இசைக்கவி ரமணன்

1456219253-6062

 

சிவனே குருவெனச் செப்பிய ஆசான்

அவனே சிவனென் றறிந்தேன் – தவமே

அறியா எனையும் அருளால் அணைத்தான்

வறியன் அடைந்ததே வாழ்வு

குருவே வெயிலாய்க் கொளுத்தி உறிஞ்சி

குருவே மழையாய்ப் பொழிவார் – குருவே

கரத்தைக் கொடுத்துக் கலத்தில் இருத்திக்

கரையில் இறக்குவார் காண்!

குருவின் திருவடியைக் கூடுவதும், அன்னார்

அருளே கதியென் றடங்கி – இருப்பதுமே

நல்வழி நம்வழி நம்பிக்கை யானவழி

சொல்வ தறிந்ததிந்தச் சொல் !

நிலையற்ற வாழ்வில் நிலையான தொன்றே

கலைகின்ற காட்சி கலையாத தொன்றே

குலையாமல் காக்கும் குருதேவன் பாதம்

அலைபாயும் நெஞ்சே அறி

பரமகுரு வந்தான்! பரிபக்கு வத்தைக்

கரமதனில் தந்தான்! கலந்தான்! சரமாய்க்

கவிதைமிகு கானங்கள் நான்பாட வைத்தான்

செவியாரக் கேட்டான் சிரித்து

விட்டுவிட்டேன் ஐயா நான் விட்டுவிட்டேன்; தாங்கவில்லை

பட்டுவிட்டேன் ஐயா என் பாழும் விதியாலே

தொட்டுவிட்டாய், பின்னே தொடர்ந்துவந்தாய்; போதவில்லை

சுட்டால்தான் கிட்டும் சுகம்

உணர்வெலாம் ஒற்றை உயிர்முனையில் கூடித்

தணலாய்ச் சுடுதே தலைவா! அணைப்பாயா?

இல்லை அணைப்பாயா? என்குருவே! என்னுயிரே!

தொல்லைகள் நீங்கத் தொடு

அன்பே குருதேவா! ஆருயிரே! ஒன்றுமில்லா

என்மீதும் அன்பாய் இரைக்கும் கருணையென்னே!

நன்றியன்றி வேறு நலமேதும் என்னிலில்லை

புன்மைகள் இன்னமும் போயொழிய வேயில்லை

சென்மத்தைக் காலமென்னும் செல்லரிக்க, அவ்வப்போ(து)

உன்மத்தம் ஏறி உயிர்சிலிர்க்க, ஓர்கணத்தே

கன்மம் அழிந்ததுபோல் காண, மறுகணத்தே

கன்மமே என்விதியாய்க் கட்டி எனைஇறுக்க

அன்பே!நான் காணும் அனுபவங்கள் யாவினுள்ளும்

நின்றொலிக்கும் ஆதார நாதவொலி நீயன்றோ!

உன்முகம் உன்ஸ்வாசம் உன்நினைவு உன்கனவு

என்றோர் சுருதியில் எல்லாம் நடக்கிறது

என்கடன் என்தவறு என்சரி என்பொறுப்பு

என்றேதான் ஏதும் எனக்குண்டோ இங்கினிமேல்?

நீயே பொறுப்பு நினதே விருப்பு வெறுப்பு, அன்றே

தீயாய் வினையை எரித்தென்றன் சித்தத்

திரிமுனையில்

நீயன்றோ தீயாய் நிமிர்ந்து சுடரலானாய்?

நினைவின் நிழல்கள் நிசமல்ல என்று

நினைவு படுத்தி நெருங்கியது நீதானே?

என்னை முடிப்பதாய் என்றைக்கோ சொன்னாயே?

உன்முன்னில் ஓர்நாள் உயிருதற நின்றேனே

அன்றே முடிந்ததாய் மற்றொருநாள் சொன்னாயே?

என்னாயிற் றப்பா? எதுவும் தவறியதா?

சின்ன மறதியா? செப்பு! சிரிக்காதே!

ஏதும் இயலாத ஏழைநான் என்பதிலே

பேதமின்றி உன்முன்பு பிள்ளையாய் நிற்கின்றேன்

போதும்வா! உன்னில் பொசுக்கிவிடு! வேறிங்கே

ஏதும்நான் கோரேன் இனி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *