நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேல் நாட்டின் ஆளுகையின் கீழ் இருக்கும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து அந்த நகருக்கு அமெரிக்கத் தூதரகத்தை மாற்றப் போவதாக டிசம்பர் 6-ஆம் தேதி அறிவித்திருக்கிறார்.  இவர்தான் பல அமெரிக்க ஜனாதிபதிகள் வாக்களித்து ஆனால் நிறைவேற்றாமலே போன முடிவை நிறைவேற்றிவைக்கப் போகிறாராம்!   இதைப் பார்க்கும்போது ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டபின்  ‘சரித்திரம் பற்றி ஒன்றும் தெரியாத ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற சரித்திரம் படைத்தவர்’ என்று ஒருவர் சொன்ன வாசகம் நினைவுக்கு வருகிறது.  இப்படி ஒருதலைப் பட்சமாக முடிவெடுத்த பிறகு அமெரிக்கா பாலஸ்தீனப் பிரச்சினையில் மத்தியஸ்தராக இருக்கும் தகுதியை இழந்துவிட்டது.  பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினைக்கு முடிவான தீர்ப்பை (ultimate deal) எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

யூதர்களின் முதலாவது, இரண்டாவது கோவில்கள் கட்டிய காலத்திற்குப் பிறகு ஜெருசலேம் எந்த நாட்டின் தலைநகராகவும் இருந்ததாகத் தெரியவில்லை. முதல் உலக யுத்தம் முடிந்த பிறகு, ஆட்டோமான் பேரரசு சிதைந்த பிறகு, அதன் ஒரு பகுதியான பாலஸ்தீனம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட லீக் ஆஃப் நேஷனால் பிரிட்டனின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது.  அப்போது பிரிட்டன் தனது வசதிக்காக ஜெருசலேமைப் பாலஸ்தீனத்தின் தலைநகர் ஆக்கியது.  யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்றும், அந்த நாடு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாங்கள் விட்டுச் சென்ற தங்கள் புண்ணிய பூமியான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய ஹெர்ஸல் என்ற ஐரோப்பிய யூதர்  அதற்குரிய செயல்களில் ஈடுபட்டார்.   பல யூதர்கள் பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கிக் குடியேற ஆரம்பித்தனர்.  அவருடைய மறைவிற்குப் பின்னும் நிறைய யூதர்கள் ரஷ்யாவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் பாலஸ்தீனத்தில் குடியேறினர்.  வசதி படைத்த இந்த யூதர்களால் அங்கு வாழ்ந்துவந்த அரேபியர்களின் நிலங்களை வாங்கிப் போட முடிந்தது.  தங்கள் நிலங்களை யூதர்களுக்கு விற்றுவிட்டு அதன் முழுத் தாக்கத்தையும் உணராமல் இருந்த அரேபியர்கள் பின்னால் தங்கள் நிலைமையை உணர்ந்து யூதர்களோடு மோதத் தொடங்கியபோது அதைக் கையாளுவதில் உள்ள சிரமத்தை எண்ணி பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற முடிவுசெய்தது.  இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா. பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பிரிப்பதென்று முடிவுசெய்தது.  தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியை பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறிய அன்றே இஸ்ரேல் என்ற நாடாக யூதர்கள் தாங்களாகவே பிரகடனம் செய்துகொண்டனர்.  தங்களுடைய நாட்டைப் பிரித்து அதில் ஒரு பகுதியை யூதர்களுக்கு  ஐ. நா. கொடுப்பதை எதிர்த்த பாலஸ்தீனர்கள் அந்த முடிவை ஏற்காமல் முழுப் பாலஸ்தீனத்தையும் பெறத் தொடர்ந்து போராட முடிவுசெய்தனர்.  அந்தப் போராட்டம் இன்றுவரை நீடிக்கிறது, பாலஸ்தீனர்கள் எவ்வளவோ விட்டுக்கொடுத்த பிறகும்.

பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்தாலும் அதிலுள்ள ஜெருசலேம் நகரை அதன் முக்கியத்துவம் கருதி ஐ.நா. தன் மேற்பார்வையில் உலகப் பொது நகரமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது.  இஸ்ரேல் நாடு பிறந்த மறு நாளே அதை எதிர்த்து ஜோர்டான், எகிப்து, சிரியா ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன.  அந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றதுமல்லாமல் ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட இடங்களோடு இன்னும் சில இடங்களையும் பாலஸ்தீனத்தில் பிடித்துக்கொண்டது.  அதில் மேற்கு ஜெருசலேமும் ஒன்று.  இப்படியாக ஐ.நா.வின் கீழ் இருக்க வேண்டிய ஜெருசலேமின் ஒரு பகுதி இஸ்ரேலின் ஆதிக்கத்திற்கு வந்தது.  அப்போதுவரை ஜெருசலேமின் மேல் சிறப்பான அக்கறை எடுத்துக்கொள்ளாத யூதர்கள் – ஜெருசலேமில் மூன்று பெரிய மதங்களுக்கும் உரிய புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதால் அதை தங்கள் வசப்படுத்திக்கொண்டாலும் அதனால் சில கஷ்டங்கள் தங்களுக்கு வரலாம் என்பதால் – அதைக் கையகப்படுத்திக்கொள்வதில் அக்கறை காட்டவில்லை.  மேலும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் கட்டுப்பட்டு அப்படி நடந்துகொண்டது.  ஆனால் யுத்தத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தங்களுக்குக் கிடைத்த ஜெருசலேமை வேறு விதமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர் யூதர்கள்.  நாடு உருவான இரண்டு வருடங்களில் யூதர்கள்அதுவரை தலைநகராகச் செயல்பட்டுவந்த  டெல் அவிவிலிருந்து மாற்றி ஜெருசலேமை தங்கள் தலைநகராக்கிக்கொண்டனர்.  கொஞ்சம் கொஞ்சமாக அரசு அலுவலகங்களை ஜெருசலேமிற்கு மாற்றத் தொடங்கியது இஸ்ரேல் அரசு. ஜெருசலேம் பற்றிய ஐ.நா.வின் தீர்மானம் இன்னும் அமலில் இருந்ததால் மற்ற நாடுகள் தங்கள் தூதரகங்களை டெல் அவிவிலேயே வைத்துக்கொண்டன.

1967-இல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த இன்னொரு போரில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு இஸ்ரேல் ஜெருசலேமைப் பயன்படுத்திக்கொண்ட விதத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டது.  இந்தப் போரில் ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் பிடித்துக்கொண்டது.  அங்கிருந்த பழைய நகர் (old city) இஸ்ரேலின் வசமாகிவிட  அதுவரை யூதர்கள் செல்ல முடியாத அவர்களின் இடிபட்ட கோயிலின் மேற்குச் சுவருக்குச் செல்லும் வாய்ப்பு யூதர்களுக்குக் கிடைத்தது.  அப்போதிலிருந்து ஜெருசலேம் அவர்களின் நகரம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றி எப்படியும் அதைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.  முதலில் ஐரோப்பாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்கள் மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக, யூத இனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.  பின்னால் வந்தவர்களோ மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இவர்களில் தலைவர் ஆனவர்கள் ஜெருசலேமின் முக்கியத்துவத்தை மக்களின் மனதில் வேரூன்ற வைத்தனர்.  ஜெருசலேம் தங்களுக்கே உரியது என்று யூதர்கள் எண்ண ஆரம்பித்தனர்.  1980-இல், போரில் பிடித்துக்கொண்ட ஜெருசலேம் தங்கள் தலைநகர் என்று சட்டமும் இயற்றிக்கொண்டது இஸ்ரேல் அரசு.  கிழக்கு ஜெருசலேமில் சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் யூதர்களுக்கு குடியிருப்புகளையும் கட்டத் தொடங்கியது.  போர் பற்றிய சர்வதேச விதிகளில் ஒன்று சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் வென்ற பகுதிகளை வெற்றிபெற்ற நாடு தன்னுடையது ஆக்கிக்கொள்ளக் கூடாது.

பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் நடுநிலை வகித்து ஒரு தீர்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அமெரிக்கா முயன்று வந்தது.  அதனால் பல அமெரிக்க ஜனாதிபதிகள் தேர்தல் சமய வாக்குறுதிகளில் அமெரிக்காவில் உள்ள யூதர்களைத் திருப்திப்படுத்த ஜெருசலேமிற்கு அமெரிக்கத் தூதரகத்தை மாற்றிவிடுவதாக வாக்குக் கொடுத்தாலும் அதை இதுவரை நிறைவேற்றவில்லை.  ஆனால் இப்போது ட்ரம்ப் அதைச் செய்யப் போகிறார். அவரது தேர்தல் பிரச்சாரத்துக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுத்த யூதப் பணக்காரர்களைத் திருப்திப்படுத்த இப்படிச் செய்கிறார்.  இது ஜெருசலேம் எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமில்லை என்ற ஐ. நா. தீர்மானத்தைத் தன்னிச்சையாக மீறுவதாகும். இதனால் பாலஸ்தீனர்கள் மறுபடி வன்முறையில் ஈடுபடலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.  பாலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்ப்பைக் கண்டுபிடிப்பதாகச் சொல்லிவரும் அமெரிக்கா ஜெருசலேம் இஸ்ரேலைச் சேர்ந்தது என்று ஒருதலைப்பட்சமாகச் சொன்னால் பாலஸ்தீனர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? உலகில் நியாயம் இல்லையா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *