை பரிவு? [பலகணி நோக்கிச் சென்று வெளியே எட்டிப் பார்த்து] சொல், என்ன நடக்கிறது துறைமுகத்தில்?

ஜூலியஸ் சீஸர்: [அங்குமிங்கும் பார்த்து] என்ன? பிரிட்டானஸ் தூங்கி விட்டானா? எனது கவசத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தேன். .. பிரிட்டானஸ்! எங்கே போய் விட்டாய்? கவசத்தைக் கொண்டுவா! காத்துக் கொண்டிருக்கிறேன். … யாரங்கே வருவது?

[அப்போது கிளியோபாத்ரா வெளியிலிருந்து சீஸரின் வாள், தலை கெல்மெட்டை பிரிட்டானஸிட மிருந்து பறித்துக் கொண்டு, ஆங்காரமாக உள்ளே நுழைகிறாள். அவளைப் பின்பற்றி பிரிட்டானஸ் தொடர்கிறான். சீஸருக்கு இடப்புறம் கிளியோபாத்ராவும், வலப்புறம் பிரிட்டானஸ¤ம் நிற்கிறார்கள்.]

கிளியோபாத்ரா: [ஆர்வமுடன்] ரோமன் கெல்மெட்டைப் பார்க்கவே வெகு அழகு! அதில் ஆண்மை தெரிகிறது! ஆண்மையின் வல்லமை தெரிகிறது. ஆண்மையின் அதிகாரம் தெரிகிறது. அதைத் தலையில் வைத்தால் ஆடவரின் உயரம் கூடுகிறது! முக லட்சணம் பராக்கிரமத்தைக் காட்டுகிறது! உங்களின் ஆண்மைத் தோன்றத்தைப் பன்மடங்கு அதிகரிக்கிறது! எடுப்பான உங்கள் முகத்தைப் பார்த்தால், பகைவரின் தொடைகள் நடுங்கும்! வயிற்றுக் குடல் வெளியே வந்திடும்! ஆடவருக்கு அப்படி ஓர் அதிகாரக் கெல்மெட் உள்ளது போல, பெண்டிருக்கு ஏன் செய்யப் படவில்லை? எனக்கொன்று அதுபோல் வேண்டும்!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] எங்கள் ரோமானியப் படையில் பெண் வாசமே அடிப்பதில்லை! மருத்துவக் குழுவில் கூட பெண்டிர் எவரும் கிடையாது! போர்ப்படையில் பெண்டிருக்கு யாம் வேலை தர மாட்டோம்! வீட்டுப் போரில் பங்கெடுப்பவர் எமது பெண்டிர்! வெளிப் போரில் பங்கெடுப்பவர் ஆடவர்! வீட்டுப் போரில் பெண்ணை ஆடவர் வெல்ல முடியாது! வெளிப் போரில் பெண்டிர் எம்மை மிஞ்ச முடியாது! வீராங்கனை உனக்கு ஓர் கெல்மெட் தேவைதான்! தயார் செய்து அனுப்பச் சொல்கிறேன். உன்னைப் போல் ஒரு வீரப் பெண்ணை ரோமில் எங்கும் காண முடியாது!

கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] ஆடவர் நீங்கள் வீட்டில் பெண்டிரை ஆராதித்துக் கொண்டு, அரவணைத்துக் கொண்டு, அலங்காரப் பொம்மைகளாய் நடத்திக் கொண்டு வருகிறீர்! என்னைப் போல் பெண்டிர் ரோமிலில்லை என்று கூறி மூடி மறைக்காதீர்! கையில் வாளைக் கொடுத்து, கவசத்தை மார்பில் கட்டி, குதிரையில் ஏற வாய்ப்பைக் கொடுத்தால் என்னைப் போன்ற பெண் ஏன் உருவாக மாட்டாள்?

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! அது உண்மைதான்! ரோமானியப் பெண்டிர் உன் வீரக் கண்களைப் பார்த்தவுடனே பக்கத்தில் வாள் உள்ளதா வென்று அவரது கைகள் தேட ஆரம்பித்து விடும்! நான் ரோமுக்குப் போகும் போது நீ அவசியம் என்னுடன் வா! உன்னை ரோமாபுரியின் பிரதான வீதிகளில் அழைத்துச் செல்கிறேன்! யாவரும் வாழ்த்தி வரவேற்பார்!

கிளியோபாத்ரா: [பூரிப்புடன் அருகி சீஸர் தோளைப் பற்றிக் கொண்டு] என் வயிற்றில் வளரும் உங்கள் ஆண்மகவு பிறந்து நடக்க ஆரம்பித்ததும் ரோமாபுரிக்கு வருகிறேன்! நிச்சயம் வருகிறேன்! ரோமாபுரியின் வருங்கால வாரிசு மன்னனான உங்கள் புதல்வனை, என் கரத்தில் பற்றிக் கொண்டு வருகிறேன்.

ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன் கிளியோபாட்ராவைத் தழுவி] ஆனந்தம் அடைகிறேன், கிளியோபாத்ரா! நீ தாயா? என் மகவுக்கு அன்னையா? மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்….. ஆனால் அது எப்படி ஆண்மகவு என்று அப்படி உறுதியாகச் சொல்கிறாய்?

கிளியோபாத்ரா: [சீஸரின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டு] எங்கள் அரண்மனை ஜோதிட நிபுணர் மூவரும் கூறினார், எனக்குப் பிறக்கப் போவது ஆண் மகவென்று! அதை நான் நம்புகிறேன்! அவர் வான சாஸ்திரம் அறிந்தவர். அலெக்ஸாண்டர் இந்தியாவைப் படை யெடுத்து மீண்ட சமயத்தில், அங்கிருந்த வான சாஸ்திர வல்லுநர் மூலம் கிரேக்க ஞானிகள் அறிந்த கலை. வாழையடி வாழையாக அந்த வான சாஸ்திரக் கலை எகிப்திலும் பரவி வளர்ச்சி பெற்றது. [கனிவுடன்] சீஸர்! சீஸர்! சீஸர்! நான் பிறந்ததின் உன்னத பலனைப் பெறுகிறேன். நிச்சயம், நமது முதல் குழந்தை ஆண்மகவு! அந்த எதிர்பார்ப்பில் சிறிதேனும் ஐயமில்லை எனக்கு! அந்த ஆண்மகவு உங்கள் வாரிசு! ரோமாபுரியின் எதிர்கால வேந்தர் வேந்தன்! எகிப்த் நாட்டின் வருங்கால மாமன்னன்!

ஜூலியஸ் சீஸர்: [ஆனந்தக் கண்ணீர் சொரிய] கிளியோபாத்ரா! என் கனவை நிஜமாக்கியவள் நீ! எனது மனைவி கல்பூர்ணியா பெற முடியாத ஆண்மகவை எனக்கு ஈடிணை யில்லாத அற்புதப் பரிசாக அளிக்கப் போகிறாய்! அரசனாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும், பிரதான பிள்ளைச் செல்வமாய், ரோமாபுரியும் என் குமரனை வரவேற்கும்! நிச்சயம் வரவேற்கும்! எனக்குக் கிடைக்கும் மதிப்பு என் எகிப்திய மகனுக்கும் கிடைக்கும்!

[கிளியோபாத்ரா சீஸர் மார்பில் சாய்ந்து கொள்கிறாள்]

++++++++++++++++++++

அங்கம் -2 பாகம் -15

“எவனொருவன் உன்னதக் களிப்பினை கவிதையின் உணர்வுகளிலிருந்து  கவர்ச்சி செய்கின்றானோ,  அவனே உண்மையான கவிஞனாகக் கருதப் படுகிறான், ஒருவரிக் கவிதை எழாதா விட்டாலும் கூட!”

 

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

ஒவ்வொரு பளிங்குப் பாறைத் துண்டிலும் எனக்கு நேர் எதிராகத் தோன்றும் வடிவம் ஒன்று உருவாகி முழுமையுடன் நடமாடுவதைக் காண்கிறேன். வெளிச்சுவரை உடைத்துச் சிறையினில் அடைபட்டிருக்கும் அந்த வடிவத்தை வெளியேற்ற, என் மனக்கண் கண்டு துடிப்பது போல் மற்றவரும் காணும்படிச் செய்வதே எனது படைப்புப் பணியாகும்.

மைக்கேலாஞ்சலோ [1474-1564]

இயற்கை படைத்துள்ளதைப் போன்று எளிமையாக, நளினமாக, நேரிடையாக எதிலும் ஒன்று குறையாமலும், ஒன்று கூடாமலும், கூரிய அறிவுள்ள மனிதன் ஒருபோதும் ஆக்க முடியாது!

லியானார்டோ டவின்ஸி [1452-1519]

எடுத்து வா எனது அங்கியை!
சூட்டி விடு எனது கிரீடத்தை!
தெய்வீக வேட்கை எழுகிறது என்னுள்!
என் உதடுகளை நனைக்கா தினிமேல்,
எகிப்தின் இனிய திராட்சைப் பழரசம்!
அதோ! அதோ! அருமை ஐராஸ், சீக்கிரம்! …
விடை பெறுகிறேன், நீண்ட விடுமுறைக்கு! …

(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

நேரம், இடம்

 

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்

 

ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர். ரோமனியக் காவலர். அரசியாக அலங்கரிக்கப் பட்டு, ராஜ கிரீடத்தை அணிந்து கம்பீரமாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அருகில் உள்ள ஆசனத்தில் சீஸர் ராணுவத் தளபதி உடுப்பணிந்து அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

காட்சி அமைப்பு

 

[கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிந்து, கிளியோபாத்ராவின் கோபத்தைத் தூண்டி விடுகிறது. டாலமியும், அவனது போர் அதிகாரிகளும் கொல்லப் பட்ட பிறகு சீஸரின் பாதுகாப்புடன், கிளியோபாத்ரா எகிப்தின் ஏக போக அரசியாய் முடிசூட்டிக் கொள்கிறாள்.]

ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவின் வலது கையைப் பற்றி முத்தமிட்டு] கண்மணி கிளியோபாத்ரா! உனது முடிசூட்டு விழா சிறப்பாக முடிந்தது. நீ எகிப்தின் ஏகாந்த, இணையற்ற அரசி! உனக்குப் போட்டியான உன் தனையன் டாலமி நைல் நதியில் மூழ்கிப் போனான்! எதிரிகள் உனக்கில்லை இப்போது! உன்னை அரசியாக்க வேண்டும் என்ற எனது பொறுப்பு முடிந்தது. ரோம சாம்ராஜியத்துக்கு எகிப்து நாடு அடிமை நாடாயினும், ஆண் வாரிசை எனக்கு அளிக்கப் போகும் நீ ஓர் அடிமை அரசி யில்லை! ஜூலியஸ் சீஸரின் மனைவி மதிப்பைப் பெற்றவள் நீ! ஆம் எனது இரண்டாம் மனைவி நீ! கூடிய சீக்கிரம் ரோமுக்குப் போகும் நான் உன்னையும் கூட்டிச் செல்வேன்! எனக்குக் கிடைக்கும் மதிப்பும், சமூக உயர்வு நிலையும் உனக்கும் கிடைக்கும்.

கிளியோபாத்ரா: [முக மலர்ச்சியுடன்] மாண்புமிகு சீஸர் அவர்களே! கிளியோபாத்ராவின் கனவை நிறைவேற்றினீர்! எகிப்தின் வரலாற்றை மாற்றினீர்! உங்களுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டவள்! உங்கள் எல்லையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும் கட்டுப் பட்டவள்! ·பாரோ மன்னர்களின் ராஜ பரம்பரைத் தகுதி எனக்குக் கிடைக்க வாய்ப்பளித்து, வல்லமை அளித்து, பக்கத்தில் பாதுகாப்பு அரணாக நிற்பவர். ஒப்பற்ற சீஸரை, எனக்கு உயிரளித்த சீஸரை, ஆட்சி உரிமை தந்த சீஸரை, என்னை ராணியாய் உயர்த்திய சீஸரை என்னுயிர் நீங்கும் வரை மறக்க மாட்டேன்! உங்களை என் உடமை ஆக்கி, என் உறவாளி ஆக்கி, என் ஆண்மகவுக்குத் தந்தை என்னும் வெகுமதி அளிக்கிறேன் என் கைமாறாக!

ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ரா தோள்களைப் பற்றிக் கொண்டு கனிவுடன்] கிளியோபாத்ரா! உன்னைப் போன்ற அறிவும், வீரமும் கொண்ட பெண்ணை நான் எங்கும் கண்டதில்லை! உன்னைப் போன்ற எழில் மிக்க மங்கையை நான் எங்கும் சந்தித்த தில்லை! நெஞ்சு உறுதியும், எடுப்பான நடையும், மிடுக்கான சொல்லும், நாக்கில் நளினமும் பெற்ற நங்கையை என் கண்கள் எங்கும் கண்ட தில்லை! [கிளியோபாத்ரா சீஸரைப் பாசமுடன் அணைத்துக் கொள்கிறாள்]

கிளியோபாத்ரா: [சீஸரை ஊன்றி நோக்கி] உங்கள் மார்பு பரந்தது; அதை விட உங்கள் மனம் விரிந்தது! அந்த எ·கு மனத்தை நான் பற்ற முடிந்தது எனக்குப் பூரிப்பளிக்கிறது. உங்கள் தோள் உயர்ந்தது; அதை விட உங்கள் உள்ளம் உன்னத மானது! அந்த உள்ளத்தில் நான் குடியேறியது எனக்குக் குளிர்ச்சி அளிக்கிறது! .. ஆனால் உங்கள் ரோமானிப் போர்த் தளபதிகள் பொல்லாதவர்! எனது முடிசூட்டு விழாவின் போது விஜயம் செய்த எல்லா மன்னர்களும் மண்டி யிட்டபோது, அவர்கள் மட்டும் நின்று விழித்துக் கொண்டு என்னை அவமானப் படுத்தினர்! என்ன அகங்காரம் அவருக்கு? நீங்கள் கூட மண்டியிட்டு எனக்கு மதிப்பளித்தீர்; அது எனக்கு மனம் மகிழ்ச்சி தந்தது! ஆனால், உங்கள் கொடிய தளபதிகள் …!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] நான் கடைசியில் அவர்களுக்குக் கையசைத்து மண்டியிட வைத்தேன்! ரோமாபுரியில் யாரும் எவருக்கும் மண்டியிட்டு மதிப்பளிப்ப தில்லை! அதுவும் ஒரு பெண்ணரசிக்கு ஆடவர் மண்டி யிடுவதில்லை! எங்கள் நாட்டுக்கு அரசரே கிடையாது! அதுவும் உன்னைப் போலொரு வாலிபப் பெண் அரசியாக முடியாது! அடுப்பூதும் எமது அணங்குகள் உன்னைப்போல் கையில் செங்கோல் ஏந்திக் கம்பீர நடை போடுபவ ரில்லை!

கிளியோபாத்ரா: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] ரோமாபுரி சாம்ராஜியத்தின் சர்வாதிகாரியான நீங்கள், ரோமின் சக்கரவர்த்தி அல்லவா? ரோமாபுரியின் வேந்தர் வேந்தன் என்று முடி சூடத்தானே, நீங்கள் சீக்கிரம் போவதாக உள்ளது!

ஜூலியஸ் சீஸர்: [சற்று வருத்தமுடன்] கிளியோபாத்ரா! ரோமாபுரிக்கு நான் அதிபதியாகச் சென்றாலும், என்னை வேந்தன் என்று ரோமானியர் ஏற்றுக் கொள்ள மாட்டார். ரோமாபுரியின் சக்கரவர்த்தி போல் ரோமானியர் எனக்கு மதிப்பளித்தாலும், என்னை அரசன் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்.

கிளியோபாத்ரா: [சற்று கவனமாக] அரசராகக் கருதப் படாமல், உங்களுக்கு என்ன விதமான ஆதிக்கமும், அதிகாரமும் உள்ளது? நீங்கள் அரசனில்லை என்றால், நாட்டை ஆட்சி புரிவது யார்? நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பது யார்? நாட்டைப் பகைவரிடமிருந்து பாதுகாப்பது யார்?

ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! எகிப்த் ரோமின் அடிமை நாடுகளில் ஒன்று! ஆனால் எகிப்தில் உனக்கிருக்கும் அதிகாரம், உன்னை விட ஆற்றல் மிக்க எனக்கு ரோமில் கிடைக்காது! ரோமாதிபதிக்கு ஆலோசனை கூறி ரோமா புரியை முழுநேரமும் கண்காணித்து வருவது, குடியாட்சி மக்களின் பிரதிநிதிகளான வட்டாரச் செனட்டர்கள்! செனட்டரின் தீர்மானமே குடியாட்சியின் தெய்வ வாக்கு! முடியாட்சியில் நம்பிக்கை யில்லாத ரோமாபுரியில் நானோர் மன்னனாக ஆட்சி செய்ய முடியாது!

கிளியோபாத்ரா: அப்படி யானால் நீங்கள் வெறும் பொம்மை ராஜாவா? குடியாட்சி என்றால் என்ன? எனக்குப் புதிராக உள்ளது! புரிய வில்லை, குடியாட்சி என்றால்! செனட்டர் குடித்து விட்டு நடத்தும் ஆட்சியா? குடித்து விட்டுக் கொட்ட மடிக்கும் ஆட்சி எப்படிக் கோமாளித்தனமாக இருக்கும்? குடிக்காமல் அறிவோடு நடத்தும் ஆட்சியே குழப்பத்தையும், கொந்தளிப்பையும் தூண்டும் போது, குடியாட்சி மட்டும் எப்படிக் கோணத்தனமாய் இருக்காது என்பதை என்னால் கற்பனை செய்ய முடிய வில்லை!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] குடிக்கும், குடியாட்சிக்கும் எந்தச் சம்பந்தமு மில்லை! முடியாட்சி என்பது உன்னைப் போன்ற ஒரு மன்னன் ஆட்சி புரிவது! அது ஒற்றை மனிதன் செய்வது! மன்னருக்கு ஓரிரு மந்திரிகள் ஆலோசனை கூற அருகிலிருப்பார். குடியாட்சியில் தலைவன் என்னைப் போலொரு போர்த் தளபதி! ஆனால் அவன் முடிசூடா மன்னன்! அவனுக்கு ஆலோசனை சொல்பவர் ஓரிருவர் மட்டும் அல்லர்! நூறு அல்லது அல்லது இருநூறு செனட்டர்கள். நாட்டு வட்டாரங்களின் அதிபதிகள் அவர். செனட்டர் மூலமாகக் குடியாட்சியில் நாட்டின் மூலை முடுக்கிலுள்ள மக்களின் பிரச்சனைகள் கவனிக்கப் படுகின்றன. முடியாட்சியைக் கண்காணிப்பது இரண்டு கண்கள் என்றால், குடியாட்சியைக் கவனிப்பது ஆயிரம் கண்கள். தளபதி பொம்மை அரசன் அல்லன்! பிரச்சனையின் தீர்வை முடிவு செய்பவன் தளபதி. பிரச்சனையை எப்படி அணுகுவது என்று திசை காட்டுபவன் தளபதி. புரிகிறதா?

கிளியோபாத்ரா: [சற்று வெறுப்புடன்] என்ன இருந்தாலும் எனக்குள்ள ஆற்றலும், அதிகாரமும் உங்களுக் கில்லை. உலக சாம்ராஜியங்கள் எல்லாம் முடியாட்சியில்தான் உன்னதம் அடைந்தன! குடியாட்சி எதையும் சாதிக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. அங்கே பல தலைகள் ஒரே சமயத்தில் எழுவதால் குழப்பம்தான் உண்டாகும்.

ஜூலியஸ் சீஸர்: அதை ஒப்புக் கொள்கிறேன். ரோமாபுரி ஆட்சி அரங்கில் இனவாரி ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது! என் பகைவன் பாம்ப்பியின் சகாக்கள் எண்ணிக்கையில் மிகுதி! அதாவது எனக்கு எதிரிகள் அதிகம். என் ஆணைகள் எதுவும் வாசலைத் தாண்டுமா என்பது ஐயம்தான்! என் கொள்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஐயம்தான்! நீண்ட காலம் ஆட்சிப் பீடத்தில் நான் அதிகாரம் செலுத்துவேனா என்பதும் ஐயம்தான்! ரோமாபுரியில் என் ஆணைக்கு மதிப்பில்லை! என் அதிகார மெல்லாம் நான் கைப்பற்றிய அன்னிய நாடுகளில்தான்!

கிளியோபாத்ரா: [வருத்தமுடன்] அப்படி யானால் உள்ளூரில் பொம்மை ராஜா! வெளி ஊரில் உண்மை ராஜா!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] அப்படியே வைத்துக்கொள். நான் ரோமுக்குச் சீக்கிரம் புறப்பட வேண்டும்! போனால்தான் என்னிலையே எனக்குத் தெரியும்!

கிளியோபாத்ரா: [கவலையுடன்] நான் உங்களைப் பிரிந்து எப்படி அரசாளுவேன்? என் மகன் பிறக்கும் போது, நீங்கள் என்னருகில் இருக்க வேண்டும்! ரோமுக்குப் போன பின்பு, எப்போது எகிப்துக்குத் திரும்புவீர்? நீங்களின்றித் தனிமையில் நான் வாழ முடியாது.

ஜூலியஸ் சீஸர்: ரோம் எனக்கு ஒருபோக்குப் பாதை! நானினி எகிப்துக்கு மீள மாட்டேன்! பாலை வனத்தின் தீக்கனலில் வெந்து நான் பல்லாண்டுக் காலம் பிழைத்திருக்க முடியாது! நீ எகிப்தை விட்டு ரோமுக்கு வந்துவிடு! நிரந்தரமாக வந்துவிடு! என்னோடு நீண்ட காலம் வாழலாம்!

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] அதெப்படி முடியும்? நான் எகிப்திய ராணி! நான் ரோமாபுரி ராணி யில்லை! ரோமாபுரிக்கு ஒருமுறை நான் விஜயம் செய்யலாம், என் மகவோடு! அத்துடன் சரி! நிரந்தரமாக அங்கே நான் எப்படித் தங்க முடியும்? ரோமில் தங்கிக் கொண்டு கிளியோபாத்ரா ஒருபோதும் எகிப்தை ஆள முடியாது! ஆனால் அதே சமயம் நான் உங்களைப் பிரிந்து ஒருபோதும் தனியாக வாழ முடியாது!

ஜூலியஸ் சீஸர்: [வெறுப்புடன்] கிளியோபாத்ரா! அது உன் பிரச்சனை! அதை என்னால் தீர்க்க முடியாது! நான் ரோமன்! எகிப்திலே உன் விருந்தினனாக என் வாழ்நாள் முழுதும் தங்க முடியுமா? சொல் கிளியோபாத்ரா! உன்னை எகிப்துக்கு ராணி ஆக்கியதும் என் கடமை முடிந்து விட்டது! நான் போக வேண்டும். நாமிருவரும் ஒரே நாட்டில் நீண்ட காலம் சேர்ந்து வாழ முடியாது! நீயும் நானும் நிரந்தரமாகப் பிரிந்துதான் வசிக்கப் போகிறோம்! நீயும், நானும் தனித்தனி உலகில் தனியாகத்தான் வாழ வேண்டும்!

கிளியோபாத்ரா: [ஏக்கமுடன்] அப்படியானால் பிறக்கப் போகும் ஆண்மகவின் கதி? அவன் உங்கள் புத்திரன்! அவன் உங்கள் வாரிசு. அவன் வாழப் போகுமிடம் ரோமாபுரியா? அல்லது எகிப்து நாடா?

ஜூலியஸ் சீஸர்: [வெறுப்புடன்] எனக்குத் தெரியாது கிளியோபாத்ரா! உன்னிடம் அவன் வாழ்வதுதான் சரியாகத் தெரிகிறது எனக்கு! ரோமாபுரியில் எனக்கு எதிரிகள் மிகுதி! அவரிடம் என் மகன் சிக்கிக் கொண்டால், அவனைக் கொன்று விடவும் அவர் தயங்க மாட்டார்! அவன் ரோமுக்கு வாரிசாக வந்து விடுவான் என்று வாளெடுத்துச் சிறுவன் தலையைச் சீவி விடுவார்! பாதுகாப்பாக என் மகன் உன்னிடம் இருப்பதே மேலானது!

*********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *