குறுந்தொகை வழி அறியலாகும் தமிழரின் வானிலை நுண்ணறிவு  

2

-முனைவர் இரா.சுதமதி

முன்னுரை

பழந்தமிழரின் வானிலை அறிவுநுட்பத்தை எடுத்துரைக்கும்நூல்களுள் ஒன்று குறுந்தொகை. இயற்கையோடு இயைந்த வாழ்வியல் இன்பத்தை அகப்பாடல்கள் வழி எடுத்துரைக்கும் குறுந்தொகைப் புலவர்கள் அவற்றில் தம் அறிவியல் நுண்ணறிவையும் பதிவுசெய்தனர்.  தாம் வாழும் உலகத்தின் சூழல்களையும் இயற்கை நிகழ்வுகளையும் எந்தவிதத் தொழில் நுட்பக் கருவிகளும் இன்றித் தம் கண்களாலும் அனுபவத்தாலும் உணர்ந்து அவற்றைத் தகுந்த தமிழ்ச்சொற்களால் வெளிப்படுத்தியிருக்கும் அவர்தம்அறிவு நுட்பம் வியந்து போற்றற்குரியது. இக்கட்டுரை பழந்தமிழரின் வானிலை அறிவியல் அறிவைக் குறுந்தொகைப் பாடல்கள் வழி ஆராய முற்படுகிறது.

வானிலைஅறிவியல்

இன்று வளர்ந்து வரும் அறிவியல் துறைகளுள் ஒன்று Meterology எனப்படும் வானிலை அறிவியல் ஆகும். வானிலையும் காலநிலையும் இன்று மனிதர்கள் அன்றாடம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியத் தேவையாக மாறியுள்ள சூழலில் வானிலை அறிவியல் முக்கியமான துறையாகக் கருதப்படுகிறது. இன்றைய வானிலை அறிவியல் குறித்த செய்திகளோடு குறுந்தொகைச் செய்திகளும் ஒப்பிட்டு நோக்கப்பட்டு இங்கே விவரிக்கப்படுகின்றன.

குறுந்தொகையில் மேகம், இடி, மின்னல், மழை போன்ற வானிலை தொடர்பான பல குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன.

மேகங்கள்

தற்கால வானிலை அறிவியல் மேகங்களைப் பலவகைகளாகப் பிரிக்கிறது. அவை,1. கீற்றுமுகில் (Cirrus), 2. கார்முகில் (Nimbo stratus), 3. படர்முகில் (Alto stratus), 4. திரள்முகில் (Cumulus) என்பனவாகும். குறுந்தொகைப் பாடல் வருணனைகளில் இத்தகைய மேகங்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

வெண்மையான தோற்றத்தைக் கொண்டவையும் மிக உயரமான மலைப்பகுதிகளில் உருவாகி ʻஉயர்மேகங்கள்’ (high clouds)  என்று கூறப்படுபவையும் ஆகிய கீற்றுமுகில்கள்  ʻஉறையறு மை’ (339) என்று மழைத்துளிகளற்ற வெண்மையான  மேகங்களாகக் குறுந்தொகையில் கூறப்படுகின்றன.அதிக அடர்த்தியோடும் கறுத்த சாம்பல் நிறத்தோடும் எப்போதும் மழை பெய்து கொண்டிருக்கும் கார்முகில்களைப் பற்றி,

ʻகறிவளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தென’    (90)
            

என்று கூறுகிறது குறுந்தொகை. இலேசான மழைத் துளிகளைப் பெய்து கொண்டிருக்கும் நீர்த் திவலைகளால் ஆன படர்முகில்கள் ʻதளி தரு தண்கார்’  (65) என்றும், புயல், இடி, பெருமழையை உருவாக்கும் திரள்முகில்கள்,

ʻசேய் உயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலை’   (314)

என்றும் குறுந்தொகைப் புலவர்களால் குறிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். தமிழகம் வெப்ப மண்டல நாடாகும். எனவே, பிற பருவங்களில் காணப்படும் மேகங்களை விட மிகுந்த மழையைத் தரும் கார்காலத்தின் திரள்முகில் இனங்களே குறுந்தொகைப் புலவர்களால் பெரிதும் விரும்பி அதிகமாகப் பாடப்பட்டுள்ளன.

ʻகழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்
புதுநீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல்  கேட்டே  (251)           என்னும் இடைக்காடனாரின் பாடல் நீர்மேலாண்மைக்கு மிகச் சிறந்த சான்றாகும். ʻநீர் சுமந்த மேகங்கள் மழையாகப் பொழிந்தால் மட்டுமே மீண்டும் கடல்நீரை முகந்து நீர் சுமந்து மழையாகப் பொழிய முடியும்’ என்னும் செய்தி அறிவியல் நுட்பத்தோடும் வாழ்வியல் சிறப்போடும் கூறப்பட்டிருப்பது ஆய்ந்து உணரத்தக்கது.

இடி

ʻவெடி ஒலி உரும் கோ விண்ணேறு அசனி
செல் இகுளி இடியேறு மடங்கலும் ஆகும்

என்று இடியின் பல்வேறு பெயர்களைப் பிங்கல நிகண்டு பட்டியலிடுகிறது. குறுந்தொகைப் பாடல்களில் இடியின் தன்மை குறித்துப் பாடும் செய்திகள் நுட்பமானவை. இடியின் வேகத்தைக் கணக்கிட்டு வருணிக்கும் திறம் இன்றைய வானிலை ஆய்வுக்கு இடம் தருவதாகும்.

குறுந்தொகைப் பாடல்கள் வழி இடியின் தன்மைகளை 1. ஆரவாரத்தை உடைய இடி, 2.முரசு போல் முழங்கும் இடி, 3. பாம்பைத் துணிக்கும் இடி என மூன்றாகப் பிரிக்கலாம்.

ஆரவாரத்தை உடைய இடியைக் குறுந்தொகை ʻஇடியேறு’ என்றும் ʻஆர்கலி ஏறு’ என்றும் குறிப்பிடுகிறது. மிகப் பெரிய மின்னலுக்குப் பிறகோ, மேகங்களிலும் மலைத்தொடர்களிலும் பட்டு எதிரொலிப்பதாலோ தொடர்ந்து நெடுநேரம்ʻகிடுகிடு’வெனக் கேட்கும் இடியோசையைக் குறுந்தொகை ஆரவாரிக்கும் இடியோசையாகக் குறிப்பிடுகிறது. 

ʻகருவி மாமழைச் சிலை தரும் குரலே’         (94)

ʻஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த    (186)                      

என்று குறிப்பிடும் குறுந்தொகை, முரசு போல் முழங்கும் இடியை,

ʻவென்று எறி முரசின் நன் பல முழங்கி
பெயல் ஆனாதே  வானம்     (380)

எனக் கூறுகிறது. இவ்விரு இடிகளின் தன்மையுடன் மேலும் கடுமையாக முழங்கும் இடியைப் ʻபாம்பைத் துணிக்கும் இடி’ என்று குறுந்தொகை கூறுவது சிறப்பிற்குரியது. இத்தகைய இடி பற்றி நான்கு பாடல்கள் நூலில் உள்ளன.

ʻநெடு விசை மருங்கின் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உரும்’                                                                 (158)

ʻவெஞ்சின அரவின் பைந்தலை துமிய
நரை உரும் உரரும்’                                                                          (190)

ʻ……………………………பாம்பின்
பையுடை இருந்தலை துமிக்கும் ஏறு’                          (268)

என்று கூறுவது நோக்கத்தக்கது. சங்கப் புலவர்கள் வானிலைச் செயல்பாடுகளை உற்று நோக்கி அவற்றின் தன்மையைத் தம்மால் இயன்றவரையில் பாடல்களில் பதிவு செய்துள்ளமை வியப்பிற்குரியதாகும்.

மின்னல்

மின்னலுடனும் இடியுடனும் பெய்யும் மழையைக் குறுந்தொகை ʻகருவி மாமழை’ என்று  குறிப்பிடுகிறது.

……………………..மாமழை
இன்னும் பெய்யும் முழங்கி
மின்னும் தோழி’                     (216)

என்னும் காஞ்சிக் கொற்றனின் குறுந்தொகைப் பாடல் ‘தோழி! கரிய பெரிய மேகங்கள் இன்னும் மழையைப் பெய்ய மேலும் முழங்கி மின்னுகின்றன’ என்னும் வானிலை முன்னறிவிப்பை எடுத்துரைக்கின்றது எனலாம்.

மழை

பழங்காலத்தில் மழை பற்றிய அறிவியல் உணர்வு தமிழர்களிடம் இருந்ததைப் போல பிற நாட்டாரிடம் இல்லை எனலாம். பிற நாட்டினர் மழையைக் கண்டு அஞ்சி அதனைக் கடவுள் தந்த தண்டனையாகக் கருதிய காலகட்டத்திற்கு முன்னரே பழந்தமிழர் மழை எவ்வாறு பெய்கிறது என்பது பற்றிய அறிவியல் உண்மையை உணர்ந்திருந்தனர்.

குறுந்தொகைப் பாடல்கள் வழி பழந்தமிழர் மழையை,1.தூறல் மழை, 2.விடாமழை, 3.புயல்மழை, 4.பெருமழை என்று பகுத்துணர்ந்த அறிவு நுட்பத்தை அறியலாம். இவற்றுடன் ‘வம்பமாரி’ என்ற ஒன்றையும் பதிவு செய்தனர்.

வானம் மங்கலாக இருக்கும் போதும், மூடுபனி இருக்கும் போதும் பூமியில் மிகச் சிறு திவலைகளாக விழும் தூறல் மழையை,

ʻஊதை தூற்றும் கூதிர் யாமத்து                                         (86)
ʻவந்த வாடைச் சில் பெயல் கடைநாள்’                      (332)                      

என்னும் குறுந்தொகை வரிகள் எடுத்துரைக்கின்றன.

ʻபெரும்பெயல்’, ʻமாமழை’,ʻபடுமழை’,ʻகலிமழை’ என்னும் அடைமொழிகளால் பெருமழையைக் குறுந்தொகைப் புலவர்கள் குறிப்பிட்டு மகிழ்ந்தனர். பழந்தமிழர் நீர்வளம் நிரம்பப் பெற்று வாழ்க்கை நடத்தியவர்கள் ஆவர். அதனால் பெருமழை பொழியும் கார்காலத்தைப் புனைந்து பாடுவதில் புலவர்கள் பெரும் விருப்பம் கொண்டிருந்தனர்.  

ʻபெரும் பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்   (13)
ʻபடுமழை பொழிந்த சாரல்’                         (249)
ʻகலிமழை கெழீஇய கான்யாற்று இடுகரை’     (264)    

என்பன போன்ற பாடல் வரிகள் குறுந்தொகையுள் மிகுதி.

பெருங்காற்றோடு பெய்த பெருமழையைப் புயல்மழை என்று குறுந்தொகையில் பதிவு செய்கிறார் பெண்பாற் புலவரான ஔவையார்.

ʻநெடுவரை மருங்கின் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை!
ஆர் அளி இலையோ நீயே? பேரிசை
இமயமும் துளக்கும் பண்பினை!’                      (158)

என்ற பாடல் இமயமலையையும் அசைக்கும் ஆற்றலுடைய காற்றோடு வரும் பெருமழை குறித்த செய்தியைக் கூறுகிறது. வானிலை ஆய்வாளர்களின் கருத்தோடு ஒப்பிட்டால் இதனைப் புயல் மழையாகக் கருதலாம்.

இடைவிடாது பெய்யும் அடைமழையைக் குறுந்தொகை,

ʻபொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுது கண்பனிப்ப வீசும்              (161)
ʻபெயல் ஆனாதே வானம்           (380)                           

என்று குறிப்பிடுகிறது. குறுந்தொகையுள் காணப்படும் பாடல் ஒன்று கோடைமழை பற்றிக் கூறுகிறது.

ʻஉவரி ஒருத்தல் உழாஅது மடியப்
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே’   (391)

ʻபசுக்களும் மான்களும் வெம்மையால் புழுங்கி துன்புறும்படியாக, மேகம் மழைபெய்தலை நீங்கிய காட்டில் கடுமையாக இடிக்கும் இடியினால் பாம்புகள் படம் அடங்கிக் கிடந்தன. கரிய மேகங்கள், பெய்யும் பருவமறியாது இடியோடு கலந்து இனிதாகத் தாழ்ந்தன’ என்னும் செய்தி கோடை மழையைக் குறிப்பதாகும்.

பழந்தமிழரின் வானிலை அறிவு நுட்பத்துக்கு,  அவர்கள் காலமழைக்குச் சூட்டிய பெயர்களே சான்றாகும். உரிய பருவத்தில் பெய்யும் மழையைக் ʻகாலமாரி’ என்னும் பெயராலும் காலமல்லாத காலத்தில் பெய்த மழையை ʻவம்பமாரி’ என்னும் பெயராலும் அழைத்த அறிவு நுட்பம் வியந்து போற்றற்குரியது.

ʻகாலமாரி மாலை மாமழை’                                                  (200)
ʻகாலமாரி பெய்தென’                                                                     (251)

 

எனப் பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யும் மழையைக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.

ʻவம்பமாரி’ என்னும் சொற்றொடர் பழந்தமிழரின் அறிவுக்கூர்மைக்கும் அறிவியல் நுட்பத்துக்கும் சொல்லாட்சித் திறனுக்கும் தக்க சான்றாகும்.

ʻ வம்பு நிலையின்மை’                 (தொல்.உரி.31)

என்று வம்பு என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுகிறது தொல்காப்பியம். பருவமல்லாத காலத்தில் பெய்து பின் மாறி விடுகின்ற நிலையில்லாத மழையே வம்பமாரியாகும்.

ʻபருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்பு சேர் கொடியிணர் ஊழ்த்த
வம்பமாரியைக் காரென மதித்தே’                                              (66)
ʻவம்பு பெய்யுமால் மழையே வம்பன்று
காரிது பருவம் ஆயின்
வாராரே நம் காதலரே!’ 

கார்காலம் வந்தும் தலைவன் வராததால் வருந்தியிருக்கும் தலைவியை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி ʻஇது காலமாரி அன்று, வம்பமாரி’  என்று கூறுவதாக அமைந்த சங்க இலக்கியப் பாடல்கள் மிகுதி. இச்செய்திகள் காலம் தவறிப் பெய்யும் மழை குறித்தும் அம்மழையைப் பொருள் மாறாது அழகிய சொல்லால் குறித்த தமிழர்களின் வானிலை நுட்பத்தையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன.

முடிவுரை

தற்கால வானிலை ஆய்வாளர்களால் பகுத்துரைக்கப்படும் பல செய்திகளைச் சங்க இலக்கியங்கள் அன்றே பதிவு செய்து வைத்துள்ளமைக்குக் குறுந்தொகை மிகச் சிறந்த சான்று நூலாகும். குறுந்தொகையுள் கூறப்படும் திரள்முகில் இனங்களும் பாம்பையும் துண்டிக்கும் இடிகளும் பெருமழையும் வம்பமாரியும் தமிழர் தம் கூர்த்த நுண்ணறிவைப் புலப்படுத்துவன. இதனால் தொழில்நுட்பக் கருவிகள் ஏதுமில்லாமலேயே பழந்தமிழர் வானிலை அறிவியலில் சிறந்து விளங்கியமையை அறியலாம்.

*****

கட்டுரையாளர்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி
திருநெல்வேலி-627008

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறுந்தொகை வழி அறியலாகும் தமிழரின் வானிலை நுண்ணறிவு  

  1. முனைவர் இரா.சுதமதி அவர்களுக்கு

    வான்மழை வகை பற்றி, பல்வேறு முகில் பண்பாடுகள் பற்றி விரிவாக ஓர் விஞ்ஞானக் கட்டுரையை பண்டை நூல் குறுந்தொகை மூலம் எழுதியதற்குப் பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன், கனடா

  2. சிறந்த அறிவியல் ஆய்வு…
    ______________________________
    சின்னசின்ன மழைத்துளியின் அருமைகளை
    வண்ணத்தமிழ் பழம்பாடல் வழி நின்று
    வான் முகிலைக் கிழித்து வரும் அழகு பற்றி
    சிறப்பாக எடுத்துரைத்த சுகமதியின்
    சீரிய கட்டுரைக்கு சிரம்தாழ்ந்த பாராட்டு!!
    (ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)

Leave a Reply to சி. ஜெயபாரதன்

Your email address will not be published. Required fields are marked *