அங்கம் -5 காட்சி -1

 

ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்

 

கிரேக்க வனிதை தெஸ்ஸா லியனை மிஞ்சிடும்,
கிளியோ பாத்ராவின் மேனிக் கவர்ச்சி!
வானத்து நிலவையும் கவ்வி வசப்படுத்திடும் !
தேன்குரல் எவரையும் திகைக்க வைத்திடும்!
பேசத் தொடங்கின் இரவு பகலை நீடிக்கும் !
வயது அவளைப் பார்த்து மொட்டு விடும்!
வாலிபத்தைக் கண்டு பொங்கி எழும்!
பாதிரியும் வைத்தகண் வாங்காமல் பார்ப்பார்,
பாவையின் புன்சிரிப்பு இதழில் மின்னிலால்!

 

ஆங்கில நாடக மேதை: ஜான் டிரைடன் [John Dryden (1631-1700)]

வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
வழக்க மரபுகளால் குலையாது அவள் வனப்பு!
வரம்பற்றது அவள் விதவித வனப்பு மாறுபாடு! …
அவளது உடல் வனப்பை விளக்கிடப் போனால்,
எவரும் எழுத இயாலாது எழுத்தால் வர்ணித்து!
தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில்
ஆரணங்கு படுத்திருந்தாள், பொன்னிற மேனி!
இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம்!
வீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலையவள்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

வாடா மல்லிகை அவள்! விழி வீச்சின்
வலையில் வீழ்ந்தவர்,
சூடா மலருக்குள் தேனாகி விடுவார்!
கண்ணால் கண்டவர் எவரும் பின்னால்
மூடார் தமது கண்களை மீண்டும் !
ஒருமுறை அவளைப் பார்த்தவர், மனத்தில்
திரும்பித் தேடார் வேறோர் அழகிய மாதை!

நாடகப் பாத்திரங்கள்:

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது],

மற்றும் செனட்டர்கள்:

புரூட்டஸ் [35 வயது],

காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)].

காஸ்கா [40 வயது],

கவிஞர் சின்னா [35],

சிசெரோ [50 வயது],

அக்டேவியன் [24]

டிரிபோனஸ்

மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

 

நேரம், இடம்பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி.

 

நாடகப் பாத்திரங்கள்

 

ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் ரோமானியப் பொதுமக்கள், எகிப்திய விருந்தாளிகள். கல்பூர்ணியா, புரூட்டஸ்ஸின் மனைவி போர்ஷியா, காஸ்ஸியஸ், காஸ்கா, சிசெரோ மற்ற செனட்டர்கள். கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன் [வயது 4]

காட்சி அமைப்பு

 

ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் மேடை ஆசனத்தில் கல்பூர்ணியாவுடன் அமர்ந்திருக்கிறார். அருகில் ஆண்டனி, புரூட்டஸ், புரூட்டஸின் மனைவி போர்ஷியா, அக்டேவியஸ் மற்றும் செனட்டர் சூழ்ந்திருக்கிறார். எகிப்தின் எழில் ராணி கிளிபாத்ராவின் வருகை அறிவிக்கப் படுகிறது. அரசாங்கப் பிரமுகர் அனைவரும் கிளியோபாத்ராவையும், சீஸரின் மகன் சிஸேரியனையும் வரவேற்கக் காத்திருக்கிறார்கள். எகிப்தின் நர்த்தகிகளின் ஆட்டம், பாட்டுகளுடன், எகிப்த் ஆடவர், அலங்காரிகள் அணிவகுப்புடன் கிளியோபாத்ரா [ஸ்·பிங்ஸ்] மனிதத் தலைச் சிங்க ரதத்தில் கோலாகலமோடு வருகிறாள். வீதியில் மக்களின் ஆரவாரம் கேட்கிறது.

ஜூலியஸ் சீஸர்: என் மகனைப் பார்த்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன! அவனுக்கு என்னை அடையாளம் தெரியாது! அவனைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் நான். கிளியோபாத்ரா என்றைக்கும் வாடா மல்லிகை!

ஆண்டனி: கிளியோபாத்ராவை நான் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகி விட்டன! அவளைப் பார்க்க ஆவலோடிருக்கிறேன் நான். பதினாறு வயதினிலே பார்த்தது! அப்போதே அவளது உருட்டு விழிகளும், துடுக்கு மேனியும் என்னை மயக்கின! சீஸர்! நீங்கள் மிக்க அதிர்ஷ்டசாலி! அவளைப் போன்ற பாவைக்கு வாழ்நாள் முழுதும், ஓர் ஆடவன் பக்கத்தில் அடிமையாக இருக்கலாம். உங்களுக்கு அப்படி ஓர் வாய்ப்பு கிடைத்தது!

ஜூலியஸ் சீஸர்: கவலைப் படாதே ஆண்டனி! உனக்கும் அப்படி ஓர் வாய்ப்பு வரும்! கிளியோபாத்ரா உன்மீது ஒரு கண் வைத்திருக்கிறாள்! அலெக்ஸாண்டிரியாவில் அவளுடன் படுக்கையில் நானிருந்த போதும், அவள் உன்னைத்தான் நினைத்தாள்! அவள் அதரங்களை நான் முத்தமிட்ட போதும், அவள் மனக்கண்ணில் நீதான் காட்சி அளித்தாய்! எனது வயதான முகத்தில், உன் வாலிப முகத்தைத் தேடினாள்! அவள் வருவது என்னைக் காண்பதற்கு மட்டுமில்லை! என்னைக் காரணமாக வைத்து உன்னையும் காணத்தான். நான் விரும்பியபடி எனக்கோர் ஆண்மகவைக் கொடுத்தாலும், அவளுக்கு வேண்டியவன்
நீதான்! என்னை அவள் மகனுக்காக மணந்தாலும், உன்னைத்தான் அவள் உயிராய் நேசிக்கிறாள்.

ஆண்டனி: அப்படியா? என்னால் நம்ப முடியவில்லையே! அவள் என்னை நேசித்தாலும், நானவளை நேசிக்க வில்லை! அவளின்று சீஸரின் மனைவி. சீஸருக்கு ஆண்மகனை அளித்த எகிப்த் மாது! அவளை நான் பார்க்க விரும்புவது உண்மை. ஆனால் எனது ஆசை நாயகியாக எண்ண முடிய வில்லை!

கல்பூர்ணியா: [காதுகளை மூடிக் கொண்டு] நான் அருகில் உள்ளது தெரியவில்லையா! சீஸர்! ஆண்டனி! போதும் உங்கள் காதல் பேச்சுகள்! கிளியோபாத்ராவை நீங்களிருவரும் பங்கிட்டுக் கொள்வது எனக்குக் கேட்பதற்குச் சங்கடமாக உள்ளது! உங்கள் அருமைப் புதல்வனைக் காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! அவனை என்னிரு கரங்களில் தூக்கி அணைத்துக் கொள்வேன்! கிளியோபாத்ராவைப் பற்றி என் முன்னால் பேச வேண்டாம்! அருவருப்பாய் உள்ளது! வெந்நீர்க் குளியறையில் பேசிக் கொள்வீர்.

[அப்போது சிரித்துக் கொண்டு போர்ஷியா கல்பூர்ணியாவுக்கு அருகில் வருகிறாள். சீஸரும், ஆண்டனியும் மெதுவாக வேறிடத்துக்கு நழுவுகிறார். வீதியில் மக்களின் பலத்த ஆரவாரம் கேட்கிறது.]

போர்ஷியா: எதற்காக மந்தைக் கூட்டம் இப்படிக் கூச்சல் போடுகிறது? கல்பூர்ணியா! சீஸரை மயக்கிய அந்தச் சிறுக்கி கிளியோபாத்ராவுக்கு ரோமாபுரியில் கோலாகல வரவேற்பா? ஆனால் அவளைப் பார்க்க சீஸர் முகத்தில் மலர்ச்சியைக் காணோம்! ஆண்டனியின் கண்கள் இரண்டும் அவள் வரும் திக்கையே நோக்கி யுள்ளன! ரோமானிய செனட்டர் அத்தனை பேரும் அலங்காரமாக வரவேண்டுமா? கிளியோபாத்ராவை மயக்கவா? மாதரெல்லாம் ஒய்யார உடையில் வாசனைத் திரவத்தை வீச வேண்டுமா? மூக்கைத் துளைக்கும் அவை! ரோமானிய ஆண்கள் யாருமே பெண்ணைப் பார்த்ததில்லையா? அவள் என்ன அப்படி ஓர் அதிசயப் பெண்ணா? அவள் மூக்கு சற்று கோணியது என்று கேள்விப் பட்டேனே!

கல்பூர்ணியா: கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் தெரியுமாம்! போர்ஷியா! உனக்கு இத்தாலிய மொழியைத் தவிர வேறென்ன தெரியும்? நீள நைல் ஓடும் மாபெரும் எகிப்த் நாட்டின் மகாராணி அவள்! நீ எந்த நாட்டுக்கு ராணி? சொல், போர்ஷியா! எனக்குப் பிள்ளை உண்டாவதில்லை! சீஸருக்கு ஆண்மகனைப் பெற்றுத் தந்திருக்கிறாள், கிளியோபாத்ரா! எல்லாவற்றிலும் உன்னை விடப் பெரியவள் மட்டுமில்லை, கிளியோபாத்ரா என்னை விடவும் பலபடி உயர்ந்தவள்! ஆம், அவள் ஓர் அதிசயப் பெண்! ஓர் அற்புதப் பெண், ஐயமின்றி.

போர்ஷியா: நிறுத்து கல்பூர்ணியா! என்ன அடுக்கிக் கொண்டே போகிறாயே! கிளியோபாத்ரா ஒரு பரத்தை! அவளை ஓர் அற்புதப் பெண் என்று நீ புகழ்வது தவறாகத் தெரிகிறது எனக்கு! ஏற்கனவே அவள் கூட்டாகப் பட்டம் சூடிக் கொள்ளத் தமையன் டாலமியை மணம் புரிந்து கொண்டவள்! பிறகு டாலமியைக் கொல்வதற்கு சீஸர் உதவியை நாடியவள்! ஆண்மகவைப் பெற்றுத் தருகிறேன் என்று சீஸரைக் கவர்ந்து திருமணம் செய்து கொண்டவள்! கல்பூர்ணியா! சட்டப்படி நீ சீஸரின் மனைவி! அவள் உண்மையாகச் சீஸரின் மனைவி யில்லை! வைப்பு மாது அவள்! உன்னிடத்தில் அவள் அமர்ந்து சீஸரின் பிரதான மனைவி என்று முரசடிப்பதில் உன் உதிரம் கொதிக்க வில்லையா? என்னுதிரம் கூடக் கொதிக்கிறதே!

கல்பூர்ணியா: என் கொதிப்பெல்லாம் அடங்கி என்னாவி திரும்பி விட்டது! கிளியோபாத்ரா மீது துளியும் பொறாமை இல்லை எனக்கு! துளியும் வெறுப்பில்லை எனக்கு! ஆயிரம் இருந்தாலும் அவள் என்னிடத்தைப் பிடிக்க முடியாது! ஆயிரம் இல்லா விட்டாலும் முதல் மனைவி நான் என்பதை யாரும் மாற்ற முடியாது. சீஸருக்கு ஆண்மகனை அளித்த கிளியோபாத்ரா என் மதிப்புக்கு உரியவள்! சீஸர் நேசித்து மணந்தவள் என் பரிவுக்கு உரியவள்!

போர்ஷியா: கல்பூர்ணியா! சீஸருக்கும், காதலுக்கும் வெகு தூரம்! கண்டதும் காதல் கொள்பவர் சீஸர்! சீஸருக்கு ஆசை நாயகிகள் எத்தனை என்பதே அவருக்கே தெரியாது! வனப்பில் மயங்குபவர் சீஸர்! வயிற்றுக்குத் தேவை உணவு! உடலுக்குத் தேவை ஒரு பாவை! அதுதான் அவரது காதல் விதி! பாலை வனத்தில் அவரது தாகத்திற்கு நீர் அளித்த பசுஞ்சோலை அந்த கிளியோபாத்ரா! பஞ்ச வர்ணக் கிளியான கிளியோபாத்ரா வயதான சீஸரை நேசிப்பதாக நீ கனவு காணாதே! உன்னை நேசித்தா சீஸர் திருமணம் புரிந்தார்? ரோமாபுரியில் உன்னில்லம் மேல்தட்டுக் குடும்பம்!

[வீதியில் மக்களின் ஆரவாரம் கேட்கிறது. தங்கக் கிரீடம் ஒளிவீச மகாராணி கிளியோபாத்ரா, மகனைக் கையில் பற்றிக் கொண்டு ரதத்திலிருந்து இறங்கிச் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வருகிறாள். ரோமானியர் அவள் மீது மலர்களைத் தூவி ஆரவாரம் செய்கிறார்]

கல்பூர்ணியா: [எழுந்து நின்று] அதோ வருகிறாள் கிளியோபாத்ரா! அதோ வருகிறான் சீஸரின் அழகு மகன்! தாமரை மலர்போல் தெரிகிறாள், கிளியோபாத்ரா! மல்லிகை தண்டுபோல் வருகிறான் மகன்!

ஜூலியஸ் சீஸர்: [எழுந்துபோய் முகமலர்ச்சியுடன் வரவேற்கிறார். சீஸர் கிளியோபாத்ராவைத் தழுவிக் கொள்கிறார். மகனைத் தூக்கிக் கொண்டு கன்னத்தில் முத்தமிடுகிறார். அருகில் கல்பூர்ணியா, போர்ஷியா, ஆண்டனி, புரூட்டஸ் வருகிறார். சீஸர் அனைவரையும் அறிமுகம் செய்கிறார்] வருக! வருக! கிளியோபாத்ரா! ரோமாபுரி உன்னையும், என் செல்வனையும் வாஞ்சையோடு வரவேற்கிறது. பார்! உங்களை வரவேற்க ஆயிரக் கணக்கான மக்கள் மணிக்கணக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்! … இதோ கல்பூர்ணியா! .. ஆண்டனி! .. புரூட்டஸ்! .. புரூட்டஸின் மனைவி போர்ஷியா! அக்டேவியஸ்! என் சகோதரனின் மகன் [கிளியோபாத்ரா அனைவருக்கும் முறுவலுடன் கை கொடுக்கிறாள்]

கல்பூர்ணியா: [சீஸரிடமிருந்து மகனை வாங்கி, பாசமோடுக் கன்னத்தில் பலமுறை முத்தமிட்டு] வாடா கண்ணே வா! நானும் உன் அன்னைதான்! உன் பெயர் என்ன சொல்!

சிஸேரியன்: என் பெயர் சிஸேரியன்! நீங்களும் எனக்கு ஓர் அன்னையா? எனக்கு ஓர் அன்னைதானே! ரோமிலும் ஓர் அன்னை உள்ளது தெரியாது!

போர்ஷியா: [அருகில் வந்து சிறுவன் கன்னத்தைத் தடவி] என்ன அழகாக இத்த்தாலிய மொழியில் பேசுகிறான்? உனக்கு யார் இத்தாலி பேசக் கற்றுக் கொடுத்தது?

சிஸேரியன்: என் தாய்தான்! அம்மாவுக்கு ஏழு மொழி தெரியும்! எனக்கு மூனு மொழி தெரியும். சொல்லட்டுமா? எகிப்து மொழி, இத்தாலிய மொழி, ஹீப்ரூ மொழி!

கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] அரண்மனை ஆசிரியர் சொல்லித் தருகிறார். நான் அவனுடன் இத்தாலிய மொழியிலும் பேசுவேன்.

ஜூலியஸ் சீஸர்: அப்படியா, எனக்குத் தெரியாதே! என் மகன் இத்தாலியில் எப்படி எளிதாகப் பேசுகிறான்! [மகன் கன்னத்தில் முத்தமிடுகிறார்]

அக்டேவியஸ்: [சற்றுத் தள்ளிச் சென்று, காஸ்ஸியஸைப் பார்த்து] காஸ்ஸியஸ்! பார்த்தாயா, சீஸரின் எதிர்கால வாரிசை! இத்தாலிய மொழி எல்லாம் சொல்லிக் கொடுத்துத் தயாராக அழைத்து வந்திருக்கிறாள் கிளியோபாத்ரா! அரை இத்தாலியன் முழு இத்தாலியனை ஆளப் போகிறானா? சிஸேரியன் ஓர் அரைப் பிறவி [Half Breed] தெரியுமா? நானும்தான் பார்க்கப் போகிறேன். ரோமாபுரியைக் கைக் கொள்ளப் போவது ஓர் அரைப் பிறவியா? அல்லது ஒரு முழுப் பிறவியா? அந்த அரைப் பிறவியை நசுக்கிக் குறைப் பிறவியாக ஆக்கா விட்டால், நானோர் ரோமானியன் அல்லன்!

காஸ்ஸியஸ்: அக்டேவியஸ்! நமது பகைவன் நான்கு வயதுப் பாலகனா? [சிரிக்கிறான்] வேடிக்கையாக உள்ளது, நீ உறுதி மொழி உரைப்பது! யானை எதிரியாக உள்ள போது, யாராவது பூனையை விரட்டிச் செல்வாரா?

அக்டேவியஸ்: [வியப்புடன்] யாரை யானை என்று கூறுகிறாய்?

காஸ்ஸியஸ்: நமக்குக் குறி சீஸர்! சிஸேரியன் அல்லன்!

அக்டேவியஸ்: [ஆச்சரியமாக] என்ன பிதற்றுகிறாய்? சீஸர் எனது சித்தப்பா! எனக்கோர் வழிகாட்டி! எனது பகைவன் ஐயமின்றி அந்த நான்கு வயது எகிப்த் பாலகன்தான்! ரோமின் எதிர்கால மன்னன்… ! கிளியோபாத்ரா எதற்கு வந்திருக்கிறாள் என்று தெரியுமா? எதிர்கால ரோமாபுரியின் வேந்தன் சிஸேரியனைக் காட்ட வந்திருக்கிறாள் நமக்கு! எத்தனை நாளைக்கு சீஸரோடிருப்பாள் என்பதை நானும் பார்க்கத்தான் போகிறேன்! அவள் சீஸருக்கு மனைவி யானாலும், எகிப்தின் ராணி! ரோமின் அடிமை ராணி!

காஸ்ஸியஸ்: மார்ச் பதினைந்தாம் தேதி ஒரு பெரும் மாறுதல் வருமென்று ஜோதிடன் எச்சரிக்கை விட்டிருக்கிறான்! என்ன நடக்கும் என்பது தெரியாது எனக்கு! எச்சரிக்கை விட்டது நமக்கல்ல! சீஸருக்கு! சீஸரின் ஆசைநாயகி கிளியோபாத்ராவுக்கு! சீஸரின் வாரிசான சிஸேரியனுக்கு!

காஸ்கா: [கிளியோபாத்ராவின் வனப்பில் மயங்கி] சீஸர் அருகில் நிற்காமல் இருந்தால், கிளியோபாத்ராவை நானே தூக்கிக் கொண்டு போயிருப்பேன்! என்ன எடுப்பான உடல்! என்ன மிடுக்கான தோற்றம்! மயில் போன்ற நடை! உடுக்கை போன்ற இடுப்பு! கண்களைக் குத்தும் தூக்கிய மார்புகள்! சீஸர் அதிர்ஷ்டக்காரர்!

காஸ்ஸியஸ்: காஸ்கா! காமம் உன் கண்களைக் குருடாக்குகிறது! ஆண்டனியும் அந்த மாயக்காரி வனப்பில் மயங்கிப் போய் விட்டார்! பார்! அவள் தங்கக் கிரீடத்தில் உள்ளவை என்ன? ஒரு நாகமில்லை! பல நாகங்கள்! கருநாகங்கள்! கவனம் வைத்துக் கொள்! அவளது நச்சு அதரங்களை முத்தமிட்டவர் யாரும் உயிருடன் வாழ்வதில்லை! விரைவில் செத்து விடுவார்! அவளை மணந்த டாலமி நைல் நதியில் மூழ்கினான்! அடுத்து அவளை மணந்த சீஸருக்கு என்ன ஆகுமோ தெரியாது எனக்கு! அடுத்து ஆண்டனி வேறு அதே கோட்டைப் பின்பற்றிப் போகிறார்! கிளியோபாத்ரா, எழில்ராணி யில்லை! விதவை ராணி அவள்! அவள் ஒரு கரும்விதவை! யாரைத் திருமணம் செய்கிறாளோ, அவர் செத்துவிடுவார்! சீக்கிரம் செத்துவிடுவார்!

*********************

அங்கம் -5 காட்சி -2 பாகம் -1

ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு

“காதல் நோக்குவது கண்கள் மூலமன்று!
உள்ளத்தின் மூலமே ஊடுருவும்!”

“காதலின் மெய்யான போக்கு கரடு முரடு.”

வில்லியம் ஷேக்ஸ்பியர் [வேனிற்காலக் கனவு]

பண்ணிசை உள்ளம் பெறாத மனிதன்,
இன்னிசைத் தொனிக்கு உருகாத மனிதன்,
பாழானவன்! வஞ்சகம் செய்பவன்!
பகைவனாய் ஏமாற்றும் பாதகன்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [வெனிஸ் வர்த்தகன்]

வெளிச்சம் பொழியும் வெண்ணிலவு!
இம்மாதிரி இரவு வேளையில் தான்
மரங்களை அணைத்து
முத்த மிடும் மிருதுவாய்,
சித்தம் குளிரும் தென்றல்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [வெனிஸ் வர்த்தகன்]

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்.

நேரம், இடம்: பகல் வேளை.

ரோமாபுரியில் சீஸரின் தனி மாளிகை.

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர், கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன், ஆண்டனி, புரூட்டஸ், அக்டேவியன், காஸ்ஸியஸ், காஸ்கா, சிசெரோ, மற்றும் சில செனட்டர்கள்.

காட்சி அமைப்பு:

ரோமாபுரியில் ஜூலியஸ் சீஸர் தன் தனி மாளிகையில் ஆசன மெத்தையில் மகனுடன் அமர்ந்திருக்கிறார். கிளியோபாத்ரா சற்று தூரத்தில் நின்று சீஸரையும், மகனையும் கவனிக்கிறாள். அறையில் வரப் போகும் செனட்டர்களுக்காக பல நாற்காலிகள் போடப் பட்டுள்ளன.

ஜூலியஸ் சீஸர்: [மகனை மடிமேல் அமர்த்தி] கண்மணி! ரோமாபுரி அலெக்ஸாண்டிரியா போல் உள்ளதா? ரோம் தலைநகரம் உனக்குப் பிடித்திருக்கிறதா? நீச்சல் கற்றுக் கொண்டாய் என்று உன் அன்னை சொன்னாள்.

சிஸேரியன்: [முகத்தைச் சுழித்து] ரோம் எனக்குப் பிடிக்க வில்லை அப்பா! என்னைப் பார்ப்பவர் எல்லாம் ஒருமாதிரி விழிக்கிறார்! பரிவும், பாசமும் என்மேல் யாருக்கு மில்லை! முகத்தை உம்மென்று வைத்து ஆந்தை போல் கூர்ந்து பார்க்கிறார்! அலெக்ஸாண்டிரியாவில் புன்னகை முகத்தையே பார்ப்பேன். சேடியர் எனது கன்னத்தில் முத்தமாய்ப் பொழிவார்! யாரும் என்னருகில் வராமல் தள்ளியே நிற்கிறார்! எனக்கு ரோம் அறவே பிடிக்க வில்லை அப்பா! அலெக்ஸாண்டிரியாவுக்குத் திரும்பிப் போக விரும்புகிறேன்.

ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரிமுடன்] அப்படிச் சொல்லாதே கண்மணி! எகிப்த் உன் அன்னை ஊர்! ரோமாபுரி உன் தந்தை ஊர்! நீ ஒருநாள் ரோமாபுரிக்கு ராஜாவாகப் போகிறாய்! ரோம் பிடிக்க வில்லை என்று சொல்லக் கூடாது! ரோமானியர் வெளிப்புறத்தில் கடூரமாய்த் தோன்றினாலும், உள்ளத்தில் அன்பு கொண்டவர். ஆயிரக் கணக்கான் ரோமானியர் உன்னையும் உன் தாயையும் ஆரவாரமோடு வரவேற்க வில்லையா? நீ வந்து சில தினங்கள்தான் ஆகின்றன. போகப் போக ரோமானியரின் பரிவு தெரியும் உனக்கு. பார், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ரோமானியர், உன்னைத் தோளில் தூக்கி வைத்து ஆடுவார்! பாடுவார்! நாடுவார்!

சிஸேரியன்: அப்பா! எனக்குக் கத்திச் சண்டை போட ஆசை. வில்லம்பு ஏவிட ஆசை. பயிற்சிக்கு ஏற்பாடு செய்வீரா? தினமும் அலெக்ஸாண்டிரியாவில் எனக்கு மொழிப்பயிற்சி உண்டு. கிரேக்க மொழி கற்றுக் கொள்ள ஆசை எனக்கு. அதற்கும் ஏற்பாடு செய்வீரா? கிரேக்க வீரர் அலெக்ஸாண்டர் கதையை அம்மா எனக்குச் சொல்லி யிருக்கிறார்.

ஜூலியஸ் சீஸர்: ஈதோ, ஏற்பாடு செய்கிறேன். [மணி அடித்துக் காவலனை அழைக்கிறார். காவலன் சிறுவனைக் கூட்டிச் செல்கிறான்.]

[கிளியோபாத்ரா புன்னகையுடன் சீஸர் வருகிறாள். சீஸர் அவளை முத்தமிடுகிறார்]

கிளியோபாத்ரா: சிஸேரியன் கிரேக்க மொழி கற்றுக் கொள்வேன் என்று பிடிவாதமாய் உள்ளான். ரோமில் அதைக் கற்றுக் கொள்ள அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. .அது சரி, நாளை ரோமாபுரியின் மக்கள் மன்றத்தில் உங்களுக்குப் பட்டாபிசேக விழா அல்லவா? வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி அல்லவா அது? சீஸரின் பொற்காலம் என்று என் குருநாதர் சொல்கிறார்! செனட்டர் செய்த முடிவுதான் என்ன? எப்படிப் பட்டம் சூடப் போகிறார் உங்களுக்கு?

ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] ரோமாபுரிக்கு வெறும் ஏகாதிபதியாக என்னை நியமிக்கப் போகிறார்! பெருத்த ஏமாற்றம் எனக்கு! எதிர்பாராத அடி எனக்கு! வெற்றிமேல் வெற்றி பெற்ற எனக்கு ரோமானியர் அளிக்கும் வெகுமதி வெறும் அதிபதி! அதுவும் ஏகாதிபதி!

கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] என்ன ஏகாதிபதியா? ஏமாற்றம் எனக்கும்தான்! ரோமாபுரிக்கு வேந்தரில்லையா நீங்கள்? வேடிக்கையாக உள்ளதே உங்கள் விநோத செனட்டர் முடிவு! அதை ஏற்றுக் கொள்ளப் போகிறீரா? தளபதியை அதிபதியாக ஆக்கியதில் என்ன மதிப்பிருக்கிறது? ரோமானிய செனட்டர்கள் கோமாளிகள்!

ஜூலியஸ் சீஸர்: நிச்சயம், ஒப்புக் கொள்ளப் போவதில்லை நான்! வேறு வழி என்ன என்று சிந்திக்கிறேன்.

[அப்போது செனட்டர்கள் வருகையைக் காவலன் அறிவிக்கிறான். சீஸர் அனுமதி அளிக்க ஆண்டனி, சின்னா, புரூட்டஸ், அக்டேவியன், சிசெரோ, காஸ்ஸியஸ், காஸ்கா ஆகிய செனட்டர் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்கிறார்கள். சீஸரும், கிளியோபாத்ராவும் ஆசனத்தில் அமர்கிறார்.]

ஆண்டனி: [எழுந்து நின்று] மாண்புமிகு தளபதி அவர்களே! செனட்டாரின் ஏகோபித்த முடிவை நான் அவர்கள் சார்பாக உங்களுக்குக் கூற விரும்புகிறேன். நாளை நடக்கும் பட்டாபிசேக விழாவில் ரோமாபுரியின் ஏகாதிபதியாக ஏற்றுக் கொள்ளப் படுவீர் தாங்கள். [செனட்டர் யாவரும் ஆரவாரமுடன் கைதட்டுகிறார்கள்]

ஜூலியஸ் சீஸர்: [சீற்றத்துடன் எழுந்து] நிறுத்துங்கள் கைதட்டலை! நிராகரிக்கிறேன் உமது முடிவை! முதலில் நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன், உமது ஏகோபித்த முடிவை! புறக்கணிக்கிறேன் உமது போலித் தனமான வேடிக்கை முடிவை!

புரூட்டஸ்: [எழுந்து நின்று கண்ணியமாக] மாண்புமிகு தளபதியாரே! மாபெரும் மத்திய கடற்கரை வெற்றி வீரருக்கு வேறென்ன வேண்டும்? ஏகாதிபதி என்பது ரோமாபுரியின் உன்னதப் பட்டமல்லவா? சீஸர் அதை வேண்டாம் என்று வெறுப்பதின் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று குரலைத் தணித்து] அருமை புரூட்டஸ்! என்னை நீ அறிவாய்! என் போர் வல்லமையை நீ அறிவாய்! பல்லாண்டு போரிட்டுச் சலிக்காதவன் நான்! ஸ்பெயின் முதல் எகிப்த் வரைக் கைப்பற்றியதை நீ அறிவாய்! பன்முறைப் போரிட்டு ரோமானிய சாம்ராஜியத்தைப் பல்லாயிரம் சதுர மைல் விரித்தவன் நான்! பார்புகழும் ஓர் மாவீரருக்கு அளிக்கும் வெகுமதியா இது? ஏமாற்றம் அடைந்தேன் புரூட்டஸ்! பெருத்த ஏமாற்றம் அடைந்தேன்! நான் எதிர்பார்த்தது இதுவன்று!

