அப்துல் ரகுமான் கவிதைகளில் படிமமும் குறியீடும்

0

-முனைவர் இரா. தேவேந்திரன்

முன்னுரை:

தமிழ் இலக்கியத்துறையில் திறனாய்வு இன்று குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது. இலக்கிய வடிவம், இலக்கியப் பொருள், பொருளை வடிவ மாக்குவதில் படைப்பாளன் பயன்படுத்தும் இலக்கிய உத்திகள், இலக்கியப் பொருளில் அமைந்துள்ள அணுகுமுறை போன்றவை திறனாய்வுத் துறையில் அதிகம் பேசப்படுகின்றன. படைப்பாளன் பயன்படுத்தும் இலக்கிய உத்தி அழகூட்டுவதற்காகவும் பொருள் புலப்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய உத்திகளுள் குறியீடும் படிமமும் குறிப்பிடத்தக்கதாகும்,

தமிழில் படிமமும் குறியீடும்:

இமேஜ்(image) என்னும் ஆங்கிலமொழிச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் இன்று வழங்கப்பெற்று வரும் ஒரு கலைச்சொல்லே படிமம் என்பதாகும். படிமம் என்பதற்கு உருக்காட்சி, உருவம், உருமாதிரி, ஒத்தவடிவம், கருத்துரு, கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போன்ற பொருள்களில் கையாளப்படுகின்றது. அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் எளிதில் விளக்க இயலாதவற்றை நொடியில் தெளிவாக்கி நம்முன் நிறுத்த வல்லதே படிமம் என்று எஸ்ராபவுண்ட் விளக்குவார். மேலும், குறிப்பிடுகின்றபோது ஏராளமான கவிதைகளைப் படைப்பதைவிடச் சிறந்தது தன் வாழ்நாளில் ஒரே ஒரு படிமத்தைப் படைப்பதாகும் என்று படிமத்தின் சிறப்பினை குறிப்பிடுவார். படிமம் என்பது உணர்வும் அறிவுச் சேமிப்பும் இணைந்து உருவாக்கும் மனக்காட்சியாகும். இதில் மனக்காட்சியின் விரிவு குறிப்பிடத்தக்கது.  படைப்போன் படிப்போன் திறனுக்கேற்பப் படிமம் பல படிநிலைகளைக் கொண்டது.

     குறியீடு என்பது சின்னம், அடையாளம் என்ற பொருட்களில் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றது. மனித வாழ்வில் இணைந்து கிடக்கும் கணக்கற்ற குறிகள்(Signs) பற்றிச் சமூகவியலார் இன்று மிகவிரிவாகப் பேசி வருகின்றனர். மனிதரின் தோற்ற ஒப்பனையில் பல அடையாளக் குறிகள் சாதி, சமயம், பண்பாட்டின் பல படிநிலைகள், சமூக அமைப்பின் பல நிலைகள் எனப் பல்வேறு அர்த்தங்களை இனம் காட்டும் ஆயிரமாயிரம் குறிகள் வாழ்வில் கலந்திருக்கின்றன. “குறிகள் பலவகைப்பட்டதாகத் தோன்றினும் அவற்றின் சிறப்பியல்புகளைக் கொண்டு, அமெரிக்கத் தத்துவ அறிஞர் சார்லஸ் சாண்டர்பீர்ஸ் அவற்றை மூன்று வகைகளாக அடக்குதலை ந. ம. வீ. ரவி குறிப்பிடுகின்றார். அவை, 1. உருவக்குறி(iconic signs), 2. சுட்டுக்குறி (indexical signs), 3. குறியீடு (symbolic signs) என்பனவாகும்” (குறியியலும் அரங்கக் குறியியலும், 1992, ப. 12) இம்மூவகைகளுள் ஒன்றே இலக்கியத்துறை தொடர்பான குறியீட்டையும் குறிப்பிடுகின்றது.

    குறியீடு என்பது ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பதிலியாகக் காட்டுவதாகும். படிமத்தைப் போலவே குறியீட்டையும் ஓர் இலக்கியமாக மேலை நாடுகளில் பின்பற்றினர். மேலை நாட்டாரின் திறனாய்வுக் கொள்கைகள் தமிழறிஞர்களுக்கு அறிமுகமானபின், Symbolism, Imagism என்று அவர்கள் குறித்த கலைச்சொற்களுக்கு இணையாகக் குறியீட்டியல், படிமவியல் என்னும் சொற்கள் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழிலக்கிய வரலாற்றில் படிமமும், குறியீடும் சங்க காலத்திலேயே மேலோங்கி விளங்கின. சங்க இலக்கியத்தில் காணப்படும் உள்ளுறை, இறைச்சி என்னும் குறிப்புப்பொருள் அடங்கிய இலக்கிய நயங்கள் இன்றைய படிமம் குறியீடு இவற்றின் முன்னோடியாகக் காணப்படுகின்றது.  சங்க காலத்திற்குப் பின் தற்காலத்தில் இவை பெரிதும் பேசப்படும் இலக்கிய உத்தியாக படைப்பாளர்களால் போற்றப்படுகிறது. இதனை அப்துல்ரகுமான் “சங்க காலத்திலும், சித்தர்கள் காலத்திலும் இலக்கிய உத்தியாகப் பயன்பட்ட குறியீடு மீண்டும் புதுக்கவிதைக் காலத்தில் தான் இலக்கிய உத்தியாகப் பயன்படுகின்றது. புதுக்கவிதையில் அது வெறும் உத்தியாக மட்டுமின்றி அதன் சிறப்பு பண்பாகவே மாறிவிட்டது என்று குறிப்பிடுகின்றார்.”(புதுக்கவிதையில் குறியீடு, 1990, ப. 183) புதுக்கவிதைகளில் பலவகையான உத்திகள் காணப்படுகின்றன. அவை, படிமம் (image), குறியீடு (symbol), அங்கதம் (satire), முரண் (parody), இருண்மை (obscurity), தொன்மம் (myth) போன்றவைகளாகும். இவ்வுத்திகளில் படிமம், குறியீடுகளைக் கவிக்கோ அப்துல் ரகுமான் தம் படைப்புகளில் பதிவு செய்துள்ளப் பாங்கினை இக்கட்டுரை ஆராய்கிறது.

படிமம்:

உணர்ச்சியுடைய சொற்சித்திரமாய் காணப்படும் படிமத்தைக் கவிக்கோ அப்துல்ரகுமான் சிறப்பாகக் கையாண்டுள்ளார். “தேவையற்ற எந்த ஒரு சொல்லையும் நீக்கிவிடுதல் என்னும் படிமவியலார் கொள்கைக்கு மிகப் பொருத்தமான கவிதைகளை எழுதுபவர் கவிக்கோ அப்துல்ரகுமான் என்பர்.” (க. இராமச்சந்திரன், புதுக்கவிதைகளில் பன்முகப் பார்வை, ப. 82) அவரது ‘பால்வீதி’ என்கிற கவிதைத் தொகுப்பு படிமக் கவிதைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

“இரவெல்லாம் / உன் நினைவுகள் / கொசுக்கள்”  (பால்வீதி)

என்னும் கவிதையில் நினைவுகள் கொசுக்களாகப் படிமமாக்கப் பட்டுள்ளன. நினைவுக் கொசுக்களின் தொல்லையினால் இரவெல்லாம் தூக்கமின்றி வேதனைப்படும் மனிதனை நம்கண்முன்னே நிறுத்துகின்றார். அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் எளிதில் விடுவிக்க இயலாத மனவேதனையை இப்படிமக் கவிதைத் தருகின்றது.

“என் ஆறாவது விரல்வழியே
     சிலுவையிலிருந்து
வடிகிறது ரத்தம் – ஆம்
     என் மாம்சம்
     வார்த்தை ஆகிறது”

என்னும் பால்வீதியில் அமைந்த இக்கவிதை ஆதியிலே தேவனிடத்திலிருந்து வார்த்தை மாம்சமாகி இயேசு வடிவில் வந்ததாகவும் பின்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகவும் கூறும் விவிலியத்தின் கருத்தினை கவிக்கோ படிமமாக்கியுள்ளார். அப்துல் ரகுமான் ‘வியட்நாம்’ என்ற தலைப்பில் எழுதிய  கவிதையில்,

“அக்கம் பக்கம் / வசந்தமில்லை
      சோகத்தோடு / அமர்ந்திருக்கிறது
      சவத்தின் மீதொரு / வண்ணத்துப் பூச்சி” (வானம்பாடி – 9) எனப் போரின் உச்சத்தைப் படிமத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றார்.

     “வான உற்சவத்தின் / வாண வேடிக்கை
      முகிற்புற்று கக்கும் / நெருப்பு பாம்புகள்
      கருப்பு உதட்டின் / வெளிச்ச உதறல்
      இடிச்சொற்பொழிவின் / சுருக்கெழுத்து”  (பால்வீதி)

என்ற இக்கவிதையில் வானத்தைக் கீறிப்பாய்கிற ராக்கெட்டுகளாக மின்னலையும், மேகத்திலிருந்து வெளிவருகின்ற நெருப்பினை புற்றிலிருந்து சாட்டையாக வெளிவருகின்ற பாம்பாகவும் நீண்ட இடியோசைக்கு மத்தியில் சட்டெனத் தோன்றி மறைவதால் அதனைச் சுருக்கெழுத்தாகவும் காட்சிப்படுத்துகின்றார்.

    ”பாரதம் என்றால் பதவிச் சண்டைதானே! இந்த
      நாட்டுக்குப் பொருத்தமாகத் தான் பெயர்
      சூட்டியிருக்கிறார்கள்
      அந்தப் பாரதத்தில் நான் செய்த வேலையை
      இந்தப் பாரதத்தில்  நீங்கள் செய்கிறீர்கள்”  (சுட்டு விரல்)

புதிய பாரதம் என்ற இக்கவிதையில் சகுனியின் கூற்றாக அரசியலில் சூதாட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியவன் நான்தான் ஆனால் நீங்களோ அரசியலையே சூதாட்டமாக மாற்றி விட்டீர்களே! நான் அன்று பகடைக் காய்களைத்தான் உருட்டினேன் நீங்களோ மக்களையே உருட்டுகிறீர்கள் என்றவாறு தற்கால நிகழ்வை பாரத காலத்தோடு படிமமாக்குகிறார்.

அப்துல் ரகுமான் வாழ்வின் பயணத்தைப் பறவையின் பாதையோடு ஒப்பிட்டு,

     “நதியின் பாதையைப் போல்
      உங்கள் பாதை
      உங்கள் பயணத்தால்
      உண்டாகட்டும்
      பறவையின் பாதையைப்போல்
      உங்கள் பாதை
      சுவடற்றதாக இருக்கட்டும்” (பித்தன், ப. 46)

என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார். நதியின் நீரோட்டம் திட்டமிட்டு அமைவதில்லை. தான் விரும்பியவாறு செல்லும். பறவையின் பாதை சுவடற்றதாக அமைந்து காணப்படும். இவை இரண்டையும் மனித வாழ்வோடு படிமமாக்கி முன்னேற்றத்தின் வழியைக் காட்டுகின்றார்.

குறியீடு:

படிமத்தைப் போன்று குறியீட்டையும் தற்காலப் படைப்பாளர்கள் சிறப்பாக கையாண்டுள்ளனர். குறி என்பது ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுகின்றது. குறியீடோ ஒரு பொருளுக்காகத் தானே அதனிடத்தில் நிற்பது என்ற குறியீட்டாளர்களின் சிந்தனைக்கு ஏற்பக் கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புக்களும் காணப்படுகின்றது.

           “புறத்திணைச் சுயம் வரமண்டபத்தில்
            போலி நளன்களின் கூட்டம்
            கையில் மாலையுடன்
            குருட்டுத் தமயந்தி”    – பால்வீதி

‘ஐந்தாண்டாக்கு ஒருமுறை’ என்னும் இக்கவிதை தேர்தலை விமர்சிக்கின்றது. இதில் வேட்பாளர்கள் போலி நளன்களாகவும், மாலை வாக்குச் சிட்டாகவும், குருட்டுத் தமயந்தி அறியாமை என்னும் இருளில் கிடக்கும் வாக்காளனாகவும, சுயம்வரம் ஒரு தேர்தல் திருவிழாவாகவும் புலப்படுத்திக் கவிஞரின் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன. சுயம்வரக்காட்சியும், தேர்தல் காட்சியும் சேர்ந்து குறியீட்டுத் தன்மையை புராணக் கதையிலிருந்து  உணர்த்துகின்றது.

           “விற்க எதுவும் இல்லாததால்
            கண்ணகிகளைப் பேரம்பேசும்
            கோவலர்கள்” (பால்வீதி)

       “உதயகுமாரர்களுக்குத்
            தங்கள் உடல்களையே
            அட்சய பாத்திரமாக்கித்
            தம் வயிற்றுப் பசியைத்
            தணித்துக் கொள்ளும்
            மணிமேகலைகள்”

என்பதான கவிதைகளில் இன்றைய சமூக அவலங்களைச் சுட்டுகின்றார். கண்ணகி, கோவலன், உதயகுமாரன், மணிமேகலை போன்ற பழங்கதை மாந்தர் இன்றைய நடைமுறை மாந்தர்களுக்கு குறியீடுகளாக காட்டப்படுகின்றனர்.

அப்துல் ரகுமானின் ‘மூடிய இமை’ என்கிற கவிதையில் குறியீடுகள் முரணாக வந்து கருத்தை வெளிப்படுத்துக்கின்றன.

     “என்னைக் கண்டதும்
      கவிழும் உன் இமைகள்
      கொசுவலையா?
      மீன் வலையா?  (பால்வீதி)

கவிஞர் இக்கவிதையில் ஒரு பெண்ணின் பார்வையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் தவிப்பை இரண்டு விதங்களில் வெளிப்படுத்துகின்றார். வலைக்குள் கொசு வரக்கூடாது என்று தடுப்பதற்காக விரிப்பது கொசுவலை. வலைக்குள் மீன் விழவேண்டும்; வீழ்ந்த மீன் வெளியே தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக விரிப்பது மீன்வலை ஒன்று புறக்கணிப்பு மற்றொன்று எதிர்ப்பார்ப்பு. இது முரணாகும். இந்த முரணின் வாயிலாக ஒரு காதலனின் காதலுணர்ச்சியைக் குறியீடாகக் குறிப்பிடுதலைக் காணமுடிகின்றது.

           “உன் தராசுத் தட்டுகளைக்
            கொஞ்சம் கண்திறந்து பார்
            அங்கே
            புறாவின் மாமிசத்தை
            சிபிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள்”  (பால்வீதி)

என்ற தொன்மைச் சான்றினை தற்கால நிகழ்வோடு குறிப்பிட்டு கவிஞர் குறியீடாக்கியுள்ளதைக் காணலாம்.

           “உங்கள் பாரம் / உங்களைவிட
            மதிப்புடையதாகட்டும்
            திரி சுமக்கும் சுடரைப்போல்”

என்ற கவிதையில் திரிசுமக்கும் சுடரும் மனிதன் சுமக்கும் பாரத்தையும்  குறியீடுகளால் ஒப்பிட்டு கவிஞர் வாழ்வின் சுமைகளை சுகமாக்குகின்றார்.

முடிவுரை:

 அப்துல்ரகுமான் கவிதைகளில் நட்சத்திரம், நெற்றிக்கண், இமை, சிலுவை ஆகியவை குறியீடுகளாக மீண்டும் மீண்டும் வருகின்றன. கோடி சூரியர்களைப் பிழிந்து நட்சத்திரங்கள் செய்தேன் என்ற இடத்தில் செறிவு என்ற பொருளிலும் ஒரு சங்காரத்தால் இந்த பூமி பண்படுத்தப் பட்டபின் நட்சத்திரங்களைத் தூவுவோம் இங்கே என்ற இடத்தில் ‘உயர்ந்தது’ என்ற பொருளிலும் நட்சத்திர வேஷம் அணிந்த எழுத்துக்கள் என்ற இடத்தில் ‘விளக்கம்’ என்ற பொருளிலும், இளவேனில் இரவு ‘பூ’ என்ற பொருளிலும் மூச்சுக்கயிறறுந்த மணியின் நாவிலிருந்து நட்சத்திரங்கள் மௌனமாக உதிரும் என்ற இடத்தில் ‘ஆன்மா’ என்ற பொருளிலும் நட்சத்திரம் பால்வீதியில் குறியீடுகளாக மின்னுதலைக் காணமுடிகின்றது. சங்க இலக்கிய உத்திகளில் காணப்படும் அழகியல் மற்றும் பொருண்மைத் தன்மையை அறிந்து கொள்ளுதல் போன்று புதுக்கவிதைகளில் காணப்படும் படிமம் மற்றும் குறியீடுகளில் அத்தகைய தன்மையைக் காணலாம். இதில் கவிக்கோ அப்துல் ரகுமான் முதன்மை பெறுதலை இக்கட்டுரையின் வழி அறிந்துகொள்ளமுடிகின்றது.

*****

கட்டுரையாளர்
உதவிப்பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
ஏ. வி. சி. கல்லூரி(தன்னாட்சி)
மன்னன்பந்தல், மயிலாடுதுறை.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *