– ம.பிரபாகரன்

யாப்பிலக்கண உலகில் முதன்முதலில் தளையால் அடிவகுத்துப் புதுமை செய்தது இலக்கண விளக்கமே என்பர் ஆய்வாளர்கள். ஆனால் தளையால் அடிவகுக்கும் முறை யாப்பருங்கலக்காரிகை காலத்திலேயோ அல்லது அதற்கு முன்னரோ இருந்துள்ளதோ என்று ஐயப்படும் ஒரு குறிப்பு வே.பால்ராஜின் யாப்பருங்கலக் காரிகை பதிப்பிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. அதாவது யாப்பருங்கலக் காரிகை கூறும்  அடி பற்றிய காரிகை உரைப்பகுதியில் வரும் அடி பற்றிய மேற்கோள் சூத்திரத்திற்கு பாடவேறுபாடாக அடிக்குறிப்பில்  வே.பால்ராஜ், தளை அடிப்படையில் அடிவகுக்கும் முறையைக் கூறும் சூத்திரம் ஒன்றினை எடுத்துக்காட்டுகிறார். அச்சூத்திரத்தின் முதல் இரண்டு அடியும்  இலக்கண விளக்கம் தளை வகை அடி பற்றிக் கூறும் சூத்திரத்தின் முதல் இரண்டடியாகும். இவ்விடத்தில் இலக்கணவிளக்கம் கூறும் தளைவகை அடி பற்றி கூறும் சூத்திரம், வே. பால்ராஜின் யாப்பருங்கலப் பதிப்பிலுள்ள தளை வகை அடி ஆகியவை குறித்துக் காணலாம்.

இலக்கண விளக்கம்:

  1. குறளொரு பந்த மிருதளை சிந்தா
    முத்தளை யளவடி நாற்றளை நெடிலடி
    யைந்தளை முதலா வெழுதளை காறும்
    வந்தவும் பிறவும் கழிநெடி லென்ப.

பால்ராஜின் யாப்பருங்கலப்பதிப்பு:

எண்சீ ரெழுசீ ரிவையாம் கழிநெடிற்
கொன்றிய வென்ப உணர்ந்திசி னோரே
என்றார் பிறரும்மெனக் கொள்க. (பக். 137:2007)

மேற்கண்ட சூத்திரத்திற்கு பாடவேறுபாடாக, பால்ராஜ் அடிக்குறிப்பில் எடுத்துக்காட்டும் சூத்திரமாவது:

குறளொரு பந்த மிருதளை சிந்தாம்
முத்தளை யளவடி நாற்றலை நெடிலடி
மிக்கன கழிநெடி லென்றி சினோரே – ங, ட, ந; ஞ, ண, த, ப, ம, ய, ர சுவடிகளில் இல்லை. (பக். 137 மேலது ).

மேலே இலக்கண விளக்கச்சூத்திரத்தையும் வே. பால்ராஜ் எடுத்துக்காட்டும் தளையடி பற்றிய அடிக்குறிப்பில் இடம்பெறும் சூத்திரத்தையும் கவனிக்க. அடிக்குறிப்புச் சூத்திரத்தின் முதல் இரண்டு அடிகள் அப்படியே இலக்கணவிளக்கத்தில் இடம்பெற்றிருப்பதை நோக்குக. வே.பால்ராஜ், அடிக்குறிப்பில் காணப்படும் சூத்திரம் அதிக சுவடிகளில் வராததுகொண்டு அதைப் பாடமாகக் கொள்ளாது விட்டிருப்பார் போலும்.  உண்மையில் அடிக்குறிப்பில் காணப்படும் சூத்திரம் யாப்பருங்கலக் காரிகைக்குரிய பாடமாக இருந்தால் அச்சூத்திரம் பழையது என்றும் இலக்கண விளக்கம் அச்சூத்திரத்தை எடுத்துப்பயன்படுத்திக்கொண்டது என்று கூறலாம். அத்துடன் அப்பழைய சூத்திரம், தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுக்கும் பழைய தமிழ் யாப்பு மரபோடு தொடர்புடையதாக இருப்பதால்,  இலக்கணவிளக்கம் தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுத்து, தமிழ் யாப்புலகில் புதுமை செய்தது என்ற யாப்பாராய்ச்சியாளர்களின் முடிவை மாற்றி அமைக்கவும் செய்யும். ஆனால் வே.பால்ராஜ் தம் யாப்பருங்கலப்பதிப்பில் எடுத்துக்காட்டும் சூத்திரம் பழையச்சூத்திரமாக இல்லாமலிருந்து இடைச்செருகலாக இருந்தால் இலக்கணவிளக்கமே முதன்முதலில் தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுத்தது என்று கூறலாம். ஆனால் அப்படிக் கூறுவதற்கு இச்சூத்திரம் தடையாக உள்ளதால் இச்சூத்திரம் குறித்த மேலாய்வு தேவையாக உள்ளது. ஒரு வாதத்திற்கு யாப்பருங்கல காரிகை பதிப்பில், அடிக்குறிப்பில் காட்டப்பட்டிருக்கும் சூத்திரம் இடைச்செருகலாக இருக்கிறது என்று கொண்டால், இலக்கணவிளக்கம் ஏன் தளை அடிப்படையில் அடிவகுத்தது? என்ற நோக்கிலான விவாதத்தை நாம் தொடங்க வேண்டியிருக்கும். மேலே கண்ட சூத்திரத்தின் உண்மைநிலை பற்றித் தற்போது நம்மால் ஒன்றும் சொல்ல முடியாததால் நாம் இலக்கணவிளக்கம் ஏன் தளை அடிப்படையில் அடிவகுத்தது என்ற நோக்கில் விவாதத்தைத் தொடரலாம்.  வீரசோழிய உரை தளைக்கு எதிரிடையாக வலுவான வாதத்தை வைக்கிறது என்று முன்னர்ப் பார்த்தோம். இவ்விடத்தில்  தளைக்கு எதிராகக் அது கூறும் இன்னொரு வாதத்தையும் பார்ப்பது இத்தொடர்பில்  உதவியாக இருக்கும்.

‘ கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின் ‘ (கு.2)

‘ கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில் ‘ (கு.1087)

‘ உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. ” (கு.1200)

என்று இத்தொடக்கத்தனவற்றைச் செவிப்புலனே கருவியாக ஆராய்ந்தபொழுது ஓசை இனியாவாய் இருக்கும்; அலகிட்டு ஓசையூட்டில் அவை ஓசையுண்ணா என்றால், அற்றன்று; இவற்றின்கண் அளபெடை உண்டாகவே ஓசையுண்ணுமெனில், அளபெடை இன்றியேயும் ஓசை இனியனவாக இருந்தன என்க.  (பக்.461, தி.வே.கோலையர் பதிப்பு, வீரசோழியம்:2005).

இங்குப் பெருந்தேவனார் ” அலகிட்டு ஓசை ” என்று கூறுவது தளைகளால் கொள்ளும் ஓசையை ஆகும். அதைப் போல பேராசிரியரும் நச்சரும் தளை உறுப்பாகக் கொள்ளத்தக்கதன்று என்று தம் கருத்தை அழுத்தமாக முன்வைக்கின்றனர். இவ்விடத்தில் பேராசிரியர் கருத்தைச் எடுத்துக்காட்டுவது  விவாதத்தைப் நன்கு புரிந்து கொள்ள உதவி புரியும் (நச்சர் பேராசிரியரைப் பின்பற்றுவதால் அவர் கருத்து இங்குச் சுட்டிக்காட்டப்படவில்லை):

மற்று, யாத்த சீரேயாப்பென்றதென்னை? தளையென்பதோர் உறுப்புப் பிறர் வேண்டுபவாலெனின், இவருஞ் சீரது தொழிலே தளையென வேண்டுப; தளைத்தலிற் றலையாதலானும் வேறு பொருளென வேண்டாரென்பது; என்றார்க்கு, அசையின்றிச் சீருமில்லை; சீரின்றி அடியுமில்லையாம். பிறவெனின், அற்றன்று; உறுப்பும் உறுப்புடைச் செய்யுளும் போல அவை கொள்ளப்படும்; தளையென வேறொன்றின்மையிற் கொள்ளான்; என்னை? குறளடியென வேறுறுப்பாயின்மையினென்பது; தளையென்பது இதனைக் கோடுமேல் அதனைக் குறளடியெனலாகாதென்பது; அல்லதூஉம், ஈரசை கூடி ஒருசீராயினவாறுபோல இருசீர் கூடியவழி அவ்விரண்டினையும் ஒன்றென்று கோடல்வேண்டும்; கொள்ளவே, நாற்சீரடியினை இடைத்துணித்துச் சொல்லுவதின்றி, நான்கு பகுதியானெய்திக் கண்டம்படச் சொல்லுமாறில்லையென்க. யாத்தசீர் ‘ என்றதனானே அசைதொறுந் துணித்துச் சொல்லப்படா சீரென்பதூஉம் அச்சீரான் அடியானவழிச் ‘ சீரியைந்திற்றது சீரெனவே ‘ படுமென்றதனாற் சீரெல்லாந் துணித்துச் சொல்லப்படும்மென்பதூஉங் கூறினான் இவ்வாசிரியனென்பது; அற்றன்றியும் அவ்வாறு தளை கொள்வார் சீரானடிவகுப்பதூஉங் குற்றமென மறுக்க. மற்றுத் தொடை கூறியதென்னை? அடியிரண்டு தொடுத்தற்றொழி லல்லது இன்மையினெனின், அற்றன்று; தொடுத்தற்றொழின் மாத்திரையானே தொடையென்றானல்லன்; அவ்வடிக்கண் நின்ற எழுத்தும் எழுத்தும் சொல்லும் பிற பொருளாகலான் அவற்றானே தொடை கொண்டைமையின் வேறுறுப்பென்றானென்பது. அஃதேல், சீருஞ்சீரும் இயைந்தவழி அவையிடமாகநின்ற அசையால் தளைகொள்ளாமோவெனின் கோடுமென்றே; அதனி அடியென்னாமாயினென முற்கூறியவாறே மறுக்க (பக்.210-211, சி.கணேசய்யர் பதிப்பு, தொல்காப்பிய பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும் பின்னான்கியல்கள், பாகம்- இரண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்:2007)

தளைக்கு ஆதரவான யாப்பருங்கல மரபிற்கு எதிரான வாதத்தை மிகத்தீவிரமாக வீரசோழிய உரைகாரரும், தொல்காப்பிய உரையாசிரியர்களும் வைக்கிறார்கள் என்று மேலே கண்டோம். ஆனால் மறுபடியும், வீரசோழியம், தொல்காப்பிய உரைகள் ஆகியவற்றிற்குப் பின் வந்த இலக்கணவிளக்கம் தளைக்கு ஆதரவாகப் பெருங்குரல் கொடுக்கிறது. அக்குரல் தளைக்கு எதிரான சிந்தனை மரபிற்கு எதிராகவே கொடுக்கப்படுகிறது என்று கூறவேண்டும். இலக்கணவிளக்கம், அடியைத் தளை அடிப்படையில் பகுக்கும்போது தளையின் முக்கியத்துவத்தை உறுதியாக எழுப்புகிறது. இதன் மூலம் தமிழ்ச்செய்யுளில் தளையை தவிர்க்க இயலாது என்ற யாப்பருங்கல மரபின் அடிப்படை வாதத்திற்கு வலுசேர்க்கிறது. தொல்காப்பியத்தைப் பொறுத்தவரை ‘ தூக்கு ‘ ‘ பா ‘ என்ற உறுப்புகள் மிக முக்கியமானவை. எனவேதான் ‘ தன்சீர் உள்வழி தளை வகை வேண்டா ‘ என்றது. வீரசோழியமும் ‘ ஓசை ‘ யைப் பொறுத்தவரை தொல்காப்பியத்தோடு ஒத்து அமைகிறது. ஆனால் இலக்கணவிளக்கம் தளைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘ தூக்கினைத் ‘ தள்ளி நிறுத்துகிறது:

” இவ்வோசையை (செப்பலோசை) தூக்கு என்று ஓர் உறுப்பாகி மேல்கூறுவாரும் உளர். மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் இவ்வுரை உய்த்து உரைக்க ”. (பக். 731, மு.சு.நூ)

இங்கு இலக்கண விளக்கத்தார் தளையால் பெறும் ஓசையை முதன்மைப்படுத்தி ” தூக்கு ” உறுப்பைத் தள்ளி நிறுத்துவதைக் கவனிக்க. தளைக்கு ஆதரவாக இலக்கணவிளக்கம் தளை அடிவகுக்கும் முறைக்கு ஒரு வலுவான காரண அடிப்படையை வழங்கவில்லை. வீரசோழிய உரைகாரர், மற்றும் தொல்காப்பிய உரையாசிரியர்களான பேராசிரியர், நச்சர் ஆகியோர் தளைக்கு எதிரான வாதத்தை வைக்கும் போது இன்னின்ன காரணங்களால் தளை கொள்வதும், தளையை உறுப்பாகக்  கொள்வதும் பொருந்தாது என்று விரிவாக விவாதிக்கின்றனர்.

யாப்பருங்கல மரபு கூட ஏழ்வகைத் தளை கொள்வதற்கு ஒரு தத்துவ அடிப்படை இருந்திருக்க வேண்டும். அது சமணம் சார்ந்ததாக இருக்கலாம். யாப்பருங்கல மரபின், தளையைச் செய்யுளின் உறுப்பாகக் கொண்ட தளைகோட்பாடு வீரசோழிய உரையாசிரியர் மற்றும் தொல்காப்பிய உரையாசிரியர்களால் தர்க்கமுறையிலமைந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டு மறுக்கப்பட்டது போல இலக்கண விளக்கம், வீரசோழிய உரைகாரர், தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஆகியோரின் வாதத்தைத் தர்க்கமுறையில் மறுக்கவில்லை. இன்னின்ன காரணங்களால் தளை உறுப்பாக கொள்ளத்தக்கது இன்னின்ன காரணங்களால் தளை அடிப்படையில் ஓசைகொள்வது பொருந்தும்

என்று கூறி எப்படி தளைக்கு எதிரான வாதம் தவறு என்று விளக்கவில்லை. வீரசோழிய உரைகாரர், பேராசிரியர், நச்சர் ஆகியோரின் வாதம் வலுவுடையதாக தனியே நிற்க, இலக்கண விளக்கத்தார் மொழி விளையாட்டுப் போல தளைவகை அடிகள் படைத்து  யாப்பு விளையாட்டு ஒன்றை  விளையாடியுள்ளார் என்று கூறலாம். ஆனால் அந்த  விளையாட்டு என்பது தளைக்கோட்பாட்டை முக்கியத்துவப்படுத்தவே, வலுவூட்டவே  செய்யப்பட்டது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. அந்த யாப்பு விளையாட்டை  ஒரு உதாரணம் காட்டி விளக்கலாம். 2+2 = 4 ; இது யாப்பருங்கல மரபு கூறிய இரு சீர் வருவது குறளடி என்பதற்குச் சமமானதாக வைத்துக் கொள்வோம். 2+2 = 4 என்பதை 1+1+1+1 = 4 என்றும் கூறலாம்; இது இலக்கணவிளக்கம் இருசீர் அடியில் வரும் ஒருதளையை அடிப்படையாகக் கொண்டு ஒரு தளை வருவது குறளடி என்று கூறியதோடு ஒப்பிடலாம்  (ஏற்கனவே நாம் இலக்கணவிளக்கம் எப்படித் தளைவகை அடிகளுக்கு யாப்பருங்கல மரபு பயன்படுத்திய சீர்வகை அடிகளுக்கான சூத்திரத்தையும் உதாரணங்களையும் பயன்படுத்திக்கொண்டது என்று பார்த்தோம்). இரண்டு சீர்வந்தால் ஒருதளை காணப்படும். இது இயல்பு. இரண்டுசீர் வருவதை யாப்பருங்கல மரபு குறளடி என்று கூறிவிட்டது. ஆனால் இதை ஒருதளை வந்த குறளடி என்று  யாப்பருங்கல மரபால் கூற முடிந்திருக்கும். ஆனால் கூறவில்லை.  ஏனெனில் தளை அடியின் ஓசையைத் தீர்மானிக்கும் ஆனால் அடியைத் தீர்மானிப்பதில்லை என்ற கருத்தை அம்மரபு கொண்டிருந்தது. தளை அடியைத் தீர்மானிக்கும் என்றால் சீர் செய்யுளின் ஓசையைத் தீர்மானிக்குமா? என்ற கேள்வி எழும். செய்யுளில் தளையின் பங்கு ஓசை நிமித்தமே. ஆனால் இலக்கண விளக்கம் இது எதனையும் கருத்தில் கொண்டதுபோல் தெரியவில்லை. அது தளை அடிப்படையில் அடிவகுக்கும் போது ஒரு புதுமையாகவும்; அதே நேரத்தில் தளையின் இன்றியமையாமையை வற்புறுத்துவதாகவும்  அமைகிறது. இலக்கணவிளக்கத்தார் எதிர்பார்த்ததும் இதுவேதான்; அதாவது ஒரு புதுமையான செயல்மூலம் தளைக் கோட்பாட்டை முக்கியத்துவப்படுத்தவேண்டும் அதே நேரத்தில் தர்க்கமும் செய்யக் கூடாது. எனவே தளைவகை அடிகள் கூறியதன் மூலம் தளைக்கோட்பாட்டை முக்கியத்துவபடுத்தியும் விடுகிறார்.

பின்வரும் அட்டவணை தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு, வீரசோழியம், இலக்கணவிளக்கம் ஆகியவை அடிகளைப் பகுத்துள்ள முறைமையைப் பட்டியலிடுகிறது.

அட்டவணை : 5

தொல்காப்பியம்    யாப்பருங்கல மரபு            வீரசோழியம்          இலக்கணவிளக்கம்

எழுத்தெண்ணிக்கை அடிப்படையில்

  1. குறளடி
  2. சிந்தடி
  3. அளவடி
  4. நெடிலடி

5.நெடிலடி    சீரடிப்படையில்

1.குறளடி

  1. சிந்தடி
  2. அளவடி
  3. நெடிலடி
  4. கழிநெடிலடி சீரடிப்படையில்

1.குறளடி

  1. சிந்தடி
  2. அளவடி
  3. நெடிலடி
  4. கழிநெடிலடி தளையடிப்படையில்

1.குறளடி

  1. சிந்தடி
  2. அளவடி
  3. நெடிலடி
  4. கழிநெடிலடி

தொடை:

தொடை மரபைப் பொறுத்தவரையிலும் இலக்கண விளக்கம் யாப்பருங்கல மரபை அப்படியே பின்பற்றுகிறது. தொல்காப்பியத்தோடு முரண்படவில்லை எனினும் அதைத் தன் வழிக்குரியதாகக் கொள்ளவில்லை. தொல்காப்பியம் முதன்மைத்தொடைகளாக மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்ற ஐந்தைக் கூறுகிறது. விகற்பத் தொடைகளாக ஒரூஉ, பொழிப்பு ஆகியவற்றைக் கூறுகிறது. விகற்பமில்லாத் தொடைகளில் செந்தொடையை மட்டுமே பேசுகிறது. யாப்பருங்கல மரபு முதன்மைத்தொடைகளாக தொல்காப்பியம் கூறியவற்றையே கூறுகிறது. மேலும் விகற்பத் தொடைகளாக இணை, பொழிப்பு, ஒரூஉ, முதலிய ஏழினைக் குறிப்பிடுகிறது. விகற்பமில்லாத தொடைகளாக இரட்டை, அந்தாதி, செந்தொடை ஆகியவற்றைக் கூறுகிறது. ஒட்டுமொத்தமாகத் தொடை விளக்குமுறையைப் பார்க்கும் போது இலக்கண விளக்கம் யாப்பருங்கல மரபை அப்படியே உள்வாங்கிக்கொள்கிறது. எந்த வித மாற்றுக்கருத்தும் கொள்ளவில்லை.

இலக்கண விளக்கம் ” தொடையும் தொடைவிகற்பமும் ” பகுதியில் (722) தொடைகள் பற்றிய  வைப்புமுறையை அமைக்கும்போது தொல்காப்பியம், யாப்பருங்கல மரபைப் போல மோனைக்கு முதலிடமும் எதுகைக்கு இரண்டாமிடமும் அளிக்கின்றது. ” சில தொடை விகற்பங்கள் ” என்ற தொடர்ந்துவரும் பகுதியில் எதுகையை முதலில் வைத்து விளக்குகிறது (எதுகை, மோனை). வீரசோழிய உரை, எதுகை எனினும் தொடை எனினும் ஒக்கும் ‘ என்று எதுகையை முக்கியத்துவப்படுத்தும். எனினும் வீரசோழியத்தின் தொடைகள் பற்றிய வைப்புமுறையில் (தொடைகள் பற்றிய அறிமுகக் காரிகையில்) மோனை, எதுகை என்ற வரிசைமுறையே காணப்படுகிறது. வீரசோழியம்  மோனையை வைப்புமுறையில் முதலில் வைத்தாலும்  எதுகையையே கருவியாகக் கொண்டு அடிவகுத்து அதனையே முதன்மைப் படித்துகிறது. இதிலிருந்து இலக்கணவிளக்கம் ” சிலதொடைகள் விகற்பம் ” என்ற பகுதியில் எதுகையை முதன்மைபடுத்தியிருப்பது வீரசோழியத்தை பின்பற்றியோ என்று எண்ணத் தோன்றலாம். ஆனால் இலக்கணவிளக்கம் வீரசோழியத்தைப் பின்பற்றி எதுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனலாம். இலக்கணவிளக்கம் தோன்றிய காலகட்டம் வாய்பாட்டுத்தன்மையில் கவிதைபுனையும் கவிஞர்கள் பெருகியிருந்த காலகட்டம். வெண்பாவைப் பார்த்து இன்னொரு வெண்பாவும் விருத்தத்தைப் பார்த்து இன்னொரு விருத்தமும் பாடிய காலகட்டம். இக்காலகட்டத்தில் ‘ எதுகை ‘ சொற்சிலம்பம் ஆடுவதற்குத் தேவையான ஒன்று. எனவே இலக்கணவிளக்கம் ” சில தொடை விகற்பங்கள் ” என்ற பகுதியில் எதுகையை முதலில் வைத்து விளக்கியது என்று கூறவேண்டும். மற்றபடி எதுகையைப் பொறுத்தவரை வீரசோழியத்திற்கு இருந்த வலுவான கோட்பாட்டுப் பின்னணி இலக்கணவிளக்கத்திற்கு கிடையாது என்று நிச்சயமாகக் கூறலாம். பின்வரும் அட்டவணை தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு, வீரசோழியம், இலக்கண விளக்கம் ஆகியவை தொடைகள் பற்றிக் கூறுவதைப் பட்டியலிடுகிறது:

அட்டவணை:6

தொல்காப்பியம்    வீரசோழியம்          யாப்பருங்கலமரபு இலக்கணவிளக்கம்

முதன்மைத்தொடைகள்

மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை

விகற்பத்தொடைகள்

பொழிப்பு, ஒரூஉ

விகற்பமில்லாத்தொடை

செந்தொடை           மோனை

எதுகை          முதன்மைத்தொடைகள்

மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை

விகற்பத்தொடைகள்

இணை, பொழிப்பு, ஒரூஉ, மேற்கதுவாய்,

முற்று           முதன்மைத்தொடைகள்

மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை

விகற்பத்தொடைகள்

இணை, பொழிப்பு, ஒரூஉ, மேற்கதுவாய்,

முற்று

பா மற்றும் பாவினம் ஆகியவைக்குறித்துப் பேசும் பொழுதும் இலக்கணவிளக்கம், யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது.

கருத்துநிலை அடிப்படையில் இலக்கணவிளக்கம் முழுக்க முழுக்க யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது என்பது மேலே விளக்கப்பட்டது. கருத்துநிலை அடிப்படையில் மட்டுமல்ல விளக்குமுறை அடிப்படையிலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது. அதாவது அதன் விளக்குமுறை யாப்பருங்கல மரபின் சூத்திரங்களை அப்படியே எடுத்தாண்டும் தழுவியும்,  உரைகளைத்  தழுவியும் விளக்குவதாக அமைகிறது. இத்தன்மை குறித்துக் கீழே காணலாம்.

இலக்கண விளக்கத்தின் எழுத்துக்கள் குறித்து வரும்  சூத்திரமாகிய

எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத்து
தசைத்திசை கோடலி னசையே யசையியைந்து
சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு
தட்டு நிற்றலிற் றளையே யத்தளை
யடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு
தொடுத்துமன் சேறலிற் றொடையே யத்தொடை
பாவி நடத்தலிற் பாவே பாவொத்
தினமாய் வழங்களி னினமெனப் படுமே

என்பது யாப்பருங்கலக்காரிகையுரையில் தற்சிறப்புப் பாயிரப்பகுதியில்   மேற்கோளாகக் காட்டப்படுகின்ற சூத்திரம் ஆகும் (பக்.111, மு.சு.நூ). ஆனால் யாப்பருங்கல விருத்தியிலும் இச்சூத்திரம் இடம்பெறுள்ளது எனினும் யாப்பருங்கலக் காரிகையைப் போல எட்டடி பெறாமல் மொத்தம் ஏழு அடிகளை உடையதாக இருக்கின்றது. மேலும் ஆறாவது, ஏழாவது அடிகள் யாப்பருங்கலக்காரிகையைப் பார்க்கிலும்  வேறாக அமைகின்றது. அச்சூத்திரம் வருமாறு:

எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத்
தசைத்திசை கோடலின் னசையே யசைபியைந்து
சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு
தட்டு நிற்றலிற் றளையே யத்தளை
அடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு
தொடுத்தன் முதலாயின் தொடையே யத்தொடை
தூக்கிற்றொடர் திசைத்தலிற் றூக்கெனப் படுமே   (பக்.18; பவானந்தம் பிள்ளை பதிப்பு, யாப்பருங்கல விருத்தி தொகுதி 1 :1916)

மேற்கண்ட இரண்டு சூத்திரங்களையும் ஒப்பிட்டு நோக்குக.  மேற்கண்ட பாடலுக்கு  யாப்பருங்கல விருத்தியின் பதிப்பாசிரியர் பவானந்தம் பிள்ளை இலக்கண விளக்கத்தில் உள்ள சூத்திரத்தைப் (மேலே நாம் காட்டிய சூத்திரம்)   பாடமாகக்  கொள்கிறார். அடிக்குறிப்பில் பவானந்தம் பிள்ளை இது குறித்து கூறுவதாவது: 

தொடுத்துமன் சேறலிற் றொடையே யத்தொடை
பாவி நடத்தலிற் பாவே பாவொத்
தினமாய் வழங்கலி னினமெனப் படுமேஎனப்பாட முரைக்கும் இலக்கணவிளக்கம் (பக்.18; மேலது).

இவர் கூறுவது போல இலக்கண விளக்கச் சூத்திரத்தைப் பாடமாகக் கொள்வது பொருந்துமா? என்ற வினா எழுகிறது.

[தொடரும்]

*****

கட்டுரையாசிரியர்
ஆய்வாளர்
பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO)
புதுச்சேரி

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *