மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (1)

0

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

20170002697_20171011_002

 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.  அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.  பரிசுத்த வேதாகமம், 1. யோவான் 4: 7-8

சைமன் ஒரு செருப்புத் தைக்கும் பரம ஏழை. அவனுக்கு மனைவி, குழந்தைகள் தவிர வேறு ஒரு சொத்தும் கிடையாது. ஒரு குடிசையில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அன்றாடம் வேலை செய்து கிடைக்கும் கூலி ஆகாரத்திற்கே போதுமானதாக இருந்தது. குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ள ஆட்டுத் தோலில் தைக்கப்பட்ட ஒரு கோட்டை, கணவனும் மனைவியும் மாற்றி மாற்றி அணிந்து கொண்டனர். அதுவும் இப்போது கிழிந்து கந்தலாகி விட்டது. அடுத்த குளிர் காலம் தொடங்கும் முன் புது ஆட்டுத் தோல் வாங்கிக் கோட்டுத் தைக்கக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்க்கத் தொடங்கினான். இதுவரையிலும் மனைவியின் பெட்டியில் ரகசியமாக அவர்கள் சேமித்து வைத்திருந்த மூன்று ரூபிள்கள் இருந்தன. ஊரில் அவனுடைய வாடிக்கையாளர்கள் ஐந்து ரூபிள்களும், இருபது கோபெக்குகளும் கடன்பட்டிருந்தனர்.

ஒரு நாள் காலை ஆகாரத்திற்குப் பின்பு, ஊருக்குள் சென்று கடன் பட்டவர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து, ஆட்டுத்தோல் வாங்கப் புறப்பட்டான். தன்னுடைய கோட்டிற்கு மேல் மனைவியின் பழைய கோட்டும், அதற்கும் மேல் இன்னும் ஒரு கோட்டும் அணிந்து கொண்டு சட்டைப் பையில் மூன்று ரூபிள் நோட்டுகளைப் பத்திரமாக வைத்துக் கொண்டான். புதியதாக ஒரு கம்பை வெட்டி ஊன்று கோலாக வைத்துக் கொண்டு புறப்பட்டான்.

முதல் வாடிக்கையாளன் வீட்டில் இல்லை.  அவன் மனைவி, சைமனை, அடுத்த வாரம் வந்தால் பணம் கிடைக்கும் என்று சொல்லி அனுப்பி விட்டாள். இரண்டாவது வாடிக்கையாளன் “என்னிடம் இப்போது பணம் கிடையாது, இருபது கோபெக்குகள்தான் இருக்கிறது, மீதியைப் பின்பு தருவேன்” என்றான். சைமன் ஆட்டுத்தோல் வியாபாரியிடமிருந்து தோலைக் கடனாக  வாங்க விரும்பி, தோல் விற்கும் கடைக்குச் சென்றான். சைமன் ஏழையானதால் கடைக்காரன் தோல் கொடுக்க மறுத்து விட்டான். அங்கும் ஏமாற்றம். சைமன் மிகவும் மனமுடைந்து கையிலிருந்த இருபது கோபெக்குகளுக்கும் மது வாங்கி அருந்தி விட்டு, ஒரு குடியானவன் பழுது செய்யக் கொடுத்த ஒரு சோடி பழைய செருப்புகளையும் கையில் ஏந்திக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

கொஞ்சம் குடித்திருந்ததால் சைமனுக்கு குளிர் அதிமாகத் தெரியவில்லை. தன்னுடைய ஏழ்மை நிலையைப் பற்றித் தானாகப் பேசிக்கொண்டு நடந்தான். “வீட்டில் மனைவி, நான் கோட்டுத் தைக்கத் தோல் கொண்டு வருவேனென்று காத்துக் கொண்டிருப்பாள். நான் என்ன செய்ய முடியும்? ஒருவரும் பணம் கொடுக்கவில்லையே? உணவு வாங்குவதற்கே பணம் சரியாக இருக்கிறது”.

சைமன் ஊர் எல்லையை நெருங்கிய போது, அங்கிருந்த ஆலயத்தின் பின் பக்கம் ஏதோ வெண்மையாக இருப்பதைப் பார்த்தான். மங்கிய மாலை ஒளியில் அது என்னதென்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. “இதற்கு முன்னால் இங்கு ஒரு வெள்ளைக் கல் கிடையாதே? ஏதோ மிருகமா?  ஆனால் இதற்கு வெண்மையான மனிதத் தலை இருக்கிறதே! இங்கே ஒரு மனிதன் என்ன செய்கிறான்?” என்று பலவாறு சிந்தித்துக்  கொண்டு அந்த உருவத்தின் அருகில் சென்று பார்த்தான். அங்கு ஒரு மனித  உருவம் ஆடைகளின்றி நிர்வாணமாகத் தலை குனிந்து கொண்டிருப்பதைப் பார்த்து சைமன் மிகவும் பயந்து “இவனை யாரோ கொன்று, நிர்வாணமாக்கி இங்கு விட்டுச் சென்று விட்டார்கள். இவனை நான் தொட்டால், ஆபத்தில் மாட்டிக் கொள்வேன்” என்று எண்ணி அந்த இடத்தை விட்டுக் கடந்து சென்றான்.

சிறிது தூரம் சென்ற பின் திரும்பி அந்த உருவத்தை நோக்கினான். அதே சமயம் அந்த உருவமும் சுவரிலிருந்து விலகி தலையை உயர்த்தி சைமனைப் பார்த்தது. சைமன் அந்த உருவத்தின் அருகில் போகவா வேண்டாமா என்று யோசித்தான். அருகில் போனால், அந்த உருவம் தன்னைத் தாக்கினால் எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்? அவனுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேறு ஆடை இல்லையே, இறைவன்தான் என்னை இங்கிருந்து காக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தன் வழியே  வேகமாக நடக்கத் துவக்கினான். ஆனால் அவனால் அதிகத் தூரம் செல்ல முடியவில்லை. “சைமன், என்ன செய்கிறாய்? அந்த மனிதனுக்கு என்ன தேவையோ? இறந்து விடுவானோ? கொள்ளைக்காரர்களைக் கண்டு பயப்பட உன்னிடம் என்ன இருக்கிறது? சைமன், உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று மனச்சான்று இடித்தது.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *