க. பாலசுப்பிரமணியன்

அகக்கண்களைத் திறப்பது எப்போது?

திருமூலர்-1-3-3

பேரறிவின் வித்தாகவும் சத்தாகவும் இருக்கின்ற பரமனை அறிந்துகொள்ள அவன் அருளைப்பெற அடியார்கள் என்னென்ன முயற்சிகளெல்லாம் செய்கின்றார்கள்? அவனை மட்டும் சிந்தையில் நிறுத்தி இரவும் பகலும் அவனையே உள்ளம் உருகித் துதித்து அவனுடைய கடைக்கண் பார்வையிலிருந்து பொழியும் அருள் மழையில் நனைந்து கிடைக்கின்ற ஆனந்தத்திற்காக என்னென்ன தவங்கள் செய்கின்றார்கள்? ஆனால் உலக நினைப்புகளும் உலக நடைமுறைகளும் ஆசாபாசங்களும் அவர்களை விடுவதாயில்லையே! என்னென்ன துயரங்கள் அனுபவிக்க வேண்டி வருகின்றது என்பதை பட்டினத்தார் விளக்குகின்றார்:

அன்ன விசாரம் அதுவே விசாரம் அது ஒழிந்தால்

சொன்ன விசாரம் தொலையா விசாரம் நாள் தோகையரை

பன்ன விசாரம் பலகால் விசாரம் இப்பாவி நெஞ்சுக்கு

விசாரம் வைத்தாய் இறைவா ! கச்சி ஏகம்பனே !

ஐம்புலன்கள் ஏற்படுத்தும் இந்தத் தொல்லைகளிலிருந்தெல்லாம் விடுபடுவது எப்படி? அனைத்து உலகையும் ஆள்கின்ற அந்த ஈசனை எப்படி அடைவது? சிந்தையை ஒரு நிலைப்படுத்தி அழைத்தால் அவன் நிச்சயமாக வருவானா? அவனுடைய விருப்பங்களை நம்மால் கணக்கிடமுடியாதே… இந்தக் கவலை மாணிக்கவாசகருக்கும் ஏற்பட்டது. அதனால்தானோ அவர் இவ்வாறு பாடுகின்றார்?

அனைத்தும் ஆக சிந்தை செல்லும்

எல்லை ஏய வாக்கினால்

தினைத்னையும் ஆவது இல்லை

சொல்லல் ஆவ கேட்பவே

அனைத்து உலகும் ஆய நின்னை

ஐம்புலன்கள் காண்கிலா

எனைத்து எனைத்து அது எப்புறத்தது

எந்தை பாதம் எய்தவே.

இந்த உலக விசாரங்களிலிருந்தும் மாயைகளிலிருந்தும் விடுபடுவது எப்படி? அவ்வளவு சுலபமான செயலா? இதோ .. திருமூலரின் கருத்தைப் பார்ப்போம் …

கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை

மன்னிய மாதவம் செய்வோர் ஒரு சிறை

தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை

என் இது ஈசன் இயல்பு அறியாரே.

காம வாசனைகளில் ஈடுபட்டு வீழ்ந்தோர் இருப்பதும் ஒரு எண்ணச் சிறையில்தான். கற்பிக்கப்பட்ட அறிவிலும் நூல்களிலும் ஈடுபட்டு உண்மை அனுபவத்தை அறியாமல் வீழ்ந்தோர் இருப்பதும் ஒரு சிறையில்தான். தவத்தில் ஈடுபட்டுத் தன்னை மறந்தாலும் ஈசனின் உண்மை தத்துவத்தை அறியாதோர் இருப்பதும் ஒரு சிறையில்தான் .இப்படி நம்மை நாமே சிறையில் அடைத்துக்கொண்டு இறைவனைத் தேட முயற்சி செய்தால் அது சரிப்படுமோ?  பலன்தருமோ?

தாயுமானவர் இறைவனிடம் கேட்கின்றார் ‘இறைவா, இந்த நிலையை மாற்றுதல் உனக்கு என்ன கடினமான செயலோ?”

பாழான என்மனம் குவியஒரு தந்திரம்

பண்ணுவ துனக் கருமையோ ?

பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற

பரிபூரண ஆனந்தமே.

இந்த அருளுக்காக அவர் எப்படியெல்லாம் வேண்டுகிறார் தெரியுமா ?

உடல்குழைய என்பெல்லாம் நெக்குருக

விழிநீர்கள் ஊற்றென வெதும்பியூற்ற

ஊசி காந்தத்தினைக்  கண்டணுகல்  போலவே

ஒருறவு முன்னி யுன்னிப்

படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப்

பாடியாடி குதித்து….

அடியார்கள் இறைவனின் அருளுக்காக உடலாலும் உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தன்னையே மறந்து ஒன்றி இருந்த நிலைகளைக் காணும் பொழுது அவர்கள் பக்தியின் பரவச நிலை நமக்குத் தெளிவாகின்றது.

இறைவனைக் காண வெறும் புறக்கண்களை திறந்தால் மட்டும் போதாது. அவை பல உணர்வுகளாலும் வெளி உலகின் தாக்கத்தினால் ஊனமடைந்தவை. ஆகவே இறைவனைக் காண்பதற்கு அகக்கண்களைத் திறக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் ஒளிமயமாக நமக்கு புலப்படுவான். திருமூலரின் கீழ்கண்ட பாடல் நமக்கு உண்மை நிலையை உணர்த்துவதாக உள்ளது.

காணாத கண்ணில் படலமே கண்ணொளி

காணாதவர்கட்குங் காணாத அவ்வொளி

காணாதவர்கட்குங் கண்ணாம் பெருங்கண்ணைக்

காணாது கண்டார் களவொழிந்தாரே.

நம்மில் எத்தனைபேர் கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாக இருக்கின்றோம் ?

(தொடருவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *