இனிக்கும் சடங்குகள் – ஒரு மானுடவியல் பார்வை

0

-நிலவளம் கு.கதிரவன்

முன்னுரை :-

நாம் ஏன் பாரம்பரிய விழாக்களையும், விடுமுறைக் கால கொண்டாட்டங்களையும், பண்டிகைகளையும் kathiravanகொண்டாடுகிறோம்? அவைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா? இது என்ன கேள்வி என்கிறீர்களா? ஆம். இதுபோன்ற கொண்டாட்டங்களை நாம் பெரிதும் விரும்புகிறோம். அவைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என்று கூறுகிறார்கள் மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள். இதைச் சொல்ல எதற்கு ஆராய்ச்சி? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.  இதை நான் சொல்லவில்லை.  அமெரிக்கப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.  அப்பாடா. ஒரு பிரச்சினை விட்டது.  அமெரிக்கா என்றால் அனைவரும் நம்பிவிடுவார்கள்.

ஆம். மக்களே. நாம் ஏன் பாரம்பரிய விழாக்களையும், மதச் சம்பிரதாயமான விழாக்கள், விடுமுறைக் காலக்கொண்டாட்டங்களை கொண்டாடுகிறோம்? என்பதற்கான காரணங்களையும், அக் கொண்டாட்டங்கள் தரும் மகிழ்ச்சியினையும் ஆராய்ந்து நமக்கு அளித்துள்ளார்கள் அமெரிக்க பல்கலைக் கழக மானுடவியல் பேராசிரியர்கள்.  விரிவாக கீழே காண்போம்.

சடங்குகளும், விழாக்களும் :-

விழாக்கள், கொண்டாட்டங்கள் என்பது பற்றிய எண்ணமே பெரும்பாலான மக்களின் முகங்களில் புன்னகையை அளித்து, இனிமையான எதிர்பார்ப்பு மற்றும் ஏக்க உணர்வுகளைத் தருகிறது.  காரணம் கொண்டாட்டத்தின் போது நடக்கும் கேளிக்கைகள், சிறப்பு உணவுகள் அனைத்தையும் அனுபவிக்கலாம்.

பொதுவாகச் சடங்குகள் மற்றும் விழாக்கள், அது மத விடுமுறை தினங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் அல்லது பிறந்தநாள்,திருமணம், போன்ற தனிப்பட்ட விழாக்களாகட்டும் அவைகள் நம் வாழ்வில் முக்கியமான தருணங்களாகவும் அமைந்து, மறக்க முடியாத பதிவுகளாக அமைந்துவிடுவதாகச் சிலர் கூறுவதைக் காணலாம்.

இத்தகைய கொண்டாட்டங்கள் உணர்ச்சிப் போட்டிகளுடன் வெடித்தாலும், மிகப் பெரும்பாலும் இது பொதுவான நிகழ்வு போன்று இல்லாமல், ஒரு கட்டமைப்புடன், ஈடுபாட்டுடன் மிகவும் ஒழுங்கமைவுடன் அமைவதால் நமது நினைவுகளில் இத்தகைய இனிமையான தருணங்கள் நீடித்த நினைவுகளாக அமைந்துவிடுகின்றன. மேலும் அத்தகைய சிறப்பு நிகழ்வுகளை நாம் நினைவில் வைத்திருப்பதை மதிப்புடையதாகவும் ஆக்குகிறது.

உண்மையில் குடும்ப விழாக்களுக்கு மதிப்புமிக்க பல காரணங்கள் உள்ளன.  பல்வேறு மனநல நன்மைகளை வழங்கமுடியும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.  நம்மை நாமே அனுபவிக்க உதவுகிறது. அன்புக்குரியவர்களோடும், உறவினர்களோடும் இணைந்து கொண்டாடுவதால் குறுகிய காலஅளவில் கூட நமது கடினமான காலத்திலிருந்தும், மகிழ்ச்சியற்ற மனநிலையிலிருந்தும் விடுபட முடிகிறது.

கவலையை விட்டொழிக்கும் வழிமுறை :-

நமது தினசரி வாழ்க்கையானது அழுத்தம் நிறைந்ததாகவும், நிச்சயமற்றதாகவும் உள்ளது.  நாம் சரியாக என்ன செய்ய வேண்டுமென்றால், ஒரு சிறப்பான நேரத்தில் ஒரு செயலைச் செய்து முடித்துள்ள காலம், அதற்கான வழிமுறை, அமைப்பு, கட்டுப்பாடு இகைளைத் திட்டமிட்டு அமைத்துக் கொண்டோமேயானால் வாழ்க்கை நீடித்த, நிலைத்த தன்மைக்கு வசதியாகிறது.

விடுமுறை மரபு சார்ந்த கொண்டாட்டங்கள், சடங்குகள் வழியாக நமக்கு வாழ்த்துதல்கள் நிறையக் கிடைக்கின்றன.  தொடர்ந்து இத்தகைய கொண்டாட்டங்களை திரும்பத் திரும்ப நிகழ்த்தும்போது, நமது கவலைகளை விட்டொழிக்கும் நம்பிக்கையுள்ள இடமாக இந்த உலகம் மாறுவதாக ஆய்வகச் சோதனையின் மூலம் ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.

விழாக்கள் என்பது ஆண்டு முழுவதும் மற்ற நேரங்களில் கூட நடக்கின்றன.  ஆனால் ஒரு குடும்ப விழாவாகட்டும் அல்லது விடுமுறைக்  காலத்தில் நண்பர்களோடு இணைந்த விழாக்களாகட்டும் இத்தகைய நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் இணைந்த விழாக்கள் மட்டுமே அவர்களை அர்த்தமுள்ளவர்களாக்குகின்றன.  காரணம் குறிப்பிட்ட இத்தகைய விழாக்களுக்கு மட்டுமே அதிகமான மக்கள் வருட இறுதி நாட்களிலோ அல்லது தேவையான நேரத்திலோ ஒன்று கூடுகின்றனர்.  இதற்காக மக்கள் தூரமான இடங்களில் இருந்து கூட ஒன்று கூடுகின்றனர்.  இதனால் அவர்களுடைய கவலைகளை மறக்கின்றனர். இத்தகைய தருணங்கள் மிகவும் மதிப்புமிக்கதாகவும், மதிப்புமிக்க குடும்ப மரபுகளை மீண்டும் இணைக்க ஒரு வாய்ப்பாகவும் உதவுகிறது.

சந்தோஷமான குழு உணவு முறை : –

ஒரு விழா என்றால் உணவு சிறப்பிடம் பெறுவது இயல்பான ஒன்று.  அதிலும் குடும்ப விழா என்றால் சொல்லவே தேவையில்லை.  விழாவிற்கு வந்துள்ள பெண்கள் ஒன்றாகச் சமையல் அறையில் கூடி, பல மணி நேரம் செலவழித்து உணவு தயாரித்து, தயாரித்த உணவினை ஒன்றாக அமர்ந்து உண்டு களிக்கிறோம்.  இத்தகைய குழுவாகச் சேர்ந்து உணவு தயாரித்து உண்ணும் முறையானது, ”வேட்டைச் சமூகத்தின் நமது முதல் மனிதர்கள், தங்கள் வேட்டைகளை நெருப்பிலிட்டு வறுத்தெடுக்க ஒன்றாகக் கூடியதாகவும், இத்தகைய முறைமையே நம் இனங்களில் சமையல் என்ற ஒரு வரையறுக்கும் பண்புகளில் ஒன்றாக உள்ளது” என ஆய்வாளர் கூறுகிறார்.

இத்தகைய குழு உணவு உட்கொள்ளும்போது பல சம்பவங்களை நினைவுபடுத்திக் கொண்டும், நமது மூதாதையர்களைப் பழைய சம்பவங்களோடு இணைத்து நினைவுபடுத்திக் கொண்டும் உண்கின்றபோது, பினைப்புக்கான வழிகள் மென்மையாகிறது.  சமூகத்தோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.

அனைத்து கலாசாரங்களிலும் விழாக்கள் உண்டு.  இத்தகைய கலாசாரங்களிலும் உணவு என்பதும், அதை தயாரிக்கும் முறையானதும் சடங்குகளை மையப்படுத்தியே வருகின்றன. உதாரணத்திற்கு யூத பாரம்பரியத்தில் குறிப்பிட்ட உணவானது (கோஷர்) ஜேவிஷ் விதிப்படி தேவைக்கு உரியதை மட்டும்தான் தேர்வுசெய்து தயாரிக்க வேண்டும் எனக் கட்டளையிடுகிறது.  மத்தியக் கிழக்கு மற்றும் இந்தியாவின் பகுதிகளில் வலது கை மட்டுமே உண்பதற்கு பயன்படுத்த வேண்டும். பல ஐரோப்பிய நாடுகளில் ஏழு வருடங்கள் மோசமான பாலினத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு சிற்றுண்டி செய்யும்போது கண்களை மூட வேண்டியது அவசியம்.

நிச்சயமாகச் சிறப்புச் சந்தர்ப்பங்களில் நமக்குச் சிறப்பு உணவு தேவைப்படுகிறது.  எனவே பெரும்பாலான கலாசாரங்கள் மிகச் சிறந்த, முக்கிய உணவு வகைகளை மிக முக்கியமான விடுமுறை நாட்களில் பராமரிக்கின்றன.  உதாரணமாக மொரிஷீயஸ் நாட்டில் தமிழ் இந்துக்கள் தைப்பூச காவடித் திருவிழாவின் முடிவில் ஏழு வகையான காய்கறிப் பதார்த்தங்களுடன் கூடிய உணவை பரிமாறிக் கொள்கின்றனர்.  கிரீஸ் குடும்பங்களில் குழுவாகக்கூடி ஓர் இளம் ஆட்டிறைச்சியை முழுதாக கம்பியில் செருகிச் சில இரகசியப் பொருட்களைச் சேர்த்து தீயில் வறுத்து, பரிமாறுகின்றனர்.  இவைகளை நம்மால் வெறும் சமையலாகப் பார்க்க முடியவில்லை. அதையும் தாண்டி இதில் மிகப் பெரிய உளவியலும் உள்ளது.

ஆராய்ச்சி முடிவுகளின்படி, ஓர் உணவிற்கு முன் ஒரு சடங்கைச் செய்வது உணவு அனுபவத்தை மேம்படுத்துவதாகவும், வெறும் வெற்று கேரட் துண்டுகள் கூட சுவையுடன் இருப்பதாகத் தோன்றும் என ஆய்வு தெரிவிக்கிறது.  மற்ற ஆய்வுகள் உணவுத் தயாரிப்பில் பங்கேற்கும்போது, அவர்கள் உணவை அதிகம் அனுபவிக்கிறார்கள் என்றும், உணவை தயாரிப்பதற்காக நேரத்தை செலவழித்து, உண்டு இன்னும் அதை அதிகமாகப் பாராட்டுகிறார்கள் என்றும், இது நல்ல உணவைத் தயாரித்தல் மற்றும் உண்ணுதல் அனுபவத்தை தருவதாகக் கூறுகிறது.

பகிர்தலில் அக்கறை காட்டுதல் : –

நமது குடும்ப விழாக்களிலும், நண்பர்களோடு கூடிய விடுமுறை நாள் விழாக்களிலும் பரிசுகளை வழங்குவதும், பெற்றுக் கொள்வதும் பொதுவான ஒன்றாகும்.  ஒரு சில பகுத்தறிவு முற்போக்குவாதிகள் இந்நடைமுறையை வளமான நோக்கத்திலும், சிலர் இது அர்த்தமற்றது, வீண் எனக் கருதலாம்.  ஆனால் இந்தப் பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. பல சமூகச் சடங்குகள் மற்றும் விழாக்களில் இந் நடைமுறை சமூக உறவுகளைப் பராமரிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பதாக மானுடவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இத்தகைய விழாக்களில் பரிசுப் பொருளாகவோ அல்லது பணமாகவோ பெற்று வழங்கும் இந்த அமைப்பானது மிகத் திறமையாகவும், துல்லியமாகவும் பராமரிக்கப்படுவதாகவும், தங்களுடைய பணம் மறு சுழற்சி செய்யப்படுவதாகவும், இத்தகைய பரிசுகளை வழங்குவதிலும், பெற்றுக் கொள்வதிலும் ஒரு திருப்தி ஏற்படுவதாக மக்கள் கூறுவதாகவும் மானுடவியலாளர்கள் கூறுகின்றனர்.

விழாக்கள் குடும்பத்தை வலுப்படுத்துகிறது : –

குடும்பத்தில் நடத்தப்படும் சடங்குகள் மற்றும் விழாக்கள் குடும்ப உறவுகளை பராமரித்து வலுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  உண்மையில் மிக தூரத்தில் நம்மிடமிருந்து விலகி வாழும் உறவுகள், நண்பர்கள் ஆகியோர் நடத்தப்படும் வழக்களுக்காக ஒன்று கூடும்போது அவர்களுக்கிடையே பிணைப்பும், பந்தமும் வலுவடைகிறது.  பசைபோல் ஒட்டி வைத்திருக்க உதவுகிறது.

சடங்கு மற்றும் விடுமுறைகால விழாக்களில் கலந்து கொள்வது என்பது, ஒரு சக்தி வாய்ந்த குழு உறுப்பினர் என்ற அடையாளத்தை தனக்குத் தருவதாகவும், தவிர, பல்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்ட குழுக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும்போது தனக்குத் தாராள மனநிலை உணர்வைத் தருவதாகவும் அமெரிக்காவின் கனக்டிகட் மானுடவியல் பேராசிரியர் டிமிட்ரிஸ் சைகலாடஸ் கூறுகிறார்.

இத்தகைய கொண்டாட்டங்கள் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம்.  குழுச் சடங்குகளில் பங்கேற்கும் பிள்ளைகள் சக குழந்தைகளுடன் மிக வலுவாக இணைகின்றனர்.  கூடுதலாக இவ்விழாக்களால் ஏற்படும் நேரிய எண்ணங்களால், குழந்தைகளும் அத்தகைய நேரிய நினைவுகளுனேயே தொடர்புபடுத்திக் கொள்வதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

குடும்ப விழாக்களில் நடைபெறும் உரையாடல்கள், அரசியல் வம்படிப் பேச்சுகள், சச்சரவுகள் கூட குடும்ப இணக்கத்திற்கான செய்முறையாகவே பார்க்கப்படுகிறது.  மாறாக ஒட்டுமொத்த அனுபவங்களை இது கெடுக்கச் சாத்தியமில்லை.  தவிரவும் கடந்த அனுபவங்களை நாம் மதிப்பீடு செய்யும்போது, சிறந்த தருணங்களையும், கடைசித் தருணங்களையும் நினைவுபடுத்துகிறோம்.  மாறாக எல்லாவற்றுக்கும் குறைவான கவனத்தையே செலுத்துகிறோம் என்று கூறுகிறார் நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர் கான்மேன்.

முடிவுரை :-

சங்க காலத்திலிருந்தே கொண்டாட்டம் என்பது நம் வாழ்வியலோடு இணைந்த ஒன்றாகும்.  குடும்பக் கொண்டாட்டங்களில் இருந்தே நமது நினைவுகளில் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாகவும், அக் கொண்டாட்டங்களின் வழியாக நல்ல உணவும், பெறக்கூடிய, வழங்கக் கூடிய பரிசுகளும் இப்படியாக நம் மனத்தில் பசுமையாகப் பதிந்து விடுகிறது.  எனவே கொண்டாட்டங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.  அந்தக் கொண்டாட்டங்களின் வழியாகக் குடும்பங்களின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். வாருங்கள் அடுத்த கொண்டாட்டத்திற்காக, அடுத்த விடுமுறை தினத்தை எதிர்பார்த்து காத்திருப்போம்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *