க. பாலசுப்பிரமணியன்

 

திருக்கடிகை (சோளிங்கர் )

 

 அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் 

165382_168349703210073_100001051325299_395411_1321745_n

சிந்தையிலே சினமெடுத்துச் சிங்கமென வந்தவனே

விந்தையென வானவரும் பார்த்திருந்த நரசிம்மா !

அகந்தையிலே தானென்று தலைவிரித்த இரணியனை

கந்தையெனப் பிரித்தெடுத்துக் கதைமுடித்த காருண்யா !

 

மலையமர்ந்து அருள்செய்யும் மங்கலனே மாதவனே

மாருதியை துணைவைத்து மனமெல்லாம் ஆள்பவனே

மலையான துயர்நீங்க மலையேறி வந்தவர்க்கு

மடைதிறந்த வெள்ளமென அருள்செய்யும் அச்சுதனே !

 

பயத்தோடு பலமிழந்து தன்வாழ்வைத் தானிழந்து

பலனில்லாக் கோள்களின் பார்வையிலே பரிதவித்துப்

பகடையென உருள்கின்ற வாழ்வினையே காப்பவனே

பகலவனின் பேரொளியாய் அருள்கின்ற அழகியசிங்கா !

 

நிலைகுலைந்த மனம்கொண்டு பித்தான உள்ளங்களில்

நிழலாகத் தானமர்ந்து நினைவெல்லாம் நிறைந்தவனே

நிறைவான நலம்தேடி நின்தாள்கள் அடைந்தவரை

நிழலாகப் பின்தொடர்ந்து விதிமாற்றும் வல்லவனே !

 

ஏழுமலை எறிவந்தால் என்துயர்கள் நீங்கிடுமோ ?

நூறுமுறை பெயர்சொன்னால் நூலிழையாய் மறைந்திடுமோ ?

சாத்துமுறை எதுவென்று யானறியேன் சடகோபா !

சத்தியனே! சரணமென வந்திட்டேன் சந்நிதியில் !

 

சோதனைகள் விலகிவிடும் சோகங்கள் அழிந்துவிடும்

சோர்ந்திட்ட உள்ளங்களில் சுதர்சனின் அருள்பிறக்கும்

சுமைகளெல்லாம் இறங்கிவிடச் சூழ்வினைகள் மறைந்துவிட

சுவையான வாழ்விற்கு சோளிங்கர் நலம்பெருக்கும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *