அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – 2

0

-பீ.பெரியசாமி

1:1:23. விரைவு

விரைவென்பது, “ஒரு பொருளைச் செய்ய நினைத்தான் அது தாழ்க்கில் அப்பயன் எய்தான்; கடிதின் முடித்தல் வேண்டுமெனக் குறித்த மனநிகழ்ச்சி”( இளம்., இராசா., மெய்.12) எனவும், “இயற்கைவகையானன்றி ஒரு பொருட்கண் விரைவு தொழில்பட உள்ள நிகழும் கருத்து.” (பேரா, குழந்தை., மெய்.12) எனவும், “வேகம், ஆர்வமிகுதியாலெழுவது” (பாரதி., மெய்.12) எனவும், “காலத்தையும் இடத்தையும் சுருக்கி மேற்செல்லக் கடிதுவிழையும் உள்ள எழுச்சி. இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். விரைவு என்பது எதனையும் விரைவாக அடைதலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் பாலசுந்தரமும், புறம்.275, 82 ஆகிய பாடல்களையும்; பாரதி, குறுந்.250, 189 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:24. உயிர்ப்பு

உயிர்ப்பென்பது, “முன்புவிடும் அளவினன்றிச் சுவாசம் நீளவிடுதல்.” (இளம், இராசா, தாசன்., மெய்.12) எனவும், “வேண்டிய பொருளைப் பெறாதல்வழிக் கையறவெய்திய கருத்து; அது, நெட்டுயிர்ப்பிற்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றானென்பது.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “ஆனாக் காதலின் நெட்டுயிர்த்தல்” (பாரதி., மெய்.12) எனவும், “ஆற்றாமை காரணமாக எழும் நெடுமூச்சு. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12)எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். உயிர்ப்பென்பது விரும்பியது கிடைக்காத பொழுது வெளிப்படும் நீண்ட சுவாசமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறுந்.142-ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.142, 359, நற்.253 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் புறம்.44-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:25. கையாறு

கையாறென்பது, “காதலர் பிரிந்தால் வரும் துன்பம் அந்நிகரனவும் வருவது.” இளம், (இராசா, தாசன், மெய்.12)எனவும், “அவ்வுயிர்ப்புமின்றி வினையொழ்தயர்தல்” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “வசமழிவு, அதாவது செயலறிவு; இதுவும் காழ்த்த காதனோயால் வருவது (பாரதி, மெய்.12) எனவும், “விருப்பிற்குரிய பொருளைப் பிரிதலும் இழத்தலும் பற்றி வரும் செயலறவு. இஃது அழுகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். கையாறு என்பது தனக்குரிமையுடைய பொருளோ உறவுகளோ பிரியுமிடத்து தோன்றும் துன்பமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.24 ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.169, 391, 48 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், புறம்.240 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:26. இடுக்கண்

இடுக்கணென்பது, “துன்பமுறுதல்” (இளம்., தாசன், இராசா, மெய்.12) எனவும், “மலர்ந்த நோக்கமின்றி மையனோக்கம்பட வரும் இரக்கம்” (பேரா., குழந்தை, மெய்.12)  எனவும், “காதலால் வருந்தும் துன்பம்” (பாரதி., மெய்.12) எனவும், “இடையூறு காரணமாக வரும் துன்பம் இஃது அழுகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். இடுக்கணென்பது ஏதேனும் ஓர் இடையூறு காரணம் பற்றி வரும் துன்பமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.625-ஐயும்; பாரதி, குறுந்.240, 48, நற்.299, குறள்.1175, 1229 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் புறம்.210-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:27. பொச்சாப்பு

பொச்சாப்பென்பது, “மறத்தல்”( இளம், குழந்தை, பாரதி, இராசா, தாசன்., மெய்.12) எனவும், “அற்றப்படுதல்; அஃதாவது, பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஓரிகழ்ச்சிரியான இடையறவுபடுதல்”(பேரா., மெய்.12) எனவும், “மறத்தல் கூடாதவற்றை மறந்திருத்தல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். பொச்சாப்பென்பது மறக்கக் கூடாதவற்றை மறத்தலால் ஏற்படும் உணர்வாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.199-ஐயும்; பாலசுந்தரம் புறம்.149-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:28. பொறாமை

பொறாமையென்பது, “பிறர்க்கு ஆக்க முதலாயின கண்ட வழியதனைப் பொறாது நடக்கும் மன நிகழ்ச்சி. அழுக்காறு என்ப” (இளம், இராசா, தாசன், மெய்.12)எனவும், “அழுக்காறு; அஃதாவது பிறர் செல்வங்கண்டவழி வேண்டாதிருத்தல்.” (பேரா., மெய்.12)எனவும், “காதலர் ஒருவர் பழி ஒரு ஆனாமை, ஒல்லாமை, இயற்பழிக்கும் தோழி கூற்றும், ஏனோர் தூற்றும் பழியும் தாங்காது தலைவி வெறுத்தல் காதலியல்பாம்.” (பாரதி., மெய்.12) எனவும், “செருக்கும் திறலும் காரணமாக ஒன்றைப் பொறுத்தலாற்றாத பண்பு. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். அழுக்காறு என்னும் பொறாமை வேறு; இதுவேறு என உணர்க. அழுக்காறு அறனில் குணமாகலின் அதனை மெய்ப்பாட்டிற்குரிய பொருளாகக் கூறுதல் ஒவ்வாதென அறிக.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கூறுவர். பொறாமையென்பது, பிறரது வளார்ச்சிகளைக் கண்டு மனதில் எழுவதோர் எரிச்சலாகும். அழுக்காறு எனினும் ஒக்கும். கழகத் தமிழகராதி அழுக்காறு என்பதற்கு “பொறாமை; பொய்; தீயநெறி.” (க.த.அ.ப.56) என பொருள் கூறுவதால் இதனை அறியலாம்.  இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.168-ஐயும்; குறுந்.181, 187, 288, ஐந்.எழுபது.2-ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் புறம்.8-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:29. வியர்த்தல்

வியர்த்தலென்பது, “தன் மனத்தில் வெகுட்சி தோன்றிய வழிப்பிறப்பதோர் புழுக்கம்,” (இளம்., தாசன், இராசா, மெய்.12) எனவும், “பொறாமை முதலாயினபற்றி மனப்புழுக்கம்” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “நாணாலும் நடுக்கத்தானும் வேர்த்தல், இது காதலரியல்பாதலை. ‘பொறிநுதல் வியார்த்தல்’ என இதன் பின் சூத்திரத்து வருதலானுமறிக.” (பாரதி., மெய்.12)எனவும், “இகல் காரணமாக வரும் உள்ளப்புழுக்கம், மெய்ப்புழுக்கம் சிறுபான்மை வரினும் கொள்க. இது வெகுளிப் பொருளாக வரும் “பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்.” என்பது மெய்ப்புழுக்கம். இஃது இளிவரல் பற்றி வரும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். வியர்த்தலென்பது மனப்புழுக்கமாகும். இது காமம், வெகுளி, சினம் போன்றவற்றால் ஏற்படும். இதனை விளக்க இளம்பூரணர்,  தாசன், பாலசுந்தரம் ஆகியோர் குறள்.487-ஐயும், பாரதி

நின் பிறைநுதற் பொறிவியல்
உறுவளியாற்றச்
சிறுவரை திற”  அகம்.136

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், நான் அவளை நெருங்கி அவள் முகத்தைக் காண விரும்பி மிக்க புழுக்கத்தால் உனது நெற்றியில் அரும்பிய வியர்வையைக் காற்று நீக்குமாறு சிறிதுதிற என்று கூறி அன்பின் மிகுதியால் போர்வையை நீக்கினேன் என தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறியது. இதில் காம உணர்வினால் தலைவியின்பால் வியர்வை உண்டாகியது என்பது புலப்பட்டுள்ளமையால். இது வியர்த்தலின் பாற்படும்.

1:1:30. ஐயம்

ஐயமென்பது, “ஒரு பொருளைக் கண்டவழி யிதுவெனத் துணியாத நிலைமை” (இளம்., தாசன், இராசா, மெய்.12)எனவும், “ஒரு பொருண்மேல் இருபொருட்டன்மை கருதி வரும் மனத் தடுமாற்றம்.” (பேரா., குழந்தை., மெய்.12)  எனவும், “காதல் மிகையாற் கடுத்தல் இது முதற்காட்சியினிகழும் ஐயமன்று; அது தெறிந்தபின் எழாதாதலின், ஈண்டு ஊடலில் எழுமையவுணர்வைக் குறிக்கும்.” (பாரதி., மெய்.12)எனவும், “ஒரு பொருளை இன்னது என வரைந்துணர்தற் காகாத மனத்தடுமாற்றம். ஈண்டு இஃது உவகைக்குப் பொருளாக நின்றது. இது பிற மெய்ப்பாட்டிற்குரிய பொருளாகவும் வரும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். ஐயமென்பது ஒன்றனைக் கண்டு அதுவோ, இதுவோ என துணிய இயலாத நிலையாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1081-ஐயும்; பாலசுந்தரம், புறம்.257, 49 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:31. மிகை

மிகையென்பது, “ஒருவனை நன்கு மதியாமை” (இளம்., மெய்.12)எனவும், “கல்லாமையுஞ் செல்வமும் இளமையும் முதலாக வரும் உள்ளமிகுதி” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “கைம்மிகு காதலான் வரும் நிறையழிவு” (பாரதி, மெய்.12) எனவும், “பழிவழிச் செல்லும் செருக்கு – குற்றம். இஃது வெகுளிப் பொருளாக அமையும்.” (பாலசுந். மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். மிகையென்பது உள்ளச் செருக்காகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.158-ஐயும்; பாலசுந்தரம், குறுந்.292-ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:32 நடுக்கம்

நடுக்கமென்பது, “யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோமென வரு மனநிகழ்ச்சி” (இளம்., தாசன், இராசா, மெய்.12) எனவும், “அன்பும் அச்சமும் முதலாயின உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ள நடுங்குதல்; புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொலன்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலுமாம், அச்சமென்னுஞ் சுவை பிறந்ததன் பின்னர் அதன் வழித் தோன்றிய நடுக்கம் அச்சத்தாற்றோன்றிய நடுக்கமென்பது.”(பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “காதலர்க்கு உணர்வு மிகையானாம் பனிப்பு” (பாரதி, மெய்.12) எனவும், “துயர் நேருங்கொல் என்னும் உளக்கலக்கத்தான் உடம்பு அதிர்தல். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்.” (பாலசுந். மெய்.12)எனவும் உரைகொள்வர். நடுக்கமென்பது தமக்கும் தம்மைச் சார்ந்தோர்க்கும் துன்பம் நேரும் என நினைக்கும்வழி தோன்றுவதோர் உணர்வு. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும்,  கலி.13-ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.178, 53 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம்,

வெம்மை தண்டா எரியுடு பறந்தலை
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர்மருங் கறியாது தோர்மருங் கோடி
அறுநீ ரம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்க ருங்கடன்”    (அகம்.29)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், கொடிய வெம்மையால் தலைமையுடைய வலிமையற்ற யானை நீர் உண்பதற்காகக் கானல் நீரை நீர் என்று கருதி ஓடுகின்ற, நினைப்பவர்கள் நடுங்கும் அரிய பாலைநிலம் பெருவழியைக் கடந்து பொருளீட்டும் விருப்பத்தோடு நான் அங்குச் சென்றாலும் என் உடம்பு அங்கிருந்ததே தவிர என் உள்ளம் உன்னிடம் தானே இருந்தது எனத் தலைவன் தலைவியிடம் கூறினான். இதில் யானைகளை நினைக்கும்போது நடுக்கம் உண்டாயிற்று என்பதில் நடுக்கம் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

1:2. உரையாசிரியர்களின் மாறுப்பட்ட உரைகளும் தீர்வும்

உரையாசிரியர்கள் இந்நூற்பாவினை பல்வேறு விதமாக பொருள் கொண்டுள்ளனர். அவை,

“மேற்சொல்லப்பட்டன ஒருபக்கமாக, ஒருக்கமுடைமை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் உள, அவையல்லாத விடத்து என்றவாறு. எனவே, ஆமிடத்து இவை யங்கம் ஆகும். இத்தனையும் கூறப்பட்ட அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவென்று கொள்க.”( இளம்.மெய்.12 )

என இளம்பூரணர் கூறியுள்ளார். இதனை நோக்குமிடத்து மேற் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு போல இங்கே சொல்லப்படும் முப்பத்திரண்டும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானது எனவும் இவை மெய்ப்பாட்டிற்குரியவை என்பதும் இளம்பூரணரின் கருத்தாகும். இதனைப் பேராசிரியர் கூறுமிடத்து,

“மேற்கூறிவந்த எண்ணான்குமன்றி இவை முப்பத்திரண்டும் அவை போல்வன மெய்ப்பாடென்ப துணர்த்துதல் நுதலிற்று. ………..சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் ஒரு கூறாக; ஒரு பாலென்பது இனிச் சொல்லுகின்ற ஒருகூறென்றவாறு; பின்னர் அவற்றையெல்லாம் எண்ணி ‘இவையுமுளவே அவையலங் கடையே’ யென்றார். ஈண்டெண்ணப்பட்டவையே ஆண்டடங்குவனவும் உள.அப் பொருண்மைய வல்லாதவிடத்து இவை முப்பத்திரண்டும் ஈண்டு மெய்ப்பாடாகும்.” (பேரா,மெய்.12 )

எனக் கூறியுள்ளார். இதனை நோக்குமிடத்து மேற் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு போல இங்கே சொல்லப்படும் முப்பத்திரண்டும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானது எனவும், இவை மெய்ப்பாட்டிற்குரியவை என்பதும் இவை மேற்சொல்லப்பட்ட முப்பத்திரண்டில் அடங்காதவிடத்து  தோன்றும் என்பதும் பேராசிரியர் கருத்து. மேலும், பாரதி கூறுமிடத்து,

“…………….. ஆங்கவை ஒருபாலாக பிரித்து நிறுத்தி, “ஒருபால்” என வேறுதொடங்கி எவ்வெட்டாய் வகுத்து இச்சூத்திரத் தெண்ணப் பெறும் உணர்வு முப்த்திரண்டும் புறக்குறிச் சுட்டின்றி வாளா கூறப்பெறுதலாலும், நகை முதலிய புறக்குறி பெறும் பான்மைய எண்ணான் குணர்வின் மெய்ப்பாடு எட்டே எனக் குறித்து விலக்கிதாலும் இதில் நாலெட்டும் முன் எண்ணான்கென்ற மெய்பாட்டு வகைகளின் வேறாய்ச் செய்யுட் பொருள் சிறக்க வரும் உணர்வுகளாதல் தேற்றமாகும். இன்பான்மை வேறுபாடு விளங்க, இச்சூத்திரத் துவக்கத்தில் இவ்வுணர்வுகளை எண்ணத் தொடங்குமுன் “ஆங்கவை ஒரு பாலாக, ஒருபால்” என நிறுத்த சொற்பெய்த குறிப்புமறிக. இவை புறக்குறிச்சுட்டுப் பெறாமையால் மெய்ப்பாடாகச் சிறவாவெனினும் மெய்ப்பாடுகள் போலச் செய்யுட்பொருள் சிறக்கவரும். உள்ளுணர்வுகளாதலின் இவ்வியலில் ஒப்பமுடித்துக் கூறப்பெற்றன. இனி இவ்வாறு எண்ணான்கும் நாலெட்டுமாய் வகைபெறலொன்று புறக்குறிச் சார்புடைமையும் இன்மையும் ஒன்று, ஆக இவ்விருதிற வேறுபாட்டையுமன்றி, இவற்றிடை இன்னுமொரு தன்மை வேறுபாடுமுளது. மெய்ப்பாடுவகை எண்ணான்கும் அகப் புறப் பொருட் பகுதிகளிரண்டிற்கு மொப்ப வருபவை. இதிற் குறிக்கும் உணர்வுவகை நாலெட்டும் அகத்துறைக்குச் சிறப்புரிமை பெறுவன. இவை எவ்வெட்டாய் முறையே “இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடுதழாஅலும் தோழியிற் புணர்வு மென்றாங்கந்நால் வகையினு மடைந்த சார்பொடு” கண்ணிய நால்வகைக் கேற்பத் தொகுக்கபட்டுள.” (பாரதி, மெய்.12 )எனக் கூறியுள்ளார். இவை புறக்குறிச் சுட்டு பெறாமையால் மெய்பாடாகாது. ஆனாலும் செய்யுட் பொருள் சிறக்க வரும் உள்ளுணர்வாகும் என்பதும், புறக்குறிச் சார்பின்மை என்பதும், மேற்கூறப்பட எண்வகை மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை. இங்கே சொல்லப்படும் முப்த்திரண்டும் அகத்திற்குச் சிறப்புடையவை, இவை எட்டு எட்டாக பிரிக்கப்படுபவை என்பது பாரதியின் கருத்து. இது மேற்கூறிய இளம்பூரணர் மற்றும் பேராசிரியரின் கருத்துக்கு மாறுபட்டது. அவர்கள் இம்முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டுபோல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை என்றும் அவை மெய்ப்பாடுகள் என்றும் உரை கொள்கின்றனர். மேலும், குழந்தை கூறுமிடத்து,

“ ‘ஆங்கவை ஒருபாலாக ஒருபால்’ என்றதனால், பால் அல்லது கூறு எனப்படுவன தம்மின் ஒத்த எண்ணாதல் வேண்டுமாகலின், அவை 4-11 முப்பத்திரண்டெனவே, இவையும் முப்பத்திரண்டெனத் தொகை கொள்ளப்பட்டது. அவை ஒருபால் ஆக, இவை ஒருபால் என்க. பால் – கூறு. ஆங்கவை – அங்குக் கூறியவை, முன் கூறியவை. எனா – எண்ணிடைச் சொற்கள்.” குழந்தை., மெய்.12

என்கிறார். இவை முப்பத்திரண்டும் மேற் கூறியதைப் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை என்பது பாரதியின் கருத்து. மேலும், பாலசுந்தரம்,

“இவை முப்பத்திரண்டும் எள்ளல் முதலியவற்றைப் போல வரையறைப்பட்டு அடங்காமல் எண்வகை மெய்ப்பாட்டினுள் விரவி வருதலானும் புறத்திணைக்குச் சிறந்துரிமை பெற்று நிற்றலானும் வேறாகத் தொகுத்து ஓதப்பெற்றன. மற்று ஈண்டுக் கூறப்பெற்றுள்ள வியர்த்தல், தன்மை, விரைவு, வாழ்த்தல், நாணுதல், உயிர்ப்பு, கையாறு, முனிதல், ஆராய்ச்சி, ஐயம் முதலியவாக வருவனவற்றொடு பின்னர்; அகத்திணைக்குரியவாக ஓதப் பெற்றனவற்றுள் வரும், பொறிநுதல் வியர்த்தல், இல்வலியுறுத்தல், பாராட்டெடுத்தல், அலர், நாணல், புலம்பித் தோன்றல், கையறவுரைக்தல், இன்பத்தை வெறுத்தல், ஏதமாய்தல், ஐயஞ் செய்தல் முதலியவை ஒத்தனவாக உள்ளமையின் இங்ஙனம் ஈரிடத்துங் கூறியது என்னை யெனின்? அவ்வாறு வருவன ஒருபுடை ஒக்குமாறும் அகத்தினைச் செய்யுட்டு மெய்ப்பாட்டுறுப்புக் கூறுங்கால் உடைமை, இன்புறல் முதலிய பொருள்பற்றிக் கூறாமல் புகுமுகம்புரிதல்  முதலாய சிறப்புப் பொருள் பற்றியும் எள்ளல் முதலாய பொதுப்பொருள் பற்றியும் எள்ளல் முதலாய பொதுப்பொருள் பற்றியும் கூறல் வேண்டுமென்பதும் புறத்திணைச் செய்யுட்கு மெய்ப்பாட்டுறுப்புக் கூறுங்கால் புகுமுகம்புரிதல் முதலாய அகத்திணைக்கே உரிபொருள் பற்றிக்கூறாமல் உடைமை, இன்புறல் முதலாய சிறப்புப்பொருள் பற்றியும் எள்ளல் இளமை முதலாய பொதுப்பொருள் பற்றியும் கூறல் வேண்டும் என்பதும் அறிவித்தற்கென்க. அது பெறுமாறியாங்ஙனமெனின்? ஈண்டு வியர்த்தல், நாணல் எனவும் ஆண்டுப் பொறிநுதல் வியர்த்தல், ஈரமில் கூற்றம், ஏற்றலர் நாணல் எனவும் வேறுபடுத்துக் கூறுதலான் பெறிவது மென்க.” (பாலசுந்.மெய்.12)

என கூறியுள்ளார். இதில் எள்ளல் முதலாய மெய்ப்பாடுகள் பொதுமெய்ப்பாடுகள் எனவும்; உடைமை முதலானவை சிறப்புக்குரிய மெய்ப்பாடுகள் எனவும் கூறப்பட்டுள்ளது. எள்ளல் முதலாய மெய்ப்பாடுகள் முதனிலை மெய்ப்பாடுகள் இவை பொருந்தாதவிடத்து, உடைமை முதலாய துணைநிலை மெய்ப்பாடுகள் தோன்றும் என்பதே பொருத்தமுடையதாகும். ஏனெனில், இரண்டும் ஒருவகையாகுமெனில் இம்முப்பத்திரண்டையும் முன் கூறிய எண்வகை மெய்ப்பாடுகளைப் போல கூறியிருக்கலாம். அவ்வாறு அல்லாமல் அவற்றை முன்னர் வைத்து இம்முப்பத்திரண்டைப் பின்னர் உணர்த்துதலின் மேற்கூறியவாறேஅமையும்.

1:3. பழைய உரையாசிரியர்கள் உரைகளைப் பின்னை உரையாசிரியர்கள் மறுப்பு

பழைய உரையாசிரியர்களான இளம்பூரணர் மற்றும் பேராசிரியரின் உரைகளைப் பின்னைய உரையாசிரியர்களான பாரதி, பாலசுந்தரம் ஆகியோர் மறுத்துரைத்துள்ளனர். அவர்களுள் பாரதி,

“இவ்வாறு அகத்துறைகளுக்குச் சிறந்துரிய இவற்றையும் முன் “எட்டே மெய்ப்பாடு” என வகுத்துப் பிரித்த எண்ணான் குணர்வு போலவே, அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பவருவன எனக் கருதுவர் பழையவுரைக்காரர். நானான்காய் எட்டுவகை பெற்றுப் புறந்தோன்றவால் மெய்ப்பாடாமெனச் சுட்டி அவற்றை ஒருபால் எனப்பிரித்து நிறுத்தி, பின் மற்றொரு பாலெனக் குறிக்கப்பெற்ற இவை முப்பத்திரண்டையும் தனித்தும் நானான்காயும் எண்ணாமல், எவ்வெட்டாய் நான்குவகை யிற்றொகுத்த தன் குறிப்பும் பயனும் அவருரையில் விளக்கப் பெறாமையானும், இவை முன் முப்பத்திரண்டின் வேறுபட்ட பான்மைய எனச் சூத்திரச் சொற்றொடர் சுட்டுதலானும், அவருரை பொருந்தாமையுணர்க. அன்றியும், இவையும் முன்னவை போலப் பொருட் பகுதிகளிரண்டிற்கும் பொதுவாய் வருமெனில் பொது உணர்வு பலவிருக்க இவற்றை இவ்வாறு ஈண்டுத் தொகுத்துக் கூறுதலிற் சிறப்பின்மையோடு இவற்றுட் சில முன் மெய்ப்பாடு வகையில் வந்தனவால் ஈண்டு மீண்டுங் கூறுதல் மிகையுமாகும். இதில் வெரூஉதலும் நடுக்கமும் முன் அச்சமாகும்; அரற்றல் முன் அழுகையினடங்கும்; இன்புறல் முன் உவகையாகும்; மடிமை முன் அசைவிலடங்கும்; இடுக்கண் முன் வருத்தமாகும்; இதனாலும் இவர் கருத்து இச்சூத்திரப் பொருளன்மை தேறப்படும். பிறிதொரு பான்மைத்தாம் இவை முப்பத்திரண்டும் நான்காயும் தனித்தும் எண்ணப்படாமல் எவ்வெட்டாய் நான்கு வகையுற்றொகுத்த தன் குறிப்பு அவர் கூறாமையானும், இவை முன்னவற்றின் வேறுபட்ட பான்மைய என இதில் தெளிக்கப்பட்டமையானும், அவர் கூற்றுப் பொருந்தாமை ஒருதலை.” (பாரதி, மெய்.12)

என கூறியுள்ளார். இவர் கூற்றுப்படி இங்கே சுட்டப்படும் முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் மேற்சொன்ன முப்பத்திரண்டில் அடங்கும் என்பதாகும். பாலசுந்தரம்,

“இனி இளம்பூரணரும் பேராசிரியரும் இக்கூறிய முப்பத்திரண்டினையும் நகை முதலாய எண்வகை மெய்ப்பாடுகட்குரிய பொருளெனக் கருதாமல் இவற்றையே மெய்ப்பாடு என்று கருதி உரை விளக்கம் செய்து போந்தனர். நாவலர் சோமசுந்தர பாரதியார், இவை முப்பத்திரண்டும் மெய்ப்பாடு போன்று செய்யும் பொருள் சிறக்க வரும் உணர்வுகள் என்றும் களவிற்குரிய இயற்கைப் புணர்ச்சி முதலிய நான்கற்கும் முறையே எட்டெட்டாக உரிமை பெற்று வரும் என்றும் வலிந்தும் நலிந்தும் பொருள் கூறிச் சென்றனர். அவர் கருத்து நூல்நெறிக்கு ஒவ்வாமையை விளக்கப்புகின் விரயுமாதலின் பின் வரும் உரைக்குறிப்புகளை நோக்கி உணர்ந்து கொள்க. எண்வகை மெய்ப்பாடுகட்கும் அடிப்படையாக எள்ளல் முதலிய முப்பத்திரண்டு பொருளும் ஒரு பகுப்பாகி அமைய அவையல்லாதவிடத்துப்  பிறிதொரு பகுப்பாக உடைமை, இன்புறல் முதலியனவாக வரும் இவை முப்பத்திரண்டும் பொருளாதற்கு உளவாகும். இவை, உடைமையின்புறல், நடுவுநிலையருளல் என்றாற் போல ஒருங்கு எண்ணுதற்கு ஏற்ப நிற்றலான் இவற்றை முப்பத்திரண்டாக எண்ணிக் கோடல் வேண்டுமென உணர்ந்த ஆங்கவை ஒருபாலாக் ஈங்கிவை ஒருபால் எனக்கூறினார் ஆசிரியர் என்க. அவையும் என்னும் எச்சவும்மை அவற்றின் சிறப்பின்மை தோன்ற நின்றது. உயிர்ப்பெனாஅ, நடுக்கெனாஅ என்பவை செய்யுளின் நிறைக்க வந்த அளபெடை எனா என்பவை எண்ணின்கண் வந்தன. இவை முப்பத்திரண்டும் இடத்திற்கேற்பப் பிற மெய்ப்பாடுகளுக்கும் பொருளாக வருமென அறிக. உரையாசிரியன்மர் இவற்றிற்கு அகப்பொருள் பற்றிய செய்யுட்களையும் உதாரணமாகக் காட்டியுள்ளனர். ஆசிரியர் அகத்திணைக்குரிய பொருள்களை வகுத்து விதந்து பின்னர் ஓதுதலான் அங்ஙனங் காட்டுதல் மயங்கவைத்தலாம் என்க.” (பாலசுந். மெய்.12) எனக் கூறியுள்ளார். மேற்சொன்ன முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் பொருந்தாதவிடத்து,  பிறிதொரு பகுப்பாக உடைமை, இன்புறல் முதலியனவாக வரும் இவை முப்பத்திரண்டும் பொருளாதற்கு உளவாகும் என்பது பாலசுந்தரம் கருத்தாகும். இங்கே பாலசுந்தரம் கூற்றுப்படி இங்கே சுட்டப்படும் முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் மேற்சொன்ன முப்பத்திரண்டில் அடங்குமென்பது பொருந்தாது. அவை முதன்மையானவை இவை துணைமையானவை என்பதே பொருந்தும்.

1:4. முடிவுரை

நடுவுநிலையென்பது எவற்றின் மீதும் பற்றில்லாத உணர்வுநிலை. இதனை சமநிலை என பேராசிரியரும் குழந்தையும் கூறுமிடத்து; பாலசுந்தரமும் பாரதியும் இதனை மறுத்துரைக்கின்றனர். இவர்களின் கருத்துப்படி, நடுவுநிலையென்பது அறநெறிதவறாமை. இதுவே சரியானது. சமநிலையும், நடுவுநிலைமையும் வெற்வெறானவை. வரைதலென்பது நாணம் ஏற்படும்வரை மகிழ்ந்த பலவும் நாணம் வந்தவழி விலகும் மனநிலை எனவும்; காதலுக்குரியது எனவும்; செய்யத்தகுவனவும் செய்யதகாதனவும் உணர்ந்து ஒழுக்கத்தோடு வாழும் நிலையெனவும் இருவேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர் உரையாசிரியர்கள். இவற்றுள், வரைவு என்பது திருமணத்தை உணர்த்துவது எனவே வரைதலென்பது காதலுக்குரிய ஒழுக்கமாகக் கொள்வதே பொருந்தும். பிறனை வாழ்த்துதல் – பிறரால் வாழ்த்தப்படுதல் – தெய்வம் போற்றுதல் எனும் மூன்று வேறுபட்ட கருத்துக்கள் உரையாசிரியார்களிடையே காணப்படுகிறது. இவை மூன்றுமே வாழ்த்துதலின் பாற்படும். ஏனெனில், தான் பிறரை வாழ்த்துதலும், பிறர் தன்னை வாழ்த்தினாலும், தெய்வத்தை மக்கள் போற்றினாலும் அது வாழ்த்துதலின் பாற்படும். கருதலென்பது, குறிப்பு  – ‘மனக்குறிப்பு’ ஆகும். மனதில் தோன்றும் ஆழ்ந்த சிந்தனையே மனக்குறிப்பு எனவே இவைகள் இங்கே பொருத்தமுடையன. ஆனால், பேராசிரியரும் குழந்தையும் ‘மறந்ததனை நினைத்தல்’ என்கின்றனர். ஏற்கனவே, நினைத்தல் என்பதற்கு இவ்வாறுபாடம் கொண்டுள்ளதாலும், அதுவே பொருத்தியுள்ளதாலும் இங்கு இது பொருந்தாது. எள்ளல் முதலாய மெய்ப்பாடுகள் முதனிலை மெய்ப்பாடுகள் இவை பொருந்தாதவிடத்து, உடைமை முதலாய துணைநிலை மெய்ப்பாடுகள் தோன்றும் என்பதே பொருத்தமுடையதாகும். ஏனெனில், இரண்டும் ஒருவகையாகுமெனில் இம்முப்பத்திரண்டையும் முன் கூறிய எண்வகை மெய்ப்பாடுகளைப் போல கூறியிருக்கலாம். அவ்வாறு அல்லாமல் அவற்றை முன்னர் வைத்து இம்முப்பத்திரண்டைப் பின்னர் உணர்த்துதலின் மேற்கூறியவாறே அமையுமென்க. அகத்திற்கும் புறத்திற்குமான முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளில், கனவு, வெரூஉதல், மடிமை, வியர்த்தல், நடுக்கம் எனும் ஐந்து மெய்ப்பாடுகளை விளக்க மட்டுமே உரையாசிரியர்களால் அகநானூற்றுப் பாடல் எடுத்துக்காட்டாக எடுத்தாளப்பட்டுள்ளது. ஏனைய இருபத்து ஏழு மெய்ப்பாடுகளுக்கும் உரையாசிரியர்கள் அகநானூறறுப் பாடலை எடுத்துக்காட்டாக எடுத்தாளவில்லை.

*****

கட்டுரையாளர்
தமிழ்த்துறைத்தலைவர்
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம், ஆற்காடு

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *