கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம், கரூர், இந்தியா

முனைவர் சுபாஷிணி

கருவூர், கரூர், வஞ்சி என அழைக்கப்படும் கரூர் நகரம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம் ஆகிய ஆறு வட்டங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டமாக கரூர் மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த கரூர் 1995ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.

தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சிறப்பினைக் கொண்ட நகரங்களில் கரூர் நகரமும் ஒன்று. கடந்த நூறாண்டில் கரூர் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும், அமராவதி நதிக்கரையில் கிடைத்த தொல்லியல் சான்றுகளும் தமிழகத்தின் பழம் பெரும் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் கண்டுபிடிப்புகளாக அமைந்துள்ளன. அது மட்டுமன்றி, தமிழகத்தோடு அன்றைய கிரேக்க, ரோமானியப் பேரரசு கொண்டிருந்த வணிகத் தொடர்புகளைத் துல்லியமாகச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டும் வகையிலும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி இன்றளவும் முழுமையாக தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நிலைத் தொடர்கிற அதே வேளை, இதுவரை கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகள் அளித்திருக்கும் தகவல்கள் தரும் செய்திகளான சங்ககாலம், மற்றும் அதன் தொடர்ச்சியான காலத்து வரலாற்றினை, நாம் புரிந்து கொள்ள உதவும் முக்கிய அளவு கோலாக இந்த ஆய்வு முடிவுகள் திகழ்வதை நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.

1
கரூர் நகரின் மையத்தில் ஒரு சாலையின் ஒரு பக்கத்தில் வரிசையாகக் கடைகள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தில் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் போது நமக்கு ஏற்படும் உணர்வு ஒரு கிராமத்துப் பலசரக்குக் கடைக்குள் நுழைவது போன்ற உணர்வினைத் தருவதாக இருக்கின்றது. அருங்காட்சியகத்தின் உள்ளே பாதுகாக்கப்படுகின்ற அரும்பொருட்களோ தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கானச் சான்றுகளாக அமைந்து நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றன. வரிசை வரிசையாகக் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும் சங்க காலத்தைய ரோமானியர்கள் தொடர்பினை வெளிப்படுத்தும் காசுகள், கரூரின் வீரர் மரபை வெளிப்படுத்தும் புலிக்குத்திக்கல் நடுகற்கள், பண்டைய தமிழர் மரபில் ஈமக்கிரியைச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி, ஓலைச்சுவடி நூல்கள் ஆகியன இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

2

தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்களுக்குக் கரூர் பகுதியின் மீது கவனம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது அமராவதி நதிக்கரையில் 1806ம் ஆண்டு வாக்கில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தில் அமைந்த பண்டைய ரோமானிய காசுகள் எனலாம். கிடைத்த குறுகிய காலத்திலேயே அவற்றில் பல காணாமல் போயின. அவற்றுள் ஒரு சில நாணயங்கள் மட்டும் அருங்காட்சியக அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டன. இப்படி சேகரித்துப் பாதுகாக்கப்பட்ட காசுகளை அறிஞர்கள் ஆராயத்தொடங்கியமைதான் இப்பகுதியில் சங்க காலத்தில் பண்டைய ரோமானிய அரசு கடல் வழி வணிகத்தை மேற்கொண்டிருந்தமையும், ரோமானியர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கியிருந்து வர்த்தக முயற்சிகளை மேற் கொண்ட செய்திகளையும் வெளிப்படுத்திய ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. தொடர்ச்சியாக கரூர் பகுதியில் பண்டைய ஆபரணங்களும் புராதனச் சின்னங்களும் மேலும் கிடைக்கவே, இப்பகுதி தொல்லியல் அறிஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் ஒரு பகுதியாக மாறியது. உலக வரைபடத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய நகரமாகவும் கரூர் நகரின் புகழ் உயர்ந்தது.

தொடர்ச்சியாக நிகழ்ந்த ஆய்வுகள் கரூர் நகரின் பண்டைய முக்கியத்துவம் பற்றிய ஆய்வுகளை ஆராய்வதாக அமைந்தன. சேர மன்னர்களின் செயல்பாடுகள், சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடும் இலக்கியச் செய்திகள் ஆகியன கரூர் நகரம் சேரப் பேரரசின் ஆட்சி காலத்தில் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு நகரமாகத் திகழ்ந்தமையை உறுதி செய்வதாக அமைந்தது. படிப்படியாக நிகழ்ந்த இலக்கிய, தொல்லியல்,புராதனச் சின்னங்களின் ஆய்வுகள் கரூர் நகரமே பண்டைய சோழப் பேரரசின் தலைநகரமாக ‘வஞ்சி’ என்ற பெயருடன் திகழ்ந்த நகரமே இந்தக் கரூர் என்ற செய்தியையும் உலகத்திற்கு வழங்கியது. வஞ்சி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நகரம் தாம் கரூர் என்பதில் ஆய்வாளர்களிடையே இன்னமும் கருத்து வேறுபாடுகள் நிலவுவது தொடர்கின்றது. ஆயினும், கரூர் சேர பேரரசு புகழோடு இருந்த காலத்தில் அதன் தலைநகரமாக விளங்கிய ஒரு நகரமே என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.

3
கல்வெட்டு ஆய்வாளர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் புகழூர் கல்வெட்டினை வாசித்து ஆய்வு செய்து அதனை வெளியிட்டார். சங்க காலத்தின் மூன்று கட்டங்களிலான சேரப் பேரரசு பற்றிய விளக்கங்களில் கரூர் என ஆவணங்களில் குறிப்பிடப்படும் பகுதி புகழூரிலிருந்து ஏறக்குறைய பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஒரு பகுதியே என்றும், சேரர்களின் தலைநகரம் கரூர் நகரமே என்றும் உறுதி படுத்துவதாக அமைந்தன அவரது ஆய்வு முடிவுகள். இது மட்டுமன்றி அன்றைய தமிழக தொல்லியல் துறையினரால் இப்பகுதியில் அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்பட்டு, கரூரின் வரலாற்று முக்கியத்துவத்தினை உலகுக்குச் சொல்லும் பல அரும்பொருட்கள் இந்த ஆய்வுகளின் போது அகழ்ந்தெடுக்கப்பட்டன. டாக்டர். நாகசாமியின் தலைமையில் 1974ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில், சேரப் பேரரசின் சின்னமும் ‘கொல்லிரும்புறை’ என்ற எழுத்தும் பொறித்த காசு கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாணயவியல் ஆய்வாளர் தினமலர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டெடுக்கப்பட்ட பல காசுகளில் மேலும் இரண்டு காசுகளில் முறையே ”மாக்கோட்டை”, ”கூட்டுவன் கோட்டை” என்ற தமிழ்ச்சொற்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேரப் பேரரசுகள் வெளியிட்ட காசுகள் இவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் மகுடம் வைப்பது போல அமைந்தது கரூர் நகரில் ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களின் கண்டுபிடிப்பான ஒரு மோதிரம். இந்த மோதிரம் 1991ம் ஆண்டு அமராவதி ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பும் அதனைத் தொடர்ந்து டாக்டர். நாகசாமியின் இந்த மோதிரம் பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரையும் அன்று வெளியிடப்பட்டபோது தொல்லியல் அகழ்வாய்வில் மட்டுமன்றி பெருமளவில் தமிழ் ஆய்வாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட வரலாற்றுச் செய்தியாக இது அமைந்தது. 15.6 கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் அது. முகப்புப் பகுதி 5.5 மிமீட்டர் அளவுடன் அமைந்தது. அந்த மோதிரத்தின் முகப்புப் பகுதியில் கலை அழகின் உச்சம் என வர்ணிக்கத்தக்க வகையில் அமைந்த மிதுனச் சின்னம், அதாவது ஒரு ஆணும்-பெண்ணும் அன்புடன் நளினமாக நிற்கும் வகையில் அமைந்த சின்னம் ஒன்று பொறிக்கப்பட்ட வகையில் இந்த மோதிரம் அமைக்கப்பட்டிருந்தது. அச்சிறிய மோதிரத்தில் இத்தகைய ஒரு நளினம் மேலோங்கிய படைப்பினைப் படைத்த தமிழக பொற்கொல்லர்களின் நுணுக்கமான கலைத்திறனுக்கு உதாரணமாக பாராட்டுக்களுக்குரிய வகையில் இந்த மோதிரம் உருவாக்கப்பட்டிருந்தது. ஐயத்திற்கு இடமின்றி கி.பி.1 நூற்றாண்டின் சேரப் பேரரசின் அதிகாரப்பூர்வ அரச மோதிரம் இது என உறுதி செய்யப்பட்டது .

4

இந்த மோதிரத்தின் மேலுள்ள சங்க கால வாழ்வியலின் அடிப்படையான காதல் அன்பினைக் குறிக்கும் இந்தச் சின்னமே தமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ சின்னமாக இந்த அமைப்பு உருவான 2001ம் ஆண்டு முதல் திகழ்கின்றது. அன்பினை வலியுறுத்தும் மாண்பினை வாழ்வியல் நெறியாகக் கொண்டிருந்த பண்டைய தமிழரின் மரபினையும் மாண்பினையும் பிரதிநிதிக்க இச்சின்னத்தை விட வேறெதுவும் பொருந்தாது என்பது அன்று எனக்கும் பேரா.நா.கன்ணன் அவர்களுக்கும் மனதில் எழுந்த எண்ணமாக அமைந்ததன் விளைவே இந்த முத்திரை தமிழ் மரபு அறக்கட்டளையின் சின்னமாக அமையக் காரணமாகியது.

தமிழகத்தின் பல பகுதிகளில் வீரர்களின் வீரச்செயலைப் பிரதிபலிக்கும் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதை அவ்வப்போது ஊடகங்களின் வழி அறிகின்றோம். கரூர் நகரில் கண்டெடுக்கப்பட்ட, கரூருக்குப் புகழ்ச்சேர்க்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டு, அவை இந்தக் கருவூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. கரூரில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.பி.8ம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட இரண்டு நடுகற்களில் ஒரு நடுகல் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டும், ஒரு நடுகல் வட்டெழுத்துப் பொறித்த வகையிலும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுக்களே கரூர் நகரம் வஞ்சி என்றும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அழைக்கப்பட்டது என்பதை உறுதிசெய்வதாகவும் அமைகின்றன.

கரூரில் இதுவரை அடையாளம் காணப்பட்ட வரலாற்று அரும்பொருட்கள் கூறும் தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகள் ஏராளம். இதுவரை கண்டெடுக்கப்படாமல் கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் காணப்படும் தொல்லியல் புராதனச் சின்னங்களோ ஏராளம் ஏராளம். இவற்றை எப்போது நாம் அடையாளம் காணப்போகின்றோம்? இவற்றைக் கண்டெடுத்து எப்போது நாம் அவற்றை ஆய்வுக்குட்படுத்தி தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகளையும் வாழ்வியலையும் உலகுக்கு எடுத்துரைக்கப் போகின்றோம்? இவற்றிற்கும் மேலாக, இன்று கரூர் நகரில் இருக்கும் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகத்தைப் புதுப்பித்து அதில் பாதுகாக்கப்படும் அரும்பொருட்களை மிகச் சிறப்பான முறையில் உலகுக்குக் காட்சிப்படுத்தி பெருமை கொள்ளப் போகின்றோம்?

5

இவையெல்லாம் இன்று நம் முன் நிற்கும் மிக முக்கியமான கேள்விகள் அல்லவா?

​துணை நூல்:
“Roman Karur”, Dr.R.Nagasamy, 1995​

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *