டிராபிக் ராமசாமி (அகவை 82) (கே. ஆர். ராமசாமி) ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச்சேவகர். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்.

டிராபிக் ராமசாமி ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே. சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது. சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அமல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி.

1

ராமசாமி தொடர்ந்த வழக்குகளால் கோபம் கொண்ட எதிர்த்தரப்பினரால் பலமுறை தாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது பணிகளை அவர் கைவிட்டதில்லை. 2000 ஆம் ஆண்டில் இவர் வழக்கறிஞர்களுக்கு எதிராகப் போட்ட வழக்குக்காக வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார்.
2002 ல் மீன் விற்பனையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்..இவர் மீது பல்வேறு பொய்வேறு வழக்குகள் காவல்துறையினரால் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

10 மார்ச் 2015ஆம் நாளன்று, சென்னை, புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு சாலை அருகே நின்று பேட்டி அளிக்கும் போது, வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வேப்பேரி காவல் நிலையத்தில் வீரமணி கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் டிராபிக் ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

வயது முதிர்வு காரணமாக தற்போது இவர் குழப்பமான மனநிலையில் சில போரட்டங்களை அறிவித்து விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். சில சமயம் எல்லை மீறி போராட்டங்களை அறிவிப்பதும் உண்டு. ஆனால் “எங்கே எவனுக்கு எது நடந்தால் எனக்கென்ன” என்ற சமூக அக்கறையற்ற சமுதாயத்தில் இவரை போன்ற மக்கள் நலத்தொண்டர்கள் அவசியம் எனும் நோக்கில் இந்த பெரியவருக்கு இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை உவகை கொள்கிறது

(தகவல் உதவி: நன்றி தமிழ் விக்கிபிடியா)

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *