க. பாலசுப்பிரமணியன்

 

திருக்கருகம் – அருள்மிகு கருணாகரப் பெருமாள்

G_T1_2077

நிலங்களில் பொழிந்திடும் நீருடைக் கார்மேகம்

நிறத்தினில் கருமையே நெஞ்சத்தில் கருணையே

நிலவிடும் எண்ணத்தில் கண்ணனின் வண்ணமே

நிழலென இருந்தும் கருணையில் வருணனே !

 

கடலுள்மீனாய் நுழைந்தாய் மறைகளைக் காக்க

காட்டுப்பன்றி வந்தாய் புவியினை மீட்க

கடைந்திடக் கடலை ஆமையாய் அமைந்தாய்

கருணையின் வடிவங்கள் காட்டிய கண்ணா !

 

அழகிய திருவடி அண்டங்கள் அளந்திட

அழகிய சிங்கனாய் இரணியன் அழித்திட

அழகிய தோளில் கலப்பையை ஏந்தியே

அருளினை வழங்கிய அச்சுதா வாழி !

 

தோளுடை வலிமைக்குத் தோழன் பலராமன்

தூதுவன் அறிவுக்குத் துவாபரச் செல்வன்

தருமத்தின் பொருளாய் தயரத இராமன்

தன்னிகர் இல்லாத் தாமரை மணாளன் !

 

எத்தனை வடிவங்கள் எடுத்தாலும் கண்ணா

சிந்தனை அனைத்தும் அடியவர் அன்றோ ?

வந்தனை செய்திடும் உள்ளங்கள் அனைத்திலும்

விந்தையே! பிறந்தாய் வடிவங்கள் புதிதாய் !

 

அலைகடலில் அயர்ந்தாலும் அண்டங்கள் காப்பவனே

அலைகின்ற நெஞ்சுக்கு அமைதியைத் தருவாய் !

அடியார்கள் துயர்நீக்க அவனியெல்லாம் செல்பவனே

அழையாதும் வந்திடுவாய் அந்தரங்கம் அறிந்தவனே!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *