குறுந்தொகையில் பாலைநில உணவுகள் சுட்டும் சூழலமைவு

0

-முனைவர் பா. உமாராணி

மனித வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. அது காலத்திற்குக் காலம் தன்னைச் செம்மைப்படுத்தியும், மெருகுபடுத்தியும் வாழும் இயல்பினையுடையது. அதனடிப்படையில் நோக்கும்போது மனித வாழ்க்கையை அடிநாதமாகக் கொண்டு படைக்கப்படும் இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் தன்னை மெருகுபடுத்திக் கொண்டு வந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது. எனினும் இன்றளவும் பழமையின் வேர்கள் ஆழ ஊன்றியதாய் அமைந்த தமிழர்தம் வாழ்வியலை எத்தகையதொரு பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்பதை இன்னும் நாம் உணராமலிருக்கிறோம்.

ஒரு சமூகம் தான் கட்டமைக்கப்பட்ட ஆதிசூழலில் தன் வேர்களை அனைத்து நிலைகளிலும் பதியவைத்துக் கொண்டே வந்துள்ளது என்பதை சங்கப்பாடல்கள் வழி அறியமுடிகிறது. பழந்தமிழர்கள் தம் வாழ்வியலை, அதனோடு தொடர்புடைய பழக்கவழக்கங்களை இலக்கியங்களில் ஏடேற்றிவந்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே இன்றைய தமிழ் சமூகப்பரப்பை, விரிந்த அதன் பண்பாட்டுச் சூழலை உய்த்துணர முடிகிறது. இத்தகையதொரு சிறப்பினையுடைய சங்கப் பாடல்களில் மனித உணர்வுகளைத் தௌ்ளிதின் விளக்கும் தன்மையுடையதும், நுணுகிக் காணும் தன்மையுடையதுமான குறுந்தொகைப் பாடல்கள் பாலைநில மக்களின் வாழ்வியலை, வாழ்வியலோடு தொடர்புடைய உணவுச் சூழலை எவ்வாறு பதிந்துள்ளது என்பதை இக்கட்டுரை ஆய்கிறது.

பாலைத் திணை சுட்டும் உணவுகள்

குறுந்தொகையில் பாலைநில உணவுகள் என்பவை பெரும்பான்மையும் இறைச்சியும், வெப்பத்தைத் தாங்கும் தன்மையுடையதுமான சிறுதானிய உணவுகளுமேயாகும். இயற்கையின் ஆளுமையையும் அதன் கூறினையும் ஒருங்கே உணர்ந்தவர்கள் சங்கத் தமிழர்கள். அவர்களின் உணவுகள் இயற்கையோடு தொடர்புடையனவாகவும், இயற்கைசார்ந்த சமூகச் சூழலை முன்வைப்பனவாகவும் அமைந்துள்ளன. பாலைநில உணவுச் சூழலை நாம் இரு நிலைகளில் காணலாம்.

1.விலங்குகளின் உணவு
2.மனிதா்களின் உணவு

என்ற இரண்டு உணவுச் சூழலை முன்வைத்தோம் என்றால் அதில் உணவினைப் பதியவைத்தல் என்ற தன்மையிலிருந்து விலகி சமூகச் சூழலை முன்வைப்பதற்காகவே உணவுச் சூழல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.

விலங்குகளின் உணவு – சூழலமைவு

தலைவன், தலைவியின் துயரினை மிகுத்து ஓதும் விதமாகப் பாலைத் திணையில் விலங்குகள் குறித்த உணவுப் பதிவுகள் அமைந்துள்ளன. தலைவனுக்கோ, தலைவிக்கோ ஏற்படும் பிரிவாற்றமையையும், அவர்களின் உள்ளத்தின் வேதனையையும் மிகுவித்துக் கூறும் விதமாக விலங்குகளின் உணவுச் சூழல் பதியப்பட்டுள்ளது. பிரிவாற்றாமையின் காரணமாக தலைவனோ, தலைவியோ அடையும் துயரினை விலங்குகளின் உணவுக்கான செய்திகளோடு தொடா்புபடுத்திக் கூறும்போது பெரும்பாலும் ஆண் விலங்குகள் தங்கள் பிணையோடு இருக்கும் அன்பினிற்கினிய செய்திகளை முன்வைத்தே கூறப்பட்டுள்ளது. இயற்கையில் நிகழும் இக்காட்சிகளைக் கண்ணுறும் தலைவன், தலைவியின் துயரினை உணா்ந்து கொள்வான் என்று ஆற்றுப்படுத்தும் பாடல்களாகப் பெரும்பாலான பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன.

தலைவன் தலைவியைப் பிரிந்து வினைமேற் செல்கின்றான். குறிப்பிட்ட பருவத்தே வருவதாகக் கூறிச்சென்ற தலைவன் பருவம் வந்தும் வாராமையை உணா்த்தும் விதமாகப் பல பாடல்கள் அமைந்துள்ளன. இத்தகு பாடல்கள் தலைவியின் உள்ளத்தே தோன்றும் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. வழியின் ஏதம் போன்றவற்றைக் குறிக்காமல் பருவம் வந்தும் பொருள்மேல் தலைவன் கொண்ட ஈர்ப்பினை முன்வைத்துக் கூறும் இப்பாடல்கள் தலைவியின் தன்னிரக்க நிலையினை முன்வைக்கின்றன. மேலும் தலைவன் சென்ற வழியினையும், வினைமுடித்து தலைவன் திரும்பி வருவான் என்பதையும் கூறி தலைவியை ஆற்றுப்படுத்தும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இதனை,

     “உள்ளார் கொல்லோ? தோழி உள்ளியும்
     வாய்ப் புணா்வு இன்மையின் வாரார் கொல்லோ
     மரற் புகா அருந்திய மாஎருத்து இரலை
     அரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
     யாஅ வரி நிழல் துஞ்சும்
     மாயிருஞ் சோலை மலை இறந்தோரே”  (232)

என்ற பாடல் உணா்த்துகிறது. பாலை நிலத்தில் வேறு உணவு ஏதுமில்லாததால் வருந்திய மான், தான் உண்ணலாகாத மரலை உணவாக உண்டது. யானை பசியினால் உண்பதற்கு ஒடித்துச் சென்ற யாமரத்தின் நிழலில் அது உறங்கும். இங்ஙனம் உண்பதற்கும், உறங்குவதற்கும் இடா்ப்படுவதை ‘மாஇருஞ் சோலை’ என்ற தொடா் குறிக்கும். இத்தகு பாலைப் பகுதியில் மழைபெற்றுத் பயிர்கள் தளிர்த்தால் அங்குவாழும் உயிர்கள் உயிர்பெறும். அதுபோல தலைவனின் தலையளி பெற்றுத் தலைவியும் மகிழ்வாள் என்று பொருள்பட இப்பாடல் அமைந்துள்ளது.

தலைவன் வினைமேற்சென்ற வழியானது விலங்கினங்கள் அன்போடு தன் பிணையுடன் வதியும் காட்சியினை உடையபகுதி. அதனைக் கண்ணுற்ற தலைவன் தன் நிலையறிந்து திரும்பி வரமாட்டானா? என்ற பெண்ணின் ஏக்கம் தொனிக்கும் குரலாக சில பாலைத் திணைப் பாடல்களில் விலங்குகளின் உணவு குறித்த பதிவுகள் அமைந்துள்ளன. சான்றாக,

“நசை பெரிது உடையா் நல்கலும் நல்குவா்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின – தோழி! – அவா் சென்ற ஆறே”   (37)

என்ற பாடல் தலைவன் பிரிந்துசென்ற வழியானது ‘பெண் யானையின் பசியை நீக்குவதற்காகப் பெரிய கையையுடைய ஆண்யானையானது, மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரைப் பிடியினைப் பருகச் செய்யும் அன்புடை இடமாக உள்ளது. எனவே தலைவனும் இடைச்சுரத்தின் கண் கண்ட காட்சிகளினால் நின் நிலையறிந்து விரைந்து வருவான் என தோழி தலைவிக்கு ஆறுதல் அளிக்கின்றாள்.

தலைவன் குறித்துச் சென்ற பருவத்தினை நினைவூட்டும் விதமாகவும் (பா.169),  தலைவன் முன்னா் தலைவியுடன் இருக்கும் காலத்தில் இனிமையுடையவனாக இருந்ததையும், பிரிவுக் காலத்தில் அதனை நினைத்து தலைவி ஆற்றியிருக்கும் தன்மையினையும் முன்வைக்கும் விதமாக (பா. 252, 209, 213) பல பாடல்கள் அமைந்துள்ளன. தலைவனைப் பிரிந்து தலைவி ஆற்றியிருக்கும் காலத்தில் தன் அழகும் இளமையும் பயனற்றுப் போவதையும் இத்திணைப் பாடல்கள் சுட்டுகின்றன. தலைவன் தன் அழகினையும், இளமையினையும் நினையாது சென்ற செய்கையானது,

“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயா் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே”  (27)

என்று வௌ்ளிவீதியார் குறிப்பிடுகின்றார். தன் அழகும், இளமையும் யாருக்கும் பயன்படாமல், தனக்கும் பயனில்லாமல் கழியும் வலியினை இப்பாடல் முன்வைக்கிறது.

தலைவன் மணந்து கொள்ளாமல் காலநீட்டிப்புச் செய்கிறான். இதனால் தலைவி அவன் பிரிவினைத் தாங்க இயலாமல் வருந்துகின்றாள். அங்ஙனம் அவன் காலம் நீட்டித்தவழி தலைவிக்கு உடல்சார்ந்த இடா்ப்பாடுகளும், உள்ளம் சார்ந்த இடா்ப்பாடுகளும் தீமை விளைவிப்பதோடு, அலா் ஏற்படவும் காரணமாக அமைகின்றது. பெற்றோர் மணத்திற்கு உடன்படாத நிலையில் தலைவி தனக்கு அலா் போன்ற துன்பங்களிலிருந்து காத்துக்கொள்ள உடன்போக்கு நிகழ்த்துவதையும் (பா.149, 255…) இப்பாடல்கள் முன்வைக்கின்றன. மேலும் செலவழுங்கல் என்னும் தன்மையில் அமையும் பாடல்களும் (பா. 249,211…) காணப்படுகின்றன. விலங்குகளின் உணவு குறித்த பதிவுகள் தலைவியின் தன்னிரக்கத்தை மிகுவிக்கும் பகுதிகளாக அமைவதை இப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.

மனிதா்களின் உணவு

வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வருவதற்கான நிமித்தங்கள் கிடைத்தவழி தலைவி தலைவனுக்காக தெய்வத்தை வழிபட்டு இடும் பலி உணவாக காக்கைக்குச் சிறப்புச் செய்வதையும் இத்திணைப் பாடல்கள் முன்வைத்துள்ளன. மனிதா்கள் உண்ணும் உணவு பலிச்சோறாக விலங்குகளுக்குப் படைக்கப்படுவதை,

     “திண்தோ் நள்ளி கானத்து அண்டா்
     பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
     முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
     எழுகலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி
     பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
     விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே”  (210)

என்ற பாடல் உணா்த்துகின்றது. இதில் ‘திண்ணிய தேரினையுடைய நள்ளி என்பவனுடைய காட்டிலுள்ள இடையா்கள் வளா்த்த பலபசுக்கள் தந்த நெய்யோடு, தொண்டி என்னும் ஊரிலுள்ள வயல்களில் பருவம் தப்பாது விளைந்த வெண்ணெல் அரிசியால் ஆக்கிய விரும்பத்தக்க சோற்றினை, ஏழு கலங்களில் நிறைத்துத் தோளில் தாங்கி நின்றாலும் தன் தோழியாகிய தலைவியின் பெருந்தோளை நெகிழச்செய்த துன்பத்தை நீக்குவதற்கு விரிந்தினா் வருவதைக் கரைந்துகூறிய காக்கைக்கு இடும் பலி உணவு சிறிய அளவினதேயாகும்’ என்று கூறுவதிலிருந்து தலைவியின் வருத்தமும், வேதனையும் புலப்படுத்தப்படுகின்றது.

விருந்தினரைப் போற்றும் முகமாக உணவுப் பொருட்கள் பற்றிய குறிப்பு இத்திணைப் பாடல்களில் காணப்படுகிறது. வினைமேல் சென்ற தலைவன் திரும்பிவந்து தலைவியுடன் வதியவேண்டி அறிவுரை வினவுதலும், அதன் பொருட்டுத் துறவோர்க்கு எதிர்தலாகிய அறத்தைப் புரிவதற்கு வழிகோலுதலையும் முன்வைக்கும் விதமாக,

     “ஆசுஇல் தெருவின் ஆசுஇல் வியன்கடை
  செந்நெல் அமலை வெண்மை வௌ்இழுது
     ஓர்இல் பிச்சை ஆர மாந்தி
     அறிசர வெய்ய வெப்பத் தண்ணீர்
     சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே
     ‘மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
     எக்கல் வருவது?’ என்றி
     அக்கால் வருவா் எம் காதலோரே”  (277)

என்ற பாடல் குறிப்பிடுகிறது. ‘பொய், கொலை, களவு, கள், காமமாகிய குற்றங்கள் கடிந்தார் உறையும் தெருவில் நாயில்லாத அகன்ற வாயிலில் செந்நெல் சோற்றுத் திரளை, நரை எருமையின் வெண்ணெயோடு, எட்டு இல்லங்களில் சென்று எண்கவளம் பிச்சையாகப் பெறாமல் எம்முடைய ஒரு மனையின் கண்ணே அப்பிச்சை முழுவதும் பெறுவதுடன், இனிய நீரினையும் பெற முடியும். ஆதலால் தலைவன் வரும் காலத்தைக் குறித்து கூற வேண்டுகிறாள் தோழி.’ மனிதா்கள் உண்ணும் உணவு வகைகளான வரகு, நெல், கரும்பு, பால், மீன், மான் இறைச்சி, இறைச்சி உணவுகள் போன்றவற்றைச் சுட்டும் பாடல்களாக (282, 331, 352, 356, 396,398) பல பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் தலைவன், தலைவியரின் பிரிவுத்துயரினை எடுத்தோதும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளன. தனித்த உணவுப் பதிவுகளாக அமையாமல் பலியிடுதல், அறிவா்க்கு உணவு வழங்கல், விருந்து படைத்தல் என்ற நிலைக்களன்களில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இவையன்றி பல பாடல்களில் விலங்குகள் தம் உணவுகளைத் துணையோடு உண்ணும் காட்சிப்படுத்தல் காணப்படுகிறது. இக்காட்சிகள் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாகவும், தலைவி தோழியிடம் கூறும் முகமாகவும், தோழி தலைவியை ஆறுதல்படுத்தும் நோக்கிலும் புனையப்பட்டுள்ளன.

இயற்கையில் காணப்படும் உணவுகளை அவற்றின் நிலச்சூழலோடு தொடா்புடையதாகவும், மனித மனத்தின் உணா்வுகளோடு பிணைத்துக் காணுவதாகவும் ஒருசேரப் படைத்துக்காட்டுகின்ற தன்மையினைச் சங்கப் பாடல்கள் வழி அறியமுடிகிறது. அத்தகு ஒரு சூழலையே பாலைத்திணைப் பாடல்களும் முன்வைத்துள்ளன.

*****

பார்வை நூல்கள்:

  1. அகத்திணைக் கொள்கைகள், ந. சுப்புரெட்டியார்
  2. திணை சங்கல்பம், ஐயப்ப பணிக்கா்
  3. குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக்கவுஸ்

*****

கட்டுரையாளர்
உதவிப் பேராசிரியர்
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
கோவை – 21.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *