பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

28109608_1566357453418448_592021747_n
சாய் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.02.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

15 thoughts on “படக்கவிதைப் போட்டி (149)

  1. ஆனந்த வாசல்?
    ???????
    ஆகாயத்த அண்ணாந்து பாத்து
    அதிசயிக்கும் செல்லமே!!!
    அது தொட்டுவிடுந்தூரந்தான்!
    ஆழ்ந்த சிந்தனையில்
    அமிழ்ந்திருக்கும் ஆரணங்கே!!
    கள்ளிப்பாலு..வரதட்சணை
    கட்டையில போயாச்சு!!!
    பொண்ணோ..ஆணோ…
    போதும் ஒண்ணுன்னு..
    புரிஞ்சுக்கிறகாலம்வந்தாச்சு!
    சந்திராயன் ஏறி நிலவுக்கு
    சுற்றுலா போகலாமா??
    மங்கள்யானில் பயணித்து
    செவ்வாய்தோசம் கழிக்கலாமா?
    மங்கையரின் பேராண்மை
    கங்கையைப்போல் பிரவாகித்து
    எங்கும் பிரகாசிக்கும்
    இந்த நூற்றாண்டில் உதித்து
    மந்தகாசப் புன்னகையில்
    எதிர்கால யோசனையோ??
    துணிவையே துணையாக்கி
    துயரங்களை உரமாக்கி
    துவளாமல் நீ வளர்ந்து
    தூணாவாய் உலகத்துக்கு!!
    ????????????
    ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி
    பவானி..ஈரோடு…
    9442637264…
    ????????????

    ,

  2. ஆற்றலென்றனை பால சக்தி!

    காந்தப் பார்வையில் ஆகாச கோசமோ
    காந்தள் பிடியில் பிரிந்த வஞ்சுருளோ
    மோந்தா மூச்சில் எதிர்விசைச் சாடலோ
    ஏந்தாப் புதிர் விடுக்கும் செந்தாள் ஊசலோ
    அந்தாரத்திலெழும் மந்தார மாயத்தால்
    சாந்தாச் சிமிழியில் புலவாத பேச்சோ
    சேந்தாவடுக்கில் வெளிநிலை விளக்கமோ
    சிந்தாச்சிந்தையே ஆற்றலென்றனை பால சக்தி!

  3. அவ்வைமகள்…..சினிமாவில் பாட்டெழுத முயற்சிக்கும் நான்….உம்…தமிழ்மொழியில் கிறுகிறுத்தேன்!!(ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)

  4. சிந்தித்து தெளிவாய் பாப்பா…!
    ********************************

    அண்ணார்ந்துப் பார்த்து அதிசயிக்க
    ஆயிரம் உண்டிங்கு பாப்பா…

    ஒளியை உமிழும் கதிரவன்
    உலகுக்கே ஆதாரம் பாப்பா…

    முகிலில் உறைந்து மறைந்த
    மழைத்துளி அதிசயம் பாப்பா…

    வெள்ளொளிச் சிதறல் வானவில்
    வானின் அதிசயம் பாப்பா…

    எல்லையேயின்றி நீளும் பெருவெளி
    எத்தனை அதிசயம் பாப்பா…

    அங்கு அந்தரத்திலிருக்கும் கோள்கள்
    அனைத்தும் அதிசயம் பாப்பா…

    மனதின் சிறகுகள் விரிந்தால்
    மலையும் மடுவாகும் பாப்பா…

    மின்னிடும் விண்மீன் கூட்டம்!
    தண்ணொளி வழங்கிடும் நிலவு!
    தனலாய்க் கொதிக்கும் ஆதவன்!
    பளிச்சென வெட்டும் மின்னல்!
    பொழிந்திடும் தூய மழைத்துளி! இன்னும் 
    எத்தனை! எத்தனை! எத்தனை!
    எத்தனை அதிசயம் இயற்கையில்!
    இவையனைத்துக்கும் காரணம் யாதென 
    சிந்தித்து தெளிவாய் பாப்பா…!

  5. @அவ்வை மகள் Madam, செய்யுள் நடையில் இருக்கும் தங்களின் கவிதை எனக்கு பொருள் விளங்கிக்கொள்ள கடினமாக உள்ளது. விளக்கம் தந்தால் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  6. வண்ணமகள் வடிவுகண்டு வானவில்லும் நிமிரும்
    வானம்கூட கீழிறங்கி வணக்கம்சொல்லி சிரிக்கும்
    கூனல்பிறை நெற்றிகண்டு நிலவுகூட சிலிர்க்கும்
    குழந்தையிவள் நடைகண்டு கோலமயில் வெட்கும்!

    கன்னங்குழி சிரிப்பினிலே கவிதைகளும் விளையும்
    காலையிளங் கதிர்போல கண்கள்கூட ஒளிரும்
    பிஞ்சுமகள் ஸ்பரிசத்தில் பிரளயங்கள் அடங்கும்
    பஞ்சுநிகர் மெல்லடியில் பாவங்கள் கரையும்!

    குழலோடு யாழொலியும் கூடி நின்று ஒலிக்கும்
    குழந்தையிவள் மழலையிலே இசையரங்கு நடக்கும்
    குட்டிமகள் அணைப்பினிலே கோடைகூட குளிரும்
    குற்றால சாரலென கொஞ்சும் மொழி பேசும்!

    எழுந்திவள் நடக்கையிலே என்நாடு உயரும்
    எட்டெட்டுத் திசையெங்கும் என்தமிழும் மிளிரும்
    அழகியிவள் கைகளாலேஅற்புதங்கள் நிகழும்
    அனைவரையும் ஒன்றாக்கி அகிலத்தை வெல்லும்!

  7. பெண் தெய்வம்::::::::::::::::: வானத்து நிலவை ரசிக்கின்றதோ!
    இந்த அழகுச் சின்ன நிலா!
    அழகுக் கண்ணம்மா உன்னை நிலா என நினைத்து!
    நட்சத்திரக் கூட்டம் பூமிக்கு வந்து விடப் போகிறது!
    ஆசைக் கண்ணம்மா! வானத்து நிலா, உன் அழகில் நாணி!
    ஓடி ஒளிந்து கொள்ளப் போகிறது!
    சின்னக் கண்ணம்மா! உன் முகத்தை மலரென நினைத்து!
    வண்டுகள் தேனெடுக்க வந்து விடப் போகிறது!
    அது சரி! நீ என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்!
    காசுக்கு கல்வியை விற்கும் நிலையை நினைத்தாயோ!
    தமிழ் வழிக் கல்வியை புறக்கணிப்பதை நினைத்தாயோ!
    ஓடி விளையாட மறந்த பிள்ளைகளை நினைத்தாயோ!
    ஆண், பெண் அனைவரும் அலை பேசிக்கு அடிமையானதை
    நினைத்தாயோ!
    தாத்தா, பாட்டிக்கு, முதியோர் இல்லம், நிரந்தரமானதை
    நினைத்தாயோ!
    அனைத்தும் மாறும் மயங்காதே!
    நல்லதே நடக்கும் கலங்காதே!
    நாளைய உலகம் உங்கள் கையில்!
    ஆண் உயர்வு பெறுவது பெண்ணாலே!
    நல்லது நடப்பது பெண்ணாலே!
    கருவில் சுமப்பது பெண் தானே!
    பெற்றுக் கொடுப்பது பெண் தானே!
    தாயாய்,தமக்கையாய், தங்கையாய்!
    மனைவியாய், தோழியாய், மகளாய்!
    பல உருவெடுத்து, உலகைக் காக்கும்!
    தெய்வமும் பெண் தானே!

  8. குழந்தையின் கேள்வி…

    கள்ளிப் பாலுக்கும்
    கழனி நெல்லுக்கும்,
    கடை மாத்திரைக்கும்
    தப்பிப் பிறந்துவிட்டோம்..

    பிஞ்சென்றும் பாராத
    வஞ்சகரின்
    காமக் கண்களில் படாமல்
    கவனமாய் வளரவேண்டும்..

    பாகுபாட்டுடனே
    கிடைக்கும் கல்வியிலும்,
    பணியினிலும்
    கிடைப்பதில்லை பாதுகாப்பு..

    தடைகள் மிக்கக்
    காதல் வாழ்வைக் கடந்து,
    காலடி வைக்கும்
    மணவாழ்விலும்
    மலைபோல் தடைகள்-
    மாமியார்,
    மண்ணெண்ணெயென்று பல..

    பெரும்பாடுபட்டு
    பிள்ளைகளை வளர்த்துவிட்டு,
    பின்னாளில்
    போவோமோ முதியோர் இல்லம்..

    இப்படி இருக்குது
    பல கேள்வி எம்போலப்
    பெண்கள் வாழ்வினிலே..

    இதற்கென்ன பதில்,
    இறைவா நீசொல்
    இப்போதே…!

    -செண்பக ஜெகதீசன்…

  9. வல்லமை படக்கவிதைப் போட்டியில் இது 149 கவிதைப்போட்டி, இதுவரை இதற்கு முன் யாரும் தாலாட்டுப் பாடியதாக என் நினைவில் இல்லை..எனவே கவிதைக் குழந்தைக்கு என் தாலாட்டு இதோ..

    தாலாட்டு..!
    ==========

    மங்கல வேளையில்நீ வந்து பிறந்தாய்
    ………..மாங்கல் யத்துக்குக் கிடைத்த பரிசாக
    மங்காத செல்வத்தையும் கொடுப் பாய்
    ………..மண்ணை யாள வந்தாயோ தாலேலோ.!

    மங்குலை யொத்த கருங் குழலொடும்
    ……….. முகையவிழ் மலர் போல் சிரிப்பொடும்
    செங்கனி வாய்ச் சிவந்த இதழொடும்
    ………..சிரிக்கு மென் செல்லமே கண்ணுறங்கு.!

    ஐயமில் வளர்ந்து நாளைநீ வீட்டையும்
    ………..ஆளப் போகும் முத்தே முத்தாரமே
    வையகமே மாதரால் சுகம் பெறுமாம்
    ………..பொய்யிலா நிலை யுறுவாய் தாலேலே.!

    பாராய் எனை…உனைநான் புகழ்வேன்
    ………..பாங்குடன் உனைத் தாலாட் டுவேன்.!
    ஆராயென் மனதை வளைய வருவாய்
    ……….ஆர் கண்ணும்படு முன்நீ கண்ணுறங்கு.!

    விரும் பியே நானுனைப் பாடுவேன்
    ……….விரலால் தூளி யசைத்து அயர்ந்தேன்
    துரும்பாவேன் நீயும் தூங்கவிலை யெனின்
    ……….சோதியே சுகமாய் நீ கண்ணுறங்கு.!

    அம்மா வெனும் மழலைச் சொல்லால்
    ……….அனைத் தையும் நானுடன் மறப்பேன்
    சும்மா நானினி இருப்பேனோ என்
    ……….சுகமானது சூரியன் போலுதய மாகும்.!

  10. அண்ணாந்து பார்க்கும் அழகுப் பெண்ணே!

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்டு
    பாரதி காட்டிய புதுமைப் பெண்ணாய்
    பாரினில் வாழ பழகு இப்போதே.

    பிணைநேர் மடநோக்கும் நாணும் உனக்கு
    அணியல்ல அவை பிணிகள்
    ‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்‘
    என்றுரைத்த பாரதியின் இலட்சியப் பெண் நீயன்றோ!

    புலி விரட்ட முறமெடுத்தாள் அக்காலத் தமிழச்சி
    பகை விரட்டப் புலியானாள் தற்காலத் தமிழச்சி.
    அந்த வரலாற்றின் அடிச்சுவட்டில் பூத்தவள் நீ –உன்
    சொந்த வரலாற்றைப் பொன்னெழுத்திற் பொறி.

    காற்றிலேறு விண்ணைச்சாடு ககனமெங்கும் தாவித்திரிந்து
    ஆற்றல் மிக்குற அண்டமளந்து
    அறிவின் திருவாய் அவனியில் மிளிர்

    ஆழக்கடலின் அடிவரை சென்று வா
    அகிலத்திருக்கும் மலைமுடிகளிலே
    ஏறிச் சென்று இயற்கையை அளந்திடு
    இருக்கும் அனைத்திலும் உன்தடம் பதித்திடு

    புதிய கலைகள் பூத நுட்ப
    விதிகள் கூறும் வேதியல், இயற்பியல்
    எதிலும் சளையாதுன்றன் திறனை
    எடுத்துக்காட்டி எங்கும் வியாபி.

  11. அன்பு செந்தில்குமார் ந(வ)ல்ல வினா எழுப்பினீர்
    நன்று.
    அவ்வையும் நக்கீரருமாய் என்னைப்பார்த்தீரா – தெரியவில்லை.
    மகிழ்வே
    நான் செய்யுள் எழுதும் செந்தமிழ்ப்புலமை கொண்டவளில்லை.
    தமிழை, பள்ளியில் ஒரு மொழிப் பாடமாகப் பயின்றேன்.
    தமிழை முதன்மைப்பாடமாக எடுத்து, பட்டங்கள் பெற்றவளில்லை. தமிழ் இலக்கணத்தில் பாண்டித்தியம் இல்லை.
    தமிழ் என் தாய் மொழி – நான் பேசும் மொழி – என் மக்கள் பேசும் மொழி எனும் நல்ல பரிச்சயமும், பழகுதழலும், பயிற்சியும் உண்டு அவ்வளவே.
    மீத்த சிறு பொழுதினிலே, தமிழ் எழுத்துக்கு அவ்வப்போது வந்து போகிறேன்.
    இது என் இப்போதைய நிலவரம்.
    என் சிற்றறிவுக்கு எட்டியவாக்கில் இக்கவிதை எழுதுமாறு இப்படம் கண்டவுடன் – என்னுள் எழுந்த எண்ணஓட்டடத்தை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
    அன்புடனும் உண்மையுடனும்
    அவ்வைமகள்
    =================================

    போட்டிக்குத்தரப்பட்டிருக்கும் இப்பெண்குழந்தையின் படம் அண்ணாந்த நிலை – இயங்குதத்துவத்தை விளக்குவதாக நான்கண்டேன் – இது எனது முதற் பார்வை -அதுவே இக்கவிதைக்குக் கருவாகியது.
    மீண்டும் இப்படத்தைப் பார்க்கும்போது இன்னபிற கருமூலங்களும் கிடைத்தன – அவற்றை நான் இங்கே பதிவு செய்யவில்லை. முதற்கரு என்பது மரியாதைக்குரியது; அதன் மதிப்பு மிக அதிகம் என்பது என் கருத்து.

    அண்ணாந்து பார்ப்பது நமக்கு வாடிக்கையானது என்றாலும் நம் அன்றாட வாழ்வில் நொடிக்கொரு, துளிக்கொரு, மணிக்கொரு என்று அடிக்கடி நிகழ்வதன்று அண்ணாந்து பார்ப்பது.
    இடம், பொருள், ஏவல், என ஏதோ காரணந்தொட்டு மட்டுமே அது அரிதாய் நிகழ்வது.
    இவ்வாறு ஏதோ காரணத்தால் அண்ணாந்து பார்க்கும் தருணம் வந்தால் கீழ்மட்டங்களைக் காட்டிலும் ஒசக்கக்காட்சிகள் நம்மைக் கூடுதலான விசாலத்ததுடன் பார்க்கவைக்கும்; அப்போது பல விஷயங்கள் நம் கண்புலத்தில் விழும். அவை நம்மை, பரவசப்பட வைக்கும், கிறுகிறுக்கவைக்கும், பலவித எண்ணோட்டங்களை நம்முள் எழுப்பும். ஆக, அண்ணாந்து பார்ப்பதென்பது ஒரு தனித்துவப் பார்வை – பிரம்மாண்டப் பார்வை எனலாம்.

    அண்ணாந்து பார்த்த நிலையில், இந்தப்பிரமாண்டத்தில் இத்தனையா என்று வியப்பில் ஒருவீச்சில் நம் கண்கள் அனைத்தையும் ஒருசேரப் பார்த்த நிலையில், அவை ஒவ்வொன்றன் மீதும் நம் கவனம் துரித அலைவரிசையில் தாவிச்செல்லும். தொடர்ந்து, காண்பவற்றையாவும் மனம் துரிதமாய் எடை போட அவையவையாவன என்று கணப்பொழுதில் அடையாளம் கண்டுகொள்வோம் – அல்லது இது எதுவாயிருக்குமென மௌனமாய் நமக்குள்ளேயே வினாத்தொடர் கிளப்புவோம் – இது அண்ணாந்து பார்க்கும்போது பொதுவாய் நிகழ்வது.

    ஆனால் அண்ணாந்த நிலையில் நீங்கள் ஏதோ ஒரு செயல் நிகழ்த்தவேண்டுமெனில் -(எடுத்துக்காட்டாக, பட்டம் விடுதல்,தொறடு கொண்டு காய் பறித்தல், உறியடித்தல், மின்கம்பத்தில் ஏறி பழுதுபார்த்தல்) – முழுமொத்த ஒருமித்த கவனம் தேவை – பார்வையில் விழும் பிற அத்தனையையும் – இது என் இலக்கு அல்ல என்று ஒதுக்கும் திறன் வேண்டும் – இதுதான் என் இலக்கு – இதனை நான் சேதாரமேதுமின்றி அடைய வேண்டும் – அதனை நான் அடைய என்னசெய்வது இத்தருணத்தில் என கணநேரத்துல்லியம் வேண்டும். மிகத்துல்லிய சலனம் வேண்டும் – சரியான கணத்திலே மிகச்சரியான விசையில் பளீரென இயங்கவேண்டும்.

    அப்போது நீந்கள் எங்கு எதன்மீது இருக்கிறீர்கள், அல்லது நிற்கிறீர்கள். அங்கிருந்தபடி எவ்வளவு தூரம் கழுத்தைவளைத்து அண்ணாக்க முடியும், அவ்வாறு அண்ணாக்கும் போது, உங்கள் பாதம் அல்லது உடல் பிரண்டு, நீங்கள் பின்வாகாய் மடேரென விழுந்து மண்டையை உடைத்துக்கொள்ளலாம் என ஏதோதோ எச்சரிக்கை எண்ணங்கள் மனதுள் ஒலிக்கும்.

    அதேபோல, நீங்கள் மேலே உள்ள உங்கள் இலக்கை அசைக்கும்போது, இன்னபிற அசைவுகளையம் நீங்கள் எழுப்புவது நேரிடும் – அப்போது – வேண்டாதவை மேலிருந்து கீழே இறங்கும் – சரியும் – விழும்; அவை உம்மை நெருங்கலாம் அல்லது உங்கள் மீது படியலாம் – நீங்கள் அவற்றையெல்லாம் எதிர்விசை தந்து ஒதுக்க வேண்டும். உங்கள் இலக்கு – இந்தத் தூசிகளோ அல்லது பிற கண்ணறாவிகளோ அல்லவே!

    ஆக, கீழ்மட்டத்தில் இருந்து அண்ணாந்த உயரத்தில் ஒரு வினை புரிதல் அல்லது இயக்கத்தை நிகழ்த்துவது என்பது அசாதாரணமானது.

    ========================
    சரி, கவிதைக்கு வருவோம்

    காந்தப் பார்வை – இமைக்காமல் இலக்கைத் தீண்டி நிக்கின்ற பார்வை; ஆகாச கோசம் – உயரத்தில் இருக்கிற பல மூலங்கள்.
    காந்தள் பிடி – காந்தள் மலரிதழ்கள் – பார்ப்பதற்கு பற்றியிழுக்கும் ஒரு பொறியைப்போல இருக்கும் – இங்கு – இப்பெண்குழந்தையின் விரல்களும் காந்தள் மலரிதழ்களைப்போல் இருக்கின்றன – அவை ஒரு பொறி போல நாடாவை இழுக்கின்றன – அந்த இழுப்பால் மேலே ஏதோ நிகழ்வதை அல்லது நிகழ்ந்ததை – அப்பெண்ணின் முக பாவம் வெளிப்படுத்துகிறது. விற்சுருள் விரிந்து ஒரு உலுக்கல் வருவதுபோன்ற போன்ற ஏதோ ஒரு இயக்கம் நிகழ்வது போன்ற உணர்வைத் தருகிறது படக்காட்சி என உணரப்பட்டது

    மோந்தா மூச்சில் எதிர்விசைச் சாடலோ – முகத்தை மோத வருவதுபோல் நெருங்கி வந்து ஆடும் தொங்கல்களை அப்பெண் நுகராமல் தன்மூச்சுக்காற்றால் தள்ளிவிடுவதாக உணரப்பட்டது.
    ஏந்தாப் புதிர் விடுக்கும் செந்தாள் ஊசலோ – “என்னதான் இன்னும் நான் செய்யவேண்டும்” என்று விளங்காத வகையில் அங்கே சிவப்புக் காகிதங்கள் ஊஞ்சலாடுகின்றனவே என அவள் யோசிப்பதாகப்படுகிறது
    அந்தாரத்திலெழும் மந்தார மாயத்தால் – அவள் இழுத்த இழுப்பின் விளைவால் – விட்டத்திற்குக் கீழே – அந்தரம் எனப்படும் மேலும் கீழும் இல்லாத இடைப் பகுதியில் தெளிவற்ற ஏதேதோ நிகழ்கின்றனவே என அவள் காண்பதாக உணரப்பட்டது
    சாந்தாச் சிமிழியில் புலவாத பேச்சோ – விரிந்த இதழ்கள் தொடர்ந்து விரிந்தவாறு மவுனம் காக்கின்றன – வாய்மொழியாய்ப் பேச்சு எழாது மனதுக்குள் அவள் பேசுகிறாள் என உணரப்பட்டது.
    சேந்தாவடுக்கில் வெளிநிலை விளக்கமோ – சேந்தி என்றால் உத்திரம், தூலம்,அல்லது பரண் என்று பொருள். பொதுவாக இவை (அந்நாளில்) இணைப்பில்லா இணைப்பில் உருவாக்கப்பட்டவை. அடுக்கடுக்காய் இணைப்பின்றி, ஒன்றின்மேல் ஒன்று பலமாய் நிறுத்தப்படுபவை சேந்திகள். பிணைக்கப்படும் துண்டங்கங்ளின் சேர்ப்பகுதிகளை வாகாய் செதுக்கி இழைக்கப்பட்டிருக்கும் – அந்த வடிவங்களை ஒருங்குபடுத்தி அடுக்கிவிட்டால் அவை சாந்து இல்லாமல், காரை இல்லாமல், பசை இல்லாமல் – எந்நாளும் ஒன்றிக்கிடக்கும்.
    – “வெளிநிலையில் – இயற்கை எனும் மாபெரும் சக்தி – இப்பிரபஞ்சங்களை சேந்தி போலல்லாமல் வேறு விதமான அற்புத அடுக்கில் தொங்கலாய் வைத்திருக்கிறது – அதுபோல நான் இங்கே காணும் இந்தத் தொங்கலில் பலவை சேர்மானம் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கின்றனவே!’ என அப்பெண்ணுக்கு வியப்பு உண்டாவதாக உணரப்பட்டது

    சிந்தாச்சிந்தையே ஆற்றலென்றனை பால சக்தி! – ஆயிரம் கிடக்கட்டும் – நடக்கட்டும் – என்னுடைய இலக்கு இவையில்லையே – (அதோ அந்த முடிச்சை அவிழ்த்து – அதில் உள்ள பரிசை நான் எடுத்துக் கொள்ள வேண்டாமா) – என் இலக்கின் மீது நான் குறிவைக்க வேண்டும்! அப்போது தானே நான் வெற்றி பெற முடியும்! என்று அப்பெண்ணின் உள்ளுணர்வு உறுத்துவதாக உணரப்பட்டது.
    ===================================

  12. அன்பு சகோதரி அவ்வை மகள் அவர்களே! 
    தங்களின் தமிழ்ப் புலமையும் தன்னடக்கமும் மனங்குளிரச் செய்கிறது.
    திருக்குறளைப்பற்றி ஔவை ” அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் ” என்றாள்!
    அதுபோல் தங்களின் இச்சிறிய பாடலில் பொதிந்துள்ளது அளவற்ற செய்திகள்.
    பொருள் விளக்கம் பூரிப்படையச் செய்கிறது! மிக்க நன்றி. வாழ்த்துகள்!!

  13. நன்று சகோதர!
    தமிழ் மாக்கடல்; நான் சிறு துமி
    அனைத்தும் அறிந்திட மனித்த இப்பிறவி போதா!
    வணக்கம்
    அன்புடனும் உண்மையுடனும்
    அவ்வைமகள்

  14. அவ்வைமகள் அவர்களின் விளக்கவுரையால் அகம் குளிர்ந்தேன்.அகராதி எழுதுமளவு தமிழறிவு கண்டு
    வியந்தேன்…நிறைய எழுதிக்குவிக்கும் ஆற்றல்
    பெற்ற உங்களின் முயற்சி தொடர்க…
    பேசியதற்குநன்றி..மீண்டும் எதிர்பார்க்கிறேன்
    சகோதரி அவர்களே!!!!
    (ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)

Leave a Reply to Shenbaga jagatheesan

Your email address will not be published. Required fields are marked *