காஸ்ஸியஸ்: [எழுந்து நின்று] மேன்மைமிகு தளபதியாரே! நீங்கள் எதிர்பார்த்தது என்ன வென்று தெளிவாகச் சொல்வீரா? உங்கள் பேராற்றலை செனட்டார் யாரும் குறைக்க வில்லையே! வெறும் பட்டப் பெயரில் என்ன உள்ளது?

ஜூலியஸ் சீஸர்: [அழுத்தமுடன்] ஏகாதிபதியாக இருக்க விருப்ப மில்லை எனக்கு! ரோமாபுரியின் ஆற்றல் மிக்க ஏகச் சக்ரவர்த்தியாக விளங்க விழைகிறேன்! ரோமின் வேந்தராகப் பட்டாபிசேகம் ஆக விரும்புகிறேன். ரோமானிய சாம்ராஜியத்தின் முடி சூடிய மாமன்னராக அறிவிக்கப்பட வேண்டுகிறேன்!

[செனட்டருக்குள் பல முணுமுணுப்புகள் எழுகின்றன]

காஸ்ஸியஸ்: [ஆத்திரமுடன்] வேந்தராக ஒருவர் ரோமுக்கு ஆகிவிட்டால், செனட்ட ராகிய எமக்கு வேலை யில்லை! குடியாட்சியைப் புதைத்து முடியாட்சியைப் புகுத்த விழைகிறீர்! எமது ஆற்றல் மங்கிப் போகும்! எமது குரல் மதிப்பற்றுப் போகும்! நூற்றுக் கணக்கான செனட்டர்களைக் கீழே தள்ளிவிட்டு நாங்கள் எதற்கு ஓர் வேந்தரை நியமிக்க வேண்டும் ரோமுக்கு?

ஜூலியஸ் சீஸர்: [சீற்றத்துடன்] பேராற்றல் படைத்த எனது அரசியல் உரிமையைச் செனட்டர் அபகரித்துக் கொள்வதை ஏற்கப் போவதில்லை நான்! என்றைக்கும் உடன்படப் போவதில்லை நான்!

புரூட்டஸ்: [சற்று யோசனையுடன்] மேன்மைமிகு தளபதியாரே! நாங்கள் அதைப் பற்றித் தனியாகச் சிந்திக்க வேண்டும்! சற்று அவகாசம் தேவை. கொடுப்பீரா? ரோமாபுரிக்கு ஒரு வேந்தர் தேவையா என்று செனட்டர்கள் ஆராய வேண்டும்! தர்க்கத்துக்குரிய பிரச்சனை அது! கூடிப் பேசி முடிவு செய்ய வேண்டிய பிரச்சனை அது!

காஸ்ஸியஸ்: [கோபத்துடன்] செனட்டர் தீர்மானம் செய்ய வேண்டாம் அதை! ரோமாபுரிக்கு மன்னர் பதவி தேவை யில்லை. மன்னர் ஆட்சியில் செனட்டருக்கு என்ன வேலை?

சிசெரோ: [எழுந்து நின்று] மன்னிக்க வேண்டும், சீஸர் நான் குறுக்கீடு செய்வதற்கு! செனட்டர்கள் கூடிப் பேச சில மணிநேரம் அவகாசம் வேண்டும். அடுத்த அறையில் உடனே முடிவு செய்கிறோம் நாங்கள்!

ஜூலியஸ் சீஸர்: அப்படியே செய்யுங்கள். அனுமதி அளிக்கிறேன். [ஆண்டனி, புரூட்டஸ் மற்றும் ஏனைய செனட்டர் அனைவரும் வெளியேறுகிறார். மூடிய அடுத்த அறையில் கூடி அளவளாவுகிறார்கள்]

கிளியோபாத்ரா: [ஆத்திரமோடு அருகில் வந்து] மகா அலெக்ஸாண்டருக்குப் பிறகு மாவீரர் பரம்பரையில் சீஸரை மிஞ்சியவர் யார்? பல்லாயிரம் சதுர மைல் நாடுகளைப் பிடித்து ரோமானியப் பேராற்றலைக் காட்டியது யார்? உங்களை வேந்தர் என்று உங்கள் ரோமானியரே ஏற்றுக் கொள்ளாதது வியப்பாக உள்ளது எனக்கு! உங்கள் செனட்டார் அனைவரும் மூடர்கள்!

ஜூலியஸ் சீஸர்: ஆத்திரப் படாதே, கிளியோபாத்ரா! எகிப்திய மகாராணி ரோமானிய கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வது கடினம்! நான் தளபதி ஆயினும், ரோமானிய செனட்டரைப் புறக்கணிக்க முடியாது. அத்தனை பேரது பகையையும் நான் தேடிக் கொள்ளலாகாது!

கிளியோபாத்ரா: [சினத்துடன்] சீஸர்! ·பாரோவின் பரம்பரை வாரிசைப் பெற்ற நீங்கள் தேவனுக்குச் சமமானவர்! என்னை மணந்ததால் எகிப்த் உங்களை மன்னராக ஏற்றுக் கொண்டது! ஆனால் ரோமாபுரி ஏன் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது? என்னை மணந்த காரணமா? அல்லது உங்களுக்கு ஓர் மகன் பிறந்த காரணமா? பரம்பரை முடியாட்சியை செனட்டார் வெறுக்கிறாரா? சொல்லுங்கள். குழப்பமாய் உள்ளது எனக்கு!

ஜூலியஸ் சீஸர்: அப்படி எல்லாம் சந்தேகப் படாதே கிளியோபாத்ரா.

[அப்போது செனட்டர்கள் யாவரும் உள்ளே நுழைகிறார். நாற்காலியில் அமர்கிறார்]

புரூட்டஸ்: [எழுந்து நின்று] மேன்மைமிகு தளபதி அவர்களே! செனட்டார் யாவரும் செய்த முடிவு இதுதான். ரோம் சாம்ராஜியத்துக்கு வேந்தர்! ஆனால் ரோமுக்கு நீங்கள் ஏகாதிபதி! ரோமாபுரியின் ஆட்சியில் செனட்டரின் முடிவு முதலிடம் பெறும்! ரோமாபுரிக்கு வெளியே நீங்கள் வேந்தராக அறிவிக்கப் படுவீர்.

ஜூலியஸ் சீஸர்: [ஆங்காரச் சிரிப்புடன்] என்ன? சீஸர் வெளி உலகுக்கு மட்டும் வேந்தர்! ஆனால் உள்ளூருக்குள் வெறும் தளபதி, அதாவது ஏகாதிபதி! வேடிக்கையான பட்டாபிசேகம்! உள் நாட்டில் வெறும் பீடம்! வெளிநாடு போகும் போது ராஜ கிரீடம்! உள்ளூரில் பொம்மை ராஜா! வெளியூரில் உண்மை ராஜா! வேண்டாம் எனக்கு இந்த இரட்டை வேடம்! எனக்குத் தேவை ஒரே வேடம்! ராஜக் கிரீடம்! ரோமாபுரியின் ஏகச் சக்ரவர்த்தி!

காஸ்ஸியஸ்: தளபதியாரே! செனட்டர் ஏகோபித்த முடிவை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்! அவமானம் எங்களுக்கு! எகிப்த் ராணியின் முன்பாக அனைத்து செனட்டரை அவமதித்தால் வெளியேறுகிறோம் நாங்கள்! உங்களுடன் பேச்சில்லை எமக்கு!

காஸ்கா: [சினத்துடன்] கிளம்புங்கள் வெளியே! நமக்கினிப் பேச்சில்லை! முடியாட்சி ரோமில் முளைத்திட யாம் அனுமதிக்க மாட்டோம்!

காஸ்ஸியஸ்: செனட்டர் கடமை ரோமாபுரியைக் காப்பாற்றுவது! குடியாட்சியைக் கீழே தள்ள நாம் எப்படி உடன்படுவோம்?

[ஆண்டனி, புரூட்டஸைத் தவிர அனைத்து செனட்டரும் வேகமாக வெளியேறுகிறார்]

புரூட்டஸ்: [கண்ணியமாக] செனட்டார் சொல்வதைச் சீஸர் கேட்பது சாலச் சிறந்தது. செனட்டர் சினத்துக்குச் சீஸர் தீனி போடுவது நல்லதன்று! செனட்டர் நெஞ்சில் கனலை வளர்ப்பது எரிமலையைத் தூண்டுவது போலாகும்.

ஜூலியஸ் சீஸர்: [கோபமாக] புரூட்டஸ்! உனக்கு உலகம் தெரியாது! நீ வாலிபன்! உன் அறிவுரை தேவை யில்லை எனக்கு! செனட்டர் பக்கம் சேரும் நீயும் அவருடன் வெளியேறிச் செல்!

[புரூட்டஸ் தலைகுனிந்து கொண்டு பரிதாபமாக வெளியேறுகிறார்]

ஆண்டனி: [கனிவாக] சீஸர்! கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் கோட்டையைப் பிடிக்கலாம்! ஒப்புக் கொள்ளுங்கள் சீஸர்! நீங்கள் கேட்டதில் முக்கால் பாகம் கிடைத்துள்ளதே! அது போதாதா? ரோம் ராஜியம் உங்கள் நேரடி ஆட்சிக்குக் கீழ்! ரோமாபுரி மட்டும் செனட்டர் ஆட்சிக்குக் கீழ்! ஏற்றுக் கொள்ளுங்கள் சீஸர் முதலில்! மாற்றிக் கொள்ளலாம் அவரைப் பின்னால்!

ஜூலியஸ் சீஸர்: [சற்று யோசனையுடன்] சிந்தித்துச் சொல்கிறேன் ஆண்டனி! அவகாசம் தேவை எனக்கும்! நன்றி உன் ஆலோசனைக்கு!

ஆண்டனி: [கிளியோபாத்ரா அருகில் சென்று] ரோமாபுரியின் கொந்தளிப்பில் உங்களைச் சந்தித்தது என் துர்பாக்கியமே! எத்தனை நாட்கள் ரோமில் தங்குவதாக உங்கள் திட்டம்? தனியாகப் பேச வேண்டும் நான் உங்களுடன்! உங்கள் வருகையால் ரோமாபுரியில் ஒளி வெள்ளம் பரவி உள்ளது! சீஸருக்கு ஆண்மகவைக் கொடுத்த கிளியோபாத்ரா ரோமாபுரியின் வரலாற்றைச் செழிப்பாக்கியவர்.

கிளியோபாத்ரா: [புன்னகையுடன்] மிக்க நன்றி ஆண்டனி! மூன்று மாதங்கள் ரோமில் நான் தங்குவேன்! எகிப்துக்கு நீங்கள் ஒருமுறை விஜயம் செய்ய வேண்டும்! அங்கே அரசாங்க விருந்தாளியாக நீங்கள் என் அரண்மனையில் தங்க வேண்டும்.

ஆண்டனி: மார்ச் பதினைந்தாம் தேதி சீஸருக்குப் பட்டாபிசேக விழா! என் அரசியல் பொறுப்புகளை அவர் மீது போட்ட பிறகுதான் எனக்கு விடுதலை! எகிப்துக்கு நான் வருவதை உறுதியாகச் சொல்ல முடியாது! அழைப்புக்கு மிக்க நன்றி, கிளியோபாத்ரா! [அருகில் வந்து கிளியோபாத்ராவின் வலது கரத்தில் முத்தமிடுகிறார்.] … போய் வருகிறேன் சீஸர்! கிளியோபாத்ரா! [ஆண்டனி வெளியேறுகிறார்]

கிளியோபாத்ரா: [அழுத்தமுடன்] ஒப்புக் கொள்ளுங்கள் சீஸர்! புரூட்டஸ் சொல்வதிலும், ஆண்டனி சொல்வதிலும் பொருள் உள்ளதாகத் தெரிகிறது எனக்கு! சிறுகச் சிறுகப் பிடி என்று ஆண்டனி கூறியது ஒரு வேத வாக்கு! செனட்டரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக வேண்டாம்! வயதில் சிறியவள் ஆயினும், என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். வயதில் பெரியவர் ஆயினும், ஒப்புக் கொள்வதில் உங்களுக்குத் தாழ்மை யில்லை! மகா அலெக்ஸாண்டரின் வெற்றிப் பாதை உங்களுக்குத் திறந்து விட்டது! அவர் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்! இந்தியாவின் சிந்து நதியைத் தாண்டி, கங்கைக் கரையைத் தாண்டிச் சென்று சைனாவைக் கைக்கொண்டு புது வரலாற்றைப் படைக்க வேண்டும் சீஸர். இது ஒருபெரும் வாய்ப்பு. இழந்து விடாதீர் அதனை!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று முதலில் நீதான் என்னுடன் வாதாடினாய்! ஏற்றுக்கொள் என்று மாறாக நீ வழக்காடு கிறாய்! ஒரு கணத்தில் 180 டிகிரி கோணத்துக்குத் திரும்பி விட்டாய்! ஆனால் நான் அப்படி ஒரு கணத்தில் மாறுபவன் அல்லன்! நான் போர்த்தளபதி! பிடித்துக் கொண்டதை எளிதில் விட்டுவிடுபவன் அல்லன்! ரோமாபுரிக்கு வேந்தர் பட்டாபிசேகம்! அதை வேண்டி நின்ற பின்னர், வேறு எதனையும் விரும்ப மாட்டேன் நான்! நாளை நடக்கப் போகும் வேடிக்கையைப் பார்!

*********************

அங்கம் -5 காட்சி -3

நேற்றைய தினம் பட்டப் பகலிலே
அங்காடிச் சந்தையில் குந்தி
அலறிக் கொண்டு
ஊளை யிட்டது ஓர் ஆந்தை!
இயற்கைக்குப் புறம்பான நிகழ்ச்சிகள்
அவ்விதம்
ஒருங்கே கூடி முழங்கினால்,
மனிதர் சொல்லக் கூடாது :
“அது இயற்கை என்று
அபாய நிகழ்ச்சிக்கு
அஞ்ச வேண்டாம் என்று !”

 

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

வால்மீன்கள் தெரியா பிச்சைக்காரர் செத்தால்!
வானமே தீப்பற்றும் இளவரசன் மாண்டால்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

கோழையர் மடிவதற்கு முன் பன்முறைச் சாவார்!
வல்லவர் ஒருமுறை தான் சாவைச் சுவைப்பார்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

எல்லாம் வல்ல தெய்வங்களே
கொல்லும் முடிவைத் தீர்மானித்த பின்,
எவர்தான் அந்த பயங்கர விளைவைத்
தவிர்த்து நிறுத்த முடியும்?

வானத்தின் வயிற்றைக் கிழிக்குது மின்னல்
நெஞ்சைக் கீறி அடிக்குது இடி மின்னல்
நாட்டுருவைச் சிதைக்குது புயல்
நகர்த் தெருவை துடைக்குது மழை!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

நாடகப் பாத்திரங்கள்:

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்.

நேரம், இடம்

 

சீஸர் பட்டாபிசேகத்திற்கு முந்தைய தினம். பகல் வேளை. ரோமாபுரியில் மாவீரன் பாம்ப்பியின் நினைவு மாளிகை.

 

நாடகப் பாத்திரங்கள்:

காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, சிசேரோ மற்றும் சில சதிகாரர்கள், புரூட்டஸ், புரூட்டஸின் மனைவி போர்ஷியா.

 

காட்சி அமைப்பு

 

மார்ச் பதினாங்காம் தேதி இரவு. பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை அனைத்தும் தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. சிசேரோவும், காஸ்காவும் எதிர்த் திசையிலிருந்து நெருங்கி வருகிறார். அவரது உடம்பெல்லாம் மழையில் நனைந்துள்ளது. துணியால் தலை, முகத்தை மூடி நடக்கிறார்கள்.

சிசேரோ: [வியப்புடன்] யாரது? … காஸ்காவா? எங்கிருந்து வருகிறாய்? சீஸரைக் கோலாகலமாய் வரவேற்று ரோமாபுரி மாளிகையில் விட்டுவிட்டு வருகிறாயா? நல்லது! … அடடா! ஏனிப்படி உனக்கு மூச்சு வாங்குகிறது? ஏனிப்படி உன் கண்களில் ஆத்திரம் பொங்குகிறது? யாரை உற்று உற்றுப் பார்க்கிறாய்?

காஸ்கா: [ஆங்காரமாய்] சிசேரோ! நீ என்ன? கல்லா? களிமண்ணா? அல்லது மரக்கட்டையா? எதுவும் உன்னைப் பாதிக்க வில்லையா பூமியே குப்புறக் கவிழ்ந்து ஆடும்போது? நானிதுவரை ரோமில் பார்க்காத பிரளயமிது! நானிதுவரைக் கண்ட புயலில்லை இது! நானிதுவரைப் பார்த்த கடல் பொங்குதலில்லை இது! நானிதுவரைக் கேட்ட பேரிடி ஓசையில்லை இது! ரோமாபுரி ஏனின்று பேயாட்டம் ஆடுதென்று தெரியவில்லை எனக்கு! யாரோ தெய்வங்களுக்குத் ஆராதனை செய்துப் பேரழிவு நாசம் புரியப் புயலை அனுப்பி யுள்ளது தெரிய வில்லையா உனக்கு?

சிசேடோ: [சிந்தனையுடன் தடுமாறி] எனக்குத் தெரியவில்லை காஸ்கா? நீ ஏதாவது விபரீதத்தைக் கண்டாயா?

காஸ்கா: விபரீதமா? ரோமாபுரியின் வீழ்ச்சியைக் கண்டேன்! ரோமானியர் அடிமைகள் ஆவதைக் கண்டேன்! வேறென்ன விபரீதத்தைக் காண வேண்டும் என் கண்கள்? வானம் துடிப்பதுபோல் என் மனமும் துடிக்கிறது! சிசேரோ! உன் மனது பாறாங்கல்லா? ஒரு துடிப்பு மில்லாமல் நட்ட கல்போல் நிற்கிறாயே! நேற்றைய தினம் பட்டப் பகலிலே நமது அங்காடிச் சந்தையில் ஆந்தையின் அலறைக் கேட்டேன்! புயலும், மழையும், இடியும், மின்னலும், ஆந்தை அலறலும் ஒன்று மில்லை என்று புறக்கணிக்காதீர்! அவை நமக்கு எச்சரிக்கை செய்யும் அபாயத்தை எல்லாம் பொய்யென்று ஒதுக்காதீர்!

சிசேரோ: [சற்று கவலையுடன்] விநோத எச்சரிக்கைதான்! என்ன அபாய எச்சரிக்கையாக நினைக்கிறாய் நீ? நாளை மக்கள் மன்றத்துக்கு மன்னராய்ப் பட்டம் சூட சீஸர் வருகிறாரா?

காஸ்கா: [தலையில் அடித்துக் கொண்டு] ஆமாம். நிச்சயம் சீஸர் மன்றத்துக்கு வருவார்! ஆனால் மன்னராக்கப்பட மாட்டார்! நீவீர் என்ன செய்ய வேண்டும் என்று ஆண்டனி மூலம் உனக்குச் செய்தி அறிவிக்கப் படும்.

சிசேரோ: அப்படியா, சரி! நான் போய் வருகிறேன்! நீ பயங்கர ராத்திரி நேரத்தில் பசிக்கலையும் கரடி போல் திரியாதே! நீயே பேரிடிக் கிரையாகி விடுவாய்! [வெளியேறுகிறார்]

காஸ்கா: போய்வா சிசேரோ! [தனக்குள்] பேரிடிக் கிரையாவது நானா அல்லது சீஸரா என்பது நாளை தெரியும்! உனக்குத் தலையும் புரியாது! வாலும் புரியாது!

[வேறு திசையிலிருந்து காஸ்ஸியஸ் நுழைகிறான்]

காஸ்ஸியஸ்: [காரிருளில் சரிவரத் தெரியாது] யாரங்கே, தலையில் துணியுடன் நடமாடுவது?

காஸ்கா: ஒரு ரோமன்! குடியாட்சி விரும்பும் ரோமன்! குடிமகன்!

காஸ்ஸியஸ்: [புன்னகையுடன்] வருக, வருக குடிமகனே! … ஆம் காஸ்காவின் குரல்!

காஸ்கா: உன் செவியின் கூர்மையை மெச்சுகிறேன். என்ன மாதிரிக் கோர ராத்திரி இது?

காஸ்ஸியஸ்: உத்தமரை மகிழ வைக்கும் ராத்திரி! உலுத்தரை கலக்கிவிடும் ராத்திரி! உனக்கு எப்படித் தெரியுது காஸ்கா?

காஸ்கா: எனக்குச் சூனியக் காட்சிதான் தெரியுது! ரோமாபுரியின் அத்தமனம் தெரிகிறது! நாளை பட்டாபிசேக விழாவில் என்ன நிகழப் போவது என்று தெரியவில்லை எனக்கு?

காஸ்ஸியஸ்: [அழுத்தமாக] நீ ஓர் பயந்தாங் கொள்ளி! இடி மின்னலுக்கு அஞ்சி ஒடுங்குகிறாய்! அச்சமில்லை எனக்கு! ரோமாபுரியின் குடியாட்சி தொடுவானில் தெரியுது! ஏன் வெளுத்து விட்டது உன் முகம்? ஏன் விறைத்து விட்டன உன் விழிகள்? பயப் போர்வையைப் போர்த்திக் கொண்டு நடுங்குகிறாய் நீ! அதற்கெல்லாம் காரண கர்த்தா யார் தெரியுமா? இந்தப் பயங்கரப் புயலுக்கும், இடி மின்னலுக்கும், பேய் மழைக்கும் யார் காரண கர்த்தா சொல்லட்டுமா? உன்னை விட அவர் வல்லவரில்லை! என்னை விட அவர் பராக்கிரமனில்லை!

காஸ்கா: யாரைச் சொல்கிறாய்? சீஸரைச் சுட்டிக் காட்டுகிறாயா?

காஸ்ஸியஸ்: யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்! ரோமானியரின் உறுப்புகள் பூர்வீகமாகித் துருவேறி விட்டன! கெட்ட காலம்! நம் முன்னோரின் வீர நெஞ்சங்கள் செத்து விட்டன! நமது அன்னையாரின் உணர்ச்சிகள் நம்மை ஆட்கொண்டன! ஆதலால் அடிமைத்தனம் சுற்றிக் கொண்டு, நம்மைப் பெண்டிராக்கி விட்டது!

காஸ்கா: [அழுத்தமாக] நான் கேள்விப் பட்டேன்! நாளைய தினம் செனட்டர் சிலர் சீஸருக்கு, நிலத்துக்கும், கடலுக்கும் வேந்தராகக் கிரீடம் சூடப் போகிறாராம்! அவர் வெற்றிமாலை சூடிய எல்லா நாடுகளுக்கும் மாமன்னர், இத்தாலிய நாட்டுக்குத் தவிர!

காஸ்ஸியஸ்: [கைவாளை உருவி] அப்போது எனக்குத் தெரியும் வாளை எவ்விடத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்பதை! அடிமைப் பந்தத்திலிருந்து நீங்கிக் காஸ்ஸியஸ், விடுதலை அளிப்பான் காஸ்ஸியஸ¤க்கு! கொடுங் கோன்மை ஆட்சிக்கு விடுவிப்பு அளிப்பான், காஸ்ஸியஸ்.

காஸ்கா: காஸ்ஸியஸ்! அவ்விதமே நானும் செய்வேன். அடிமைத் தளையை உடைக்க ரோமன் ஒவ்வொருவன் கரத்திலும் ஆற்றல் உள்ளது!

காஸ்ஸியஸ்: பிறகு ஏன் சீஸர் கொடுங்கோலனாய் நெஞ்சை நிமிர்த்துகிறார்? பாவம் சீஸர்! ஓநாயா சீஸர்? ஆயினும் அவர் கண்களுக்கு ரோமானியர் ஆட்டுக் குட்டிகளய்த் தென்படுகிறார்! சிங்கமாக இருக்கலாம் சீஸர்! ஆனால் ரோமானியர் பெண்மான்கள் அல்லர். நான் தீர்மானிக்க வேண்டும்! நான் தயாராக வேண்டும். நான் துணிந்து விட்டேன்! என் கத்தியைக் கூர்மைப் படுத்த வேண்டும்! என் குறிக்கோள் நிறைவேறும் வரை உறக்க மில்லை எனக்கு! மதுபானக் குடியில்லை எனக்கு! மனைவியுடன் சல்லாபமில்லை எனக்கு! குழந்தையுடன் விளையாட்டில்லை எனக்கு!

காஸ்கா: [அருகில் சென்று வலது கரம் நீட்டி] காஸ்ஸியஸ்! உன் துணிச்சலை மெச்சுகிறேன்! உதவிக்கு நானுடன் வருவேன்! எங்கு நீ அழைத்தாலும் வருவேன்! எதைச் செய்யென்றாலும் செய்வேன்! உன் வாளோடு என் வாளும் ஒரே உடலைக் குத்தும்! ஒரே இடத்தில் குத்தும்!

காஸ்ஸியஸ்: [காஸ்ஸியஸ் கையைக் குலுக்கி] உன்னை நம்புகிறேன் காஸ்கா! ஒப்பந்தம் செய்து கொள்வோம்! ரோமாபுரியில் நகராத பெரும் குன்றுகளை நகர்த்தி விட்டேன் நான்! ரோமின் பண்பாள மேதைகள் சிலரை வசப்படுத்தி விட்டேன் நான். என் அபாயத் திட்டங்களுக்கு ஆதரவு தருவதாய் அவர்கள் வாக்களித்துள்ளார்! நாம் புரியப் போகும் நாளைக் கோர நிகழ்ச்சிக்கு இடி முரசு தட்டுகிறது! மின்னல் வழிகாட்டுகிறது! புயல் புல்லாங்குழல் வாசிக்கிறது! மழை மனதைக் குளிர வைக்கிறது!

காஸ்கா: [வியப்புடன்] இடி, மின்னல், மழை, புயல் எழுவது என்மனத்தில் வேறுவித முடிவை எச்சரிக்கின்றது! நமக்கு ஏதாவது ஆபத்து நாளை ஏற்பட்டு விடாமா வென்று ஐயப்பாடு உண்டாகிறது!

காஸ்ஸியஸ்: அஞ்சாதே! அந்த அபசகுனங்கள் நமக்கில்லை! அவை எச்சரிப்பது சீஸரை! ஏற்கனவே மார்ச் பதினைந்தாம் நாள் அபாயத்தை சகுன ஞானி ஒருவன் சீஸர் நெஞ்சில் பொறித்து வைத்துப் போயிருக்கிறான்! நீ நினைவில் வைத்துக்கொள்! தூங்கிப் போய் விடாதே! நாளைதான் நமது தீர்வு நாள்!

காஸ்கா: போய் வருகிறேன் காஸ்ஸியஸ்! நாளை தினத்தில் நான் எழுந்திட மறந்தாலும், காலைப் பரிதி என்னை எழுப்பி விடும்! கவலைப் படாதே!

[காஸ்கா போகிறான். அப்போது சின்னா நுழைகிறான்]

காஸ்ஸியஸ்: யாரது வருவது? ஓ கவிஞர் சின்னாவா?

சின்னா: ஆம். ஆம் காஸ்ஸியஸ். என்ன பயங்கர ராத்திரி யிது? வானத்தின் வயிற்றைக் கிழிக்குது மின்னல்! நெஞ்சில் வெடிக்குது இடி! நகரைச் சிதைக்குது புயல்! தெருவை வழித்துப் போகுது மழை! நம்மில் மூவர் அல்லது நால்வருக்குத்தான் அவற்றின் எச்சரிக்கை புரிகிறது. காஸ்ஸியஸ்! ஆண்டனியை வசப்படுத்த முடியாது! அவர் சீஸரின் வலதுகை! ஆனால் புரூட்டஸை நாம் வசப்படுத்த வேண்டுமே.

காஸ்ஸியஸ்: கவலைப் படாதே சின்னா! புரூட்டஸ் சீஸரின் மூத்த மகன்! ஏற்கனவே நான் புரூட்டஸ் மனதில் விதையை நட்டுவிட்டேன்! எப்போது அது முளைக்கும் என்று தெரியாது! அவரை நம் திக்கில் திருப்புவது கடினம்! ஆனாலும் நான் தொடர்வேன்! அடிமேல் அடி வைத்தால் பிரமிடையும் உடைக்கலாம்! சின்னா! நான் சொல்வதைச் செய்! [கையில் கட்டான காகிதத் தகவலை எடுத்து] … பார்! இந்த தகவல் சுருளைப் புரூட்டஸ் வீட்டுப் பலகணி வழியே வீசி எறி! அப்புறம் இதை வீட்டு முன்பு புரூட்டஸ் சிலைக்கு அருகில் வைத்திடு! .. சீக்கிரம் செல் சின்னா!

[கையில் சுருள்களை வாங்கிக் கொண்டு சின்னா வெளியேறுகிறான்]

காஸ்ஸியஸ்: [தனிக்குரலில்] ஓ புரூட்டஸ்! நீயின்றி அத்துணிகர நிகழ்ச்சி நிகழாது! நீயின்றி ரோமாபுரிக்கு விடுதலை கிடையாது! நீயின்றி முடியாட்சியைத் தடுக்க முடியாது! நீயின்றிக் குடியாட்சியை நிலைநாட்ட முடியாது! தூங்கிக் கொண்டிருக்கும் புரூட்டஸை நான் எழுப்பியாக வேண்டும் இன்றிரவு! குழம்பிப் போன புரூட்டஸை இன்றே மாற்றியாக வேண்டும்! தயங்கிக் கொண்டிருக்கும் புரூட்டஸை இன்று தைரியசாலி யாக்க வேண்டும்!

[காஸ்ஸியஸ் விரைவாக வெளியே போகிறான்]

*********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *