-மேகலா இராமமூர்த்தி 

தலைவன் தலைவி சென்ற வழியை விசாரித்து அறிந்துகொண்டு அவர்கள் சென்ற வழியிலேயே தானும்சென்றாள் செவிலி. தொலைவில் ஆணும்பெண்ணுமாய் இணைந்து வருவோரைக் காணுந்தொறும் அவர்கள் தலைவியும் அவள் காதலனுமாக இருப்பரோவென ஐயுற்று நோக்குவாள். அவர்கள் வேற்றாட்களாக இருப்பதைக் கண்டு வாட்டமடைவாள். இவ்வாறு காட்டுவழியிலும், அதனைத்தொடர்ந்து பாலைவழியிலும் நெடுந்தூரம் நடந்து ஓய்ந்துபோனாள் அவள்.

”நடந்து நடந்து என் கால்கள் ஓய்ந்தன; ஆணும் பெண்ணுமாய் இணைந்து வருவோரையெல்லாம் (இவர்கள் நம் மகளும் அவள் காதலனுமோ) என்று நோக்கி நோக்கியே கண்களும் ஒளியிழந்தன. நம் மகளும் தலைவனும் அல்லாத பலரும் வானிலுள்ள மீன்போல் கணக்கற்றவராய் இவ்வுலகில் உளர்; ஆனால் கதிரும் மதியுமனைய அவர்களைக் காணேனே” என்று கவன்றாள் அரிநரைக் கூந்தல் செம்முது செவிலி. 

காலே  பரிதப்  பினவே  கண்ணே
நோக்கி  நோக்கி  வாளிழந்  தனவே
அகலிரு  விசும்பின்  மீனினும்
பலரே  மன்றவிவ்  வுலகத்துப்  பிறரே.  (குறுந்: 44 – வெள்ளிவீதியார்)

”நீளிடை  அத்தம்  நோக்கி  வாள்அற்றுக்
கண்ணுங்  காட்சி  தௌவின….” எனும் நற்றிணை 397ஆம் பாடலிலும் நெடுவழி நோக்கியே ஒளியிழந்த கண்களின் தன்மை பேசப்படுதல் காண்க. 
 

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
என்று வள்ளுவர் படைத்த தலைவியின் நிலையும் இத்தன்மைத்தே!
 

சோர்வின் மிகுதியால் அருகிருந்த மரத்தின்மீது சாய்ந்தமர்ந்த செவிலியின் பார்வையில் ஓர் இளைஞனும் இளமகளும் சேர்ந்துசெல்லும் காட்சி பட்டது. ”இவர்களும் காதலர்கள் தாமோ?” என்று அவள் யோசித்திருந்த வேளையில், அவ்வழியே சென்ற இருவர் இந்த இளையோரைச் சுட்டிக்காட்டிப் பேசியமொழிகள் அவள் காதில் விழுந்தன. 

“இதோ! இந்த ஆடவன் இருக்கிறானே…இவன் சிறுவனாக இருந்தபோது சிறுமியாக இருந்த இவளின் கூந்தலைப் பிடித்திழுப்பான்; இவளும் சளைத்தவளல்லள்…இவன் தலைமயிரைப் பதிலுக்கு வளைத்திழுப்பாள். இவர்கள் இருவரும் போடும் சண்டையை இடைமறித்துத் தடுக்க முயன்றும் தோல்வியையே தழுவுவர் இவர்களின் செவிலித்தாயர். அன்று அப்படி (எலியும் பூனையுமாக) இருந்தவர்கள் இன்று, இரட்டையாய்ச் சேரத்தொடுத்த மலர்மாலைபோல், மனமொத்த காதலராய் இணைந்துசெல்லும் காட்சியைக் காண்கிறோம். இவர்களைக் கூட்டுவித்த விதியே நீ மிகவும் நல்லை” என்று விதியைப் புகழ்ந்துரைத்தபடிச் சென்றதைக் கண்டாள். 

இவனிவள்  ஐம்பால்  பற்றவும்  இவளிவன்
புன்தலை  ஓரி  வாங்குநள்  பரியவும்
காதற்  செவிலியர்  தவிர்ப்பவுந்  தவிராது
ஏதில்  சிறுசெரு  வுறுப  மன்னோ
நல்லைமன்  றம்ம  பாலே  மெல்லியல்
துணைமலர்ப்  பிணையல்  அன்னவிவர்
மணமகிழ்  இயற்கை  காட்டி  யோயே. (குறுந்: 229 – மோதாசனார்)

சிறுவயதில் சிண்டுபிடி சண்டையிடுவோர், பின்னாளில் காதலராய் மாறும் காட்சிகளைத் தமிழ்த் திரைப்படங்களில், குறிப்பாக மண்மணம் கமழும் கிராமத்துக் கதைகளை மையமாகக் கொண்ட படங்களில், நாம் அவ்வப்போது காணலாம். அதனையொத்த காட்சியொன்றை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே குறுந்தொகை அழகாய்க் காட்சிப்படுத்தியிருப்பதை நோக்குங்கால், காலமாற்றம் தமிழ்மாந்தரின் உளவியலில் பெரியஅளவில் மனமாற்றம் எதனையும் நிகழ்த்தவில்லை என்பதனையே புலப்படுத்துகின்றது. 

வழிப்போக்கர்களின் வார்த்தைகள் குறித்துச் சிந்திக்கலானாள் செவிலி…

”நம் மகளைப்போலவே உடன்போக்கு மேற்கொள்ளும் பல இளையோரைக் காண்கையில், இஃது இளமையின் இயல்பே என்று அறிகின்றேன். இனியும் நம் மகளைத் தேடிச்செல்வது தேவையற்ற வீண்வேலை. அவள் தன் விருப்பப்படியே மணவாழ்வு கண்டு இன்புறட்டும்!” என்று எண்ணிக்கொண்டு தன்னூரை நோக்கித் திரும்பிப் பயணப்படலானாள். 

இல்லம் சேர்ந்தவள், உலகியல்பைத் தக்கமுறையில் நற்றாய்க்கு விளக்கி அவளைத் தேற்றினாள்; துயர் ஆற்றினாள்!

சின்னாட்களில் தோழியின் வாயிலாக நல்லதோர் செய்தி அவர்கட்குச் கிட்டியது. தலைவனும் தலைவியும் கடிமணம் புரிந்துகொண்டு இல்லறம் எனும் நல்லறத்தை வேற்றூரில் தொடங்கிவிட்டனர் என்பதே அது!

அதனைக்கேட்ட தாயுள்ளங்கள் நனிமகிழ்ந்தன!

மகள் நடாத்தும் இல்லறத்தைக் கண்ணால் காணவேண்டும் எனும் வேணவா தாயர்க்கு எழுந்தது. நற்றாய், தன் தோழியான செவிலியைத் தலைவியின் ஊருக்கு அனுப்பினாள். செவிலியும் தலைவியின் மனைசென்று அவளைக் கண்டாள். தன் வளர்ப்புத் தாயை நேரில் கண்டதும் நெஞ்சம் நெகிழ்ந்தாள் அந்த நங்கை. அன்னையை ஆரத்தழுவித் தன் அன்பைப் புலப்படுத்தினாள். பெற்ற தாயையும், தந்தையையும், தமையன்மாரையும் அக்கறையாய் விசாரித்தாள்.

சில நாள்களேனும் தன்னோடு தங்கித்தான் செல்லவேண்டும் எனும் மகளின் அன்புக்கட்டளையை மீறமுடியாத செவிலித்தாய் அங்கே சிலநாள்கள் தங்கி மகள்பேணும் குடித்தனத்தை நேரிற்காணும் பேறுபெற்றாள். பின்பு மகளிடமும் மாப்பிள்ளையிடமும் பிரியாவிடைபெற்று ஊருக்குத் திரும்பினாள்.

மகளின் மனையறத்தை அறிந்துகொள்ளத் துடித்துக்கொண்டிருந்த நற்றாய்,

”மகள் நலமா? மருமகன் நலமா? அவர்கள் இருவரும் அன்போடு வாழ்கிறார்களா? பிரச்சனை ஏதுமில்லையே?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

”பொறு தோழி! உனக்கு எல்லாவற்றையும் விவரமாக எடுத்துரைக்கிறேன்!” என்று முறுவலித்த செவிலி, தலைவியின் மனையில் தான்கண்ட காட்சிகளை விரித்துரைக்கத் தொடங்கினாள்…

”இங்கே நம்மோடு இருக்கும்போது அடுப்பங்கரைக்குப் போவதென்றாலே நம் மகளுக்கு எட்டியாய்க் கசக்கும்; அங்கேயோ அருமையாய் அட்டிற்தொழில் செய்கிறாள்!”

”அப்படியா?!”  – நற்றாய்.

”ஆம்!”   – செவிலித்தாய்.

thalaivi cooking”நன்றாக முற்றிய தயிரைப் பிசைந்த தன்னுடைய காந்தள் மலரன்ன மெல்லியவிரல்களைத் துடைத்துக்கொண்ட ஆடையைத் துவைக்காமல் உடுத்துக் கொண்டு, குவளை மலர்போன்ற மையுண்ட தன் கண்களில் தாளிப்பினது புகை மணக்கத் தானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பைத் தன் கணவன் இனிதென்று உண்பதைக் கண்ட நம் மகளின் முகம் நுண்ணிதாய் மகிழக் கண்டேன்.” என்று செவிலி தலைவியின் சமையற்கலையை வருணிக்கக் கேட்ட நற்றாய்,

”அடேயப்பா! அவ்வளவு பக்குவமாய்ச் சமைக்கிறாளா என் மகள்? திருமணம் ஆகிவிட்டால், விளையாட்டாய்க் காலங்கழித்த பெண்களுக்குக்கூட எத்துணைப் பொறுப்புணர்ச்சியும், சாமர்த்தியமும் வந்துவிடுகிறது பார்த்தாயா?” என்று மகளைப் பற்றிச் செவிலியிடம்கூறிப் பூரித்தாள் நற்றாய்.

”ஆமாம்…ஆமாம்” என்று நற்றாயின் கூற்றை வாயெல்லாம் பல்லாய் வழிமொழிந்தாள் செவிலி.

முளிதயிர்  பிசைந்த  காந்தள்  மெல்விரல்
கழுவுறு  கலிங்கம்  கழாஅது  உடீஇக்
குவளை  யுண்கண்  குய்ப்புகை  கழுமத்
தான்றுழந்  தட்ட  தீம்புளிப்  பாகர்
இனிதெனக்  கணவ ன்  உண்டலின்
நுண்ணிதின்  மகிழ்ந்தன்று  ஒண்ணுதல்  முகனே. (குறுந்: 167 – கூடலூர் கிழார்)
 

இப்பாடலில் புளிப்பாகர் என்பதைப் புளிக்குழம்பு என்று கொள்ளாது, பாகற்காயில் புளிப்பெய்து அதன் கசப்பை நீக்கித் தலைவி சமைத்த பாகற்கறி என்று புதிய விளக்கம் தருகின்றார் இரா. இராகவையங்கார். அட…அதுகூடச் சுவையாகத்தான் இருக்கிறது!!

தலைவியின் கரம்பட்ட அடிசிலை இனிதென அவள் கணவன் பாராட்டி உண்பதை,

ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோரமுதம் புரையுமால் எமக்கென (தொல். கற்பு.5)  எனும் தொல்காப்பியக் கற்பியல் நூற்பாவோடு நாம் ஒப்பிட்டுக் காணலாம்.

”அப்புறம் நீ அங்கே என்ன கண்டாய்?” என்று ஆவலாய்க் கேட்டாள் நற்றாய்!

தலைவியின் மனையில் தான் கண்டவற்றை மேலும் விவரிக்கலானாள் செவிலி…

[தொடரும்]

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *