images (2)

ஓர் இரவு நெடுநேரம் தூங்க விடாமல் போக்கு காட்டிப் பின் ஒரு வழியாக காலையில் மலர்ந்த ஒரு உணர்வுப் பிரவாகம்

காளியைத் துணைக்க ழைத்துக் காட்சியை அமைக்க வைத்துக்
கவிதை செய்யக் காத்திருக்கிறேன்- அவள்
கண்டு கண்டு பரிகசிக்கிறாள்! – மனத்
தூளியை அசைத்து விட்டுத் தூங்குமென்னைக் கிள்ளி விட்டுத்
தூரம் நின்றபடி சிரிக்கிறாள் – என்
துன்பம் சோர்வினை மிதிக்கிறாள்!

நீளுமிக் கணத்தி லென்னை நெஞ்சமே அமர்த்திக் கொண்டு
நீலியூழிக் கூத்திசைக்கிறாள் – என்றன்
நினைவெலாம் அவள் வசிக்கிறாள்! – தங்கத்
தோளிலே இருக்கை தந்து தோய்வெலாம் முடிப்ப தென்று
தோன்றிவந்தவள் நடிக்கிறாள் – திசை
தோறுமின்னிசை படிக்கிறாள்!

அண்மையில் நெருங்கி வந்து அக்கரைக் குயர்ந்து தாவி
அன்னை சக்தி போக்குசெய்கிறாள் – நின்று
ஆவி யுள்ளில் வாக்கு செய்கிறாள்! – காணும்
உண்மையில் ஜொலிக்கும் சக்தி உணர்வெலாம் இனிக்கும் சக்தி
உச்சி கோதி எனையணைக்கிறாள்! – கொஞ்சம்
உழல விட்ட பின்பிணைக்கிறாள்!

நீரில்வான் நெருப்பு காற்று நிலத்திலே திளைக்கும் ஆதி
நித்தநித்தம் நமை அசைக்கிறாள்! – நம்
நரம்பிலேறிச் சுரமிசைக்கிறாள் – அந்தக்
காரிலே வெடித்து வந்து கடலிலே கலந்து பின்னும்
கரியமேக மாய்த்திரள்பவள்! – தன்
கடமையாக்க நமைவிடுக்கிறாள்!

இசையினோ டின்ப வெள்ள அசைவெலாம் சமைக்கு மன்னை
ஆடுங்கூத்தை உள்ளில் காண்கிறோம் – அந்த
அனுபவத்தில் ஞானம் பூண்கிறோம்! – சூழும்
விசையெலாம் நமக்கு வாய்க்கும் விடையெலாம் அருட்க டம்ப
வாசினியின் ஆசியென்கிறோம் – அதன்
வாசனையே சொர்க்கமென்கிறோம்!!

-விவேக்பாரதி
10.12.2017

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *