க. பாலசுப்பிரமணியன்

பண்பான கல்விக்குப் பாதை எங்கே?

வாழ்ந்து-பார்க்கலாமே-1-1

அலைபேசியில் “வாட்ஸ் ஆப் ” மூலமாக வந்த அந்தச் செய்தியை பார்த்ததும் நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டேன். அமெரிக்காவில் வாழும் ஒரு இந்தியச் சிறுவனுக்கு ஒரு வினோதமான வியாதி. அவனுடைய எலும்புகள் வலுவிழந்து அடிக்கடி உடையும் நிலையில் உள்ளன. தன் சக்கர வண்டியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்தச் சிறுவன் தனக்கு 130 எலும்பு உடைப்புக்கள் வந்ததாகவும் ஒவ்வொன்றையும் வலுவான மனத்துடனும் நம்பிக்கையுடனும் பயமின்றி ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாடல் கற்றுக்கொண்டதாகவும் கூறினான். அவனுடைய தன்னம்பிக்கைக்கு நான் தலைதாழ்த்தி நின்றேன்.

இங்கிலாந்தில் பிறந்த உலகப் புகழ் பெற்ற இயற்பியல், வானியல்  தத்துவ மேதை ஸ்டீபன் ஹாக்கிங் என்பவருக்கு 76 வயது நிரம்பியுள்ளது. தன்னுடைய உடலில் ஏற்பட்டுள்ள பலவிதமான உபாதைகளால் தன்னுடைய  சக்கர வண்டியில் முடக்கப்பட்டும் அவருடைய ஆராய்ச்சிகள் தடைப்படவில்லை. உலகமே வியக்கும் வண்ணம் பல வானியல் கண்டுபிடிப்புக்களை அளித்துள்ள அவர் கூறுவதென்ன?

“வாழ்க்கை என்று ஒன்று இருக்கும் வரை நம்பிக்கை என்ற ஒன்றும் உண்டு” “எப்பொழுதும் வானிலுள்ள நட்சத்திரங்களைப் பாருங்கள், காலடியில் இருக்கும் மண்ணை அல்ல.”

வாழ்க்கையில் பயத்தால் முடங்கிக்கிடந்தால் முன்னேற்றப் படிகளில் அடியெடுத்து வைக்க முடியாது. குழந்தைகளுக்கு பய உணர்ச்சியை ஊட்டி வளர்த்தால் அவர்களுடைய வாழ்க்கை ஒளியிழந்து போகும். பல இடங்களில் வீட்டில் குழந்தைகளைப் பாதுகாக்கும் எண்ணத்தில் அவர்களுக்கு உண்மையான வாழ்க்கையை இழக்கவைத்து விடுகின்றார்கள். குழந்தைகளுக்கு பாதுகாப்புக் கொடுத்து அவர்களைப் பேணுதல் மிக அவசியம். ஆனால் அவர்களை வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் கஷ்ட -நஷ்டங்களிலிருந்தும் விலக்கிவைத்து வெறும் பசுமையை மட்டும் காட்டிவந்தால் வாழ்க்கையின் வேனில் பருவத்தில் அவர்கள் துவண்டுவிட வாய்ப்புக்கள் உண்டு. இதைப் பல இடங்களில் நாம் பார்த்திருக்கின்றோம் .

பயமில்லாத சூழ்நிலையில் குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்பது ஒரு வரவேற்கவேண்டிய கருத்து. ஆனால் அதே நேரத்தில் தவறுகளை உறுதி செய்யும் சூழ்நிலைகளிலும் வன்முறையை வலுப்படுத்தும் சூழ்நிலைகளிலும் குழந்தைகளை வளர்ப்பது அவர்களுடைய மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடம் வன்முறையைத் தூண்டிவிடவும் அதிக வாய்ப்புக்கள் உண்டு.

கடந்த சில நாட்களில் பள்ளிகளில் நடந்த சில நிகழ்வுகள் நம்மை வேதனைப்பட வைத்துள்ளது மட்டுமின்றி வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படவும் வைத்துள்ளன. பள்ளிக்கு விடுமுறை விடுவதற்கான வழியைத் தேடிய ஒரு 14 வயதுப்  பெண்குழந்தை அதே பள்ளியில் ஆரம்ப வகுப்பில் படிக்கின்ற குழந்தையின் கழுத்தை பள்ளிக் கழிவறையில் அறுத்துக் கொன்ற நிகழ்ச்சி. அரியானாவில் யமுனாநகரில் ஒரு தனியார் பள்ளி முதல்வர் மாணவனைக் கண்டித்ததற்காக அந்த மாணவன் தன்னுடைய தந்தையின் துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்துவந்து பள்ளி முதல்வரைச் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி. சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வகுப்பறையிலேயே ஒரு ஆசிரியையை மாணவன் கத்தியால் குத்திக் கொன்ற நிகழ்ச்சி. அடுக்கிக் கொண்டே போகலாம். காரணம்? சாதிக்கவேண்டும் என்ற வெறித்தனம், பொறாமை, இயலாமை, பொறுமையின்மை, தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலை … இவ்வாறு வன்முறையில் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளும் இளைய சமுதாயம் நாளை இந்த சமூகத்தில் அமைதியை எப்படி நிலை நாட்டும் ?

அமைதியான பண்பான ஆனந்தமான வாழ்க்கையை உருவாக்க வேண்டிய இடத்தில் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ? ஒரு நண்பர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது  “அந்தப் பள்ளிக்கூடத்தில் எனது மகனைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அங்கே முதல் வகுப்பு முதற்கொண்டே மாணவர்களை ஐ ஐ டி மெடிக்கல் போன்ற தேர்வுகளுக்கான பாடங்களை சொல்லிக் கொடுக்கின்றார்களாமே ” என்கிறார். எனக்குச் சிரிப்பதா அல்லது அழுவதா என்று புரியவில்லை. அன்பையும், பண்பையும், மனித நேயத்தையும், தன்னம்பிக்கையையும் சமூக உணர்வுகளையும் வளர்க்க வேண்டிய இந்த நேரத்தில் ஏன் சில பெற்றோர்கள் இதுபோன்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுகின்றார்கள்? வாழ்க்கையில் வெற்றி பெற பல பாதைகள் இருக்கின்றன. எந்தப் பாதையை பின்பற்றினாலும் அதில் முன்னேறி சிறக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டுமே தவிர, அடுத்த வீட்டுக் குழந்தை இதை படிக்கின்றானே என்பதற்காக நமது குழந்தையின் விதியோடு நாம் விளையாடக்கூடாது. இதை ஆங்கிலத்தில் ஒரு மனிதன் “தானாக இருப்பதற்கும் – இன்னொருவனாக ஆவதற்கும்” உள்ள மிகப் பெரிய போராட்டம் என்று எடுத்துரைக்கின்றார்கள். (The Royal conflict between “Being” and “Becoming”)

இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும்? சற்று யோசிக்கலாமே !

(தொடருவோம் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *