image

அங்கம் -3 காட்சி -1

கண்களை மட்டும் கவர்ந்திடும் வனப்பு, கணப்பொழுதில் மலர்ந்து கருகுவது! ஏனெனில் மானிடக் கண்கள் எப்போதும் ஆத்மாவின் ஜன்னல்கள் அல்ல!”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

“உலகத்தின் வாக்குறுதிகள் பெரும்பான்மையாக வீண் மாயைகள்தான்! ஒருவன் தன்மீது உறுதியாக நம்பிக்கை கொண்டு, ஒரே ஒரு வினையில் தகுதியும், மதிப்பும் பெறுவதே மானிடத்தின் மிகச் சிறந்த நடைமுறைப் போக்கு.”

மைக்கேலாஞ்சலோ [1474-1564]

“இயற்கை நியதிகள் யாவும் மூல காரணங்களால் எழுப்பப் பட்டு, அனுபவ முடிவுகளாய் எழுதப்பட்டாலும், நாம் அதற்கு நேர்மாறாகச் செய்ய வேண்டும். அதாவது நாம் நமது அனுபவத்திலிருந்து ஆரம்பித்து, காரணத்தை உளவ முனைய வேண்டும்.”

லியானார்டோ டவின்ஸி [1452-1519]

அண்டனி அழைப்பது எனக்குக் கேட்கிறது!
என் பணியைப் பாராட்டத்
தன்னைத் தூண்டிக் கொள்கிறார்!
சீஸரின் அதிர்ஷ் டத்தைக்
கேலி செய்யும் அவர் குரல்
கேட்கிறது எனக்கு!
கோபத் தணிப்பை மனிதர்
முடக்கிக் கொள்ள
கடவுள் தந்த விடுவிப்பு அது!
எந்தன் பதியே ! நானுடன் வருவேன்!
அந்தப் பெயரின் தகுதிக்குச்
சான்ற ளிக்கும் என் நெஞ்சழுத்தம்!
நான் அக்கினி! நான் வாயு!
நான் அனைத்து மூலகங்கள் ஆவேன்!
நான் உயிர் மூலத்தை அளிப்பவள்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

நாடகப் பாத்திரங்கள்:

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [40 வயது], காஸியஸ் [30 வயது]. ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].

நேரம், இடம்:

 

 ரோமாபுரியில் ஜூலியஸ் சீஸரின் மாளிகை. காலை வேளை

 

நாடகப் பாத்திரங்கள்

ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா, மார்க் ஆண்டனி

 

காட்சி அமைப்பு

[கல்பூர்ணியா கவலையுடன் அமர்ந்திருக்கிறாள். அப்போது ரோமாபுரியின் ஆட்சி அதிபதி மார்க் ஆண்டனி விரைவாக உள்ளே நுழைகிறான்.]

கல்பூர்ணியா: [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] வா, ஆண்டனி! உன் வருகைக்கு நான் காத்திருக்கிறேன். [எழுந்து வரவேற்கிறாள்] உட்கார், சிஸிலி மதுபானம் தருகிறேன். உன்னுடன் நான் பேச வேண்டும்.

ஆண்டனி: [தலைகுனிந்து வந்தனம் செய்து] வந்தனம், கல்பூர்ணியா! என்ன நடந்தது? கண்களில் நீர் கொட்டுகிறதே! உனக்கென்ன கவலை?

கல்பூர்ணியா: ஆண்டனி! இன்னமும் என்ன நடக்க வேண்டும்? நடக்கக் கூடாதது நடந்து விட்டது! நான் உயிரோடு வாழ வேண்டுமா? யாருக்காக வாழ வேண்டும்? நான் அனாதை ஆகி விட்டேன்! என்னைத் துறந்து விட்டார் சீஸர்! மறந்து விட்டார் சீஸர்! என் கணவர் கிளியோபாத்ராவின் காலடியில் கிடக்கிறார்! ரோமாபுரியை அவர் மறக்கும்படி, மகுடி ஊதி மயக்கி விட்டாள் அந்த மாயக்காரி. அவரது அன்பு மனைவியைக் கூட துறக்க வைத்து விட்டாள் அந்த மாதரசி! வருகிறேன், வருகிறேன் என்று சொல்லிச் சீஸர் என்னை ஏமாற்றி வருகிறார்! கணவரின் காலைக் கட்டி, கதவைப் பூட்டிச் சிறை வைத்திருப்பவள் அந்த காதகி! என்னை இராப்பகலாய்த் துடிக்கச் செய்பவள் அந்த நடிப்பரசி! என் கணவர் மருமகனைத் தேடி எகிப்துக்குப் போயிருக்கக் கூடாது!

ஆண்டனி: [ஆறுதலாக] கல்பூர்ணியா! கவலைப் படாதே! சீஸர் வந்து விடுவார்! கண்டதும் கொள்ளும் காதல் நிலையற்றது! கருகிக் காய்ந்து போவது! தீப்பிடிக்கும் அந்த பாலை வனத்தில் மனிதர் நீண்ட காலம் வசிக்க முடியாது! சீஸரின் பெண் மோகம் நீடிக்காது! அவருக்கோ வயது 52. அவளுக்கு வயது 20. அந்த கிழவர் குமரி மோகம் தளர்ந்து போகும் காமம். சீஸரின் பிரதம மனைவி கல்பூர்ணியாவின் இடத்தை அந்தக் கன்னி என்றும் பிடிக்க முடியாது! கிளியோபாத்ரா ஒரு விளையாட்டுக் கன்னி!

கல்பூர்ணியா: [வெகுண்டு சீற்றமாய்] என்ன அவளொரு கன்னியா? அவள் கன்னி கழிந்து மாதங்கள் கடந்து விட்டன! அது, உனக்குத் தெரியாதா? சீஸரின் குழந்தையை எகிப்த் ராணி சுமப்பதாக நான் கேள்விப் பட்டேன். [சட்டெனக் கண்ணீர் பொங்கி அழுகிறாள்] நான் பெற முடியாத பிள்ளையைக் கிளியோபாத்ரா சீஸருக்குப் பெற்றுத் தருகிறாள்! சீஸர் எதற்காக இனி எனை நாடி வரப் போகிறார்? இங்கே இல்லாத குடும்பம், எகிப்தில் உள்ள போது ஏன் சீஸர் எனைத் தேடி வருவார்?

ஆண்டனி: [சினத்துடன்] கிளியோபாத்ராவின் குழந்தையைச் சீஸர் தன் மகவாகத் தாலாட்டினாலும், ரோமாபுரி அதை ஏற்றுக் கொள்ளாது! கல்பூர்ணியா! அதைக் கள்ளப் பிள்ளையாகத்தான் ரோம் புறக்கணிக்கும்!

கல்பூர்ணியா: இ ல்லை ஆண்டனி இல்லை! அது கள்ளப் பிள்ளை இல்லை! கிளியோபாத்ராவை சீஸர் எகிப்த் வழக்கப்படி மணந்து கொண்டதாக நான் கேள்விப் பட்டேன்! நான் முதல் மனைவி யானாலும், அவள் சட்டப்படி இரண்டாம் மனைவி! அதுவும் சீஸரின் எதிர்கால வாரிசை வேறு வயிற்றில் தாங்கிக் கொண்டிருக்கிறாள்! பிள்ளை யில்லாமல் போன வரண்ட பாலை என் வயிறு! பிள்ளையைப் பெற்றுத் தன்னைப் பெண்ணென்று நிரூபித்த கிளியோபாத்ரா ஒரு பாலைவனப் பசுஞ்சோலை! அவர் வராமல் ஏன் காலம் கடத்துகிறார் என்று தெரிகிறதா ஆண்டனி? கிளியோபாத்ரா ஒரு மாது! நானொரு மலடி!

ஆண்டனி: எல்லாம் எனக்குத் தெரியும் கல்பூர்ணியா! ஆனாலும் அந்தத் திருமணம் ரோமாபுரியில் செல்லாது. ரோமானியர் ஒப்புக் கொள்ள மாட்டார்! அது போலித் திருமணம்! கிளியோபாத்ராவை ஏமாற்ற சீஸர் புரிந்த கேலித் திருமணம் அது! கீழ்நாட்டுக் குடியினர் காட்டுத்தனமாய்ப் புரிந்து கொள்ளும் திருமணம் மேல்நாட்டு மாந்தர் ஏற்றுக் கொள்வதில்லை! அந்தப் போலி மனைவிக்காக மனதை வாட்டிக் கொள்ளாதே, கல்பூர்ணியா!

கல்பூர்ணியா: [சூதாக] கிளியோபாத்ரா வயிற்றுக்குள் உதைக்கும் சீஸரின் குழந்தையும் போலியா? கிளியோபாத்ராவைப் போலி மனைவி என்று நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை! சீஸர் அவளுடன் செய்த திருமணமும் போலித் திருமண மில்லை! உண்மையாகச் சொல்லப் போனால், நான்தான் சீஸரின் போலி மனைவி! பிள்ளை பெற்றுத் தரமுடியாத கல்பூர்ணியா போலி மனைவியா? அல்லது கர்ப்பவதியான கிளியோபாத்ரா போலி மனைவியா?

ஆண்டனி: கல்பூர்ணியா! நீ தெளிந்த அறிவு கொண்டவள்! கிளியோபாத்ரா உன்னைப் போல் அறிவாளி யில்லை! கீழ்நாட்டுக்காரி மேல்நாட்டுக்காரி உனக்கீடு ஆவாளா? நீ எங்கே? அவள் எங்கே? உன் வயதும், உலக அனுபவமும் அவளுக்கில்லை! அவளொரு சிறுமி!

கல்பூர்ணியா: ஆண்டனி! என்ன பேசுகிறாய்? உனக்குக் கிளியோபாத்ராவைப் பற்றிச் சரிவரத் தெரியவில்லை! அவளுக்கு ஒன்பது மொழிகள் நன்றாகத் தெரியும்! ·பாரோ வேந்தர் பரம்பரையில் பிறந்தவள்! பதினெட்டு வயதிலேயே எகிப்திய ராணியாய்த் தமையனுடன் பட்டம் சூடியவள்! ஒருபுறம் அலெக்ஸாண்டரின் சந்ததி என்றும் கேள்விப் பட்டேன்! அவளுக்கு யாரோ, பித்த .. பித்த..கோரஸ் கோட்பாடு கூடத் தெரியுமாம்! யாரவன் பித்தகோரஸ்? உனக்குத் தெரியுமா? அவன் என்ன கோட்பாடைக் கூறினான்?

ஆண்டனி: [தலைகுனிந்து] யாரோ ஒரு மடையன்! எனக்குத் தெரியாது!

கல்பூர்ணியா: [சிரித்துக் கொண்டு] பார், உனக்கே தெரியவில்லை! அவனொரு .. கணித மேதையாம்! அவன் கொள்கையைப் பயன்படுத்தித்தான் பிரமிட் கோபுரங்களே எகிப்தில் கட்டப் பட்டனவாம்!

ஆண்டனி: [சிரித்துக் கொண்டு] எகிப்தில் நான் அந்த பிரமிட்களைப் பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டமான கோபுரங்கள்! செத்துப் போன ·பாரோ மன்னரைப் புதைக்க அத்தனைப் பெரிய பீடங்கள் கட்ட வேண்டுமா? அதன் அடிப்படைப் பித்தகோரஸின் கோட்பாடு என்று நீ சொல்லித்தான் கற்றுக் கொண்டேன்! பார்த்தாயா? நான் சொன்னபடி நீதான் தெளிந்த அறிவுள்ளவள்.

கல்பூர்ணியா: எனக்கு என்ன இருந்தாலும், நான் கிளியோபாத்ராவுக்கு ஈடானவளில்லை! அவள் ஒரு ஞானப் பெண்! எகிப்தின் எழிலரசி! சீஸர் அவளது அழகிலும், அறிவிலும் மயங்கியதில் வியப்பில்லை! அவளை ஆசை நாயகியாக அவர் வைத்துக் கொள்ளட்டும்! சீஸருக்கு எத்தனையோ ஆசை நாயகிகள் உள்ளார்! ஆனால் கிளியோபாத்ராவை மட்டும் ஏன் மணந்து கொள்ள வேண்டும்? என்னை எதற்காக அவர் ஒதுக்க வேண்டும்? என்னை ஏன் அவர் மறக்க வேண்டும்? என்னை ஏன் அவர் துறக்க வேண்டும்? வயதாகிப் போன கிழ மாதால் அவருக்கு ஏது பயனுமில்லை! அவரைப் பிடித்து வைத்துக் கொள்ள ஒரு பிள்ளையாவது பெற்றேனா? அவரைக் கவர்ந்து கொள்ள ஆண்டவன் எனக்கு அழகை யாவது கொடுத்தானா? நான் எதை வைத்தினி என்னவராய் ஆக்கிக் கொள்வேன்? என் சீரும், செல்வமும், மாளிகையும் அவரை என்னிடம் மீட்டுக் கொண்டு வரவில்லை! என் ஆடம்பர வாழ்க்கை என் கணவரைக் கவரவில்லை!

ஆண்டனி: [ஆர்வமுடன்] கல்பூர்ணியா! கண் கலங்காதே! நான் சீஸரை அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன். நிச்சயம் நான் உனக்குச் செய்வேன். கவலைப் படாதே!

கல்பூர்ணியா: ஆண்டனி! என் பெயரைச் சொல்லி நீ அவரை அழைக்க வேண்டாம்! என் கண்ணீரைக் காட்டி அவரை நீ விளிக்க வேண்டாம்! என் தூங்காத நாட்களை கூறி நீ அவரை இழுத்து வரவேண்டாம்! அவர் தானாக என்னைத் தேடி வரட்டும்! ஏனென்றால் என் பெயரைக் கேட்டால், சீஸர் வந்த பாதையில் மீண்டும் திரும்பி விடுவார்! என்னைத் தேடி வராதவர் எனக்கு வேண்டாம்! நான் போலி மனைவியா அல்லது கிளியோபாத்ரா போலி மனைவியா என்பதை நான் அறிந்தாக வேண்டும்! ஆண்டனி! என் பெயரைச் சொல்லி அவரை அழைக்காதே! வேண்டாம், அவரை அந்தக் கள்ளியிடமே விட்டுவிடு! அவளைக் கட்டிய மனைவியாக ரோமாபுரி அறிந்த பிறகு, நானினி அவரது மனைவி என்று சொல்ல நாணம் அடைகிறேன்! அவளது அதரங்களை முத்தமிட்ட சீஸர், பிறகு என் வாயில் முத்தமிடுவதை நான் அறவே வெறுக்கிறேன்!

*********************

அங்கம் -3 காட்சி -2

“ஒருவரை நேசிப்பது, திருப்பி அவரால் நேசிக்கப்படுவது ஒன்றுதான் நமது வாழ்க்கையில் இன்பம் அளிப்பது. .. வயதாகி மூப்புநிலை அடையும் வரைத் துடிப்புடன் உன் ஆத்மாவை இளமையாகவே வைத்திரு. மாதர் எப்போதும் நேசிக்கிறார். ஆனால் அவர் நிற்கும் பூமி தடத்தை விட்டு அகலும் போது, அவர்கள் மேலுலகை நோக்கிச் சரண் அடைகிறார்.”

 

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

“ஒரு நாட்டில் உன்னத ஒழுக்கமாகக் கருதப்படும் ஒரு பண்பு, மற்றோர் நாட்டில் மிகச் துச்சமாக எண்ணப் பட்டு ஒதுக்கப் படலாம். .. மனித இச்சை வாழ்க்கைப் போக்கில் ஒரு பாதியாவைப் போல், கவனமின்மை என்பது மரணத்தின் ஒரு பாதியாகும். .. இரவின் பாதை வழியாக நடக்காது, ஒருவன் காலை உதயத்தை அணுக முடியாது.”

கலில் கிப்ரான் ஓவியர், கவிஞர் [Kahlil Gibrahn (1883-1931)]

“மெய்யான ஒரு கலைப் படைப்பு, தெய்வீகப் பூரணத்தின் ஒரு நிழலே தவிர வேறில்லை. என் கையில் உளி ஒன்று உள்ள போதுதான், என் மனம் எனக்குக் குளிர்ச்சியை அளிக்கிறது. … செதுக்கப் படாத ஒரு பளிங்குக் கல், மகத்தான ஒரு சிற்பியின் பல்வேறு கற்பனை வடிவங்களைக் காட்டுகிறது!”

மைக்கேலாஞ்சலோ [1474-1564]

“எனது படைப்பு பெறக் கூடிய உன்னத தரத்தை எட்டாது போனால், கடவுளையும், மனித சமூகத்தையும் அவமதித்தாக நான் கருதுகிறேன்!”

லியானார்டோ டவின்ஸி [1452-1519]

“புலால் உண்ண மாட்டேன் !
மதுபானம் அருந்த மாட்டேன் !
பொருளற்ற வார்த்தைகள் புகல நேர்ந்தால்,
உறக்கம் வாரா தெனக்கு!
என் அரண்மனைப் பேர் நாசமாகும்!
எது வேண்டினும் செய்யட்டும், அக்டேவியஸ்!
உன் அதிபதியின் நீதி மன்றத்தில்
என் கால்கள் ஒருபோதும் நிற்க மாட்டா!” …

(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

நாடகப் பாத்திரங்கள்:

கிளியோபாத்ரா, அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸியஸ் [30 வயது]. ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].

அங்கம்: 3 காட்சி: 2

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனையில் தனியிடம். காலை வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

கிளியோபாத்ரா, மருத்துவச்சி, சேடியர், மற்றும் ஜோதிடர் எதிர்பார்ப்போடு பரபரப்பில் உள்ளார். கிளியோபாத்ராவின் ஆயா பிதாதீதா இங்கும் அங்கும் கவலையோடு ஓடிக்கொண்டிருக்கிறாள். ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, ரோமானியப் போர்த் தளபதிகள் வெளியே காத்திருக்கிறார்.

காட்சி அமைப்பு:

[கிளியோபாத்ரா தனிப்பட்ட பிரசவ அறையில் படுத்திருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறக்கப் போவதை எதிர்பார்த்து ஜூலியஸ் சீஸர் ஆர்வமுடன் அறை வாயிலில் நின்று கொண்டிருக்கிறார். கிளியோபாத்ராவைச் சுற்றி மருத்துவச்சி மூன்று பேர் அருகில் கண்காணிப்புடன் நிற்கிறார். திரைமறைவுக்கு அடுத்த அறையில் எகிப்திய ஜோதிட நிபுணர் வானநூல் ஏடுகளுடன் குழந்தை பிறக்கும் நேரத்தின் அம்சங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். ரோமானிய தளபதிகள் வெளியே மதுவருந்திய வண்ணம் கேலிக்கையில் உரையாடிக் கொண்டுள்ளார்.]

பிதாதீதா: [ஆவேசமாய் அறை வாசல் முன்பு] மாண்புமிகு அதிபதி அவர்களே! கிளியோபாத்ராவுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. மகாராணிக்கு வேதனை அதிகம். எனக்குப் பயமாய் உள்ளது! அவருக்கு முதல் குழந்தை அல்லவா? ஐஸிஸ் தெய்வம் அருகில் நின்று மகாராணிக்குச் சுகப் பிரசவத்தை அளிக்கும். [மேலே நோக்கி கைகளை உயர்த்தி] ஐஸிஸ் தெய்வமே! எங்கள் ராணிக்குச் சுகப் பிரசவத்தைக் கொடு. தாயும், சேயும் நலமாக வேண்டும்.

ஜூலியஸ் சீஸர்: மாதே, நீ யார்? அநேக முறை உன்னை அரண்மனையில் பார்த்திருக்கிறேன். நீ யார்? உன் வேலை என்ன? நீ தந்த தகவல் இனிய தகவல். கிளியோபாத்ராவுக்கு எப்போது குழந்தை பிறக்கும், சொல்?

பிதாதீதா: மதிப்புக்குரிய அதிபதி அவர்களே! என் பெயர் பிதாதீதா! மகாராணியின் வளர்ப்பு ஆயா நான். பொழுது சாய்வதற்குள் குழந்தை பிறந்து விடும்.

ஜூலியஸ் சீஸர்: பேத்தா தூத்தா, என்ன பெயரிது? வாயிலே கூட வரமாட்டாது போல் தெரியுது! நீ வளர்ப்புத் தாயா?

பிதாதீதா: என்னை பிதாதீதா என்றுதான் அழைக்கிறார்! எனக்கு வைத்த உண்மையான பெயர் ·பிடாடாடீட்டா! என் வயிலே கூட என் உண்மைப் பெயர் வருவதில்லை! அதனாலே என்னை பிதாதீதா என்று விளித்தாலே போதும், நான் துள்ளி ஓடி வந்து விடுவேன்! ஆமாம் நான் வளர்ப்புத் தாய். மகாராணி குழந்தையாக உள்ள போதே நான் தாலாட்டுப் பாடி வளர்த்தவள்.

ஜூலியஸ் சீஸர்: நானுன்னைச் சுருக்கமாக எப்படி அழைப்பது? உன் உண்மைப் பெயரை நீ நூறு முறைச் சொன்னாலும், என் நாக்கால் அதைக் கூற முடியாது! … அது சரி, கிளியோபாத்ரா எப்படி இருக்கிறார்? குழந்தை பிறக்கும் வேளை நெருங்கி விட்டதா?

பிதாதீதா: குழந்தை மெதுவாகத்தான் இறங்குகிறது. மகாராணியாருக்கு வேதனை மிகுதி! ஐஸிஸ் தெய்வம்தான் அருள் புரிய வேண்டும்.

[அப்போது பிரசவ அறையிலிருந்து சேடி ஒருத்தி ஓடி வருகிறாள்]

சேடி: பிதாதீதா! வா, சீக்கிரம் உள்ளே வா! மகாராணி உன்னை அழைத்து வரச் சொன்னார். மிக்க அவசரம். வா!

[பிதாதீத்தா சேடியுடன் பிரசவ அறைக்குள் விரைவாக நுழைகிறாள்]

கிளியோபாத்ரா: [கட்டிலில் படுத்துக் கொண்டே, சற்று வேதனையுடன்] பிதாதீதா! வா என்னருகில். சொல்வதைக் கவனித்துக் கேள்! குழந்தை பிறந்ததும், அதைத் துடைத்து ஆடை, ஆபரணம் எல்லாம் அணிந்து தூக்கிக் கொண்டு சீஸரிடம் செல்ல வேண்டும்! அவரது அருகில் நிற்கும் ரோமாபுரி அதிகாரிகள் அனைவர் கண்களில் தெரியும்படிக் குழந்தையைக் காட்ட வேண்டும். அனைவர் காதிலும் கேட்கும்படி உரக்கக் குழந்தை, சீஸரின் குழந்தை என்று சொல்ல வேண்டும். குழந்தை ஆண்மகவு என்று உரைக்க வேண்டும். உலகை ஆளப் பிறந்த குழந்தை என்று மொழிய வேண்டும். புரிகிறாதா உனக்கு!

பிதாதீதா: மகாராணி! உங்கள் உத்தரவுப்படியே செய்கிறேன். [வெளியே போகிறாள்]

கிளியோபாத்ரா: [அருகில் நின்ற ஜோதிடரைப் பார்த்து] ஜோதிட குருவே! பிள்ளை பிறக்கும் நேரத்தைக் குறித்து, அலெக்ஸாண்டர் போல அவன் உலகை ஆளுவானா என்பதைப் பார்க்க வேண்டும்.

[ஜோதிடர் வெளியே போகிறார்]

ஜூலியஸ் சீஸர்: [அறை வெளியே முணுமுணுப்புடன், பரபரப்புடன்] கிளியோபாத்ரா வுக்கு என்ன மகவு பிறக்கப் போகிறதோ? பிறப்பது ஆண் பிள்ளையாக இருந்தால் அவனை ரோமில் வைத்து நான் வளர்க்கலாம். அப்படி யில்லாமல் பெண் குழந்தையாகப் போனால் என்ன செய்வது? எகிப்திலே விட்டுச் செல்வேன்! கிளியோபாத்ராதான் அவளை வளர்க்க வேண்டும். பெண் குழந்தைக்குத் தாயின் துணை வேண்டும் எப்போதும். ஆனால் ஆண் மகனை என் கண்காணிப்பில் நான் வளர்த்து வருவேன். கிளியோபாத்ராவின் மன உறுதி, ஞானம், ஆட்சித் திறம் அவனுக்கு உடன்பிறக்கும்! சீஸரின் கம்பீரத் தோற்றம் அவனுக்கு முகக்களை உண்டாக்கும்! அலெக்ஸாண்டரின் பேராசைக் குணம் அவனுக்கு உண்டாக வேண்டும்! என் மகன் இந்தியாவையும் தாண்டிச் சென்று சைனாவின் மீது படையெடுப்பான்! உலக வரலாற்றில் எனக்குக் கிடைக்காத புகழை அவன் பெறுவான். அலெக்ஸாண்டரைப் போல உன்னதப் போர்வீரன் என்று பெயர் எடுப்பான்.

[அப்போது ஓர் எச்சரிக்கை மணியோசை கேட்க சீஸரும், ரோமானியப் போர் அதிகாரிகளும் திரும்பிப் பிரசவ அறைமீது கண்ணோட்டம் விடுகிறார்கள். பிதாதீதா தனது கைகளில் அலங்கரித்த குழந்தை ஒன்றைத் தொட்டிலில் தூக்கி வருகிறாள். அவளைப் பின் தொடர்ந்து குலாவிப் பாடிக் கொண்டு சேடியர் பலர் வருகிறார். அனைவரும் சீஸரை நோக்கி அருகில் வருகிறார்.]

பிதாதீதா: மாண்புமிகு சீஸர் அவர்களே! உங்களுக்கு ஆண்மகவு பிறந்திருக்கிறது! விலை மதிப்பில்லா வெகுமதியை எங்கள் மகாராணி தந்திருக்கிறார். மகுடத்தைச் சூட்டினீர் எங்கள் மகாராணிக்கு! அந்த மகத்தான செயலுக்கு, ஆண் மகனைப் பரிசாக அளித்துள்ளார் உங்களூக்கு! உலகாளப் பிறந்த குழந்தை இது! ·பாரோ மன்னரின் பரம்பரைக் குழந்தை இது!

ஜூலியஸ் சீஸர்: [முன்னோக்கி வந்து இரு கரங்களில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பெரு மகிழ்ச்சியுடன்] ஆண்மகவு! எல்லோரும் பாருங்கள் ஆண்மகவு! எனக்கு மகன் பிறந்திருக்கிறான்! [கைகளில் பிள்ளையை மேலே தூக்கிய வண்ணம் சுற்றுகிறார். அருகில் நிற்கும் ரோமானியர் அவைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.]

பிரிட்டானஸ்: [பூரிப்புடன்] களிப்புடன் வாழ்த்துக்கள். வாழ்க, வாழ்க உங்கள் ஆண் குழந்தை நீடூழி வாழ்க!

ரூஃபியோ: ரோமின் எதிர்காலப் போர்த் தளபதி! ரோமின் வருங்கால அதிபதி! வாழ்க! வாழ்க! நீடூழி வாழ்க!

ஜூலியஸ் சீஸர்: [குழந்தையைத் தொட்டிலில் வைத்து விட்டு, மகிழ்ச்சியுடன்] பெயர் மறந்து போச்சே! தீத்தா பீத்தா! மகாராணி கிளியோபாத்ரா எப்படி உள்ளார்? நான் பார்க்கலாமா?

பிதாதீதா: மகாராணி நலமாக உள்ளார்! ஐஸிஸ் தெய்வீகமுள்ள எங்கள் அரசிக்குச் சுகப் பிரசவமே! கவலை கொள்ளாதீர் தளபதி. ஆனால் இப்போது நீங்கள் பார்க்க முடியாது. நான் கேட்டு வந்து உங்களை அழைத்துச் செல்வேன். … என் பெயர், பிதாதீதா. … பிதா..தீதா!

ஜூலியஸ் சீஸர்: சீக்கிரம் உள்ளே போய்க் கேட்டுவா, பீத்தா தீத்தா!

பிதாதீதா: உடனே உள்ளே போய்க் கேட்டு வருகிறேன் தளபதியாரே! சிறிது பொறுங்கள். [குழந்தையைத் தூக்கிக் கொண்டு எல்லாரும் திரும்பி உள்ளே போகிறார்.] (முணுமுணுத்துக் கொண்டு) அட தெய்வமே! ரோமானிய தீரருக்கு என் பெயரைக் கூட உச்சரிக்க முடிய வில்லையே! …. (பிரசவ அறைக்கு முன்னால் நின்று திரும்பி உரத்த குரலில்) தளபதி அவர்களே! என் பெயர் பிதாதீதா! பிதாதீதா! பிதாதீதா! (உள்ளே நுழைந்து முணுமுணுத்துக் கொண்டு) படுக்கும் போது பத்துத் தடவைச் சொல்லிப் பழகுங்கள் தளபதி! பிதாதீதா வென்று சொல்லத் தெரியாதா? ரோமானியர் நாக்கிலே என்ன நரம்புதான் நெளியுமோ? என் பெயரை விட நீளமான மகாராணி பெயரை எப்படிக் கிளியோபாத்ரா வென்று நாக்கு விளிக்கிறது! ஆடவர் ஒரு பெண்ணை நேசித்தால் கனவில் கூட அந்தப் பெயர் சரியாக வந்துவிடுதே! [குழந்தையுடன் உள்ளே நுழைகிறாள்]

[சிறிது நேரம் கழித்து பிதாதீதா வெளியே சீஸரிடம் ஓடி வருகிறாள்]

பிதாதீதா: மாண்புமிகு தளபதியாரே! வாருங்கள் உள்ளே! வாருங்கள்! எங்கள் மகாராணியை இப்போது காணலாம். என்னுடன் வாருங்கள். மகாராணி காத்திருக்கிறார்.

ஜூலியஸ் சீஸர்: என் ஆண்மகவின் அன்னைக்கு நன்றி கூற வேண்டும். என் மனைவி கல்பூர்ணியா பெற்றுத் தர முடியாத உயிர்க்கனியை கிளியோபாத்ரா எனக்குத் தந்திருக்கிறாள். நான் வழிதவறி எகிப்துக்கு வந்தது நல்லதாய்ப் போயிற்று! மருமகன் பாம்ப்பியை விரட்டி எகிப்துக்கு வந்தது பலனை அளித்து விட்டது. சீஸரின் பெயரைச் சொல்ல ஓர் ஆண்மகன் பிறந்து விட்டான்! வருகிறேன் பீத்தா தீத்தா [சீஸர் பிதாதீதாவின் பின்னே செல்கிறார்]

*********************

அங்கம் -3 காட்சி -3

“எனக்குத் தொழில் சுதந்திரமாக வாழ்ந்து வருவது.”

“நியாயத்தையும், ஆண்பாலாரிடையே சமத்துவத்தையும் வற்புறுத்தும் ஓரிறைவனைத் தவிர, வேறு எந்தக் கடவுள் மீதும் நம்பிக்கை வைக்காதே!”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

“நீ தெரிந்த கொள்ள வேண்டியவற்றின் முடிவை நெருங்கும் போது, நீ உணர்ந்து கொள்ள வேண்டிவற்றின் ஆரம்பத்திற்கு வருகிறாய்!”

கலில் கிப்ரான் ஓவியர், கவிஞர் [Kahlil Gibrahn (1883-1931)]

விதியே! அறிவோம் நினது கேளிக்களை!
ஒருநாள் மடிவோம் என்று அறிவோம்!
நேரம் வரும் தருணம் ஒன்றை அறியோம்!
நீடிக்கும் ஆயுளை  மிதித்து முறிப்போம்! …

[புரூட்டஸ்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

ஆண்டனி குழப்ப மடைந்து வீட்டுக்கு ஓடினார்!
மானிடரே! மாதரே! சிறுவரே! நீவீரும் ஓடுவீர்!
வானை நோக்கிக் கதறுவீர், அழுவீர், அலறுவீர்,
வையக மின்று அழியப் போகுதென! ..

[செனட்டர்: டிரிபோனஸ்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

மண்டியிட வைத்தார் என்னை என்பிரபு புரூட்டஸ்!
மண்ணில் விழ வைத்தார் என்னை மார்க் ஆண்டனி!
நேர்மையாளி, பண்பாளி, அறிவாளி, தீரர் எனக்கூற
ஆணை யிட்டவர் புரூட்டஸ், நான் பணிபவன் ஆதலால்!
வல்லவர், வாஞ்சை உள்ளவர், அஞ்சாதவர் சீஸர்
மாட்சிமை மிக்க அரச கம்பீரம் கொண்டவர், சீஸர்!
புரூட்டஸை நேசிப்பவன் ! மதிப்பவன் நான்!
ஆனால் சீஸர் ஒருவருக்கு அஞ்சுகிறேன்! ….

[புரூட்டஸின் வேலையாள்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

நாடகப் பாத்திரங்கள்:

 

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸியஸ் [30 வயது]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].

நேரம், இடம்:

பகல் நேரம், ரோமாபுரியின் செனட் மாளிகை.

நாடகப் பாத்திரங்கள்:

புரூட்டஸ், ஆண்டனி, காஸியஸ், காஸ்கா, சின்னா, சிசெரோ, அக்டேவியன், கல்பூர்ணியா.

காட்சி அமைப்பு:

ரோம் செனட் மாளிகைப் படிகளில் செனட்டர்கள், புரூட்டஸ், காஸியஸ், காஸ்கா, சின்னா, சிசெரோ, அக்டேவியன் ஆகியோர் நின்று உரையாடிக் கொண்டிருக் கிறார். காஸியஸ், காஸ்கா இருவரும் ஆங்காரத்துடன் காணப்படுகிறார். சீஸரை அறவே வெறுக்கும் காஸியஸ், காஸ்கா ஆகியோர் வாக்குவாதத்தில், சீஸரின் நெருங்கிய ஆதரவாளிகளை, எதிர்ப்பாளிகளாய் மாற்ற முனைகிறார்கள். சற்று தொலைவில் ஆண்டனியும், கல்பூர்ணியாவும் செனட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

காஸியஸ்: [கோபத்துடன் நடந்து கொண்டு] பண்புமிகு புரூட்டஸ்! ரோமிதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது! கேட்டீரா சீஸருக்கு ஆண்மகவு பிறந்துள்ளதாம்! எகிப்தை ஆளப் போகும் எதிர்கால ஆண்வாரிசு! ரோமானியரை ஆளப் போகும் அடிமை ராணியின் அற்புத மகன்! ஆண்பிள்ளைக்கு வெகுநாட்களாய் ஆசைபட்டார் சீஸர்! கல்பூர்ணியா பெற்றத் தர முடியவில்லை! ரோமானியப் பெண் பெற்றுத் தர முடியாத பிள்ளைச் செல்வத்தை, எகிப்த் ஆசைக் காதலி பெற்றுத் தந்தாள்! அடிமை நாட்டு எழிரசி பெற்றுத் தந்திருக்கிறாள்! புரூட்டஸ்! உங்களைத் தன் மகனாகப் பாவித்தார் சீஸர்! அந்த மதிப்பு உங்களை விட்டு நீங்கப் போகிறது! அந்த அடிமையின் பிள்ளை உங்களுக்கு ஈடாகுமா?

புரூட்டஸ்: [மனம் கலங்காமல்] ஆத்திரப் படாதே, காஸியஸ்! பிறந்து பல் முளைக்காத பிள்ளைக்கு யாராவது அஞ்சுவாரா? சீஸருக்கு ஆண்மகவு பிறந்த செய்தி எனக்குப் பூரிப்பை அளிக்கிறது! சீஸர் என்னைத் தன் மகன் என்று மதிப்பது என்றும் மாறப் போவதில்லை! சீஸரின் மூத்த மகன் நான்! கிளியோபாத்ராவின் மகனை என் செல்லத் தம்பியாகக் கருதுகிறேன்!

காஸ்கா: [ஆங்காரமாக, துச்சமாக] கிளியோபாத்ரா ஒரு பரத்தை! அவள் பெற்ற பிள்ளைக்கு நீ எப்படித் தமையன் ஆவாய்! அவன் பாதி எகிப்தியன்!

புரூட்டஸ்: [வெகுண்டு] அவன் பாதி ரோமானியன் என்பதை மறக்காதே, காஸ்கா! கிளியோபாத்ரா சீஸரின் மனைவி! எகிப்த் ராணியைப் பரத்தை என்று எள்ளி நகையாடுவது, ரோமானியத் தளபதிச் சீஸரைப் பழிப்பதாகும்! அப்படிச் சொன்ன அந்த நாக்கை அறுப்பது சட்டப்படிக் குற்ற மாகாது! உன் நாக்கைக் கட்டுப்படுத்து! காஸ்கா! நீ எப்படிப் பட்டவன் என்பதை மறந்து விட்டாயா? சூதாடி! கொலைகாரன்! களவாடி! புளுகன்! போதுமா, இன்னும் நான் அடுக்கவா?

காஸியஸ்: காஸ்கா! நீ கவனத்துடன் பேச வேண்டும்! கிளியோபாத்ராவை எகிப்தின் ராணியாக ஆக்கியவர் சீஸர்! சீஸரை எகிப்தின் மன்னராய் ஆக்கியவள் கிளியோபாத்ரா! அவளை நீ தாழ்வாகப் பேசலாமா? புரூட்டஸ் சொன்னதில் பொருள் உள்ளது!

சிசெரோ: [குறுக்கிட்டு] எகிப்துக்கு வேந்தரான சீஸர் ரோமாபுரிக்கும், ரோமானிய சாம்ராஜியத்துக்கும் பேரரசனாக முடிசூட்டிக் கொள்ளப் போவதாக அறிந்தேன்! அந்தப் பேராசைக்கு விதை யிட்டவள் கிளியோபாத்ரா! ரோமின் குடியரசை ஒழிக்க சீஸர் முடிவெடுத்து விட்டார்! அறிந்து கொள்வீர்!

காஸியஸ்: ஆமாம், புரூட்டஸ்! சீஸரின் பேராசைக்கோர் அளவில்லை! எல்லை யில்லை! அரணில்லை! அதை முளையிலே களை எடுப்பது செனட்டரின் கடமை! அதைத் தடுத்து நிறுத்துவது நமது பணி! சீஸர் மன்னரானால், செனட்டர்களை ஆட்டுக் குட்டிகளாய் ஆக்கி விடுவார்! செனட்டரின் சொற்கள் அவரது செவியில் ஏறா!

புரூட்டஸ்: [கேலியாக] அதென்ன நமது கடமை என்று சொல்கிறீர்! உங்கள் சதிக் கூட்டத்தில் என்னைச் சேர்க்காதீர்! அதோ வருகிறார், ரோமானிய ஆட்சித் தளபதி, ஆண்டனி! அவர் காதில் உமது சங்கொலி முதலில் ஒலிக்கட்டும்!

[ஆண்டனி சீஸர் பெயரைக் கேட்டதும் செனட்டர் அருகே வருகிறார். கூடவே கல்பூர்ணியாவும் வருகிறாள்]

காஸ்கா: [கேலியாக] ஆண்டனி! நினைவில் வைத்துக்கொள்! உனது பொற்காலம் கற்காலமாகப் போகுது! சீஸர் வரப் போவதாய்க் கேள்விப் பட்டோம்! சீக்கிரம் நீ ரோமாபுரித் தலைமை பதவியைத் துறக்க வேண்டி திருக்கும்! சீஸர் வருகிறார்! எப்போதென்று தெரியுமா? எகிப்தின் கடவுள் வரப் போகிறார்! வரவேற்பு பலமாய் இருக்கட்டும்!

கல்பூர்ணியா: [மிக்க மகிழ்ச்சியுடன்] என் பதி வரப் போகிறாரா? எப்போது வருகிறார்? காஸ்கா! அவரை ஏன் எகிப்தின் கடவுள் என்று ஏளனமாகச் சொல்கிறாய்?

காஸ்கா: கல்பூர்ணியா! சீஸர் வரப் போகிறார். எப்போதென்று என்னைக் கேட்காதே! கிளியோபாத்ராவைக் கேட்டால் தெரியும்! அந்த நாள் சீஸருக்கே தெரியுமா என்பது என் சந்தேகம்! கிளியோபாத்ரா ஐஸிஸ் தெய்வத்தின் அவதாரமாம்! அவளைத் திருமணம் செய்த சீஸரை எகிப்தியர் தேவனாகக் கொண்டாடுவதில் தவறில்லை! மேலும் ·பாரோ பரம்பரையில் வந்தவள் கிளியோபாத்ரா! அவளை மனைவியாக ஏற்றுக் கொண்ட சீஸருக்கு, ஃபெரோ சந்ததியைப் பெற்றவர் என்று வரலாறு பாராட்டும்!

கல்பூர்ணியா: என் பதி முழுக்க முழுக்க ஒரு ரோமானியர்! எத்தனை மத்திய ஆசியப் பெண்களை அவர் மணந்தாலும், அவரது முகவரி மாறாது! அவரை எகிப்தியக் கடவுள் என்று ஏளனம் செய்யாதே!

காஸியஸ்: கல்பூர்ணியா! சீஸர் ரோமாபுரிக்கு மீளாத வேளையில், ரோமானியரும் அவரைக் கடவுளாக மதிக்கிறார் தெரியுமா? பிற்கால வரலாறு சீஸர் கிளியோபாத்ராவின் பதி என்று சொல்லுமே தவிர, கல்பூர்ணியாவின் பதி என்று சொல்லப் போவதில்லை!

ஆண்டனி: காஸியஸ்! உன்னைப் போல் ஒருவனும் சொல்லப் போவதில்லை! சீஸரின் முதல் மனைவி கல்பூர்ணியா வென்பதை வரலாறு மாற்ற முடியாது! சீஸரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஆட்சி செய்பவன் நான்! அவர் வெற்றியைப் பங்கீட்டு ஆளுபவன் நான்! எங்கிருந்தாலும் அவர்தான் ரோமானிய சாம்ராஜியத்தின் அதிபதி!

சிசெரோ: ஆனால் அவர் ரோமாபுரியின் ஏதேட்சை அதிகாரி என்பது உனக்குத் தெரியாதா? ரோமானிய சாம்ராஜியத்தின் வேந்தர் அவர் என்பது உனக்குத் தெரியாதா? ரோமாபுரியின் குடியரசை சிதைக்கப் பிறந்தவர் என்பது உனக்குத் தெரியாதா? ரோமாபுரியின் மன்னராக சீஸர் முடிசூடப் போவது உனக்குத் தெரியாதா?

ஆண்டனி: தெரியாது! ரோமாபுரியின் மன்னராகப் பதவி ஏற்கச் சீஸர் எப்போதும் விரும்பிய தில்லை! நான் சொல்கிறேன், கேட்பீர்! ரோமின் குடியரைச் சீஸர் ஒருபோதும் முறிக்கப் போவதில்லை! மாற்றப் போவதில்லை! செனட்டர்களை எப்போதும் வரவேற்பவர் சீஸர்!

சிசெரோ: ஆண்டனி! நீ சீஸரை மிகவும் நேசிப்பதால், உன் கண்ணுக்கு அவரது சூழ்ச்சிகள் புரிவதில்லை! அவரது தவறுகள் தெரிவதில்லை! வெளிநின்று நோக்கும் எங்களுக்குப் பளிச்செனத் தெரிகிறது!

அக்டேவியன்: நான் ஒன்று கேட்கிறேன், கல்பூர்ணியா! கிளியோபாத்ராவுக்குப் பிறந்த சீஸரின் மகனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

கல்பூர்ணியா: ஆண்மகவைப் பற்றி எனக்குப் பூரண திருப்தியே! என் பதியின் ஆண்பிள்ளை அது! என் பதியின் அன்புக் குழந்தை அது! என் பதி ஏற்றுக் கொண்ட ஆண்மகவு யாருக்குப் பிறந்திருந்தால் என்ன! அந்த பிள்ளை எனக்கும் சொந்தப் பிள்ளைதான்! சீஸரின் பெயரைச் சொல்லப் பிறந்த ஆண்பிள்ளை அது! என் பதியின் காதலி என் மதிப்புக்கும், வரவேற்பிற்கும் உரியவள்! சீஸரின் வாரிசு அந்த சிறுவன் என்பது நன்றாகத் தெரியும் எனக்கு. அந்தச் சின்னஞ் சிறு குழந்தை மீது உங்களுக்கு ஏன் வெறுப்பென்று தெரியவில்லை எனக்கு!

அக்டேவியன்: எனக்கு அதிகாரம் கிடைக்கும் போது, சீஸரின் வாரிசை ஒழிக்க நான் முனைவேன் என்பதை அறிந்துகொள், கல்பூர்ணியா? யானைகொரு காலம்! பூனைக்கொரு காலம்! பூனை ஆட்சிக்கு வரும்போது அந்த எலியைப் பிடித்து விழுங்கி விடும் என்று அறிந்துகொள் கல்பூர்ணியா! அது ஒரு விஷப் பாம்பு! பாலைவன நச்சுப் பாம்பு! கிளியோபாத்ராவே ஒரு நாகப் பாம்பு! அவள் வயிற்றில் பாம்பு பிறக்காமல் பிறகு வேறென்ன பிறக்கும்? ஒருநாள் என் வாளுக்கிரையாகும் அந்த நாகம்! அந்த நாகத்தின் குட்டியை நான் விட்டு வைக்கப் போவதில்லை.

*********************

அங்கம் -3 காட்சி -4

“லிஸ்ஸட் [Liszt] சொல்கிறார்: கடவுள் ஒன்றுதான் ஒருவர் நேசிக்கப்பட உகந்தது. உண்மையாக இருக்கலாம் அக்கூற்று. ஆனால் ஓர் ஆடவனை ஒருத்தி நேசிக்கும் போது, கடவுளை நேசிப்பது என்பது வேறுபட்ட தன்மை யானது.”

“எளிமைப் பண்பு என்பது உலகிலே கைவசப் படாத மிகக் கடினமான நடப்பு! அது ஒருவர் அனுபவத்தின் எல்லையில் வரக் கூடியது. மாமேதைகள் கைக்கொள்ளும் இறுதியான முயற்சி.”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-18 76)]

“உன்னத படைப்புகள் [Masterpieces] என்பவைத் தனிப்பட்ட ஆக்கமோ அல்லது ஒற்றை உதயமோ அல்ல. ஒருவரின் பல்லாண்டு காலச் சிந்தனையில் எழுந்து, மற்றும் மானிடக் குழுக்களின் பங்கீட்டுச் சிந்திப்புக்களில் பின்னி உதயமானவை அவை; பொது மாந்தர் அனுபவத் தொகுப்புகளைப் பின்னணியாகக் கொண்டு, ஒருவரது வாக்கு மூலமாக வடிக்கப் படுபவை.” [Example: Leo Tolstoys War & Peace]

வெர்ஜினியா ஊஃல்ப், ஆங்கில எழுத்தாளி [Viginia Woolf (1882-1941)]

விடுதலை நாட்டில்
சீஸரைப் போல வாழ்ந்தவன் நான்!
நீயும் அப்படித்தான்!
நானும், நீயும்
நன்றாகத் தின்று, கொளுத்து,
குளிர் காலத்துக் கடும்பனியும் தாங்குவோம்,
சீஸரைப் போல!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

கானப் பாக்கள் சிலவற்றை எழுப்பிடு!
மோன முகக் கோணல் நிமிர்த்தி,
காதலை வணிக மாக்கிடத் துணியும்! ….
நானவளை ஒருதரம்தான் நோக்கினேன்,
நாற்பது எட்டுகளில் தடம் வைத்தாள்,
தெருவினில் மாந்தர் நடமாடும் போது!
பெருமூச்சுடன் அவள் பேசினாள்,
செம்மை நெறியைப் பழுது படுத்தியதாக,
விம்மினாள் மூச்சுத் திணர!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

நாடகப் பாத்திரங்கள்:

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியா அரண்மனையில், கிளியோபாத்ராவின் தனியறை. பகல்வேளை

நாடகப் பாத்திரங்கள்:

கிளியோபாத்ரா, ஜூலியஸ் சீஸர், அவரது மகன், சேடிகள்

காட்சி அமைப்பு:

ஜூலியஸ் சீஸர் ரோமாபுரிக்குத் திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். புதல்வனோடு கிளியோபாத்ரா வருந்திய வண்ணம் நிற்கிறாள்.

ஜூலியஸ் சீஸர்: [விறுவிறுப்பாக] கண்ணே! கிளியோபாத்ரா! என்னைத் தடுத்து நிறுத்தாதே! தங்கச் சொல்லி வற்புறுத்தாதே! நமது செல்வ மகனுக்கு ஒருவயது வந்ததும் போகலாம் என்று கூறியதை மறந்து விட்டாயா? ஓராண்டு நானிங்கு தங்கி விட்டேன்! என்னாசை மகனுடன் விளையாடி விட்டேன்! இனி ஒருநாள் தாமதித்தால், ரோமானிய செனட்டரின் சினத்துக்கு ஆளாவேன் நான். எனக்குச் செனட்டில் பகைவர் பெருக என் தாமதப் பயணம் தூண்டிவிடும். முடிவாகச் சொல்கிறேன்! விடைகொடு கண்ணே! நான் ரோமாபுரியின் பொறுப்பையும், ரோம சாம்ராஜியத்தின் பொறுப்பையும் செனட்டர் முன்பாக நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ரோமாபுரி ஏகாதிபத்திய அதிபதியாக என்னை முடிசூட்ட எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது!

கிளியோபாத்ரா: [சீஸரின் கைகளைப் பற்றிக் கொண்டு] என்னைத் தனியே விட்டுச் செல்வது நியாயமாகுமா? தந்தையைத் தேடுவானே நம் அன்புப் புதல்வன்! அன்புச் செல்வனுக்குத் தம்பி, தமக்கை வேண்டாமா? நமக்கொரு மகன் போதாது! நானொரு வளமை மிக்க நைல் நதி! அநேக ஆண்மகவை உங்களுக்குப் பெற்றுத் தருவேன்! என்னைத் தவிக்க விட்டுப் பிள்ளையே பெறாத கல்பூர்ணியாவை நாடிப் போவதா? என்னைச் சுற்றிலும் பகைவர் சூழ்ந்திருக்கிறார்! பயமின்றித் தனியாக நான் எப்படி வாழ்வேன்? இன்னும் ஓராண்டு எங்களுடன் தங்க வேண்டும். ரோமாபுரிக்கு உங்களுக்குப் பொறுத்திருக்கும்! நம்பத் தக்க ஆண்டனி உங்கள் துணை ஆளுநர்! நீங்களின்றிச் சாமர்த்தியமாய் ரோமாபுரியை ஆண்டனி ஆட்சி செய்து வருகிறார்! நீங்கள் ரோமின் தளபதி மட்டுமில்லை! இப்போது என் பதி! எகிப்தின் வேந்தர்! ரோமாபுரி மீதுள்ள பரிவு உங்களுக்கு எகிப்து மீதில்லையா? [கைகளைப் பற்றி நெஞ்சோடு வைத்துக் கொள்கிறாள்]

ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கிளியோபாத்ரா! ஆம் நான் உன் பதிதான்! அதை உலகே அறியும்! எகிப்தின் பெயரை எண்ணும் போதெல்லாம் எழிலரசி கிளியோபாத்ரா என் நெஞ்சைப் பற்றிக் கொள்கிறாள். முதல் மனைவி கல்பூர்ணியா ஆயினும், இளம் மனைவி கிளியோபாத்ராதான் என்னை ஆட்டிப் படைப்பவள்! ரோமாபுரியில் கல்பூர்ணியா ஆளுக்கு மேல் ஆளாக அனுப்பி, என்னை ஆங்கு வரும்படி அழைக்கிறாள்! பல்லாண்டுகள் நானவளைப் பார்க்க வில்லை. இம்முறை நான் போகாவிட்டால், அவள் கண்ணாடி இதயம் துண்டாக உடைந்து விடும்! பிறகு அவள் என்னை விலக்கிப் போய் விடுவாள்! நான் ரோமில் எப்படித் தனியாக வாழ்வது?

கிளியோபாத்ரா: [மிக்க ஆர்வமுடன்] நானங்கு வந்து விடுகிறேன், உங்கள் தனிமையைப் போக்க! நானும் தனி மாதாக எகிப்தில் தவிக்க வேண்டாம்! நீங்களும் தனி ஆணாக ரோமில் நோக வேண்டாம்! நானும் நம் செல்வனும் உங்கள் கண்ணெதிரிலே வாழ்வோம். நாங்கள் ரோமுக்கு உங்களுடன் வரலாமா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று கவலையுடன்] வேண்டாம் கிளியோபாத்ரா! தக்க தருண மில்லை இது! ரோமாபுரி உனக்கும், நம் மகனுக்கும் எந்த முறையில் மதிப்பளிக்கும் எனத் தெரியாது எனக்கு. உன்னை அவமதித்தால் உனக்கும் தாங்காது! எனக்கும் தாங்காது! அதோடு என் முதல் மனைவி கல்பூர்ணியா எப்படி உன்னை வரவேற்பாள் என்பதும் தெரியாது எனக்கு! நீ எகிப்தை ஆளப் பிறந்தவள். இங்கு நீ மகிழ்ச்சியோடு இருக்கிறாய். ரோமாபுரியில் நீ அடைப்பட்டுப் போவாய்! ஒருமாதிரியாக உன்னைப் பார்ப்பார் ரோமானியர்! நீ வேதனைப் படுவாய்! இப்போது வேண்டாம். ஓரிரு வருடம் கழித்து வா! நான் முதலில் சென்று மக்கள் மனதை அறிய வேண்டும். உன்னைப் பற்றிச் செனட்டர் என்ன நினைக்கிறார் என்று நான் உளவு செய்ய வேண்டும்.

கிளியோபாத்ரா: [சினத்துடன், உரத்த குரலில்] சீஸர்! செனட்டர் அனுமதி கேட்டா என் உதட்டில் முத்த மிட்டீர்? செனட்டர் அனுமதி கேட்டா என் மெத்தையில் படுத்தீர்? செனட்டர் அனுமதி கேட்டா எனக்குப் பிள்ளை உண்டாக்கினீர்? பிறகு செனட்டர் அனுமதி கேட்டா என்னைத் திருமணம் செய்தீர்? ரோமாபுரிக்கு வரும் எனக்கு செனட்டார் வாசற் கதவு திறப்பாரா என்று உங்கள் வாய் பிதற்றுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! சீஸருக்கு ஆண்மகவை முதலில் அளித்த கிளியோபாத்ரா பெரியவளா? உங்கள் தனி உரிமைக் கட்டுப்படுத்தும் ரோமாபுரிச் செனட்டர் பெரியவரா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று அழுத்தமுடன்] கிளியோபாத்ரா! ஐயமின்றி நான் செனட்டர் தீர்மானத்துக்குக் கட்டுப்பட்டவன்! செனட்டர் பேரவைக்கு நான் அதிபதி ஆனாலும், அவரது பெரும்பான்மைக் குரலுக்குத் தலை சாய்க்க வேண்டும் நான்! நீ என் மனைவிதான்! ஆனாலும் செனட்டர் தணிக்கைக்கு நீயும் தலை வணங்க வேண்டும்! ஆண்மகவை ஈன்ற நீ வீட்டுக்கு பெரியவள்தான்! ஆனால் குடிமக்களின் பிரதிநிதிகள் நாட்டுக்குப் பெரியவர்!

கிளியோபாத்ரா: [சீற்றத்துடன்] கிளியோபாத்ரா கீழ்நாட்டுக்காரி என்பதாலா? அல்லது எகிப்த் ரோமின் அடிமை நாடு என்பதாலா? நான் எகிப்தின் மகாராணி! நான் சீஸரின் மனைவி! உங்கள் செனட்டாருக்கு நான் கீழ்ப்படிய முடியாது! நான் அன்றும் விடுதலை ராணி! இன்றும் விடுதலை ராணி! என்றும் விடுதலை ராணி!

ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] ஆமாம் கிளியோபாத்ரா! நீ என் மனைவிதான்! அதுபோல் கல்பூர்ணியாவும் என் மனைவிதான். ஆனால் கல்பூர்ணியா செனட்டார் கட்டுப்பாட்டுக்கு உட்பட வேண்டும், தெரியுமா? செனட்டார் கண்முன்பாக ரோமும் ஒன்றுதான்! எகிப்தும் ஒன்றுதான்! அந்த முறையில் எந்த ஓரவஞ்சகமு மில்லை, செனட்டருக்கு! கண்ணே கிளியோபாத்ரா! உன்னுயிருக்கு அஞ்சுகிறேன் நான்! ரோமானியர் அன்னியப் பெண்ணென்று உன்மீது வெகுண்டு உன்னைக் கொன்று விடக் கூடாது! செனட்டார் சினங்கொண்டு நம் சிறு பாலகனைக் கொன்று விடக் கூடாது! குறைந்தது ஓராண்டு கூடியது ஈராண்டாடு நீ காத்திருப்பது நல்லது. மகனுக்கும் மூன்று வயதாகும். ரோமில் ஓடியாடி மகிழ்வான்.

கிளியோபாத்ரா: [சற்று சமாதானம் அடைந்து] சீஸர்! நாட்களை நான் எண்ணிக் கொண்டிருப்பேன்! ரோமாபுரியில் உங்களைச் சுற்றிலும் கன்னியர் முற்றுகை யிடுவார்! கண்களைச் சுழற்றி, உடம்பைக் குலுக்கி மன்மதக் கணைகளை உம்மீது ஏவி விடுவார்! கல்பூர்ணியா மீது துளியும் உங்களுக்குக் காதல் கிடையாது! ஆகவே உங்கள் நெஞ்சக் கவசம் உறுதியாக இருக்கட்டும்! உங்கள் மனது கல்லாகட்டும்! சீஸருக்குச் சென்ற விடமெல்லாம் காதற் பெண்டுகள் என்பது பழமொழி! பெண்களைக் கண்டால் கண்களை மூடிக் கொள்வீர்! கண்கள் வழியாகத்தான் ஆடவருக்கு வலை வீசுவர் பெண்கள்! அந்த வலையில் சிக்கிக் கொண்டு தவிக்காதீர்! உள்ளே இடம் பிடித்துக் கொண்ட பெண்டிரை வெளியே விரட்டுவது கடினம்!

ஜூலியஸ் சீஸர்: [பெரிதாகச் சிரித்து] எகிப்த் எழிலரசி வலையில் சிக்கிக் கொண்டு தப்பிக் கொள்ள முடியாமல் நான் திண்டாடுவது போதாதா? பெண்டிரைக் கண்டால் கண்களை எப்படி மூடிக் கொள்வது? பெண்களின் கவர்ச்சி மின்னல் போல் நெஞ்சைத் தாக்கும் போது, என்னிரும்புக் கவசம் அதைத் தடுக்க முடியாது! அவ்விதம் தடுக்கும் நெஞ்சக் கவசத்தை யார் செய்ய முடியும்? சீஸர் மகாவீரன் ஆயினும், பெண்டிரின் கணைகளின் முன் பலமற்றவனே! எனது எ·கு நெஞ்சிக்குள் உள்ளது பஞ்சுப் பொதி!

கிளியோபாத்ரா: [கேலியாகச் சிரித்து] எந்த ஆடவன்தான் பாவையைக் கண்டால் பாகாய் உருகா திருக்கிறான்? என்னாசை நம் செல்வனை ரோமானியர் கண்டு பாராட்ட வேண்டும் என்பதே! அவன் உலகாளப் பிறந்தவன்! அலெக்ஸாண்டரைப் போல ஆவேச வேட்கை கொள்பவன்! சீஸரைப் போல பல தேசங்கள் வெல்பவன்! ஆனால் என்னையும், புதல்வனையும் கல்பூர்ணியா வரவேற்க மாட்டாள் என்பது எனக்குத் தெரிந்ததே! என்னால் நீங்கள் செனட்டர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். நான் காத்திருக்கிறேன். போய் வாருங்கள்.

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! மாறாக நம் புதல்வனைக் காண கல்பூர்ணியா காத்துக் கொண்டிருக்கிறாள். சீஸரின் மகன் என்று கல்பூர்ணியா ஏற்றுக் கொள்வது வியப்பாக இருக்கிறது.

கிளியோபாத்ரா: [சற்று விரக்தியுடன்] அப்படியானல் என்னைக் கல்பூர்ணியா வரவேற்க மாட்டாள் என்று மறைவாகக் கூறுகிறீரா? அதாவது அவளுக்கு என் மகன் வேண்டும், ஆனால் அவனைப் பெற்ற அன்னை வேண்டாம்! உண்மைதானே!

ஜூலியஸ் சீஸர்: உண்மைதான் கிளியோபாத்ரா! சற்று சிந்தித்துப் பார்! நான் வேறொரு வாலிப மாதை உன் மாளிகைக்கு அழைத்து வந்தால், நீ அவளை வரவேற்பாயா? அல்லது வாசற் கதவை மூடித் துரத்துவாயா?

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] நிச்சயம் நானவளை வரவேற்க மாட்டேன்! வாசலில் நிறுத்தித் துரத்தவும் மாட்டேன்! வாளால் தலையைத் துண்டித்து, உடலைக் கழுகுக்கிரை ஆக்குவேன்!

[அப்போது பிரிட்டானஸ், ரூஃபியோ விரைவாக உள்ளே நுழைகிறார்கள்]

பிரிட்டானஸ்: சீஸர்! கப்பல் தயாராக உள்ளது ரோமாபுரிக்கு. நீங்கள் கிளம்ப வேண்டிய தருணமிது. அலைகள் நமக்குச் சாதகமாக அடித்துக் கொண்டிருக்கின்றன. காற்றடிக்கும் திசையும் பாய்மரக் கப்பலுக்கு அனுகூலமாய் வீசுகிறது! புறப்படுங்கள்! உங்கள் பெட்டிகள் எல்லாம் கப்பலில் ஏற்றப்பட்டு விட்டன!

ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கண்ணே! கிளியோபாத்ரா! கண்ணீரைத் துடைத்துக் கொள்! நான் போய் வருகிறேன். பூரிப்புடன் விடை கொடு எனக்கு! [சீஸரைக் கிளியோபாத்ரா அணைத்துக் கொள்கிறாள். சேடி தூக்கி யிருக்கும் மகனின் நெற்றியில் சீஸர் முத்தமிடு கிறார். கிளியோபாத்ராவை நோக்கி] கிளியோபாத்ரா! நீ அஞ்ச வேண்டாம்! ரூ·பியோவை எனது சார்பில் எகிப்தின் பாதுகாப்புக்கு விட்டுச் செல்கிறேன். அவருடன் உள்ள ஐயாயிரம் ரோமானியப் படையினர் உன் ஆணைக்கு அடி பணிவர். அவர் உன்னையும் பாதுகாப்பார். எகிப்தையும் பாதுகாப்பார். சென்று வருகிறேன்.

[கிளியோபாத்ராவை முத்தமிடுகிறார்]

கிளியோபாத்ரா: [கண்ணீர் கலங்க] மிக்க நன்றி சீஸர்! சென்று வாருங்கள். ஈராண்டுகள் கழித்து ரோமாபுரிக்கு நானும், நம் மைந்தனும் வருவோம். நிச்சயம் வருவோம்.

ஜூலியஸ் சீஸர்: நானங்கு காத்திருப்பேன் உங்களுக்கு.

[சீஸர் பிரிட்டானஸ் பின்னால் தொடர மாளிகையை விட்டு வெளியேறுகிறார்]

*********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *