பாலஸ்தீனத்தில் மோதி எதைச் சாதிக்கப் போகிறார்?

0

நாகேஸ்வரி அண்ணாமலை

சென்ற மாதம் இஸ்ரேல் பிரதம மந்திரி இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது வழக்கத்திற்கு மாறாக இந்தியப் பிரதமர் விமானநிலையத்திற்கே சென்று நேதன்யாஹுவை வரவேற்றார்.  அதன் பிறகும் இந்தியாவின் பல இடங்களுக்கும் அவரைக் கூட்டிச் சென்று, அவர் இந்தியாவில் இருந்த அத்தனை நாட்களும் அவர் கூடவே இருந்து அவர் தன்னுடைய soul-mate என்று கூறாமல் கூறினார்.  இஸ்ரேலின் தொழிலதிபர்களிடமிருந்து பல முதலீடுகளைப் பெற்ற்றதாகப் பீற்றிக்கொண்டார்.  இஸ்ரேலிடமிருந்து பல தொழில் நுட்பங்களை இந்தியா பெற்றிருப்பதாகவும் கூறினார்.

1948-இஸ்ரேல் உருவாக்கப்பட்டுப் பல வருடங்கள் ஆன பிறகும் இந்தியா இஸ்ரேலை ஆதரிக்கவில்லை; இஸ்ரேலோடு தூதரக உறவுகள்கூட வைத்துக்கொள்ளவில்லை.  இந்தியர்கள் இஸ்ரேலுக்குப் போவதற்கே தடை விதிக்கப்பட்டிருந்தது.  1992-இல்தான் இந்தியா இஸ்ரேலோடு தூதரகத் தொடர்புகளை ஆரம்பித்தது.  அதெல்லாம் பழங்கதையாகவே இருக்கட்டும்.  இப்போது இஸ்ரேலோடு உறவு வைத்துக்கொள்வதால் இந்தியாவிற்கு நன்மைகள் கிடைக்குமென்றால் அதைச் செய்வதில் தவறு ஏதுமில்லை.

ஆனால் இப்போது மோதி பாலஸ்தீனத் தலைநகர் ராமல்லாவிற்குச் சென்று பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அப்பாஸையும் சந்தித்திருக்கிறார். அதற்கு மேல் சுதந்திர பாலஸ்தீனம் பிறக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறார்.  எந்த ஆதாரத்தில் இந்த நம்பிக்கையை பாலஸ்தீனர்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும், அதுவும் அந்த நாடு யூதர்களின் புண்ணிய பூமியான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்று ஹெர்ஸல் என்ற யூதரொருவர் அறைகூவியதின் விளைவக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே யூதர்கள் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்தனர்.  அங்கு வாழ்ந்துவந்த அரேபியர்களின் நிலங்களை அதிக விலைகொடுத்து வாங்கித் தங்கள் உடைமை ஆக்கிக்கொண்டனர்.  வெளியிலிருந்து தாங்கள் கொண்டுவந்த பணபலம், தொழில்நுட்பம் ஆகியவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொண்டனர்.  அப்பாவி அரேபியர்கள் விழித்துக்கொண்டு இதை நிறுத்துவதற்குள் யூதர்கள் பாலஸ்தீனத்தில் தங்கள் பலத்தைப் பெருக்கிக்கொண்டு தங்களை அங்கு நிலைநாட்டிக்கொண்டனர்.  தங்களது மண்ணில் யூதர்கள் பலம் பெறுவதை உணர்ந்த பாலஸ்தீனர்கள் யூதர்களோடு மோதத் தொடங்கினர்.

முதல் உலக யுத்தம் முடிந்து ஆட்டோமான் பேரரசு தோல்வியடைந்ததால் அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.  ஆட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய பாலஸ்தீனம் போரில் வெற்றிபெற்ற நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் ஆளுகையின் கீழ் வந்தது.  அப்போதுதான் வெளியிலிருந்து வந்த யூதர்களுக்கும் (யூதர்கள் தங்கள் புண்ணிய பூமி என்று சொந்தம் கொண்டாடிய) பாலஸ்தீனத்திலேயே பதின்மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்துவந்த அரேபியர்களுக்கும் இடையே நடந்த மோதல்களால் பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே பிரிக்க பிரிட்டனின் முடிவுசெய்தது.  வெளியிலிருந்து வந்த யூதர்களுக்கு பிரிட்டனின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வது எளிதாக இருந்தது.  ஏனெனில் அவர்கள் கையில் இருந்த நிலமெல்லாம் அரேபியர்களிடமிருந்து வாங்கியது.  அரேபியர்களுக்கோ தங்கள் நிலங்களை பிரிட்டன் யூதர்களுக்குக் பங்கு போட்டுக் கொடுக்கிறதே என்று கோபம்.  அப்போதைக்கு பிரிட்டனின் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாவிட்டாலும் பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் திட்டத்தைப் பத்து வருடங்களுக்குப் பிறகு – பிரிட்டன் பாலஸ்தீனப் பொறுப்பை ஐ.நா.விடம் ஒப்படைக்க முடிவுசெய்ததும் – ஐ.நா. நிறைவேற்ற முடிவுசெய்தது.  பிரிட்டன் யூதர்களுக்குக் கொடுப்பதாக இருந்த நிலப்பகுதியைவிட ஐ.நா. அதிக இடப்பகுதியை யூதர்களுக்குக் கொடுக்க முடிவுசெய்தது.  இந்த முடிவை வெகுவாக ஆதரித்த யூதர்கள் தங்களுக்கு ஐ.நா. கொடுத்த இடங்களை இஸ்ரேல் என்று பிரகடனம் செய்துகொண்டு இஸ்ரெலை உருவாக்கியது.  ஐ.நா.வின் இந்த முடிவை ஏற்காத அரேபியர்கள் ஐ.நா.வால் பாலஸ்தீனத்தில் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட இடத்தில் தங்களுடைய நாட்டை உருவாக்கிக்கொள்ளாமல் ஐ.நா.வின் அந்த முடிவை எதிர்க்கத் திட்டமிட்டனர்.

யூதர்கள் இஸ்ரேலை ஸ்தாபித்துக்கொண்டது மட்டுமன்றி ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களையும் இன்றுவரை தங்கள் பணபலத்தாலும் படைபலத்தாலும் கைப்பற்றி வருகின்றனர்.  அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளிக்கும் ராணுவ, பொருளாதார உதவிகளே இஸ்ரேல் இந்தக் காரியங்களைச் செய்வதற்கு உதவிபுரிகின்றன.  அதுமட்டுமின்றி இஸ்ரேல் பாலஸ்தீனர்களுடைய இடங்களில் வெளியிலிருந்து வரும் யூதர்களுக்குத் தங்குவதற்கு குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்கிறார்கள்.  பாலஸ்தீனர்களுக்காகக் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் இம்மாதிரி இடங்களை எடுத்துக்கொண்டே போவதால் பாலஸ்தீனர்களுக்கு இப்போது வெஸ்ட் பேங்கில் தொடர்ச்சியாக நிலங்கள் இல்லை.

2015-இல் நடைபெற்ற இஸ்ரேல் தேர்தலில் போட்டியிட்ட நேதன்யாஹு தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு அவருக்கு வாக்காளர்களிடையே ஆதரவு குறைந்துவருவது தெரிந்தவுடன் தான் பிரதம மந்திரியாகத் தேர்தெடுக்கப்பட்டால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற ஒரு நாடு மட்டும்தான் இருக்கும் என்றும் பாலஸ்தீனத்தில் இரு நாடுகள் என்ற திட்டம் கைவிடப்பட்டது என்றும் கூற ஆரம்பித்தார்.  உடனே அவருக்கு ஆதரவு அதிகரித்து அவர் தேர்தலிலும் ஜெயித்து இஸ்ரேல் பிரதம மந்திரியானார்.  தேர்தல் முடிந்து சில மாதங்கள் ஆன பிறகு உலக நாடுகளின் நெருக்கடியால் மறுபடி பாலஸ்தீனத்தில் இரு நாடுகள் என்ற பேச்சை ஆரம்பித்திருக்கிறார்.  நேரத்திற்குத் தகுந்த மாதிரி பேசும் நேதன்யாஹுவை எப்படி நம்புவது?

1995-இல் ஏற்பட்ட ஆஸ்லோ ஒப்பந்தப்படி கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனர்களின் தலைநகரமாகவும் வெஸ்ட் பேங்க், காஸா ஆகிய பகுதிகள் பலஸ்தீனத்தின் பகுதிகளாகவும் விளங்கும் என்றும் முடிவாகியது.  இப்போது ஆஸ்லோ ஒப்பந்தத்தை நிறைவேற்றும் எந்த சாத்தியக்கூறுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.  மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொண்டுவந்த அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப் திடீரென்று ஜெருசலேம் இஸ்ரேலுக்குச் சொந்தம் என்பதைக் குறிக்க அமெரிக்கத் தூதரகத்தை டெல்விவிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறார். அப்படியானால் பாலஸ்தீனர்களுக்குச் சேர வேண்டிய கிழக்கு ஜெருசலேம் என்னவாயிற்று?

பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் யூதர்களுக்காகக் குடியிருப்புகள் அமைத்த பிறகு இங்கொன்றும் அங்கொன்றும்மாக நிலங்கள் இருக்கின்றன.  அவற்றையும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குக் கொடுப்பதாக இல்லை.  சொந்த இடங்களில் பாலஸ்தீன நாடு என்ற ஒன்று உருவானாலும் ராணுவம் இல்லாத நாடாக இருக்கும் என்று ஒரு முறை நேதன்யாஹு கூறினார்.  ராணுவம் இல்லாத, துண்டு துண்டாக இருக்கும் நிலங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்று உதட்டளவில் நேதன்யாஹு கூறிவருகிறார்.  இந்நிலையில் சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாகும் என்று எந்த அடிப்படையில் மோதி பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் முகம்மது அப்பாஸுக்கு

உறுதி கூறிவிட்டு வந்திருக்கிறார்?

பல அமெரிக்க ஜனாதிபதிகள், அரசியல் வல்லுநர்கள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்க – பாலஸ்தீனர்களின் நன்மையைக் கருதி இவர்கள் இந்த செயலில் ஈடுபடவில்லை;  சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் என்ற நப்பாசையில்தான் இவ்வாறு முயன்றார்கள் – முடியாமல் திணறிய இந்தப் பிரச்சினைக்கு மோதியால தீர்வு கண்டுபிடித்துவிட முடியுமா?  கண்டுபிடித்துவிடுவதாகக் கூறும் இவர் எப்படி அதைச் செய்யப் போகிறார் என்று கூறவில்லை.  மோதி செய்யும் மோடிமஸ்தான் வேலைகள் இந்தியாவில் வேண்டுமானால் எடுபடலாம்.  ஆனால் சர்வதேச அரங்கில் எடுபடாது.

நாகேஸ்வரி அண்ணாமலை

  https://www.facebook.com/a.nageswari

  https://twitter.com/a_nageswari

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *