ஓயாத கள ஆய்வில் விளைந்த நல்முத்துக்களான ஆவணத் தொகுப்புகள்!

0

பவள சங்கரி

IMG_20171221_125231332

rasu

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, தனிப்பாடல், இலக்கியம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் ஓய்வில்லாமல் தொடர்ந்து இயங்கிவரும் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்களின் தமிழ்ப்பணி பாராட்டுதலுக்குரியது. முனைவர் புலவர் செ. இராசு அவர்கள், தென்னிந்தியத் திருச்சபை சமுதாய உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முன்னாள் ஆய்வாளரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு – தொல்லியல் துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு அரசின் முதல் உ.வே.சா.விருது (2012) பெற்றவரும், கொங்கு ஆய்வு மைய அமைப்பாளருமாகிய இவர் இதுவரை எழுதியும், தொகுத்தும் பதிப்பித்த நூல்கள் 150ம் மிகச்சிறந்த, பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படக்கூடியவை.

சமீபத்தில் இவருடைய , ‘தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்’ என்ற 150வது நூல் ஈரோடு கொங்கு ஆய்வு மையம் மூலமாக வெளியிடப்பட்டது. ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தார் மூலமாக இந்நூல் மிகச்சிறப்பான வடிவமைப்புடன், உயர்ரகத் தாள்களுடன் ஆவணப்படங்களுடன், வெளியிடப்பட்டுள்ளது. தொல்பொருள் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும், இலக்கியப் புகழ், தொழில் வளர்ச்சியில் மாநிலத்திலேயே இரண்டாம் இடம், ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கும் ஈரோடு மாநகரம் குறித்து, கொங்கு நாட்டிலேயே பிறந்து, கொங்கு நாட்டிலேயே 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் எனக்கும் பல தகவல்கள் புதுமையாகவே உள்ளன. 112 பகுதிகளையும், 136 பக்கங்களையும் கொண்ட இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் கொங்கு நாட்டின் வியப்புக்குரிய பெருமைகளைச் சுருக்கமாக அதே சமயம் மிகச்சுவையாக வழங்கப்பட்டுள்ளன.

IMG_20171225_000234707_HDR
புலவர் இராசு அவர்கள் வரலாற்றுத் துறையில் தமது ஆர்வமும், அது தொடர்பான அவர்தம் பணிகளையும், தாம் கடந்து வந்த பாதைகள் குறித்தும் மிக ஆர்வமாக எடுத்துரைத்தார். 1967 ஆம் ஆண்டில் தாம் முதன் முதலில் வெளியிட்ட, ‘எங்கள் பவானி’ எனும் நூல் பற்றிய தமது அனுபவங்களை அவர் கூறியது மிகச்சுவாரசியமாக இருந்தது. கோவை கைத்தறி அச்சகத்தார் வெளியிட்டுள்ள இந்நூலை பதிப்பிப்பதற்கு அன்று அவர் பட்ட துயரங்களையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியது, இன்றைய காலங்களுக்கும் அது அத்துணை பொருந்தும் என்பதை எழுத்தாளர்கள் உணர்வார்கள். ஆம், பள்ளி ஆசிரியராகப் பணியில் இருந்துகொண்டு குடும்பத்தையும், தமது தமிழ் ஆய்வுப் பணிகளையும் இரு கண்களாகப் போற்றியவருக்கு அன்று, திருநணா எனும் பவானி சங்கமேசுவரர் ஆலயத்தின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவின்போது தமது முதல் நூலான, ‘எங்கள் பவானி’ என்ற நூலை வெளியிட பேராவல் கொண்டவர் அதற்குரிய பணம் கையில் இல்லாமல் பெரும் சிரமத்திற்கிடையே நண்பர்களிடம் கடனாகப் பெற்று அந்நூலை வெளியிட்டுள்ளார். 3000 பிரதிகள் ரூ 300/ க்கு, அதாவது ஒரு பிரதி 10 பைசாவிற்கு அச்சிடப்பட்டுள்ளது. திருப்பேரூர் அருள்திரு சாந்தலிங்க அடிகளார் அவர்களுக்குக் காணிக்கையாகப் படைக்கப்பட்டிருக்கும் இந்நூலை விற்பது அத்துணை எளிதான காரியமல்ல என்று நண்பர்களும், குடும்பத்தினரும் அச்சமூட்டியபோதும் தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, சுப்பிரமணியம் என்ற ஜவுளி விற்பனையாளர் நண்பர் தாம் விற்றுத் தருவதாக வாக்களித்து சொன்னபடியே 2,800 பிரதிகளை விற்றும் கொடுத்திருக்கிறார். ஒரு நூல் 50 பைசாக்கள் என்ற விலையில் 2,800 பிரதிகள் விற்பனையானதில் அமோகமாக இலாபமும் கிடைத்த மகிழ்ச்சியில், 200 ரூயாய் தருவதாக ஒப்புக்கொண்டிருந்த விற்பனையாளர் நண்பருக்கும் மனமுவந்து ரூ.450 கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறார். இந்த உற்சாகம் கொடுத்த நம்பிக்கையில் அவருடைய தமிழாய்வுப் பணிகளும், கல்வெட்டுகள், செப்பேடுகள் என்ற களப்பணிகளும் தொடர்ந்து அனைத்தும் அற்புதமான ஆவணங்களாக நூல் வடிவம் பெற்று தற்போது 150 என்ற சிகரத்தைத் தொட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது! ஆய்வுப் பணிகளுக்கான தகவல் வேண்டுவோருக்குத் தேவையான தகவல்கள் அனைத்தும் இவர்தம் நூல்களில் கொட்டிக்கிடப்பதோடு, நேரில் சென்று தகவல் பெறுவோருக்கும் தம் முதுமையையோ, இயலாமையையோ எதையும் காரணம் காட்டாமல் இயன்ற அளவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருவது இவருடைய தனிச்சிறப்பு. ஐயா அவர்களின் நினைவாற்றல் மிகவும் வியப்புக்குரியது.

எங்கள் பவானி

அன்பு நண்பர் தமிழன்பன் என்கிற புலவர் ந. செகதீசன் புலவர் செ.இராசு அவர்களுக்கு வழங்கிய அருமையான பாராட்டுரையுடன் துவங்குகிறது இந்நூல்.

வாகை பெறுக

1. கல்வெட்டுக் காதலர்நற் பழைய ஏட்டில்
கண்செலுத்தும் நுண்ணோக்கர் எங்கள் நண்பர்
செல்லரிய இடத்திற்கும் செல்ல ரிக்கும்
இடத்திற்கும் சென்றுசென்றே ஆய்வு செய்யும்
வல்லமைகை வரப்பெற்ற இராசு செய்த
வரலாற்றுத் தேன்படைப்பை, கொங்கு நாட்டு
நல்லநணாச் சீர்காட்டும் நூல்வி ளக்கை
நான்கண்டேன் நனிபுதிய செய்தி கண்டேன்!

2. உழைப்பாலே கனிந்திட்ட பலாப்ப ழத்தில்
உரித்தெடுத்த சுளைகளைத்தேன் குடத்தில் போட்டே
அழைத்தெடுத்துத் தருகின்றார் கனிவாய் நண்பர்!
அவராலே வருநாளில் இனியும் உள்ளே
நுழைந்திருக்கும் வரலாற்றுப் புதையல் யாவும்
நுட்பமாக வெளிப்படுதல் உண்மை! இன்னும்
பிழைதிருத்தார் திருத்துவணம் சான்று காட்டப்
பிழைத்திருப்பார் நெடுநாட்கள் எங்கள் நண்பர்!

3. மறைப்புக்கள் மழுப்பல்கள் இன்றி யாரும்
மறுக்கவொணா முறையினிலே நமது நாட்டின்
கறைபடியாப் பண்பாட்டை, பழகுசி றப்பைக்
காட்டுதற்கு நூல்வேண்டும்! கிடைத்தி டாமல்
சிறைபட்டுக் கிடக்கின்றது ஏடு கள்சீர்ச்
செப்பேடு கல்வெட்டு காண நாளும்
நிறைமுயற்சி கொண்டிருக்கும் எங்கள் நண்பர்
நெஞ்சார வாழ்த்துகிறேன் பெறுக வாகை!

சுவடியிலிருந்த இன்தமிழ் படைப்புகளை வாசிக்க வகையறியாதவர்களுக்காக எளிமையாக வாசிக்கும் வகையில் அதனை எடுத்துக்கொடுத்துதவியர்களில் ‘ஐயா வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் என்பாரும் ஒருவர். கொங்கு மண்டல சதகப்பாடல் இவர் மூலம் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது, இந்நூலிலும் இடம் பெற்றுள்ளது. 35 பக்கங்களேக்கொண்ட மிகச்சிறிய அளவிலான கையேடு என்றாலும் பவானி பற்றிய பல அரிய வரலாற்றுத் தகவல்களைத் தாங்கியுள்ள நூல் இது என்பதும் ஒரே மூச்சில் வாசிக்கத்தூண்டும் அருமையான நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக,

“இத்திருப்பணி ஒரு ‘மாமாங்கம்’ (சுமார் 12 ஆண்டுகள்) நடைபெற்றிருக்கின்றது. இது நீண்ட காலம் என்று கூறுவதற்கில்லை. அரிகேசரி பராக்கிரம பாண்டியன் கட்டிய தென்காசி விசுவநாதர் கோயில் கி.பி.15 ஆம் நூற்றாண்டிலேயே 17 ஆண்டுகள் திருப்பணி நடைபெற்றிருக்கின்றது. அரசன் திருப்பணியே 17 ஆண்டுகள்; இவ்வடியார் திருப்பணி 12 ஆண்டுகளில் முடிந்தது விரைவெனவே சொல்லத் தோன்றுகின்றது.

இத்திருப்பணியில் நாள்தோறும் பாண்டிய நாட்டுக் கல் வேலைக்காரர்கள் 140 பேர் சிற்ப சாத்திரத்தில் தேர்ச்சியும் புலமையும் கொண்ட ஒரு ஸ்தபதியின் கீழ் வேலை செய்து வந்தார்கள். சிற்பக் கலையில் கைதேர்ந்த சிற்பிகள் உயரிய வேலைப்பாடுகளுடன் கூடிய அமர சிற்பங்களைப் பெரிய கல் தூண்களில் சிற்றுளியால் செதுக்கியிருக்கிறார்கள். உயிரற்ற கற்பாறைகளிலும் நவரசங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். மெழுகைக் குடைவதுபோல் பாறையைக் குடைந்து, சிந்திக்கவும் முடியாத வகையில் சிற்றுளிகளை ஏவி நல்ல உயிர்ச் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள். தங்கள் கைத்திறமையையும் மன ஆற்றலையும் காண்பித்துக் கல்லிலே கனவுகளை மெய்ப்பித்திருக்கிறார்கள். இச்சிற்பங்களை எதிர்காலத்தில் சிற்பக்கலைக்கு மதிப்பும், கலையன்பர்களுக்கு மகிழ்ச்சியும் அளிக்கும் முறையில் செதுக்கியிருக்கிறார்கள். இப்படி பலப்பல அரிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

திருநணா அமைந்துள்ள ‘கொங்கு நாடு’ பற்றிய விளக்கமும், அதன் பெருமையும் அழகுற எடுத்தியம்பப்பட்டுள்ளது. சங்க காலத்தே தனித்து விளங்கிய நாடு கொங்கு நாடு என்பதற்குப் பல ஆதாரங்களையும் காட்டியுள்ளார். பவானியாற்றின் பழம்பெயர் ‘வானி’ என்பதாம். இந்த வானி ஆற்றின் பெயரே பவானி என்று ஊரின் பெயரானது என்கிறார். பவானியாற்றின் பழம்பெயர், ‘பூவானியாறு’ என்று புலவர் அ.மு. குழந்தை அவர்களின் கருத்து என்று குறிப்பிடுகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பாலக்காட்டுக்குத் தெற்கே தோன்றும் ஆறுகள் ‘பொருநை’ என்ற பொதுப்பெயரைப் பெற்று விளங்குவதும், பாலக்காட்டுக்கு வடக்கே தோன்றும் ஆறுகள் ‘வானி’ என்ற பொதுப்பெயரைப் பெற்று விளங்குவதும் வரலாறு காட்டும் உண்மை என்கிறார்.

சத்தியமங்கலத்தின் மேற்கே 4ஆவது கல்லில் பவானியாற்றைத் தடுத்து அணை கட்டினால் தாராபுரம், பல்லடம், அவிநாசி தாலூக்காக்களில் 50,000 ஏக்கர்கள் பாசனவசதி பெறும் என்று 1828இல் மான்ட்கோமரி கூறியதையும், 1834இல் பவானியாற்றில் நீலகிரி மாவட்டத்தில் அணை கட்ட வேண்டுமென்று சர் ஆர்தர் காட்டன் யோசனை கூறியதையும், மீடு பென்னிகுக் அட்ரி குழுவினர் பவானியாற்றில் பல தடுப்புக்கள் (கலிங்குகள்) ஏற்படுத்திப் பாசனத்தைப் பெருக்க வேண்டும் என்று 1878 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.
ஊராட்சிக்கோட்டை உயர்மலை, காளிங்கராயன் அணை வரலாற்றுக் குறிப்புகளோடு நூல் நிறைவு பெறுகின்றது.

1967ஆம் ஆண்டில் புலவர் இராசு அவர்கள் வெளியிட்ட ‘எங்கள் பவானி’ என்ற முதல் நூலுக்கும் 2017 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள, ‘தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்’ என்ற 150வது நூலுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. உயர் ரக காகிதம் முதல் ஆவணப்படங்கள், கால மாற்றத்தின் ஊடான வரலாற்றுத் தகவல்கள், எழுத்துரு வரை பல்வேறு மாற்றங்கள் இருந்தாலும் மிகச்சுருக்கமாக அதே சமயம் தெளிவான, முக்கியமான தகவல்களுடன் சிறப்பாக அமைந்துள்ள நூல் என்பதற்குச் சான்றாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர், முனைவர் எஸ்.பிரபாகர் இ.ஆ.ப., அவர்கள் தம் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ள,

“வரலாறு படிக்காமல் வரலாறு படைக்க முடியாது
ஆனால் இந்நூலே
வரலாறாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை”

என்று குறிப்பிட்டிருப்பதைக் கூறலாம்! பல ஆண்டுகளாக ஈரோடு பெற்று வந்த சமூக பொருளாதார வளர்ச்சியை அடிப்படைக் கட்டமைப்புகளில் பெற்ற மாற்றங்களை விளக்கும் வரலாற்று ஆவணமாய் விளங்கும் நூல் என்ற கருத்தும் ஏற்புடையது. பேரழிவிற்கு உள்ளாகி 400 இடிந்த வீடுகளை மட்டுமே ஊராகக் கொண்டிருந்த ஈரோடு நகரின் இன்றைய வளர்ச்சியின் மூலமாக ஒரு மாவட்டத்திற்கே தலைநகராக நிமிர்ந்து நிற்பதையும் வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
சக்தி மசாலா நிறுவனத்தின் நிறுவனர்கள், முனைவர் பி.சி.துரைசாமி, முனைவர் சாந்தி துரைசாமி, தங்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதற்கிணங்க நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் நமது ஈரோடை மாநகருக்கு நான்கு முறைகள் வந்து சென்றுள்ளார்கள் என்பதும், ஈரோடு இலக்கியச் சங்கம் என்ற சங்கத்தைத் துவக்கியவர் எச்.ஏ.பாப்லி என்ற ஆங்கிலேயர்தான் என்பது போன்ற அரிய தகவல்களைத் தொகுத்துக்கொடுத்துள்ள அருமையான நூல் என்பதையும் அறியமுடிகிறது. கொங்கு நாட்டின் அடையாளங்களாக இருப்பது மஞ்சள் விளைச்சலும், கைத்தறியும், விசைத்தறியும் கூடிய ஜவுளித்துறையும்தான்.

1792 ஆம் ஆண்டில் 3000 வீடுகளுடன் முக்கிய வணிக நகரமாக விளங்கிய ஈரோடு பெரும் அழிவைச் சந்தித்து பாழடைந்த 400 இடிந்த கட்டிடங்களுடன் வெறிச்சோடியிருந்துள்ளது. தமிழகத்தைத் தாக்கப் படையுடன் வந்த அந்நியர்களின் மூன்று பெரும் வழிகளாக இருந்தது இம்மாவட்டத்தின் வடக்கு, மேற்கு எல்லைகளிலேயே உள்ளன என்கிறார்.

கால்நடைச் செல்வங்கள், நீர் வளங்கள், நில வளங்கள் என செழிப்படைந்திருந்த காரணத்தால் இரட்டரும், கங்கரும், சேரரும், சோழரும், பாண்டியரும், போசளரும், விசயநகராரும், உம்மத்தூர்த் தலைவர்களும், மதுரை நாயக்கர்களும், மைசூர் உடையாரும், ஐதரும், திப்புவும், கிழக்கிந்தியக் கம்பெனியாரும் அதிகாரம் செலுத்த போட்டிப் போட்டுக்கொண்டிருந்த வரலாறையும் குறிப்பிட்டுள்ளார். அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகு ஜப்பான் பெற்ற எழுச்சிக்கு நிகராக ஈரோடு மாநகரின் எழுச்சியும் கடுமையான உழைப்பிற்கு ஆதாரமாக உள்ளதையும் எடுத்துக்காட்டுகிறார்.

ஈரோடு மாநகரின் சிறப்புகளாக 112 முக்கியமானச் செய்திகளை 112 பகுதிகளில் சுருக்கமாகவும் அதே சமயம் மிகச்சுவையாகவும், அழகு தமிழ் நடையில் பழமையான சித்திரங்களையும் ஆதாரமாக இணைத்து வடிவமைத்துள்ள பாங்கு வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமன்றி மாணவர்கள், சாமான்ய மக்கள் என அனைவரையும் ஒருசேரக் கவரக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக, ஈரோடு என்ற ஊரின் பெயரின் ஆங்கில உச்சரிப்பில் பல வகையிலும் மாற்றம் பெற்று வந்தாலும் இன்றும் தவறாகவே எழுதப்படுவதைக் குறிப்பிடுகிறார். சரியான உச்சரிப்புடன் எழுதியவர், 7.8.11.1800 அன்று ஃபிரான்ஸ் புக்கானன் மட்டும்தான் என்கிறார். இவர் ERODU என்று சரியாக எழுதினாராம். தாமஸ் மன்றோ தமது குறிப்பில் HERROAD என்றும், கம்பெனி வரைபடத்தில் EROAD என்றும், மக்கென்சி ஆவணத்தில் IRODU என்றும், தற்போது ERODE என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. ERODU என்ற சரியான உச்சரிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கி.பி.1800 இல் ஈரோட்டின் நிலை, ஈரோடு மாவட்டம் ஆனது, மாவட்டம் ஆகும் முன்பே மாவட்ட நிறுவனங்கள் தொடங்கப்பட்டவை, மூக்கறுப்புப் போர் போன்ற ஈரோட்டுப் போர்கள், தொல்பழங்காலச் சின்னங்களான முதுமக்கள் தாழிகள், நடுகற்கள், காணக்கிடைக்காத கழுமரம், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆலயங்களின் புராதனச் சிலைகள், பண்டைய மகளிர் பெருமைகள், சாதனைகள், அகத்தியர் ஈரோடு வருகை, பழம்பெரும் ஆலயங்கள், தர்கா, நாய்க்கும் நடுகல், 17ஆம் நூற்றாண்டில் நாடகம், ஈரோட்டார் வெளியிட்ட இதழ்கள், காரைவாய்க்காலும் – கோணவாய்க்காலும், 13 ஆம் நூற்றாண்டுப் பாலங்கள், பெரியார், பேரறிஞர். அண்ணா, ஈசுவரன் ஏற்படுத்திய கீழ்பவானித் திட்டம், சுதந்திரப்போராட்ட வீரர்கள், போன்று பலப்பல சுவையானச் செய்திகளின் குவியலாக அமைந்ததிந்த நூல்!

ஆங்கிலேயர் ஆட்சியில் நன்மைகள் பல நடந்துள்ளதையும் மறுக்க இயலாது என்பதையும் உறுதிப்படுத்தும் செய்தி இது. எச்.ஏ. பாப்லி என்ற ஆங்கிலேயர் ஈரோடு லண்டன் மிஷன் திருச்சபையில் பணியாற்றியவர். சிறந்த தமிழறிஞர். ‘ஈரோடு இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பஞ்சகச்ச வேட்டி கட்டி கையில் சப்பளாக் கட்டையுடன் தமிழில் கதாக்காலட்சேபம் செய்வாராம். 1932 இல் திருக்குறள் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘நவீனக்கல்வி’ என்ற இதழ் நடத்தினார். ஒரு முறை மேல்நாடு சென்று திரும்பியிருந்த தமிழர் ஒருவர், தம் பயண அனுபவம் குறித்து மேடையில் பேசும்போது, தனக்கு ஆங்கிலத்தில்தான் பேச முடியும், தமிழில் பேச இயலாது என்று கூறிவிட, பாப்லி அந்த உரையை அழகுத் தமிழில் மொழிபெயர்த்தாராம்!

ஈரோடு மாநகரைப் பற்றியச் செய்திகள் ஆதியோடு அந்தமாக சுவையானச் சாரங்களாக வழங்கப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. ஈரோடு மண்ணின் பெருமை, மக்களின் பண்பாட்டு நலம், நிலத்தின் வளம், பண்டைய கலாச்சாரம் போன்றவற்றை அறிந்துகொள்ள விளைபவர்களும், வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்களும் அவசியம் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிசம் இந்நூல் என்றால் அது மிகையல்ல!

136 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை : ரூ 130/

புலவர் இராசு அவர்களின் அனைத்து நூல்களும் கிடைக்குமிடம்:

கொங்கு ஆய்வு மையம்
58/2, பாலக்காட்டுத் தோட்டம்
புதிய ஆசிரியர் குடியிருப்பு வழி
ஈரோடு – 638011
தொ.பே. எண்கள்:
0424 – 2262664
95009 38384
97900 38380

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *