நடிகர் ஆர்.கே.யின் ’வாங்க சாப்பிடலாம்’ உணவகம்

0

Vaanga_saappidalaam

’ஹோட்டல் தொழில், புனிதமானது. அந்தப் புனிதமான தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் ஆர்கேவை வாழ்த்துகிறேன்’ என்றார் இயக்குநர் பாலா.

‘எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் ஆர்.கே. தற்போது பி வாசு இயக்கும் ‘புலிவேஷம்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஏற்கெனவே ‘வாங்க சாப்பிடலாம்’ என்ற பெயரில் உடற்பயிற்சிக் கூடம் இணைந்த உயர்தர ஹோட்டலைச் சென்னை தி.நகரில் நடத்தி வருகிறார்.

இதன் இரண்டாவது கிளை, சாலிக்கிராமம் கே.கே. சாலையில் 2010 செப்.12 அன்று காலை திறக்கப்பட்டது. இயக்குநர் பாலாவும், நடிகர் ஆர்யாவும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, குத்து விளக்கேற்றி இந்த புதிய கிளையைத் திறந்து வைத்தனர்.

பின்னர் இயக்குநர் பாலா நிருபர்களிடம் கூறுகையில், ’மற்றவர்களின் பசியாற்றும் ஹோட்டல் தொழில், மிகப் புனிதமானது. அந்தப் புனிதமான தொழிலை நண்பர் ஆர்.கே. செய்து வருகிறார். அவர் இந்தச் சென்னையில் மட்டுமல்லாது உலகம் முழுக்கக் கிளை திறக்க வாழ்த்துகிறேன்’ என்றார்.

ஆர்யா பேசுகையில், ’ஹோட்டல் தொழில் நடத்துவது சாதாரணமானதல்ல. எங்கள் குடும்பமும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளதால் எனக்கும் அந்தச் சிரமங்கள் பற்றித் தெரியும். இந்தத் துறையில் ஆர்.கே. மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.

விழாவில் பேசிய ஆர்.கே., ’உலகின் பல பகுதிகளில் நமது உணவு வகைகள் கிடைப்பதில்லை. தேடி அலைய வேண்டியுள்ளது. வெளிநாட்டுக்குப் போனால்தான் நமது உணவின் பெருமையே தெரிகிறது. அதனால்தான் இந்த ஹோட்டலுக்கே வாங்க சாப்பிடலாம் எனப் பெயர் வைத்தேன். சென்னை முழுக்க 15 கிளைகள் திறக்க வேண்டும் என்பது எனது ஆசை. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் திறக்கத் திட்டமிட்டுள்ளேன். இப்போதுதான் இரண்டாவது கிளையைத் திறந்துள்ளேன். எதிர்காலத்தில் இன்னும் நிறைய கிளைகளைத் திறக்கவிருக்கிறோம்’ என்றார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கருமாரி கந்தசாமி, இயக்குநர்கள் ராஜ்கபூர், டி.பி. கஜேந்திரன், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பாடலாசிரியர் நா. முத்துக்குமார், வசனகர்த்தா பிரபாகர், நடிகர்கள் செந்தில், மன்சூரலிகான், பவன், கராத்தே ராஜா உள்பட பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *